காவிரிமைந்தன்
தேவை அறிந்த நீ எந்தன் தேவதையாய் தெரிந்தாய்!
அன்பே!
சித்திரம்போல் சிரிக்கின்ற என் ஸ்நிகிதியே.. என் இதயத்தில் விழுந்த உன்னை நான் எப்படி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் தெரியுமா?
பிறகென்ன.. நாளும் பொழுதும் உன்னுடனே உறவுமலர் பூத்தது!
உள்ளத்தில் சந்தோஷ சாம்ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது!
தினம்தோறும் இன்பவிழா நடந்தது!
இதயம் மகிழ்ச்சியிலே மிதந்தது!
என் வானம் வண்ணமயமாய் விடிந்தது. ஒற்றைச் சொல் என்றாலும் உந்தன் சொல் என்றால் உயிர்ச்சொல்லானது!
கட்டிமுடித்த காதல் மாளிகையில் உன்னோடு என் காலம் கழிந்தது!
யார் கண் பட்டதோ.. பிரிவின் வலியில் நெஞ்சம் துடித்தேன்!
அப்போதுகூட அன்பே உன்னைத்தான் நினைத்தேன்!
உடலின் ஏதோ ஒரு பாகத்தில் வலி ஏற்படும்போதும் கண்கள் கலங்குவதுதானே இயற்கை!
அப்படித்தான் உனக்கும் இதயம் வலிக்குமே என்று எண்ணியபோதே நான் கலங்கிப்போனேன்!
பாத்திரப்படைப்பின்படி நீ எனக்கு என்றும் நான் உனக்கு என்றும் படைக்கப்பட்டிருந்தாலும் இந்த உறவை எப்படி நடிப்பென்று நாம் கொள்ள முடியும்?
வந்துபோவது தான் வாழ்க்கை என்கிற வறட்டுத்தத்துவங்களை வழங்கிக் கொண்டிருக்காமல்.. வாழ்ந்துகாட்டுவது என்கிற வைராக்கியம் கொண்டு வா!
வசந்தம் வானவில்லில் மட்டுமல்ல.. வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களிலும் இருக்கிறது என்பதை நெஞ்சத்தின் எல்லாப் பக்கங்களிலும் நிறைத்து எழுதிவை!
மனதிற்குள் உள்ள ஆசைகளை மறைத்து வைத்துக்கொண்டு மெளனத்தோட்டத்தில் நீ செய்யும் ஒத்திகைகள் அம்மாடி.. அங்கேயே நான் தொலைந்துபோகிறேன்.. மெல்லமாய் நீ வந்து “ஊடல் என்பதும் உங்களுக்குப் பிடிக்குமே என்றுதான்” என்று.. என்னிடம் கதையளப்பாயே.. எங்கே சொல்ல அந்த சாதுர்யத்தை!
மாற்றுவழியேதும் மனதில் வந்துவிடக்கூடாதென்று மளமளவென்று அனைத்துக் கதவுகளையும் அடைத்துவிடுவதும் நீயன்றோ?
பார்த்துக்கொள்கிறேன் என்று வாசகம் உச்சரிக்கப்படாமல்.. உன்னுள்!
எப்படி கண்டுபிடித்தேன் என்று பார்த்தாயா?
அதுதான் உன் கண்கள் காட்டிக்கொடுத்துவிடுகிறதே!!
மறுபடி எப்போது என்று மனம் வருந்தி நான் கேட்டபோது.. வாய்ப்பில்லை இன்னும் சில திங்களுக்கு என்று ஒரு திங்கள் என்னிடம் சொல்ல.. அதைக்கேட்ட நான் அதிர்வில் துள்ள.. வருகிறேன் என்று சொல்லி வாரதிருத்தலைவிட.. வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி வந்துவிடும்போது இன்பம் பன்மடங்கல்லவா என்று எனைப் பரிகாசம் செய்தாய்!
ஆம்.. அப்படித்தான் எங்கே வரப்போகிறாய் என்று ஏங்கிக்கிடந்தபோது.. என் விழிகளை உன் கரங்கள்கொண்டு மூடிவிளையாடினாய்!
அந்த மென்மையான கைகளின் உஷ்ணரேகைகள் என் உள்ளத்திற்கு தந்த உற்சாக வெள்ளத்தை எந்த அளவுகோலாலும் அளந்துவிடமுடியாது என்றேன்!
அப்படியா என்றாய்! இன்றைக்கு இதுபோதுமா என்று வேறு கேள்வி!!
என்றைக்கும் தீராத தாகமடி காதல்.. படியளந்ததற்கு வேண்டுமானால் நன்றி சொல்லலாமே தவிர.. இன்னும் ஒரு பிடி கிடைக்குமா என்கிற ஏக்கத்திற்கு குறைவில்லை என்றேன்!
இன்பத்தின் அகராதியை எப்படி எழுதி முடிக்க முடியும்?
எண்ண அலைகளில் சிக்கிய எந்த மனமும் இதுவரை அதன் எல்லைகளைச் சந்தித்ததாய் வரலாறில்லை! சந்திக்க வேண்டும் என்கிற ஆசையும்.. சங்கமிக்க வேண்டும் என்கிற தேடலும் இயற்கையாய் ஆனபின்பு நாம் மட்டும் இதற்கென்ன விதிவிலக்காக ஆக முடியுமா?
ஆசை வழிந்தோடி வருகிற வழியில் எல்லாம் மகிழ்ச்சியின் அலைகள் கவிதை பாட.. இதயக்கடலில் எழுகின்ற அலைகள்.. அங்கே சுகராகம் பாட.. மாலையிளங்கருக்கல் இதமாய் மையலைக் கொண்டாட.. சேலைகட்டிய சிங்காரி உன்வசம் நான் என்னைத் தந்தாக.. முத்துச்சிரிப்பை கொட்டிக் கவிழ்த்து மோகனப் பண்பாடும் உன்னை முற்றிலும் கவர்ந்த கள்வன் என்பதில்தான் எத்தனைப் பெருமையோ எனக்கு!!
கள்ளச்சிரிப்பில் உள்ளம்திருடிய உங்கள் செயலில் எனக்கும் பங்குண்டு என்பதாலே நடந்திட்ட திருட்டில் பாருங்கள் உங்கள் இதயம் என் வசம் என்று ரகசியமாய் காட்டினாய்! இன்பக்கனல் மூட்டினாய்!
நாளை சந்திப்போம் என்று நகர முயன்றாய்!
நல்லது.. நாளைவரை.. என்று நானிழுக்க.. நாணத்தில் உன் பார்வை போர்தொடுக்க.. ஏனத்தான் என்று சொல்லி இறுக அணைத்தாய்!
போதும் எனும்வரை போவோமா என்றேன்.. போகக்கூடாது என்பதற்கு இப்படி ஒரு பொருளா என்றாய் நீ!
தேவை அறிந்த நீ எந்தன் தேவதையாய் தெரிந்தாய்!
Leave a comment
Upload