தொடர்கள்
தொடர்கள்
மிடில் பெஞ்ச் - 9 - இந்துமதி

கனா காணும் காலங்கள்

2022001115230033.jpg

(இதில் இந்துமதியை சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கடலை மிட்டாய் இலவசம்)

ஹிந்தியில் வெளியாகி தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ‘83’ திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது, பழைய நினைவுகளை கிளப்புவதாக இருந்தது. கல்லூரி நாட்களில் விடுதியில் எங்களுக்கு தொலைக்காட்சி பெட்டியில் காட்டப்படுவது கிரிக்கெட் மற்றும் ராதிகாவின் சித்தி நாடகம் மட்டுமே. அப்போதெல்லாம் கிரிக்கெட்டை பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சியளிக்கும், இந்தியா விளையாடும் ஆட்டமென்றால் மெஸ்ஸில் ஒரே தள்ளு முள்ளு தான், அங்கு தான் டிவி வைத்திருப்பார்கள். இந்தியா பேட்டிங் செய்யும் போது ஒரு வேளை நாலோ அல்லது ஆறோ அடித்தால் மெஸ்ஸின் மேஜைகளில் கரண்டி கொண்டு அடித்து கொண்டாடுவார்கள். ‘83’ படத்தில் ஒரு காட்சியில், இந்தியா ஜெயிக்க போகும் நிலையில் கோச் யாரும் நகர கூடாது என்று சொல்லிவிடுவார். அணியினர் அனைவரும் இயற்கை உபாதைக்கு கூட போகாமல் அசையாமல் நின்று கொண்டிருப்பார்கள். அப்படி நகரும்போது யாராவது அவுட்டாகி விட்டால் என்ன செய்ய என்று எல்லாரும் அப்படியே நின்று கொண்டிருப்பார்கள். நாங்களும் அப்படி எல்லாம் நின்றும், அமர்ந்தும் பார்த்திருக்கிறோம். இறுதி ஆட்டத்தில் ஆறு பந்துகளில், பத்து ரன் எடுக்க வேண்டும் என்பது போன்ற நிலை வரும் போதெல்லாம், நகம் கடித்தபடி நுனி பெஞ்சில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்போம். ஜெயித்துவிட்டால் போதும் ஸ்டெல்லா அக்காவும் நான்சியும் சேர்ந்து நாக்கை மடித்து கொண்டு வாயில் விரலை மடித்து வைத்து சத்தமாய் ஒரு விசில் அடித்து தூள் கிளம்புவார்கள். ஆளுக்கு ஆள் கட்டி பிடித்து ஆட்டம்போட்டு என்னவோ நாங்களே விளையாடி ஜெயித்தது போல மகிழ்ச்சி கொள்வோம். மனம் எப்போதுமே கொண்டாட ஏதாவது ஒரு காரணத்தை தேடி அலைகிறது இல்லையா!

20220011152442587.jpg

கன்னியரின் மனதில் இடம்பிடிக்க காலம் காலமாய் காளையர் பயன்படுத்தும் ஒரே வழி போட்டியில் ஜெயித்து வெற்றி வாகை சூடுவது. ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடும் போது தான் இந்த வெற்றி சாத்தியப்படும். பொறியியல் கல்லூரியாக இருந்தாலும், எங்கள் கல்லூரியில் விளையாட்டுகளுக்கு பஞ்சமில்லை. வருடா வருடம் மாநில அளவில் டோர்னமெண்ட் நடக்கும். அதில் பங்கு பெற தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரியில் இருந்தும் வீரர்கள் வருவார்கள். வருடத்தில் அந்த 15 நாட்களும் வகுப்புகள் கிடையாது என்பதால் எங்களுக்கு கொண்டாட்டம் தான். பொதுவாக இந்த போட்டிக்கு வருபவர்கள் விளையாட்டு பயிற்சி கல்லூரிகளில் இருந்து வரும் மாணவ- மாணவியர் என்பதால் மிக சிறப்பாக விளையாடுவார்கள். கைபந்து, கூடைபந்து, கால் பந்து மற்றும் கபடி என்று எல்லா விளையாட்டுகளும் களைக் கட்டும். தொடர் பயிற்சியில் ஈடுபட்டு திடமாக இருக்கும் இளைஞர்களை பார்த்து ரசிக்க ஒரு கன்னியர் கூட்டமுண்டு. அப்படியே பெண்கள் கலந்து கொள்ளும் போட்டியை பையன்கள் பார்வையாளர்களாய் இருந்து உற்சாகப்படுத்துவார்கள். அவ்வளவு நாட்கள் விறைப்பான போலீஸ் மாதிரி இருக்கும் கல்லூரி, அப்போது தான் மப்டிக்கு மாறும். கல்லூரியே வண்ணங்களால் நிறைந்து வழியும் அற்புதகாலமது.

20220011152552844.jpeg

இறுதியாண்டில் நடந்த டோர்னமெண்ட்டுகளில் நாங்களே நடுவர்களுக்கு அருகில் நின்று அணிகளின் மதிப்பெண்களை எழுத வேண்டி வருவதால் கலந்து கொள்ளும் வீரர்களுடன் கேலியும் கிண்டலுமாக கழியும் பொழுதுகள். எங்கள் கல்லூரியின் அணி, கால் இறுதி சுற்று வரை வந்தாலே பெரிய விஷயம். அதனால் இறுதி சுற்றில் மோதிக் கொள்ளும் அணிகளில் எதில் எங்களுக்கு பிடித்த வீரர்கள் இருக்கிறார்களோ அவர்கள் சார்பில் கைதட்டி அவர்களை உற்சாக படுத்துவோம். நம்மை பார்த்து ரசிக்கிறார்கள் என்பதற்காகவே உத்வேகத்துடன் விளையாடும் வீரர்களுக்கு இதெல்லாம் குதூகலம் அளிக்கும் விஷயங்களாய் இருக்கும். என் வகுப்பு தோழன் ஒருவன் கபடியில் மாநில அளவில் விளையாட கூடிய சிறந்த வீரன், கபடியில் மட்டும் தான் எங்கள் கல்லூரி அணி இறுதி சுற்று வரைக்கும் வரும், அது ஒரு பெருமை எங்களுக்கு.

20220011152614492.jpg

எங்கள் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் என்று தனியாக நடத்தமாட்டார்கள். ஆனால் சுதந்திர தினம், ஆசிரியர் தினம் போன்ற கொண்டாட்டங்களில் நாடகங்கள் நடத்திய அனுபவங்கள் இனிமையானவை. விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் என் தோழியுடன் இணைந்து நாடகம் எழுதி இருக்கிறேன். நடிப்பெல்லாம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது. பள்ளியில் டாக்டராய் நடிக்க வேண்டிய இடத்தில பதட்டத்தில் ஸ்டெத்தை நோயாளியின் காதில் வைத்த பிரகஸ்பதி நான். வசனமில்லாத இடங்களுக்கே இந்த பாடு என்றால் வசனம் பேச சொன்னால், ‘சிம்லா ஸ்பெஷல்’ ஸ்ரீப்ரியா மாதிரி “சேரா.. மன்னா.. செப்பு” கதை தான். வசனம் எழுதுவது பாடல்களை காமெடியாக மாற்றி பாடுவது எல்லாம் மிகவும் பிடிக்கும் என்பதால் அதை மட்டும் செய்வேன். தோழி மிக சிறப்பாக நடிப்பாள் என்பதால் இந்தக் கூட்டணியில் சில நாடங்கங்களை அரங்கேற்றி இருக்கிறோம். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்யும் போது பொழுதும் ரெக்கை கட்டி பறக்குமல்லவா அழகான நாட்கள் அவை.

எங்கள்துறையின் சிம்போஸியம் தான் கல்லூரி நாட்களில், நாங்கள் புடவை கட்டி கொள்ளும் மிக பெரிய வைபவமாக இருக்கும். அன்று நாள் முழுவதும் ஏதோ எங்கள் வீட்டில் பண்டிகை நடப்பது போல புடவை சரசரக்க, அதிகம் உடுத்தி பழகியிராத புடவை தரும் வெட்கத்துடன் அலைவோம். கல்யாண வீடு போலவே அன்று சிறப்பான உணவுகளும் கிடைக்குமென்பதால் அதற்காக தயாராவதே திருவிழா மனோபாவத்தை ஏற்படுத்தும்.

நான்கு ஆண்டுகள் விடுதியிலும், கல்லூரியிலுமாக கழிந்த நாட்களில் சண்டை சச்சரவுகள் என்று யோசித்து பார்த்தால் ஒன்றுமே நினைவில்லை. யாரிடமும் பேசாமல் கொள்ளாமலும் ஒரு பொழுது கூட இருந்ததில்லை. என் பிறந்த நாட்களை கொண்டாடி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோது பார்த்து கொண்டு, அப்பா இறந்த போது ஆறுதல் படுத்திய தோழிகளை இன்று நினைத்து பார்க்கும் போது, பிரியத்தில் நெகிழ்கிறது மனம். பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் ஒன்றாய் இருக்க முடியாமல் ஒவ்வொருவரும் நடந்துகொள்ளும் விதம் கண்டு உண்மையில் வியக்கிறேன் நான்.

மார்கழிக் காலைகள் அழகானவை. மெல்லிய பனி மூடிய விடுதி சாலையில் இருந்து தொலைவில் தெரியும் மலைகள் அவ்வளவு ரம்மியமாக காட்சியளிக்கும். பார்த்து ரசித்துக் கொண்டே நடக்கும் போது, துணைக்கு வரும் பனி காதில் “ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்..” என்று பாடிவிட்டு போகும். நான் ஒரு குளியலறை பாடகி, காலையில் குளிரில் குளிர்ந்த நீரில் குளிக்க நேரும் போது நடுக்கத்தை மறைக்க பிடித்த ஏதாவது ஒரு பாடலை பாடுவேன். இப்படி நான் பாடியதை கேட்டு என்னை கொயரில் பாட அழைத்தார்கள். கொயரில் பாடும் பாடல்களை ரெக்கார்ட் செய்வார்கள் என்பதால் பல ஷாட்டுகள் போகும். அனைவருக்கும் சரியாக பாட வந்து பக்க வாத்தியங்களோடு ஒத்து பாடி முடித்து வருவதற்குள் சாப்பாட்டு நேரம் கடந்து விடும். என்னுடைய அறைத்தோழி ஏற்கனவே கொயரில் இருந்ததால் அவளது அனுபவத்திலேயே நான் உஷாராகி கொண்டேன். நேரம் தப்பி வந்து தூங்கிவிட்டு இரவில் எழுந்து போய் இருட்டில் சாப்பிடுவதால் ஸ்வாதி என்ற அவளின் பெயர் சோத்தி என்று மாற்றி அழைக்கப்பட்டது. நாமோ வெங்கட் ரமணா வயிற்றை பார்த்து கொள் ரகம், இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று அப்போதே தோன்றி விட்டது. ஒரு வாய் சோற்றுக்காக சின்ன குயில் சித்ரா ஆகும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டவளா நீ என்று கேட்க வரும் முன், நான் ஒரு மிடில் பெஞ்ச் என்பதை நினைவில் கொள்க, நமக்கு கொள்கை ரொம்ப முக்கியம்.

இந்தக் கொண்டாட்டங்களை பற்றி சொல்லும் போதே மனதை கனக்க செய்த ஒரு விஷயமும் நினைவுக்கு வரும். எங்களது மிக நீண்ட விடுதி என்பதால் விடுதியின் நான்கு மூலைகளிலும் குளியல் அறைகளும் கழிவறைகளை கட்டப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் வெந்நீர் வேண்டுமெனில் நாம் தான் ஹீட்டர் போட்டு சூடு படுத்தி கொள்ள வேண்டும். கையில் தூக்கி சென்று சூடு படுத்தி கொள்ளும் இமெர்ஸன் வகை ஹீட்டர்கள் தான் பயன் படுத்த இயலும். அவை மிகவும் ஆபத்தானவை என்ற பயத்தால் நான் குளிர்ந்த நீரிலேயே குளித்து கொள்வேன். இப்படி ஒரு ஹீட்டரை பயன்படுத்திவிட்டு மேலிருந்த ஸ்விட்சை அணைக்காமல் போய்விட்டாள் ஒரு பெண். அவளால் அந்த குளியலறையை சுத்தம் செய்ய வந்த பெண்மணியின் உயிரே போய்விட்டது. இந்த மரணம் வெளியில் தெரியாத வண்ணம் நாசூக்காய் அதை மூடி மறைத்து விட்டது கல்லூரி நிர்வாகம். ஆனால் இந்தச் சம்பவம் என்னை மிகவும்பாதித்தது. யாரோ ஒருவரின் கவனக் குறைவால் ஒரு எளிமையான அப்பாவி பெண்மணி மாண்டு போனாரே! இவ்வளவிற்கு பிறகும் கல்லூரி நிர்வாகம் ‘நீங்கள் பயன்படுத்தும் ஹீட்டர்களின் ஸ்விட்சை கண்டிப்பாக அணைத்துவிடுங்கள். கவனமாக இருங்கள்” என்று ஒரு சின்ன நோட்டீஸ் கூட அனுப்பவில்லை. எளிய மக்களின் உயிர் அவ்வளவு துச்சமானதா? இங்கு மரணத்திற்கு கூட மதிப்பில்லையா என்று மிகவும் மனம் வெதும்பிய தருணமது. அநீதியை கண்டு பொங்கி எழுந்து போராடுவது எல்லாம் சினிமாக்களில் மட்டுமே சாத்தியமாக கூடிய விஷயங்கள், என்னால் மனம் குமைய மட்டுமே முடிந்தது. படிக்க போன இடத்தில் தேவையில்லாத தொல்லைகள் எதற்கு என்ற மிடில் பெஞ்ச் மனோபாவத்துடன் தான் வளர்க்க பட்டிருந்தேன்.

20220011153411336.jpg

என்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்த இயலாமல் விடுப்பு எடுத்து கொண்டு ஊருக்கு போய் இருந்து, வழக்கம்போல உஜ்ஜயனி மாகாளி கோவிலில் தீர்த்தத்தை அடித்து மனம் சமாதானம் ஆன பிறகு கல்லூரிக்கு திரும்பினேன். அதற்கு பின்பான நாட்களில் யார் ஹீட்டர்களை பயன்படுத்தினாலும் சுவிட்ச் அணைக்கப் பட்டிருக்கிறதா என்பதை கல்லூரி கிளம்பும் முன்பு பார்த்துவிட்டு போனால் தான் அன்று நிம்மதியாக வகுப்பை கவனிக்க முடியுமெனக்கு. அன்று யார் அந்த ஹீட்டரை பயன்படுத்தினார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அணைக்காமல் விட்ட அந்தபெண்ணுக்கு தெரியும் தானே, அவள் எப்படி குற்ற உணர்விலிருந்து தன்னை மீட்டுக் கொண்டாளோ!

மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி வருவது தானே வாழ்க்கை. சுணங்கி போயிருந்த மனதை மாற்றும் விதமாய் வந்தது கிறிஸ்மஸ் பண்டிகை. டிசம்பர் மாதம் முழுவதும் கிறிஸ்மஸ் கேரல்களால் (பாடல்களால்) நிறைந்து வழியும். அறைக்கு அறை ஜிங்கில் பெல்ஸ் கேட்கும். விடுதியில், வகுப்பில் என்று கிறிஸ்மா/கிறிஸ்சைல்ட் விளையாடுவோம். யார் யாருக்கு ரகசிய சேண்டா என்று தெரியாமலே நமக்கு வந்து சேரும் சிறு சிறு கட்டளைகளும், அதை செய்து முடித்தால் வந்து சேரும் பரிசுகளுமாய் விடுதியே கோலாகலமாய் இருக்கும். வகுப்பில் உடனே டவுட் கேட்கும் படி உத்தரவு வரும், சில நேரம் அதிகமாய் அறுத்து தள்ளும் ஆசிரியரிடமிருந்து வகுப்பை காப்பாற்றினால், அதற்கு தகுந்த பரிசு கிடைக்கும் என்றெல்லாம் எழுதி அனுப்பி வகுப்பில் கலாட்டாக்கள் அரங்கேறும். கிறிஸ்மஸ் தாத்தா போல வேடமணிந்து கொண்டு கிட்டார் சகிதம் ஒரு சிறு குழு விடுதியில் ஒவ்வொரு அறைக்கும் வருவார்கள். முதலாம் ஆண்டு இதை பற்றி முழுவதும் தெரியாமல் நிஜமாகவே நமக்கு பரிசு தருவார்கள் போல என்று சின்ன பிள்ளையை போல நினைத்து விட்டேன். ஆனால், எங்களுக்கு சேண்டா கொடுத்து விட்டு போனதென்னமோ பைபிளின் வாசகம். இம்புட்டு தானா என்று முதலில் ஏமாற்றமாக இருந்தாலும் பிறகு தான் நிதர்சனம் புரிந்தது. அவர்களும் தோழிகள் தானே எல்லோருக்கு பரிசுகளை அவர்களால் எப்படி வாங்கி தர இயலும். அதனால் தான் அவர்கள் கடவுளிடமிருந்து நமக்கான ஆசிர்வாதத்தை வார்த்தைகளாக அளிக்கிறார்கள் என்று புரிந்த பிறகு, எல்லாரையும் மகிழ்விக்க வந்த அந்த தோழியர் பட்டாளத்திற்கு நாங்கள் பரிசுகள் கொடுப்போம். பரிசுகள் என்னவானாலும் இருக்கலாம். ஆனால், அங்கு பரிமாற பட்டதெல்லாம் அன்பு மட்டுமே, அது தானே ஆதி மொழி.