தொடர்கள்
கதை
“நேரில் பார்த்தவன்” - வெ. சுப்பிரமணியன்

2022001321261577.jpeg

“பாட்டீ… நான் தாத்தா மாதிரி நிறைய படிச்சு… ஸ்கூல் டீச்சராகப் போறேன். அப்பதான்… எல்லாரும் தாத்தாவுக்கு வணக்கம் சொல்லற மாதிரி, எனக்கும் சொல்லுவாங்க” என்றாள் என் எட்டு வயதுப் பேத்தி.

“ம்க்கூம்… ‘பேரு பெத்த பேரு… டப்பு ஏமியும் லேது’. இந்த வருஷத்தோட ரிட்டையர் ஆகப்போற உன்னோட தாத்தாவுக்கு… பேருக்கு பின்னாடி நாலு பி.ஜி. டிகிரிகளைத்தான் சேர்க்க முடிஞ்சுது. ஒரு சொந்த இடம்… காரு… பங்களான்னு, எதையாவது வாங்கிப் போட்டிருக்காரா? எப்போடா கவர்மென்டிலே ‘டி.எ.’ இன்கிரிமென்ட், அனௌன்ஸ் பண்ணுவாங்கன்னு, டெய்லி நியூஸ் பார்த்துகிட்டு இருக்கார்” என்றாள் விரக்தியுடன்.

அப்படீன்னா… டீச்சர் வேலை நல்லவேலை இல்லையா…? என்றாள் என் பேத்தி. “இந்தக் காலத்திலே… படிச்சவங்களை விடவும்… பணம் இருக்கிறவங்களுக்குத்தான் ‘மரியாதை’ ஜாஸ்தி. தாத்தா மாதிரி ஸ்கூல் டீச்சராகாம, நிறைய சம்பளம் வாங்கற உன்னோட அப்பா மாதிரி, ‘ஐ.டி. கம்பெனியிலே’ வேலைக்குப் போ” என்றாள் என் மனைவி.

பதட்டத்துடன், வீட்டுக்குள்ளே வந்தான் என் மகன். “என்னோட காலேஜ் ‘டீ.சி.யை’, ஒரு பிளாஸ்டிக் பையிலே போட்டு, என் ஸ்கூட்டர்லே சைடு ஹூக்கிலே மாட்டிகிட்டு, ரெண்டுமூணு எடத்துக்குப் போயிட்டு, கடைசியா, ஜெராக்ஸ் கடைக்குப் போனேன். அங்கே போய் பார்த்தா, பையைக் காணோம். நாளைக்கு காலையிலேயே, நான் சென்னைக்கு கிளம்பணும். அந்த ஒரிஜினல் டீ.சி.யை என் ஆஃபீஸ்ல வெரிஃபிகேஷனுக்காக சப்மிட் பண்ணனும்” என்று புலம்பினான் என் மகன்.

“பதட்டப்படாம ஞாபகப் படுத்திப்பாரு. எங்கே தொலைச்சேன்னு தெரியுமா?” என்று அவனிடம் கேட்டேன் நான்.

“இது என்னக் கேள்வி? எங்கே தொலைச்சான்னு தெரிஞ்சா… அங்கேயிருந்து அவனே எடுத்துகிட்டு வரமாட்டானா?’ என்று கேட்டுவிட்டு என்னை முறைத்தாள் என் மனைவி.

“நேரா, நீங்க படிச்ச காலேஜுக்குப் போய் டூப்பிளிகேட் சர்டிஃபிக்கேட் குடுங்கன்னு கேட்டா தரமாட்டாங்களா?” என்று கேட்டாள் என் மருமகள்.

“டூபிளிகேட் டீ.சி. வாங்கறது அவ்வளவு ஈசி இல்லே. நான் என் காலேஜுக்கு போய் கேட்டேன். டீ.சி., தொலைஞ்சு போயிடுச்சுன்னு போலீஸ் கம்பிளெயின்ட் குடுக்கணுமாம். ஒரு வேளை போலீஸ் கண்டு பிடிக்கலேன்னா… ‘எஃப்.ஐ.ஆர்’ போட்ட தேதியிலே இருந்து ஒரு மாசம் கழிச்சு, ‘இர்டிரேஸபிள் சர்டிஃபிக்கேட்’ தருவாங்களாம்” என்றான் என் மகன்.

“அடேங்கப்பா… அதுக்கே ஒரு மாசமாகுமா… என்றாள் என் மனைவி. “அது மட்டுமில்லேம்மா… போலீஸ் ஸ்டேஷனில் குடுக்கிற சர்டிஃபிக்கேட்டை கொண்டுபோய், தாசில்தார் ஆஃபீஸ்ல குடுக்கணுமாம். தாசில்தார் ரெக்கமன்டேஷன் பண்ணி சீல் போட்டுத் தருவாராம். அதைக் கொண்டுபோய் காலேஜ்ல குடுத்தாதான், டூப்பிளிகேட் டீ.சி. தருவாங்களாம்” என்று அவன் சொல்லவும்.... என் மருமகளோ ‘ஐயோ’ என்று அலறியே விட்டாள்.

“அப்பா… போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் எனக்கு பழக்கமில்லை. நீயும் கூட வாப்பா” என்றான் என் மகன். “ஏங்க… குத்துக்கல்லாட்டுமா இருக்கீங்க? இன்னிக்காவது ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு, அவனுக்கு எதாவது ஹெல்ப் பண்ணக்கூடாதா?” என்றாள் என் மனைவி.

என் மகனுடன், ஒரு ஆட்டோவில் ஏறி… போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன். இதுவரையில், கால்வைக்காத இடமென்பதால், அங்கு நுழைய எனக்கு சங்கோஜமாக இருந்தது.

எங்கள் பின்னாடியே… ஸ்டேஷன் வாசலில் ‘ஜீப்’ ஒன்று வந்து நின்றது. பரபரப்பான ‘ஏட்டு’ ஒருவர், ‘ஓரமா நில்லுங்கப்பா…’ என்று எங்களை விரட்டிவிட்டு, மற்ற போலீஸ்காரர்களுடன், ஜீப்பிலிருந்து இறங்கி வந்த இன்ஸ்பெக்டருக்கு ‘சல்யூட்’ வைத்தார்.

எதேட்சையாக என்னைப் பார்த்த அந்த இன்ஸ்பெக்டர் ஒரு சில வினாடிகள் நின்றுவிட்டு, பிறகு தன் அறைக்குப் போனார்.

சற்று நேரத்தில், “உங்களை… ‘ஐயா’ கூப்பிட்டார்” என்று சொல்லி, ‘ஏட்டு’ ஒருவர் எங்களை உள்ளே அழைத்துப் போனார்.

“நீங்க… கணக்கு டீச்சர் ராகவன் சார்தானே?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். “காலேஜ்ல படிச்ச என் பையனுக்கு ‘மாத்ஸ்’ டியூஷன் சொல்லிக்குடுத்தீங்களே…” என்று அவர் சொல்லவும்...

“நீங்க மிஸ்டர் அங்குசாமிதானே?” என்ற என்னிடம்..

“சார்… என்னை ஞாபகம் வைச்சிருக்கீங்களே!” என்றார் அந்த இன்ஸ்பெக்டர்.

“அது சரி… நீங்க எதுக்கு சார், ஸ்டேஷனுக்கு வந்திருக்கீங்க?” என்ற இன்ஸ்பெக்டரிடம், என் மகனை அறிமுகப்படுத்தி, அவனது டீ.சி. தொலைந்த விஷயத்தை சொன்னேன்.

தன் ஸ்டேஷனின் ரைட்டரை அழைத்தார் அங்குசாமி. “போன மாசம் ரெக்கார்டான மாதிரி, ஒரு ‘எஃப்.ஐ.ஆர்’ பதிஞ்சு, அது சம்பந்தமா ‘இர்டிரேஸபிள் சர்டிஃபிக்கேட்’ ஒண்ணை, ‘நேத்திக்கு’ தேதிபோட்டு, ரெடிபண்ணி கொண்டுவாங்க” என்றார்.

“சார்… ரெண்டு நிமிஷம் வெளியிலே உட்காருங்க. சர்டிஃபிக்கேட்டை வெரிஃபை பண்ணிட்டு தம்பிகிட்டே குடுத்துவிடறேன்” என்று அங்குசாமி சொல்லவும், நான் மட்டும் வெளியில் போட்டிருந்த நாற்காலிகள் ஒன்றில் அமர்ந்தேன்.

“சார்… நான் சர்டிஃபிக்கேட்டுக்கு ‘ஃபீஸ்’ எவ்வளவு குடுக்கணும்” என்று கேட்ட என் மகனிடம், அங்குசாமி சொன்னது என் காதுகளிலும் கேட்டது.

“தம்பி… ‘எங்களை’ மாதிரி ‘போலீசுக்கு’ வருமானம் நிறைய இருக்கு… ஆனால் நிம்மதியில்லே…! நாங்க பதவியிலே இருக்கிற வரைக்கும் எல்லாரும் பயப்படுவாங்க, ஆனால்… எப்போதுமே மதிக்கமாட்டாங்க.

ஆனால்… உங்க அப்பாவை மாதிரி, பணத்தை பெரிசா நினைக்காம, ஊரார் பிள்ளைகளுடைய எதிர்காலம் நல்லா இருக்கணும்னு நினைக்கிற ‘நல்ல’ ஆசிரியர்களுக்கு, வருமானம் நிறைய இருக்காது. ஆனால் எப்போதுமே ‘மரியாதை’ கிடைக்கும்.

என் பையன் டிகிரி படிக்கும்போது, ஒவ்வொரு செமஸ்டர்லேயும், கணக்குப் பேப்பர்ல ‘அரியர்’ வைச்சு தடுமாறிக்கிட்டிருந்தான். ஸ்கூல் டீச்சரான உங்க அப்பாகிட்டே டியூஷனுக்கு சேர்த்துவிட்ட பிறகுதான், அவனுக்கு ‘மாத்ஸ்’ பாடத்திலே புரிதல் வந்து, சிரமம் இல்லாம டிகிரி முடிச்சான். அன்னிக்கெல்லாம், நான் எவ்வளவோ வற்புறுத்தியும் உங்க அப்பா, ‘ஃபீஸே’ வாங்கிக்காம, என் மகனுக்கு ‘பாடம்’ சொல்லிக்குடுத்ததை நான் எப்படி மறப்பேன்.

அவரோட பிள்ளையான உங்களுக்கு நான் செய்யும் இந்த ‘சின்ன’ உதவிக்கு ‘காசு’ குடுத்து, என்னை அசிங்கப்படுத்தாதீங்க” என்றார் அங்குசாமி.

பேப்பரெல்லாம் தயாராகி வந்ததும் கையெழுத்து போட்டுவிட்டு, வெளியே வந்து, ‘என்’ கையில் குடுத்தார் அங்குசாமி.

“ஏட்டு… பக்கத்திலே இருக்கிற ‘கார்’ ஸ்டாண்டுக்குப் போய், நான் சொன்னேன்னு ஒரு நல்ல வண்டிய வரச்சொல்லு. ‘ஐய்யாவை…’ தாசில்தார் ஆஃபீஸ்லே உட்டுட்டு, அந்த டிரைவரை… எங்கிட்டே வந்து காசு வாங்கிக்கச் சொல்லு” என்று சொல்லிவிட்டு எங்களை வழியனுப்பினார் அந்த இன்ஸ்பெக்டர்.

தாசில்தார் ஆஃபீஸில் ஏகப்பட்ட கும்பல். அங்கிருந்த ‘காம்பவுன்ட் ஓரமாக, நீண்ட வரிசையில்… என் மகனுடன் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று அங்கே வந்த ஒருவன், என் காலில் விழுந்தெழுந்து, “சௌக்கியமா இருக்கீங்களா சார்” என்றான்.

குழப்பத்துடன் பார்த்த என்னிடம், “சார் இருபது வருஷத்துக்கு முன்னாடி, நீங்கதான் எனக்கு ஸ்கூல்ல, பிளஸ்-டூ ‘மாத்ஸ்’ டீச்சர். நான் இப்போ… இந்த… தாசில்தார் ஆஃபீஸிலதான் ‘செக்ஷன்-ஹெட்டா’ இருக்கேன்” என்றவன், எங்களை அழைத்துக்கொண்டு அந்த அலுவலகத்துள்ளே போனான்.

பத்து நிமிடத்தில் தாசில்தார் கையெழுத்துடன் வந்தவனிடம், என் மகன் “ஏதாவது ஃபீஸ் கட்டணுமா” என்று கேட்டபடியே ஒரு ‘ஐநூறு’ ரூபாயை எடுத்து நீட்டினான்.

“தம்பி… இன்னிக்கு நான் வசதியா வாழறேன்னா… அது என்னோட ஸ்கூல் லைஃப்ல ‘சார்’ போட்ட அறிவுப் பிச்சைதான் காரணம். நான்தான் அவருக்கு நிறைய ‘கடன்’ பட்டிருக்கேன்” என்று சொல்லி விட்டு, பணம் வாங்கிக்கொள்ளாமல், ஆபீஸ் வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவை அழைத்தான்.

“இங்க பாருப்பா… சார் என்னோட ‘குருநாதர்’. அவர் சொல்லற இடத்திலே இறக்கி விட்டுட்டு, சாய்ங்காலம் ஆஃபீஸ் முடிஞ்சு நான் கிளம்பும் போது வந்து காசு வாங்கிக்க” என்றவன், என் மகனைப் பார்த்தான்.

“தம்பி… இனிமே இந்த ஆஃபீஸ்ல உங்களுக்கு எதாவது வேலை நடக்கணும்னா, நேரா என்னைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு, எங்களை அனுப்பி வைத்தான்.

என் மகன் படித்த கல்லூரிக்குப் போய், அந்தக் கல்லூரி முதல்வரிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, என் தேவையைச் சொன்னேன்.

அக்கல்லூரி முதல்வரோ, என் மகனிடம், ” நீ நம்ம காலேஜோட ஓல்டு ஸ்டூடன்டுங்கிறதை விடவும், ஒரு ‘ஸ்கூல் டீச்சரோட’ பையன்னு சொல்லிக்கிறதுக்கு ரொம்பவே பெருமைப்படு” என்று சொல்லிவிட்டு. பத்தே நிமிடத்தில் டூப்பிளிகேட் டீ.சி.யை ரெடிபண்ணிக் கொடுத்தார்.

மதியமே வீட்டுக்கு திரும்பிவிட்டோம். என் மகனின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை கண்டதும், “நான்தான் சொன்னேனே… காலேஜிலே போய்க்கேட்டா… உடனே டூப்பிளிகேட் சர்டிஃபிக்கேட் குடுப்பாங்கன்னு” என்று சொல்லி தன் ‘யோஜனை’ பலித்ததாக சந்தோஷப்பட்டாள் என் மருமகள்.

என் மனைவியோ… “இந்தக் காலத்திலே ‘காசை’ அள்ளி விட்டியானா, ஒரு ‘மண்டலத்து’ வேலையெல்லாம்கூட அரை ‘நாளில்’ முடிஞ்சுடும்னு புரிஞ்சுண்டியா. இதுக்கெதுக்கு, ‘வேஸ்டா’ உங்க அப்பாவையும் இழுத்துகிட்டு போனே?” என்றாள்.

அங்கே வந்த என் பேத்தியோ, “அப்பா… நானும் படிச்சு பெரியவளாகி உன்னாட்டுமா, கம்பியூட்டர் எஞ்சினியர் ஆகட்டுமா?” என்றாள்.

“வேண்டாம்மா…நீ நல்லா படிச்சு, உன்னோட தாத்தா மாதிரி ஒரு ‘ஸ்கூல் டீச்சராத்தான்’ போகணும்” என்றான் என் மகன்.

“ஏண்டா… குழந்தைக்கு நல்லதை சொல்லித்தரமாட்டியா” என்ற தன் அம்மாவை கூர்ந்து பார்த்தான் என் மகன்.

“அம்மா… வெறும் ‘காசு-பணம்’ எல்லாத்தையும் சாதிக்காது. அப்பாவை மாதிரி ஒரு நல்ல ‘டீச்சருக்கு’ கிடைக்கிற மரியாதையே வேற லெவல். அதை கண்கூடா கண்டு அனுபவித்தால்தான் தெரியும்” என்றான்… “நேரில் பார்த்தவன்”.