“யப்பா.. என்ன அழகுடி நீ..!! சும்மாவே மின்னுவ.. மினி ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு பின் முதுகு முழுசும் தெரியற இந்த காஸ்ட்யூமில், ஷூட்டிங் ஸ்பாட் லைட்ஸ்ல ஏதோ வேற உலகத்து தேவதை மாதிரி இருக்கே..!”
“ஷட்அப் வருண்.. ஓவரா புகழாதே..!” என்று அழகிய வரிசை பற்கள் தெரிய சிரித்தாள் சுமா. சுமா நாயர் இன்றைய தென்னுலக திரைப்பட டாப் நாயகி. 17 வயதில் அறிமுகமாகி, 26 வயதுக்குள் அனைத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டாள். அப்சரஸ் போன்ற அழகு இருந்தாலும், பிரமாதமாக நடிக்கும் திறமையில் வெகு விரைவிலேயே திரை உலகில் முன்னுக்கு வந்துவிட்டாள். வருண் குமாரும் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோ தான். கடந்த 6 வருடங்களாக இருவரும் காதலித்து வருகின்றனர்.
“எப்பதான் கல்யாணத்துக்கு ஓகே சொல்ல போற சுமா.. 3 வருஷமா கேக்குறேன். சரியா பதில் சொல்லமாட்டேங்கிறியே..!” என்று முகத்தை வருத்தமாக வைத்து கொண்டு வருண் கேட்க...
“இதோ பாரு வருண்... இப்ப மேரேஜ் பண்றது கூட எனக்கு ஓகே தான். ஆனா கல்யாணம் ஆனப்பிறகும் நான் தொடர்ந்து நடிப்பேன். 10 வருஷம் கழிச்சு தான் குழந்தை பெத்துக்குவேன். உனக்கே தெரியும்.. நான் பணத்துக்காக நடிக்க வந்தவ கிடையாது. ஆல்ரெடி நான் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவ. நடிக்கிறது என்பது என்னோட passion.. I love my job.. This is my dream job. So கல்யாணம் ஆன பிறகு நீ இது எதுக்கும் தடை போட கூடாது. சரின்னு சொல்லு... இந்த மாசமே மேரேஜ் பண்ணிக்கலாம்.”
1 வருடம் கழித்து....
ஷூட்டிங் முடிந்து இரவு வீடு திரும்பிய சுமாவை பார்த்து வருண்...
“என்னடி இது காஸ்ட்யூம்..?? தொடை வரை தெரியுது..! இவ்வளவு டைட்டா போட்டு ஊர்ல இருக்கிறவனுக்கு எல்லாம் free show பண்றியா? கல்யாணம் ஆனவனு கொஞ்சமாவது நினைப்பு இருந்தா இது போல டிரெஸ் போடுவியா? நானும் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு வரேன்.. அந்த வினோத் கூட ரொம்ப நெருக்கமா வேற நடிக்கிற... என்னடி நினைச்சிக்கிட்டு இருக்க உன் மனசுல..? போனாபோகுதுனு நடிக்க விட்டா, ரொம்ப ஓவரா போற.. நீ இனி நடிக்க வேண்டாம். என் பேச்சை மீறி நடிக்க போனீன்னா டைவர்ஸ் பண்ணிடுவேன், ஜாக்கிரதை.. அப்புறம் காலம் முழுக்க மொட்ட மரமாதான் நிக்கனும்..!”
“ஓ... சூப்பர் வருண். நீ போனாபோகுதுனு என்னை நடிக்க விடுறியா! ஏன் நீயும் தான் உன் கூட நடிக்கிற ஹீரோயின்ஸ் கூட லிப் டூ லிப் கிஸ் கூட பண்ற.. நான் ஏதாவது கேட்டனா?? கேட்க மாட்டேன்.. ஏன்னா கேரக்டருக்கு தேவைப்பட்டா டைரக்டர் சொன்னபடி நடிச்சு தான் ஆகனும்ங்கிறது எனக்கு புரியும்.”
“ஏய்.. நான் ஆம்பளைடி.. எப்படி இருந்தாலும் தப்பில்ல... ஆனா பொம்பிளைக்கு ஒரு லிமிட் இருக்கு.. ஹும்.. என்ன இருந்தாலும் கேவலம்... நீ பல பேர் முன்னாடி அவுத்து போட்டு ஆடற ஒரு நடிகை தானே.. அந்த புத்தி மாறாது..”
“எப்படி.. எப்படி..? கேவலம் நடிகையா? உனக்கு நடிக்கிறது ஒரு தொழில் மாதிரி எனக்கும் அது ஒரு job. நெருக்கமா நடிக்கிறது கதைக்காக. சுத்தி 100 பேர் இருக்க... டைரக்டர் சொன்னபடி நாம நடிக்கிறோம்.
பிச்சைக்காரி வேஷம் போட்டா பொத்தல் புடவை, கிழிஞ்ச ஜாக்கெட் தான் போடனும். ஒரு மாடர்ன் காலேஜ் கேர்ல் வேஷத்துக்கு, அதுக்கேத்த மாதிரி தான் காஸ்ட்யூம் போடனும். வக்கீல், டாக்டர், போலீஸ், ஏன் பாலியல் தொழிலாளியா நடிச்சா.. மார்பு, இடுப்பு தெரியற மாதிரி புடவை கட்டதான் வேணும். என் கேரக்டருக்கு தேவைப்பட்டா மொட்டை அடிச்சுக்க கூட நான் ரெடி. ஏன்னா நடிக்கிறது என்பது நான் உயிருக்கு உயிரா நேசிக்கும் தொழில்.. சினிஃபீல்டில் இருக்கிற உனக்கு, இது புரியும்னு நினைச்சேன். But iam disappointed.. கல்யாணம் ஆன இந்த ஒரு வருஷத்துல நீ என்னை கன்ட்ரோல் பண்ணனும்னு ரொம்ப பாடாப்படுத்தி எடுத்துட்ட.. நானும் பொறுமையா என்னை புரிஞ்சுப்பனு ஒரு வருஷமா அமைதியா இருந்தேன்.
இப்ப டைவர்ஸ் பண்ணப்போறேன்னு மிரட்டுற..!
கல்யாணத்துக்கு முன்னாடி இதே போல தொடையும், முழு முதுகும் தெரிஞ்சி நடிக்கிறப்ப அழகுனு பாராட்டுன நீ, இன்னைக்கு அசிங்கமா இருக்கு.. மூடிட்டு நடினு சொல்ற.
நடிகைன்னா கேவலம் கிடையாது. மோசமான நடத்தை கொண்ட ஆணோ பெண்ணோ..!, கெட்டு அலையறதுக்கு அவங்க திரைத்துறையில் தான் இருக்கனும்னு அவசியம் இல்ல.. அவங்க சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் இருப்பாங்க.
நான் நெருப்பு.. ஜாக்கிரதை..!
இன்னும் ஒரு தடவை நடிகைகளை கேவலமா பேசுனன்னா, அவ்வளவு தான்.. நீ என்னடா என்னை டைவர்ஸ் பண்றது? நான் உனக்கு விவாகரத்து கொடுக்குறேன்.. Good bye forever..” என்று சொல்லியபடி வீட்டை விட்டு வெளியேறினாள் சுமா என்கிற சுமா நாயர்.
Leave a comment
Upload