தடங்கல், தடை என தள்ளி தள்ளி போகும் ‘மாநாடு’ திரைப்படத்தின் வெளியீடு உண்மையிலேயே ஒரு சோக கதை. இந்தப் படம் சம்பந்தப்பட்ட யாரோட கட்டம் சரியில்லைன்னு தெரியல. ஏதோ ஒரு பிரச்சனை தொடர்ந்து துரத்துது. ஜூலை மாதம் 2018ஆம் வருடம் தொடங்கிய படம், ஒரு வழியாக நவம்பர் 25ஆம் தேதி 2021ல் வெளிவந்து விட்டது. ஆம், மெய்யாலுமே ரிலீஸ் ஆயிடுச்சுப்பா.
இந்த இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு இடர்பாடுகள், மனஉளைச்சல்கள், பண இழப்புகள், அதிகார மிரட்டல்கள், பைனான்ஸ் கொடுத்தவரின் முட்டுக்கட்டைகள், வட்டி விரயங்கள். இதையெல்லாம் மீறி படம் வெளிவந்து, அது ஒருசில நாட்கள் ஓடி பணம் பார்த்தால் தான் உண்டு. அதற்கு சில சமூக ஊடக அரைவேக்காடு அதிபுத்திசாலி விமர்சகர்கள் எதிர்மறை கருத்துகளை பரவ விட்டால் இன்னும் பங்கம்.
உண்மையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரு சுரேஷ் காமாட்சி அவர்களை பாராட்ட வேண்டும். அவருக்காகவாவது திரைப்படம் நற்பெயர் எடுத்து நல்ல வசூலை குவிக்க வேண்டும் என்று விரும்புவோம்.
அப்படி என்ன இதுல பொல்லாத பிரச்சனை என்று நீங்கள் நினைக்கலாம். சிம்பு படம், அவர் எதாவது கோக்கு மாக்கு பண்ணியிருப்பாரு அப்படின்னு யூகிக்கலாம். வெங்கட் பிரபு இன்னும் சிறப்பா, சீக்கிரமா எடுத்திருக்கலாம் என்று அட்வ்ஸ் சொல்லலாம். ஆனால், அதெல்லாம் ஒரு காரணமே இல்லை. இது இவர்களின் குழந்தை, ஆசை ஆசையா பல கனவுகளோடு உருவாக்கப்பட்டது. அதில் அவர்கள் அலட்சியம் காட்டியிருக்கக்கூடாது. அவர்களின் நேரம் சரியாக அமையவில்லை என்று ஆறுதல் சொல்லிக்கொள்ளலாம்.
கொரோனா கொடுந்தொற்று, ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள சூழ்நிலையில், அனைத்து திரையங்குகளும் முழு இருக்கை அனுமதி அளித்தபின்பு, இவ்வளவு காலம் கிடப்பில் கிடந்த படங்கள் எல்லாம் விறு விறுவென ரிலீசுக்கு தயாராகின. ‘மாநாடு’ திரைப்படமும் தீபாவளிக்கு வருவதாக அறிவித்தார்கள். எப்பேர்பட்ட சிறந்த படமாக இருந்தாலும்... மருந்து போல், மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் கல்லா கட்டவில்லை என்றால் தயாரிப்பாளர் பொட்டிய கட்ட வேண்டியது தான். அதனால் தான் ‘அண்ணாத்தே’வோடு மோதி குறைந்த திரையரங்குகளில் வெளியிட விருப்பமில்லாமல் ஜகா வாங்கியது.
ஒரு வழியாக நவம்பர் 25 வெளியிடுவதாக முடிவெடுத்த சூழலில், தமிழக அரசாணை இவர்களை திடுக்கிட வைத்தது. இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றதும் அரண்டு போனார்கள். தயாரிப்பாளர், தமிழக முதல்வரை புகழ்ந்து கெஞ்சியும் கோரிக்கை வைத்தார். ஒருவழியாக அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்து பெருமூச்சு விட்டு திரைப்படம் வெளியாவதை உறுதி செய்தனர் படக்குழுவினர். அவர்களை விட ரசிகர்களும், சினிமா பிரியர்களும் நிம்மதி அடைந்தனர்.
சொல்லி வைத்தார் போல்... புதன் மதியம் மீண்டும் பைனான்சியர் பிரச்சனையால் படம் நாளை வியாழன் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர் அறிவித்தார். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று டிவீட்டினார். பைனான்சியருக்கு பைசல் பண்ணவேண்டிய பணம் கோடிகளில் இருந்ததால் மீண்டும் திணறினர். விடிய விடிய பஞ்சாயத்து பண்ணி, ஏதோ ஒரு வழியில் சமரசமாகி, அதிகாலை காட்சிகள் உண்டு என்று தயக்கத்துடன் சிறு மூச்சு விட்டனர்.
பொழுது விடியும் முன்னே எப்படியாவது, தாங்கள் இத்தனை வருடங்களாக எதிர்பார்த்த படத்தை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையோடு தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் அதிகாலை 5 மணி காட்சிக்கு, 4 மணிமுதலே படையெடுத்தனர். மணி 5, 6, 7 என்று ஓடிக்கொண்டிருக்க... அந்தக் கால பாணியில் சொல்ல வேண்டுமானால், இன்னும் பொட்டி வரலை... KDM எனப்படும் கடவு சாவி வரவில்லை. அதுல என்ன பிரச்சனையோ தெரியல...
படத்தை பார்த்துவிட்டு பொழப்புக்கு போக வேண்டியவர்கள் கடுப்பிலும், தர்மசங்கடத்தில் அருகிலிருக்கும் பெட்டிக் கடைக்கும், டீ கடைக்கும் ஆதரவு அளித்துக் கொண்டிருந்தனர். பல திரையரங்குகளில் ஒன்றன் பின் ஒன்றாக 5 மணி காட்சி ரத்து என்று அறிவிக்க தொடங்கினர். வருணபகவானும் அவர்களை துரத்த ஆரம்பிக்க... அரைத்தூக்கத்தில், அலுப்பில் கடுப்பில் வீடு திரும்பினார். சுமார் 2 லட்சம் மக்கள் பார்க்க வேண்டிய காட்சி ரத்தானத்தில், திரையரங்க உரிமையாளருக்கும் மிக பெரிய இழப்பும், வருத்தமும்.
ஒரு வழியாக திரைப்படம் 8 மணி கட்சியாக ரிலீஸ் செய்யப்பட்டது. எல்லாரும் வீட்டுக்கு போனதுக்கப்புறம் யாரு பார்த்தாங்கன்னு தெரியல. ஜெகஜோதியாக ஜெ ஜெ வெனகூட்டத்தோடு ஆரவாரமா தொடங்க வேண்டியது... இருந்தாலும் பொறுத்துக்கொண்டு, ரசிகர்களும் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர்.
எது எப்படியோ... ஒரு வழியா படம் வந்தாச்சு. தயாரிப்பாளருக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும். பாவம் எப்படியெல்லாம் யார் யாரையெல்லாம் சமாளிச்சாரோ தெரியல... இந்தப் படத்தை எடுத்து முடிச்சு வெளியே கொண்டு வர...
இத்தனை சோதனைளையும் பிரசவ வலி போல் பொறுத்துக்கொண்டவருக்கு, படத்தின் நல்ல விமர்சனங்கள் ஆறுதலை கொடுத்திருக்கும். சதா சர்வகாலமும் குற்றங்களை மட்டுமே சொல்லும் விமர்சகர்கள் கூட, இந்தப் படத்தில் எந்த குறையும் இல்லை என்று கூறுவது மிக பெரிய ஆறுதல்.
படக் குழுவினருக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகள். அவருக்கு எங்களது பாராட்டுகள். நமக்கெல்லாம் தான் அது படம், அவருக்கு... இது மிக பெரிய பாடம்.
Leave a comment
Upload