டொக் . . டொக் டொக்.. எனும் சத்தம், அந்த இரவு நேர நிசப்தத்தை களைத்தது. அதனை கேட்ட சாரநாதனுக்கு தலையை யாரோ இடிப்பது போல இருக்க, தூக்கம் கலைந்து புரண்டுபுரண்டு படுத்து பின் எழுந்தவர், பாரு! வாசலைப்பாரு உன் சுவீகாரம் வந்திருக்கு என்றார். தனது மனைவி பார்வதியிடம்...
அந்தக் காலடி சத்துமும், அதனை தொடர்ந்த இரும்புக்கேட்டின் தாழ்ப்பாளை ஆட்டும் சத்தமும் சாரநாதனை தினமும் மனத்தளவில் துன்புறுத்தியது.
என்னங்க கேலி செய்யறீங்க? பாவம், கால் இல்லாதவரு அவரைப் போய், என்ற பார்வதி, தட்டு ஒன்றில் சாதமும் கொஞ்சம் குழம்பும் ஊற்றி எடுத்து வந்து அவருக்கு கொடுத்தாள்.
சிரித்தபடி தட்டில் வாங்கியவர், இரண்டு தோள் ஊன்றுகோலையும் ஓரமாக சுவற்றில் சாற்றி வைத்து விட்டு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தவரிடம், குடிக்க நீரும் கொடுத்து தூங்கப்போகிறோம் எனச் சொல்லிவிட்டு வாசல் விளக்கை அனைத்து உள்ளே வந்தாள் பாரு.
ரொம்பத்தான் அக்கறையாக கவனிக்கிறாய், உன் சொந்தமோ? என மேலும் கிண்டலடித்த சாரதியின் பேச்சை ரசிக்கவில்லை பாரு.
நம்ம பகுதிக்கு புதிதாக வருகிறான், அவனுக்கு போய் காத்திருந்து சாப்பாடு போடுகிறாயே என்றுத்தான் நான் கேட்கிறேன்.
நாம் என்ன அவருக்காக புதிதாக சாப்பாடு செய்தா போடுகிறோம், மிச்சமிருப்பதைதானே போடுகிறோம், ஆதலால் ஒன்றும் நாம் குறைந்து விடப்போவதில்லை என்றாள்.
இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கணும், பெரும்பாலும் திருடர்களுக்கு இவர்கள்தான் இன்பார்மர்களாக இருப்பார்கள், என்று கேள்விப்பட்டிருக்கேன். ஆதனாலதான் சொல்கிறேன், நீதான் கேட்பது இல்லை என்று சாரநாதன் சொல்ல...
ஆமாம்மா, நான் பஸ் ஸ்டாப்பில் இறங்கியதும் காசு கொடுத்தாலும், வாங்கிகிட்டு போகாமல் என் பின்னாடியே வீடு வரை வருவார், எதிர்த்தாப்ல நின்று யாருக்கோ போன் செய்து பேசுவார் அம்மா, நான் பார்த்திருக்கேன் என்று தன் சந்தேகத்தை பயத்தோடு வெளிப்படுத்தினாள் கல்யாண வயதில் உள்ள மகள் சுவாதி.
பயம் லேசாக வந்தது பார்வதிக்கு, இருந்தாலும் ஆளைப் பார்த்தால் தெரியாதா? இவர் அப்படியில்லை என்று சமாதானம் செய்தாள் பார்வதி.
நான் சொன்னால் உனக்குப் புரியாது. அனுபவிப்பாய், அப்போ தெரியும் என்ற சாரநாதன் புலம்பியபடி இருந்தார்.
புலம்புவதை நிறுத்திவிட்டு இருவரும் சீக்கிரமாக தூங்குங்கள், விடியற்காலையிலே எழுந்து சென்னைக்கு கிளம்பனும், ஞாபகம் இருக்கில்லே? எனக் கேட்டவள் இரண்டு நாட்களுக்கான துணிமணிகளை பெட்டிக்குள் எடுத்துவைத்தாள்.
மறுநாள் இரவு...
ஹலோ! யாரு சாரநாதன் சார்தானே? என்றது ஒரு கரகரப்பான குரல்.
ஆமாம், நான்தான் பேசுகிறேன் என்றதும்...
நாச்சியார் கோயில் காவல் நிலையத்திலிருந்து இன்ஸ்பெக்டர் பேசுகிறேன். சென்னையிலிருந்து எப்போ சார் வருவீங்க எனக் கேட்டார்.
காரிலே வந்துகிட்டுதான் இருக்கோம், என்ன விஷயம் சார் எனக் கேட்டார் சாரநாதன்...
நீங்கள் இல்லாதபோது உங்க வீட்டில் திருட்டும், ஒரு கொலையும் நடந்திருக்கு. நீங்கள் ஊருக்கு வந்தவுடன் ஸ்டேசன் வரணும் என்று சொல்லி வைத்துவிட்டார்.
நான்தான் சொன்னேன்லே நீதான் கேட்கலை, இப்போ பாரு பூட்டின வீட்லே திருட்டு, கல்யாணத்திற்கு சேமித்த நகையெல்லாம் களவு போயிருக்கும். கொலை வேற நடந்திருக்காம், இதெல்லாம் நமக்கு தேவையா? என பார்வதியைச் சாடினான்.
பதட்டமடைந்த பார்வதி, நீங்க வண்டியை கவனமாக ஓட்டுங்கள், அதெல்லாம் ஒன்றும் இருக்காது, அங்கே போனதும் பார்த்துக்கலாம். நம்ம சார பரமேஸ்வரர் கைவிடமாட்டார், பார்த்துப்பார் என்றாள் திடமான நம்பிக்கையாக..
ஓட்டமும் நடையுமாக காவல் நிலையம் வந்த இருவரும், உள்ளே நுழையும் இடத்தில் வரவேற்பாளர் இருக்கைக்கு பக்கத்தில் இருந்த அந்த இரண்டு தோள் ஊன்றுகோலைப் பார்த்ததும், சாரநாதனுக்கு கோபம் தலைக்கேறியது. எங்கே சார் அவன் எங்கே? எனக் கேட்டபடி இங்குமங்கும் கோபமாகத் தேடினார்.
யாரை தேடுகிறீர்கள் என்று ஆய்வாளர் கேட்க... அந்த நொண்டி திருடனைத்தான் என அந்த ஊன்றுகோளைக் காண்பித்ததும்...
சார் திருடன் அவனில்லை. இதோ இருக்கிறானே இவன்தான் திருடன் என அங்கே இருட்டறையில் சட்டையில்லாமல் ஜட்டியுடன் அமர்ந்திருந்த ஒருவனைக் காட்டினார்.
இதோ உங்கள் நகைகள், என மீட்கப்பட்ட நகைகளை அவர்களிடம் காண்பித்ததும், அதை சாரநாதன் சரிபார்த்தவாறு இருக்க... பார்வதியின் கண்கள் அந்த ஊன்றுகோளையே பார்த்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் அந்த பிச்சைகாரன் மருத்துவமனையில் பிணமாக இருக்கிறார் என்றதும் அதிர்ந்துப்போன இருவரும் ஆய்வாளரைப் பார்த்தனர்.
ஊரில் இல்லாத சமயத்தில் உங்கள் வீட்டிற்கு இவன் திருட போயுள்ளான். திருடித் தப்ப முயன்றபோது பார்த்துவிட்ட அந்த பிச்சைக்காரன், தன் ஊன்றுகோலால் அவனைத் தாக்கிவிட்டு பாய்ந்து அவன் கால்களைக் கட்டிக்கொண்டு தெருவில் உருண்டு சத்தம் போட...
அக்கம் பக்கம் உள்ள ஆட்கள் தூக்கம் கலைந்து எழுந்து வருவதற்குள் அவனை மண்டையில் தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி செய்திருக்கிறான். பின்பு தெருவில் கூடியவர்கள், அவனையும் நகைகளையும் மீட்டு எங்களிடம் ஒப்படைத்தனர் என நடந்தவற்றை சொன்னார் ஆய்வாளர்.
வருத்தமடைந்து இருவரும், மருத்துவமனைக்குச் சென்று, அவரைப் பார்த்து வீடு திரும்பினர்.
டொக்.. டொக்.. சத்தமோ, தாழ்பாள் சத்தமோ எதுவுமே அன்றிரவு இல்லை, இருந்தாலும் படுக்கையில் தூக்கத்தை தொலைத்திருந்தார் சாரநாதன்.
Leave a comment
Upload