தொடர்கள்
தொடர்கள்
மிஸ்டர் ரீல்...! - ஜாசன்

20211027080939402.jpeg

மிஸ்டர் ரீல், முதல்வரை பார்க்க போனபோது... அவரது திருமதி “இந்தாங்க கற்பூரவள்ளி சூப் சாப்பிடுங்க என்று நீட்டினார். முதல்வர் முகம் போனதை பார்த்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போ என்று ஏதோ மீம்ஸ் பார்த்த மாதிரி மாறியது. அப்போது திருமதி முதல்வர்... இன்னும் ஆறு நாளைக்கு சென்னையில் மழைன்னு வெதர்மேன் சொல்லிட்டாரு. நாளைக்கு எப்படியும் சேகர்பாபு வந்து, மீர்சாகி பேட்டையில் தண்ணீர், யானைகவுனியில் வெள்ளம், ராயபுரத்தில் வீட்டுக்குள் தண்ணீர் என்று அழைத்துப் போய் விடுவார். தும்மல், ஜலதோஷம் வந்தால் யார் அவஸ்தை படுவது, குடிங்க என்று கண்டிஷனாக சொல்ல...” அப்போது முதல்வர்.. “இவருக்கு இல்லையா” என்று கேட்க...

உடனே மிஸ்டர் ரீல் அவசர அவசரமாக... “நான் இப்பதான் நிலவேம்பு கசாயம் சாப்பிட்டேன்” என்று சொல்ல... வேறு வழியில்லாமல்... முதல்வர், கற்பூரவள்ளி சூப் குடித்தார்.

அப்போது மிஸ்டர் ரீல்... முதல்வரை பார்த்து, “டெல்லி போனபோது, அமித்ஷாவை பார்க்கவில்லை. இதோ பக்கத்தில் இருக்கிற திருப்பதியில் அமித்ஷா இருந்தாரே... உங்களையும் வாங்க என்று கூப்பிட்டு இருந்தாரே... ஆனால், ஏன் போகலை... அமித்ஷா என்றால் பயமா?” என்று கேட்க... அப்போது அங்கு வந்த திருமதி முதல்வர், “திருப்பதிக்கு இவர் தனியாக போகமுடியாது. முதல்வரானால், குடும்பத்தோடு திருப்பதி வருவதாக வேண்டுதல் இருக்கு. அமித்ஷா வந்த அன்னிக்கு, நான் கும்பகோணத்தில் ஒரு வேண்டுதலுக்கு போயிட்டேன். இதில் நீங்க நினைக்கிற அரசியல் எல்லாம் இல்லை, அவருக்கு பயமும் இல்லை” என்று சொல்ல... முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு, திருமதியை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

சரி.. “அந்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் நீங்கள் நிறைவேற்றவில்லை” என்று நிறைய மீம்ஸ் வருகிறதே என்று மிஸ்டர் ரீல் சொல்ல... அதற்கு முதல்வர்... “இதுவரை 555 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம், இன்னும் ஐந்து தான் பாக்கி” என்று சொல்ல... அதற்கு மிஸ்டர் ரீல்... “அந்த 5... கேஸ் மானியம், குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய், மீண்டும் பழைய ஓய்வூதியம், மாதம் மின் கணக்கு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, இது தான் முக்கியம். நீங்க, அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு, கமிட்டி, குழு போட்டு விஷயத்தை முடிக்கிறது எல்லாம் இல்லை” என்று மிஸ்டர் ரீல் சொல்ல... முதல்வர்... உடனே, “நீங்க ஊடக தர்மத்தை மீறி பேசறீங்க” என்று சொல்லிக்கொண்டு இருந்த போது... அமைச்சர் சேகர்பாபு வந்தார்.

அவர் முதல்வரிடம்... “கற்பகாம்பாள் கோவில் அன்னதானம் நிகழ்ச்சியில் நேற்று ஒரு பெண் எக்ஸ்ட்ரா அப்பளம் கேட்டதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. சாப்பிட்டு முடித்து வெளியே வந்த அந்தப் பெண்மணி, ஒரு பெண்ணுக்கு எக்ஸ்ட்ரா அப்பளம் கூட இந்த ஆட்சியில் கிடைக்கவில்லை என்று அவர் தந்த பேட்டி... அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று வைரல் ஆகிடுச்சு. அப்புறம் அந்த பெண்மணியை தேடிப்பிடித்து, இன்று நான் கற்பகாம்பாள் கோயிலில் என் பக்கத்தில் உட்கார வைத்து எக்ஸ்ட்ரா சாதம், எக்ஸ்ட்ரா பொரியல், கூட்டு, எக்ஸ்ட்ரா அப்பளம், எக்ஸ்ட்ரா மோர், ஊறுகாய் என்று எக்ஸ்ட்ராவாக கேரியரில் சாப்பாடு தந்து அனுப்பிய வீடியோ, இப்போது வைரலாகி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு பாட்டி, 100 கட்டு அப்பளம் அனுப்பி இருக்கிறார். அன்னதானத்தில் இந்த மாதம் அப்பள பிரச்சினை இருக்காது” என்று சொல்ல... அப்போது அங்கு வந்த துரைமுருகன்... “முல்லைப் பெரியாறில், மரம் வெட்டியதுக்கு எல்லாம் நன்றி சொல்லி என்னை பழி வாங்காதீர்கள் என்று கேரள முதல்வர் கோபித்துக் கொண்டார். நான் அவரை ஒரு மாதிரி சமாளித்து, இனிமேல் முதல்வர் யாருக்கும் நன்றி சொல்ல மாட்டார் என்று சமாதானப் படுத்திவிட்டேன்” என்று சொல்ல...

அப்போது மிஸ்டர் ரீல்... “மரம் எல்லாம் எடுத்தாச்சா, இல்லையா” என்று கேட்க... அதற்கு அமைச்சர் துரைமுருகன்... “அப்பவே எடுத்தாச்சு, என கையை உயர்த்தி சொல்ல”... அப்போது முதல்வர்... “அமைச்சர் காந்தி வரேன்னு சொன்னார், வந்துவிட்டாரா” என்று கேட்க... உடனே துரைமுருகன் நான் புறப்படுகிறேன் என்று சொல்லி நகர்ந்து விட்டார்.

சேகர்பாபு, “காந்தி பெயரைச் சொன்னால், பொதுச்செயலாளர் ஏன் எஸ்கேப் ஆகிறார்” என்று கேட்க... அதற்கு ஸ்டாலின்... “அது அப்படித்தான்” என்று சொல்லும்போது.. தலைமைச் செயலாளர் வந்து... சார், “ஆளுநர் போன் செய்தார். அவரது ராசி பேனா கிடைத்து விட்டதாம். நீட்தேர்வு ரத்து மசோதாவில் கையெழுத்துப் போட வா” என்று கேட்கிறார் என்று சொல்ல... உடனே முதல்வர்... “வேண்டாம்.. வேண்டாம்... வேண்டாம் என்று சொல்ல... அந்தப் பேனாவை நான் தானே ஒழித்து வைத்தேன், எப்படி கண்டுபிடித்தார்” என்று சேகர்பாபு கேட்க...

அதற்கு தலைமைச் செயலாளர்... “டிஜிபி தான் தேடிக் கண்டுபிடித்து தந்திருக்கிறார். இல்லையென்றால் இன்று எத்தனை ரவுடிகளை பிடிச்சீங்க என்று கணக்கு கேட்கிறார். பேனாவை கண்டுபிடித்து தந்ததும், கேட்பது இல்லையாம்” என்று தலைமைச் செயலாளர் சொல்ல...

ஒன்றிய அரசு காவிமயம் என்றெல்லாம் முரசொலியில் எழுதுறாங்க... எது உண்மை என்று தெரியாமல் முழித்தபடி புறப்பட்டார் மிஸ்டர் ரீல்.