தொடர்கள்
சிறு தொடர்கதை
மறு வாசனை... - 23 - அய்யாசாமி

2022001321245015.jpeg

இரண்டு நாட்கள் கழிந்து, காரைக்குடி துணை கண்காணிப்பாளர் தன் விசாரணைப் பணியை துவக்கிவிட்டதாக தெரிவித்தார்.

காரைக்குடி தாசில்தாரை போனில் கூப்பிட்ட ஆட்சியர், செங்கமலத்தாச்சியை பற்றி விசாரித்தார், வேண்டியதை அவருக்கு செய்து கொடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

நாடியில் சொன்ன பரிகரத்தை செய்ய வேண்டும் என்று அம்மாவிடம் சொன்னதும் இப்போது போகக்கூடாது, குழந்தைக்கு பெயர் வைக்கும் நாள் வரை ஆலய வழிபாடு கூடாது என மறுத்துவிட்டார்.

அதுவும் சரிதான் என்ற விஷால் தன் பணியில் தீவிரமானார்.

குழந்தைக்கு பெயர் வைக்கும் நாள் அன்று நெருங்கிய உறவுகள் கூடி மகிழ, உதவியாளர் ராமன் குடும்பத்தினரையும், அலுவலக ஊழியர்கள் அனைவரையும் அழைத்திருந்தார், தொட்டிலில் குழந்தையை இட்டு, பெயர்களை நெற்கதிரில் எழுதும் நேரம், சுப்ரியா கெளசிக் எனவும், விஷாலின் தந்தை ராஜகோபாலரெட்டி எனவும், சொல்ல, அம்மாவே முடிவு செய்யட்டும் என்று ஆட்சியர் சொல்ல...

விஷாலின் அம்மா ரெட்டி வந்தார், ஆட்சி செய்யத் தொடங்கினார் என்ற பழமொழி ஆந்திராவில் உண்டு, இவன் ராமர் போல் ஆட்சி புரியவேண்டும் என்ற ஆசை, அதனால் ராமி ரெட்டி அல்லது ராமநாத ரெட்டி, என்ற அடைமொழியோடு பெயர் வைக்கலாம் என்று சொன்னவர், அனைத்து பெயர்களையும் தாளில் எழுதி இறைவன் முன் போட்டு ஸ்ரேயாவை எடுக்கச் சொன்னார்.

ஸ்ரேயா ஒரு சீட்டை எடுத்து பாட்டியிடம் கொடுக்க, அதில் ராமநாத ரெட்டி என எழுதியிருந்ததைப் படித்து சொன்னபோது...

அங்கிருந்த பல்லிகளின் ஓசையால் அந்த அறை நிரம்பியது. விஷாலுக்கு மேலும் ஒரு ஆச்சரியம். அந்த பெரியவரைப் போல ஆறு விரல்களும், அவரின் பெயர் போலவே குழந்தைக்கும் அமைந்ததை நினைத்து எல்லாம் தெய்வச்செயல் என்று மகிழ்ந்திருந்தார்.

இப்படியே இருபது நாட்கள் கடந்தபோது, அந்த மூவர் பற்றிய அறிக்கை தயார் என காரைக்குடி டிஎஸ்பி-யிடமிருந்து ஆட்சியருக்கு போன் வந்தது.

நாளை மறுநாள் நேரில் வர முடியுமா என ஆர்வமாகக் கேட்டதும்... வருகிறேன் என அவர் கூறினார். ராமனிடம் அதற்கு தனியாக இடத்தை தெரிவு செய்யும்படி பணித்தார்.

சார், அந்த மூன்று நபர்கள், அவர்களின் பெயர்கள் சதாசிவம், கருப்பையா மற்றும் அசோகன் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும். அவர்கள் மூவருக்குமான ஒற்றுமை, காரைக்குடியைச் சேர்ந்தவர்கள், ஒத்த வயதுடையவர்கள். ஆனால், வேறுவேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றார்.

தனித்தனியாக அவர்களைப் பற்றி விசாரித்ததில்...

கருப்பையா என்பவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர், கூலித் தொழிலாளியாக 1980-களில் காரைக்குடிக்கு வந்தவர். ஆரம்பத்தில் ஹார்டுவேர் கடை ஒன்றில் பணிபுரிந்தார். அதில் சில ஒப்பந்தக்காரர்களின் பழக்கவழக்கம் ஏற்படுத்திக்கொண்டு, பொய் கணக்கு எழுதி, அதன் பின் அங்கியிருந்து விரட்டப்பட்டு, தனியாக ஹார்டுவேர் கடை ஒன்றை ஆரம்பித்தார்.

அரசுப்பணிகளுக்கு சப்ளை செய்து அதில் லாபம் ஈட்டினார், முதலுக்கு தேவையானதை கடனாக தினம், வாரம் மாதம் என மூன்று முறைகளிலும் வட்டி வாங்கி நாணயமாக திரும்பவும் செலுத்தி வந்துள்ளார்.

அதிலும் இப்போது இறந்து போனாரே ராமநாத செட்டியார் அவரிடம் அதிக வரவு செலவு வைத்ததும், அதனால் ராமநாத செட்டியாருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர் கேட்கும் தொகையை மறுக்காமல் தந்து விடுவார், அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செட்டியார் இருந்தார், என அந்த ஊர் மக்களே கூறுகின்றனர்.

சுமாரான வளர்ச்சியில் பண்பானவராக இருந்தவர், திடீர் என ஏதோ புதையல் ஒன்று கிடைத்தது போல வளர்ச்சியடைந்தார். வசதி வாய்ப்புகள் பெறுகியதும் நாணயம் தவறியிருக்கிறார், செட்டியாரிடம் இறுதியாக வாங்கிய கடனை திருப்பாமலும், அவரிடம் ஒத்திக்கு பெற்ற கடைத்தெருவில் உள்ள இடத்தை திரும்ப ஒப்படைக்காமல் அதனை பெரிய கடையாக விஸ்தீரனம் செய்தும், அவரை ஏமாற்றும் நோக்கோடு இருந்திருக்கிறார்.

இந்த காலகட்டத்தில்தான்... ஒன்றிய பொறுப்பில் இருந்த அசோகனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது, அவரின் துணையோடு கட்ட பஞ்சாயத்து, சட்டத்திற்கு புறம்பான செயல்கள் பல செய்திருக்கிறார். அரசியல் தொடர்பு இருப்பதால் பலர் அவரை நெருங்கவே பயந்தனர் என்றுதான் சொல்லவேண்டும்.

காவல் நிலையத்தில் தன் மீது எந்த வழக்கும் பதியப்படாமல் சாமர்த்தியமாக செயல்பட்டியிருக்கிறார் என கருப்பையாவைப் பற்றி தனக்கு கிடைத்த தகவல்களை திரட்டிச் சொன்னார்.

அவரின் குடும்பம்..?

அவரின் அம்மா, மனைவி, ஒரே மகன், மருமகள் இருக்கிறார்கள். சொத்து சுகம் கண்டவர் தன் மகனுக்கு வாரிசு இல்லையே என்ற குறையினால் மன நிம்மதி இல்லாமல் இருந்திருக்கிறார்.

அடுத்து சதாசிவம். அவரின் பூர்வீகமே காரைக்குடிதான் என்றவரிடம்...

ஏதோ புதையல் கிடைத்த செய்தி சொன்னீர்களே அது உண்மையா? எனக் கேட்டார்.

புதையல் ஏதும் இல்லை, ஆனால் புதையல் மாதிரி ஏதோ ஒரு சக்தியின் வெளிப்பாடாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்றார்.

வெரி இன்ட்ரஸ்டிங் என்றவர்... அவரின் எதிரி யார் என்று பார்த்து அவரிடம் அதைப் பற்றி விசாரியுங்கள் என கேட்டுக் கொண்டார் ஆட்சியர்.