தொடர்கள்
ஆன்மீகம்
சங்க காலத்தில் பொங்கல் பண்டிகை!! - மீனாசேகர்.

பொங்கல்


தமிழ் மக்கள் எத்தனையோ பண்டிகைகளைக் கொண்டாடினாலும் பொங்கல் பண்டிகையே அனைத்திலும் முதன்மையாய் திகழும் பண்டிகை ஆகும்.
பொங்கல் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகவே கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாள், சூரியத் திருநாள், பொங்கல் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தினம் அன்று, பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கூடிய ஆனந்த வாழ்வு பெற முடியும். பொங்கல் பண்டிகை பெரும் திருவிழாவாக நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.

சங்ககால பொங்கல் பண்டிகை:
சங்ககாலத்தில் பெண்கள், காலத்தில் உரிய மழை பொழியவும், நெல் வளம் சிறக்கவும் விரதத்தினைக் கடைப்பிடித்தார்கள். இந்த விரதத்தை, தை முதல் தினத்தில் முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை அனுபவிக்க தொடங்குவார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய கால்நடை போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது. பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது.

பொங்கல்


பொங்கல் பண்டிகையின் வரலாற்றை பார்க்கையில் இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்பாக கடைப்பிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. சங்க இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை குறித்து பல குறிப்புகள் உள்ளன. பரிபாடல் எனப்படும் சங்க இலக்கியத்தில், பொங்கல் குறித்த பல பாடல்கள், குறிப்புகள் உள்ளன. வேத காலத்திற்கும் முன்பிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவது, அத்திருநாளின் தொன்மையை விளக்குவதோடு, தமிழர்களின் பண்பாட்டையும் எடுத்துக் காட்டுகிறது.

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்:

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை

“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு

“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை எனப் பலவாறாக தைத்திருநாளின் சிறப்பியல்புகளை பழந்தமிழர் இலக்கியங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. இது தமிழர் திருநாளை பழந்தமிழன் எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடினான் என்பதனை விளக்குகின்றன.

பொங்கல்


தை உண் என்றும் தை நீராடல் என்றும் சங்க காலத்தில் இப்பண்டிகைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். சங்க காலத்தில் பொங்கல் நாளை அறுவடை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடியிருக்கின்றனர் என்பதனை சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் இருபத்திரண்டாம் பாடலில் சொல்லப்பட்டுள்ளது.

‘அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல….’ என்று குறந்தோழியூர் கிழார் எனும் புலவர் அறுவடை விழாவை சாறு கண்ட களம் என வருணிக்கின்றார். அத்துடன் சங்ககால நூல்கள் பலவும் தைத்திருநாளை சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுகளில் எழுந்த சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றி குறிப்பிடும் போது
‘மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’ என பொங்கலினை குறிப்பிடுகின்றது.

“மணிமேகலை” காப்பியத்தில், இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்ட அக்காலத்தில், காவிரி பூம்பட்டினத்தில், மன்னர்கள், மக்களுக்கு முரசறைந்து, பொங்கல் விழா வரவிருப்பதை அறிவிப்பார்கள். அக்காலத்தில் பொங்கல் விழா இருபத்தெட்டு நாட்கள் வரை நடந்திருக்கிறது.
சோழர்கள் காலத்தில் இவ்விழா ‘புதியீடு’ என்கிற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை அடிமைப்படுத்தியிருந்த போர்ச்சுகீசியர்கள் பொங்கலின் சிறப்பினை கூறியுள்ளார்கள். அதாவது கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த அப்போடூபாய் எனும் போர்ச்சுகீசிய அறிஞர் தான் எழுதிய ‘இந்துக்களின் பழக்க வழக்கங்களும், வாழ்க்கை முறைகளும்’ எனும் நூலிலே பொங்கல் உழவர்களின் அறுவடை நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
இதிலிருந்து தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரலாற்றுக் காலம் முதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதனைக் காணலாம்.

பொங்கல்

எந்தெந்த மாநிலங்களில், நாடுகளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது?
தமிழகத்தின் பொங்கல் பண்டிகையை போல வட மற்றும் மத்திய இந்தியாவில் ‘மகர சங்ராந்தி’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மகரம் என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தராயணத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. அதனால் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.

கர்நாடகா, ஆந்திராவில் மகாசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகவும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இப்பண்டிகை உத்தராயன் என்கிற பெயரிலும், பஞ்சாப், ஹரியானா மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களில் லோஹ்ரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அசாமில் ‘போஹாலி பிஹு’ (உணவுப் பண்டிகை) என்று கொண்டாடப்படுகிறது. பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளில் இப்பண்டிகையை இங்குள்ள மக்கள் சக்ராத் அல்லது கிச்ச்டி என்று அழைக்கிறார்கள்.

நேபாளத்தில் மாகி, மாகே சங்கராந்தி, மாகே சகாராதி என்கிற பெயர்களில் பொங்கல் போற்றப்படுகிறது. தாய்லாந்தில் சொங்க்ரான் எனவும், லாவோஸ் மக்களால் பி மா லாவ் என்றும், மியான்மரில் திங்க்யான் என்கிற பெயரிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதைத் தவிர மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரீஷியஸ் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. மலேசியா, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்படுகிறது.

இனிமை, பழமை, சிறப்பு சிறிதும் குறையாமல் சிறப்புமிக்க பொங்கல் பண்டிகையை செழிப்பான விவசாயத்துடனும், முகத்தில் மகிழ்ச்சித் ததும்பும் நம் விவசாய சகோதரர்களுடன் புது நெல்லைப் புடைத்து புத்தரிசி ஆக்கி, புதுப்பானையில் இட்டு சர்க்கரையும், வெல்லமும் சங்கமிக்க, மனம் இனிக்கப் பொங்கல் பொங்கி வர, மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்புடன் இனிமையாய் அமைந்த பொங்கல் பண்டிகையை குடும்பத்தோடும், சுற்றத்தோடும் கொண்டாடுவோம்!

பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைத்திருநாள் பொங்கலதில்
கொரோனாவை ஓட, ஓட விரட்ட
தை பிறந்திட வழியும் பிறந்திடுமே.
பொங்கலோ பொங்கல்

“இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!!!”