தொடர்கள்
கவர் ஸ்டோரி
பார் டெண்டர் விவகாரம்... - மூத்த அமைச்சர்கள் அதிருப்தி

20220013212144693.jpeg

மதுபான பார் டெண்டர் என்பது எப்போதும் ஆளுங்கட்சிக்கு தான். இதுதான் திராவிட கட்சிகளின் வழக்கம். இதில், சைட் டிஷ் மற்றும் தண்ணீர் பாட்டில் விற்பனை தனி. அதுவும் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு தான். இதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது. ஆனால், இந்த முறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடவடிக்கை, பிரச்சனையை உண்டு பண்ணி இருக்கிறது.

டாஸ்மாக் மதுபான பார் டெண்டரில் முறைகேடு என்று பார் உரிமையாளர்கள், அவர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி, நிருபர்களை சந்தித்து டெண்டர்கள் இப்போதுதான் பரிசீலிக்கப்பட்டு வருகிறது, எந்த முறைகேடும் இல்லாமல் வெளிப்படையாக நடந்திருக்கிறது. அதே சமயம்... டெண்டர் நிபந்தனைகளை பின்பற்றாதவர்களுக்கு அது யாராக இருந்தாலும், எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் நிராகரிக்கப்படும். அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும், இதுதான் முடிவு என்றார்.

இதுபோன்ற பார் டெண்டர் விவகாரத்தில், இதற்கு முன் எல்லாம் மாவட்ட செயலாளர்கள் பட்டியலை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஒப்படைப்பார்கள், அவர்களுக்கு டெண்டர் அனுமதி வழங்கப்படும். இதுதான் இதுவரை இருந்த நடைமுறை.

இந்த முறை செந்தில் பாலாஜி, புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி மாவட்ட செயலாளர்கள், மூத்த அமைச்சர்களின் பரிந்துரைகளை கூட கண்டுகொள்ளவில்லை.

மதுபான பார் டெண்டர்கள் வெவ்வேறு ஆட்களுக்கு தருவது போல் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக சில தனியார்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார் அமைச்சர் என்பது மூத்த அமைச்சர்களின் புகார். இதனால் ஆளுநர் உரையின் போது நடந்த இரண்டு நாள் சட்டப்பேரவை கூட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி வணக்கம் சொல்லியபோது கூட மூத்த அமைச்சர்கள் முகத்தை திருப்பிக் கொண்டார்கள்.

செந்தில் பாலாஜியின் இந்தத் திட்டத்தின் மூலம், கட்சிக்காக பெரும் நிதியை திரட்டி, தேர்தலுக்கு பயன்படுத்த இருக்கிறார் என்ற பேச்சும் இருக்கிறது.

மதுபான பார்களில், அங்கு அவர்கள் சொல்லும் விலைதான் இறுதியானது. இதன் மூலம் ஆண்டுக்கு 90 கோடி ரூபாய் வருமானம் வருமாம்.

திமுக மாவட்ட செயலாளர்கள் சிலர், நாமும் அமைச்சரை எதிர்த்து போராட்டம் நடத்தலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஆனால், அது கட்சிக்கு கெட்ட பெயர் என்பதால் அதை தவிர்த்தார்கள்.

இந்தச் சர்ச்சைக்கு பிறகு... முதல்வர், பார் டெண்டர் விவகாரத்தில் என்ன பிரச்சனை என்று செந்தில்பாலாஜியை அழைத்து நேரில் கேட்டபோது... எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது தலைவரே. தற்போது.. தேர்தல் நேரத்தில், கட்சியின் பூத் கமிட்டிக்கு 6000, சில இடங்களில் 3,000 என்றுதான் தருகிறோம் இப்போதைய சிஸ்டம் படி. வரும் வருமானத்தை வைத்து பூத் கமிட்டிக்கு 16 ஆயிரம் ரூபாய் வழங்கலாம். இந்த வருமானத்தை நான் தேர்தல் செலவுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன். தேர்தல் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அவர் வாயை அடைத்து விட்டார். கூடவே கட்சிக்காரர் சிலருக்கு இந்தப் பணம் போவதற்குப் பதில், தேர்தல் நேரத்தில் கட்சிக்கு உழைக்கும் தொண்டர்களுக்கு இந்தப் பணம் போய் சேரட்டுமே, இது கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். பாராளுமன்றத் தேர்தலில் நாம் அமோக வெற்றி பெறுவோம் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஆனால், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பத்து வருடமாக நாம் ஆட்சியில் இல்லை, நிறைய செலவு செய்தாகிவிட்டது. இதெல்லாம் தொண்டர்களா செய்தார்கள். கட்சி சொல்லும் நலத்திட்ட உதவிகள் எல்லாம் நாங்கள் தானே செய்தோம், அப்போதெல்லாம் கட்சியா பணம் தந்தது. கிளைக் கழக, ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஒரு பார் டெண்டர் கூட நமக்கு இல்லையா என்று கேள்வி கேட்கிறார்கள்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா நிவாரண நலதிட்டம், உதவி எல்லாம் நாங்கள் தானே செய்தோம். கடன் வாங்கி தானே செய்தோம் என்கிறார்கள். இதில் 2 அமைச்சர்கள் 10 ஆண்டுகளில் எங்களுக்கு 100 கோடி கடன் என்கிறார்கள்.