நெறும்பூரில் 'குறும்பரைக் கொன்ற இடம்'
அம்பட்டர்கள், வெள்ளான முதலியார்களின் ஆதரவால் குரம்பர்களின் கழுத்தை அறுத்து விட்டனர்...
நெறும்பூர்
குரம்பர்களின் கோட்டை இருந்த இடமாகச் மெக்கன்சி சுவடி குறிப்பிடும் நெறும்பூர் ஒன்றாகும். அது செங்கற்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் பாலாற்றின் ஓரத்தில் உள்ளது.
கமலாவல்லித் தாயாரும் கல்வெட்டுடன் கூடிய நீலமாணிக்கப் பெருமாளும் எழுந்தருளியுள்ள கோவில் குறும்பர்கள் வைணவத்திற்கு மாற்றப்பட்ட விவரத்தோடு தொடர்புடையதாகத் தோன்றுகிறது.
கிராம அலுவலர் அரங்கநாதனும் அவருடைய துணைவியாரும் அவ்வூரைப் பற்றி அளித்த விவரங்கள் பின்வருமாறு:
நெறும்பூரில் இப்போது ஏறத்தாழ மூவாயிரம் பேர் உள்ளனர். அவர்களில் 1500-க்கு மேற்பட்டவர்கள். ஆதிதிராவிடர்கள் 100 வீடுகளிலும், பார்ப்பனர்கள் ஐந்து வீடுகளிலும், ரெட்டியார்கள் இருபது வீடுகளிலும், வன்னியர்கள் ஐம்பது வீடுகளிலும், முதலியார்கள் ஐந்து வீடுகளிலும், யாதவர்கள் நாற்பது வீடுகளிலும், இருளர்கள் அல்லது வில்லியர்கள் எனப்படுவோர் மூன்று வீடுகளிலும், முஸ்லிம்கள் இரண்டு வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வூரின் முக்கியத் தொழில் விவசாயமாகும். அவ்வூரில் உள்ள திருவாலீசுவரர் சிவன்கோவில் பழமையானதாகும். அவ்வூரில் உள்ள சிவன்கோவிலுக்கும், வைணவக் கோயிலுக்கும் சேர்த்துப் பொதுவாக நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவன் கோவிலின் கருவறைச் சுவரின் வெளிப்பக்கத்தில் தென்பக்கம் நின்ற கோலத்தில் விதாயகரும், மேற்குப் பக்கத்தில் திருமாலும், வடக்குப் பக்கத்தில் நான்முகனும், துர்க்கையம்மனும் இடம் பெற்றுள்ளனர். சிவன் கோவிலில் உள்ள பெருமாள் சிலை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். கோயிலைச் குற்றி வடக்குப் பக்கம் தவிர மற்ற பக்கங்களில் கல்வெட்டுகள் உள்ளன.
இனி குறும்பர்களுடன் தொடர்புடையதாக அவ்வூரில் மெக்கன்சி சுவடி குறிப்பிடும் செய்திகள் பின்வருமாறு:
அங்கு யாதவர்க்கென்று தனியாக ஒரு தெரு உள்ளது. ‘புறங்காலைப் பிடித்தவன்’ என்பது அவர்களைப் பற்றிய பழமொழியாக அங்கு வழங்கப்பட்டு வருகிறது. ‘அட்டவாக்கம் நெறும்பூர்’ என்று எழுதுப்பட்ட பெரிய கல் ஒன்றும், எழுதப்படாத தூண் ஒன்றும் அத்தெருவில் கவனிக்கப்படாமல் புதையுண்டு நிற்கின்றன என்று தெரிவிக்கிறார் தஞ்சாவூர் தமிழ் பலக்லைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் திரு ம. ராஜேந்திரன். “குறும்பர்களின் கோட்டையாக இருந்த இடம், இப்போது வெற்று நிலமாக உள்ளது. அங்குப் பழங்காலத்தைச் சேர்ந்த கற்களும், ஓடுகளும் வரப்புகளில் குவிந்து கிடக்கின்றன. குறும்பரின் கோட்டைப் பகுதியாக கூறப்படும் இடத்தைச் சுற்றிலும் உள்ள அகழி, அழிப்பள்ளம் என்றும் அகழிக்குட்டை என்றும் அழைக்கப்படுகிறது. அருகில் உள்ள பகுதிகள் வயல்களாக உள்ளன”.
நெறும்பூர் ஜமீனில் மேலாளராக இருக்கும் 52 வயதுடைய இராசன் என்பவர், கோட்டை மேட்டிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் இருக்கும் நிலத்தைச் சரிசெய்யும்போது கிடைத்த ஐந்து முகம் கொண்ட அழகிய பழைய மண் விளக்கு, திருவைக்கல், செங்கல், உடைந்து போன மண்ணாலான குதிரையின் கால் ஆகியவற்றை வைத்திருக்கிறார்.
மண்விளக்கு, 18 அங்குல விட்டத்திற்கு வட்டவடிவில் வழவழ வென்று சிவப்பு வண்ணத்தில் உள்ளது. திருவைக்கல்லின் ஒருபகுதி மட்டும் கிடைத்துள்ளது. செங்கற்கள் மிகப் பெரியனவாகவும் அதிக எடையுடனும் உள்ளன. ‘சங்க காலத்திலும் அதற்குப் பிந்திய பல்லவர், சோழர் காலத்திலும், தமிழகத்தில் இத்தகைய நீளமும், அதலமும் கொண்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன’ என்பது அகழ்வாராய்ச்சி காட்டும் உண்மையாகும். இவற்றைப் போன்ற செங்கற்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம், அரிக்கமேடு, நத்தமேடு, சோழ மாளிகை, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் கிடைத்துள்ளன. நெறும்பூரில் கிடைத்துள்ள செங்கற்கள், மேலே குறிப்பிட்டுள்ள செங்கற்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் தகுதியை உடையனவாகும். சுவடியும், பூர்வம் கண்ட கற்கள் என்று அவற்றைக் குறிப்பிடுகின்றது”.
குறும்பர்களின் கோயில் இருந்த இடமாகச் சுவடியில் கூறப்பட்டுள்ள இடம், இப்போதும் கோரி என்றழைக்கப்படுகிறது. ஆனால், அது விவசாய நிலமாக மாறியுள்ளது. அவ்வூரைச் சேர்ந்த ‘ஓட்டங்காச்சிக்களம்’ என்று அழைக்கப்படும் பகுதியில், பழைய காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள் நிறையக் குவிந்து கிடக்கின்றன. அங்குள்ள மலட்டாற்றங்கரையில் ஓடு, செங்கல், முதுமக்கள் தாழியின் சிதைந்த பகுதிகள் கிடக்கின்றன. முதுமக்கள் தாழியை அவ்வூர் மக்கள் ‘குறும்பர் உறைகல்’ என்றழைக்கின்றனர். சிலர், வீடுகளில் இத்தாழிகளை வைத்திருக்கிறார்கள்.
நெறும்பூரில், குறும்பரைக் கொன்ற இடம் என்ற பெயருடன் ஒரு பகுதி உள்ளது, என்று தெரிவிக்கிறார் திரு ம. ராஜேந்திரன். யாதவர் இனத்தைச் சேர்ந்த வேதாச்சலம் பிள்ளையின் மகன் கன்னியப்பன் என்பவர், அந்த இடம்பற்றி குறும்பரினத்தில் ஒருவன் இறந்துபோன அன்று ஏற்பட்ட தகராறில் குறும்பர்கள் பலர் கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றும், இறந்தவர்களைப் பக்கத்திலிருந்த கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டார்கள் என்றும் அதனால் அந்த இடத்திற்கு குறும்பரைக் கொன்ற இடம் என்று பெயர் வந்ததாகவும் தெரிவித்தார்.
குறும்பரைப் பற்றியுள்ள மூன்று சுவடிகளில் ‘அம்பட்டரால் குறும்பர் கொல்ப்பட்ட நிகழ்ச்சி’ சொல்லப்பட்டுள்ளது.
“வெள்ளாள முதலியார்களுக்கும், குறும்பர்களுக்கும் நடந்த தகராறுகள் சமாதானமடைத்தபோது, அதை ஏற்றுக்கொள்ளாத குறும்பரில் சிலர் வெளியேறி விட்டதாகவும், ஏற்றுக்கொண்டவர்கள் வெள்ளாள முதலியாருடன் சேர்த்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகின்றன. குறும்பர்களின் ஒருவன் இறந்தபோது, இழவுக்கு வந்திருந்த சேர்ந்து வாழாத குறும்பர்களை, அவர்கள் மரபுப்படி இழவுக்கு வந்தவர்களுக்குத் தலையை மொட்டை அடிக்கும்போது, அம்பட்டர்கள், வெள்ளாள முதலியார்களின் ஆதரவால் அவர்களின் கழுத்தை அறுத்து விட்டனர். அந்த இடம் குறும்பரைக் கொன்ற இடமாக இன்றைக்கும் அழைக்கப்பட்டு வருகிறது என்றும் கன்னியப்பன் தெரிவித்தார். அந்த இடத்தில் இத்திகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் கழுத்தறுக்கப்படும் காட்சியல் அமைந்த நடுகல் ஒன்று இருந்ததாகவும், சென்னையிலிருந்து வத்தவர்கள் அதை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார். குழுத்தில்லாத ஒரு கற்சிலை ‘மொட்டப் பார்ப்பாத்தியம்மா கல்’ என்ற பெயருடன் அங்குள்ளது”.
அல்வூரில் ஆடு, மாடுகளுக்கு நோய் வந்தாலும் மனிதர்களுக்குக் காலரா, அம்மை போன்ற தொற்றுநோய் வந்தாலும், ஒருவகையான வழிபாட்டை மேற்கொள்கிறார்கள் - எண்ணெய்க்கல் பூசை என்று அழைக்கிறார்கள்.
அல்வூரில், மந்தைவெளி என்றழைக்கப்படும் இடத்தில் எண்ணெய்க்கல் உள்ளது. ஊரில் நோய் வந்தால் சாமியாடி என்பவர் எண்ணெய்க்கல் பூசை செய்து சோதனையிட வேண்டும் என்று மக்களிடம் கூறுவார். மக்கள் கூடி நாள் குறித்து வழிபாட்டுக்குரிய விரதமிருந்து, பூசையைத் தொடங்குகிறார்கள்.
மந்தைவெளிக்குச் சென்று சாமியாடி நிலத்தைத் தோண்டி உள்ளே உள்ள எண்ணெய் குறைந்திருக்கிறதா என்று பார்க்கிறார். எண்ணெய் குறைந்திருந்தால், சில சடங்குகளைச் செய்து எண்ணெய் ஊற்றி வைக்கிறார். அதனால் ஊருக்குள் வந்த நோய் ஓடிப்போய்விடுகிறது என்று நம்புகிறார்கள். ஆடு, மாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிற இவ்வழிபாடு, குறும்பர்களுடன் தொடர்புபடுத்தி ஆராய வேண்டிய ஒன்றாகும், என்று கூறுகிறார் திரு ராஜேந்திரன்.
வட்டவடிவத்தில் பெரிய இட்டலி பானை போன்ற மண்பாண்டத்திற்குள் ஒரு மண்பாண்டத்தை வைத்து, அதற்குள் ஒரு மண்குடத்தை வைத்து, அதற்குள் சுத்தமான நல்லெண்ணெய்யை ஊற்றி, அதன் மேல் மண்பாத்திரத்தால் மூடி, அதன்மேல் உலைமூடியால் மூடி, அதன்மேல் மண் ஓடுகளைக் கவித்துப் பூமிக்கடியில் மூன்றடி ஆழத்தில் புதைத்து விடுகிறார்கள். அதில் எண்ணெயின் அளவு குறைந்தால் ஊருக்குக் கெடுதி என்று நினைக்கிறார்கள். இப்போதும் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது. பாபு என்கிறவர் பூசாரியாக இருக்கிறார். பூசையின் போது.
“ஊர்பேர் நெறும்பூர்
உத்தமிபேர் காரச்செம்மன்
பாலொழும் நெறும்பூர்
பரமர் தொழும் மாரிமுத்தம்மன்”
என்று தொடங்குகிற பாடலைப் பாடுவதாக அவர் கூறினார். அல்வூரிலிருந்த தருமர் கோவிலின் முன்னே கூத்து, நடந்து வந்ததாகவும் கூறினார். தருமர் கோவில் இடிந்து கிடக்கிறது.
நெறும்பூரில் இப்போதும் இருளர் அல்லது காட்டுக்காரர் என்றழைக்கப்படும் இரண்டு குடும்பங்கள் உள்ளன. இவர்களின் தாய்மொழி தமிழ். தொழில் சவுக்கு மரம் வெட்டுதலும், பாம்பு பிடிக்கிறதுமாகும்.
(தொடரும்)
- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை, 9841010821
rangaraaj2021@gmail.com
- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com
Leave a comment
Upload