தொடர்கள்
பொது
காணொலியில் பிரதமர் திறந்த 11 மருத்துவ கல்லூரிகள்…! - கண்மணி மைந்தன்

20220013231645630.jpeg

தமிழக வரலாற்றில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரிய நிகழ்வு. மொத்தம் நான்காயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த 11 மருத்துவ கல்லூரிகளும், தமிழக மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையின் போது கூடுதல் இடங்களை அள்ளித் தரப் போவதால், தமிழக மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமான திட்டம் என்றே சொல்ல வேண்டும்.

11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் அமையும் போது, அந்தந்த பகுதியில் உள்ள நோயாளிகள் வெளியூர்களுக்கு சென்று வைத்தியம் பார்க்கும் நேரம் மற்றும் செலவு மிச்சமாகும். பிரதமர் மோடி பங்கேற்கும் காணொலி விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டது முக்கியமானது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ஆங்கிலம் மற்றும் தமிழ் உரையில், தமிழகத்திற்கு மட்டும் நீட் பொது தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டதை பிரதமர் உன்னிப்பாக கவனித்துகொண்டார்.

20220014074204859.jpeg

11 மருத்துவ கல்லூரிகளை காணொலி முலம் துவக்கி வைத்த பிரதமர் மோடி, மிகுந்த பெருமிதத்துடன் பொங்கல் வாழ்த்துக்கள், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தன் உரையைத் துவக்கினார். தமிழகத்தில் இப்போது ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள். இந்திய தேசத்தில், இதற்கு முன்னர் இப்படியொரு நிகழ்வு இல்லை என்றும், இது ஒரு வரலாற்றுச் சாதனை ஆகும். 2014ஆம் ஆண்டு தமது அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து, மருத்துவக் கல்லூரிகளின் வளர்ச்சி ஐம்பத்தி நான்கு சதவீதமாகவும், மருத்துவ படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை 80% ஆகவும் உயர்ந்திருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு, மாவட்ட அளவில் சிறந்த மருத்துவம் வழங்குவதற்காக 3,000 கோடி ரூபாய் பல கட்டங்களில் வழங்கியிருக்கிறேன். உலக நாடுகளின் உச்ச மன்றமான ஐநா பொதுச் சபையில், தான் தமிழில் பேசியதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார். பாரதியார், காசி பல்கலைக்கழகத்தில் படித்ததும், திருக்குறளின் குஜராத்தி மொழிபெயர்ப்பையும், இன்னும் பல மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். காசியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கண்ட அம்மாநில சிறுமி தமிழின் மேன்மையை உணர்வதும்... அதேபோல கன்னியாகுமரி அறை, விவேகானந்தர் அறை என்று விவேகானந்தர் பெருமை பேசுவதையும், இந்தியா ஒரே நாடு, இந்தியா பலம்மிக்க நாடு, இந்தியா சிறந்த நாடு என்பதையும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் பேசினார்.

அதன்பின், சென்னை பெரும்பாக்கத்தில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில், மூன்று அடுக்கில் முத்தமிழ் கோட்டம், மத்திய அரசின் இருபத்தி நான்கு கோடி ரூபாய் நிதி பங்களிப்பில், 20,000 சதுர அடி பரப்பளவில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மூன்று புதிய கட்டிடங்களில் நாற்பத்தி ஐந்தாயிரம் அரிய புத்தகங்களை உள்ளடக்கிய நூலகம், ஆராய்ச்சிக் கூடம், பயிற்சிக் கூடம், கருத்தரங்க மண்டபங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தமிழகத்திற்கு இது ஜாக்பெட்டான காலம் தான்!