தொடர்கள்
பொது
"பணிகள் முடியாத நீலகிரி மருத்துவ கல்லூரி பிரதமர் திறப்பு?!" - ஸ்வேதா அப்புதாஸ்

20220013205340792.jpg

நீலகிரி மாவட்டத்திற்கு மிக முக்கியமான அத்தியாவசிய தேவை ஒரு மருத்துவக் கல்லூரி. ஒரு நீண்ட எதிர்பார்ப்பை, கடந்த அஇஅதிமுக அரசு தான் மத்திய அரசிடமிருந்து பெற்று தந்தது என்று கூறப்பட்டது.

அதற்கு முத்தாய்ப்பாக கடந்த 2020 ஜூலை மாதம் 10 ஆம் தேதி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து காணொலி மூலம் இந்த மருத்துவ கல்லுரிக்கு அடிக்கல் நாட்டினார்.

20220013205429867.jpg

மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா தலைமையில், ஊட்டி எம்எல்ஏ கணேஷ் முன்னிலையில், ஊட்டி கால்ப் லிங்க்ஸ் பகுதியிலுள்ள இந்து நகரில் மருத்துவ கல்லூரிக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நடப்பட்டது. இதற்கு முன்னிலை வகித்தவர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா. அடிக்கல் நடப்பட்ட அந்த நாளிலிருந்து ஆட்சியரின் மேற்பார்வையில் மிக ஸ்பீடாக இதன் பணி துவங்கியது.

2022001320553532.jpg

இந்த மருத்துவக் கல்லுரிக்கான கட்டுமான செலவு 447.32 கோடி மதிப்பீட்டில் பணி துவங்கியது. ஊட்டியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்து நகர் பகுதியில் நாற்பது ஏக்கர் பரப்பளவில் அமைய திட்டம் தீட்டப்பட்டது.
இந்த மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்ப்பிட்டல், 108 ஆம்புலன்ஸ் கண்ட்ரோல் ரூம் கால்ப் லிங்க்ஸ் பகுதியிலும்... நிர்வாக அலுவலகம், மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் ஊழியர்களின் குடியிருப்பு, 750 மருத்துவ மாணவர்களுக்கான வசதியான ஹாஸ்டல் போன்றவை எதிர் மலையான பட் பையர் பகுதியில் அமைகிறது.

இந்த சூப்பர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 650 படுக்கைகள் அடங்கிய வார்டுகள், நவின வசதிகள் கூடிய ஐசியு வசதி, 21 முக்கிய மருத்துவத் துறைகள் அமைய இருக்கிறது. இந்த நவின மருத்துவமனையில் 300 சிறப்பு மருத்துவர்களும், பேராசிரியர்களும் வர இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல்... 1500 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு இந்த மருத்துவமனையால் கிடைக்க இருக்கிறது.

20220013205644939.jpg

இந்த மருத்துவக் கல்லூரி, கால்ப் லிங்க்ஸ் - இந்து நகர் பகுதியில் 25 ஏக்கர் நிலப்பரப்பிலும், பட் பையர் பகுதியில் 15 ஏக்கர் நிலப்பரப்பிலும் மிக அழகாக அமைய இருக்கிறது.

இந்த மருத்துவக் கல்லுரி ஊட்டியில் அமையுமா என்ற கேள்விக்குறி எழுந்தது. காரணம்... மத்திய அரசு, தமிழகத்தில் 10 மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் அனுமதியை வழங்கி இருக்க... நீலகிரி எம்பி ராசா, மத்திய அரசாங்கத்திடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது, ஒரு காரணமாக அமைந்தது. அதே போல... ஊட்டி எம்எல்ஏ கணேஷ், சட்டமன்றத்தில் மூன்று முறை கட்டாயமாக மருத்துவ கல்லூரி ஊட்டிக்கு தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின், பிரதமரிடம் வலியுறுத்தியதால்தான், நீலகிரிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் கல்லூரி கட்ட இடத்தை தேர்வு செய்தபோது... கோத்தகிரி, ஜெ. பங்களா கொடநாடு எஸ்டேட்டை மருத்துவ கல்லுரியாக மாற்றும் ஐடியா கூட எழுந்தது. பின்னர் எம்பி ராசா, ஊட்டி எச்பிஎஃப் கட்டிடங்களை புதுப்பித்து, மருத்துவக்கல்லுரி அமைக்கும் திட்டத்தைக் கூறினார். பின்னர்... அரசு, கற்பூர மரங்கள் சூழ்ந்த இந்தப் பகுதியை தேர்வு செய்தது. பல கற்பூர மரங்கள் வெட்டப்பட்டன. ஒரு விஷயம் கற்பூர மரங்கள் நிலத்தடி நீரை உரிந்து கொள்ளும் தன்மை என்பதால் அதை வெட்டியது சரியே என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

20220013205730430.jpg

மூத்தப் பத்திரிகையாளர் தாஸ் கூறும் போது.... “மருத்துவக் கல்லூரி வருவது நல்ல விஷயம் தான். நீலகிரி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா? இதில் நீட் ஒரு தலைவலி. வேலை வாய்ப்பில் நீலகிரிவாசிகளுக்கு வாய்ப்பு உண்டா?... எதுவுமே இல்லை. வெளியூர்களில் இருந்து இங்கு வந்து அதிகாரம் செய்ய போகிறார்கள், அது தான் நடக்க போகிறது. மேலும் அழகிய புல் வெளிகளை அழித்துவிட்டு கட்டிடங்கள் எழுப்புவதில் உள்ளுர்வாசிகளுக்கான எங்களுக்கு எந்த உடன் பாடும் இல்லை. அதே சமயம் கால்ப் லிங்க்ஸ் பகுதியின் இயற்கை அழகு காணாமல் போய்விட்டது. அதை இவர்களால் திருப்பி கொடுக்க முடியுமா?” என்று வருத்தப்பட்டார்.

நம் பிரதமர் மோடி தமிழகம் வந்து 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதாக இருந்தது. ஓமிக்ரோன் தாக்கத்தால் அவரின் தமிழக பயணம் ரத்தாகி, டெல்லியில் இருந்த வண்ணம் ஆன் லைன் மூலம் 12 ஆம் தேதி மாலை 4 மணிக்கு திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில் இருந்து நம் முதல்வர் மற்றும் ராஜ் பவனில் இருந்து ஆளுநர் ரவியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

20220013210352972.jpg

முதல்வர் தன் உரையில் பிரதமருக்கு நன்றி செலுத்தி, 4080 கோடி மதிப்பில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு வழங்கின பிரதமரை பாராட்டிவிட்டு, நீட் தேர்வில் இருந்து விலக்கு மற்றும் ரத்து செய்யுமாறு கேட்டு கொண்டார்.

20220013205846572.jpg

புதிய 11 மருத்துவக் கல்லூரிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி, “தை பொங்கல் திருவிழா வாழ்த்துக்களுடன் உரை நிகழ்த்தியதை பலர் ரசித்தனர்.
இந்த மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழாவை நாடே திரும்பி பார்த்து கொண்டிருந்தது.

நீலகிரி மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகள் இன்னும் முடியவில்லை என்பது தான் உண்மை.

11 ஆம் தேதி மாலை, மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு நாம் ஒரு விசிட் அடித்தோம். கால்ப் லிங்க்ஸ் பகுதிக்கு செல்ல, நாய்களின் கூட்டம் நம்மை துரத்தி விட்டது. பாதுகாப்புக்காக அங்கு பணிபுரிபவர்களின் நாய்களாம் அவை. ஒரே மண் குவியல் தான். கட்டுமானம் முடிய இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்று உணர முடிந்தது.

நாம், பட் பையர் பகுதி வளாகத்திற்கு சென்றோம். கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு தற்காலிக மண் சாலை அமைத்துள்ளனர். அதில் நாமும் சற்று தயக்கத்துடன் சென்றோம். புதிய ஒரே கட்டிடத்தை வர்ணம் தீட்டி, அவசரமாக டைல்ஸ் ஒட்டப்பட்டு, விளக்குகள் பொறுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி கொண்டிருந்தார். திறப்பு விழாவை காணொலியில் காணவும், அமைச்சர் இராமச்சந்திரன் மற்றும் எம்எல்ஏ-க்கள் குத்துவிளக்கேற்றி வைக்கும் இடத்தை ஆய்வு செய்து கொண்டிருந்த ஆட்சியர் அம்ரித்திடம், மருத்துவக் கல்லூரி திறப்பு பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுங்கள் என்று கேட்க... “தனிப்பட்ட முறையில் பேட்டி வேண்டாம், எல்லா நிருபர்களுடன் தான் கொடுப்பேன். இது குறித்து அமைச்சர் நேற்றே பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டார். படங்கள் எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி நகர்ந்தார்.

20220013205945836.jpg

நாம் அவரின் ஆய்வை படம் எடுத்தோம். பின் ஆட்சியர் வெளியே வந்து, மருத்துவக் கல்லூரியின் வரை படத்தை பார்வையிட... அதை நாம் படம் எடுக்க... கலெக்டரின் உதவியாளர் சத்தீஷ் நம்மிடம் வந்து, “அதிகாரிகளை, தனிமையில் வேலை செய்ய விடுங்கள், தொந்தரவு செய்யாதீர்கள்” என்று அட்வைஸ் செய்தார்.
நமக்கு ஒன்றுமே புரியவில்லை. கலெக்டரின் அனுமதியுடன் தான் ஆய்வை படம் பிடித்தோம். முன்னால் கலெக்டர் இருக்கும்போது, நல்லவிதமாக சிரித்து பேசுபவர் எப்படி ஒரு நன்றாக தெரிந்த பத்திரிகையாளரிடம் அதிகாரத்துடன் பேசுகிறார் என்று தான் புரியவில்லை. பாவம் அவர் என்று நினைத்து நகர்ந்தோம்.

12 ஆம் தேதி மாலை டெல்லி, சென்னையில் இருந்து காணொலி திறப்பு விழா துவங்க... ஊட்டி மருத்துவக் கல்லுரி புது கட்டிடத்தில் கலெக்டர் அம்ரித், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், கல்லூரி முதல்வர் மனோகரி, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி ஆகியோர் குத்து விளக்கேற்றி சிறப்பித்தனர்.

2022001321004882.jpg

ஊட்டி எம்எல்ஏ கணேஷ் இந்த விழாவில் மிஸ்ஸிங்.

20220013210113244.jpg

அவரை தொடர்பு கொண்டு பேசினோம்... “நான் சென்னை சென்று வந்ததில், உடல் நல குறைவு ஏற்பட்டதால் வர முடியவில்லை. அடிக்கல் நாட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன். நம் மாவட்டத்திற்கு இப்படி ஒரு மருத்துவ கல்லூரி வந்துள்ளது சிறப்பானது. நம் மாவட்டத்திற்கு, மருத்துவ கல்லூரி வருவது சந்தோஷமான விஷயம். விரைவில் பணிகள் முடிந்து, கல்லூரி திறக்கப்பட்டு நவின சிகிச்சை துவக்கவேண்டும் என்று முடித்தார்.

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன்... “இந்த 11 மருத்துவக் கல்லுரிகள், பிரதமர் கரத்தால் திறக்கப்பட்டுள்ளது. இதன் முலம் இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு 60 சதவிகிதம் வழங்குகிறது. நீட் தேர்வு கட்டாயம் என்பதில் தமிழக பிஜேபி உறுதியாக இருக்கிறது” என்று கூறினார்.

நீலகிரியின் மருத்துவத் துறையில் உயிர் நாடியாக இருந்தவர் டாக்டர். சிதம்பரநாதனை தொடர்பு கொண்டு பேசினோம்... “இப்படி ஒரு மருத்துவக் கல்லூரி, நம்ம நீலகிரி மாவட்டத்தில் திறந்திருப்பது சந்தோஷமான விஷயம். பல நாள் கனவு. முதலுதவி கொடுத்தவுடன் நோயாளியை கோவைக்கு கூட்டி செல்வது தான் வழக்கமாக நடந்து வந்தது. தற்போது எல்லா நவின சிகிச்சை மற்றும் உயர்தர மருத்துவ பேராசிரியர்கள் இங்கு வரும் போது, நவின சிகிச்சையும் கிடைக்கும். நீலகிரி மக்கள் இனி உயர் சிகிச்சைக்காக கோவை செல்ல வேண்டாம். உயர் தர சிகிச்சை கிடைக்கப் போகிறது என்ற சந்தோஷம் ஏற்பட்டுள்ளது”என்று முடித்தார்.

நீலகிரி மக்களுக்கு எப்பொழுதும் மருத்துவ வசதி என்பது மிகவும் குறைவு தான். ஊட்டி அரசு மருத்துவமனை எந்த வசதியும் இல்லாமல் இருந்தது. அவசர சிகிச்சை, முக்கிய அறுவை சிகிச்சை, இதயம் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு கோவைக்கு செல்வதுதான் கட்டாயமாக இருந்து வருகிறது. இது நாள் வரை முன்னால் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா பல அத்தியாவசிய நவின மருத்துவ கருவிகள் இந்த மருத்துவமனைக்கு கிடைக்க பல முயற்சிகள் எடுத்து இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தியிருக்கிறார். அதனால் உயிர் காக்கும் மருத்துவமனையாக மாறியது ஊட்டி அரசு மருத்துவமனை.

தற்போது இந்த மருத்துவக் கல்லூரி முழுமையாக செயல்படும்போது, நீலகிரி வாசிகளுக்கு பெரும் வரப்பிரசாதம் தான்.

இந்த மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதியும் வர இருக்கிறதாம். விரைவில் ஒரு ஹெலிபேட் அமைக்கும் பணியும் துவங்குமாம். இந்த ஹெலிஆம்புலன்ஸ் ஐடியாவை கொண்டு வந்தவர் முன்னால் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா. மூன்று வருடத்திற்கு முன் அவலஞ்சியில் நடந்த மிக பெரிய நிலச்சரிவில் இருந்து மின்சார வாரிய ஊழியர்களை மீட்க தனியார் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. இதை மனதில் வைத்து தான் கலெக்டர், மருத்துவக் கல்லூரிக்கு ஹெலி ஆம்புலன்ஸ் தேவை என்ற கோரிக்கையை அரசுக்கு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் கல்லூரி முழுமையாக செயல்படும் வரை, ஊட்டி கார்டன் சாலையில் உள்ள பழங்குடியினர் மேம்பாட்டு மையத்தில் மருத்துவ மாணவர்களின் வகுப்புகள் நடைபெறவிருக்கிறது.

இந்த மருத்துவக் கல்லுரி வளாகம், கூடலூர் தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்க குன்று பகுதியில் அமைந்துள்ளன. மருத்துவக் கல்லுரிக்கும், நிர்வாக அலுவலகம் மற்றும் விடுதிகளுக்குச் செல்ல சற்று சிரமம் இருப்பதால், இரண்டு இடத்தையும் இணைக்க ஒரு மேம்பாலம் அமைக்கும் ஐடியாவை அண்மையில் ஊட்டி வந்து மருத்துவக் கல்லுரி கட்டுமானங்களை ஆய்வு செய்த அமைச்சர் வேலு கூறியுள்ளார். அந்த ஐடியா செயல்படும் என்று கூறப்படுகிறது.

நீலகிரிவாசிகளுக்கு இந்த மருத்துவக் கல்லுரி, மருத்துவ ரீதியாக வரப்பிரசாதமாக இருந்தாலும்... மருத்துவ படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் ஒரு கேள்வி குறிதான்.

நீலகிரி மருத்துவக் கல்லுரியை பிரதமர் முறையாக திறந்து வைத்திருந்தாலும், நிஜமாக மருத்துவக் கல்லூரி திறந்து செயல்பட இன்னும் நிறைய நாட்கள் உள்ளன என்பது தான் உண்மை.