தொடர்கள்
தொடர்கள்
பதினெண் சித்தர்கள் - வாழ்வும் வாக்கும் - வேங்கடகிருஷ்ணன் 

20220012144656635.jpg

பாடல்கள் மூலமாகவே நமக்கு அறிமுகமானவர்கள் சித்தர்கள்.

“நந்தவனத்திலோர் ஆண்டி”, “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”,
“சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”
இவை நாம் அடிக்கடி கேட்கும் பாடல்கள். இவை சித்தர் பாடல்கள் என்றே பலரும் அறியமாட்டார்கள். தமிழ் மக்களுக்கு வழிகாட்டியாக, மருத்துவர்களாக, ஆசான்களாக அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்கி முருகப்பெருமான் அருளால் வந்தவர்களே சித்தர்கள், வள்ளலார் வரையிலும் இந்த மரபு சொல்லப்பட்டாலும், அவருக்குப் பிறகும் பலர் இந்த தமிழகமண்ணில் அவதரித்தும், இம்மண்ணை நோக்கி வந்தும் தமிழர்களை கடைத்தேற்ற பல வழிகளில் செயல் புரிந்தார்கள்.

20220012144747858.jpg

இந்த 18 சித்தர்கள் யார் யார் என்பதில் பலவிதமான கருத்துக்கள் உண்டு. நான் எடுத்துக் கொண்டுள்ளது பெரும்பலவர்கள் சொல்லும் பதினெட்டு சித்தர்கள் தான்.

இந்தத் தொடரில் நாம் பார்க்கப்போவது அகத்தியர், போகர், சுந்தரானந்தர், போகர், திருமூலர், புசுண்டர், காலாங்கி நாதர், சட்டை முனி, இராம தேவர், கோரக்கர், மச்சமுனி, கருவூரார், பிண்ணாக்கீசர், புலத்தியர், புலிப்பாணி, பாம்பாட்டி சித்தர், கொங்கணர் மற்றும் குதம்பைச் சித்தர்.

1. அகத்தியர்

குறுமுனி, கும்ப முனி, பொதிகை முனி, தமிழ் முனி என்று பல பெயர்களால் அழைக்கப்படுபவர் அகத்தியர். கும்பத்திலிருந்து தோன்றியதால், கும்பமுனி. பரமசிவன் பார்வதியை மனத்தபோது எல்லா ஜீவராசிகளும் அந்தக் காட்சியாய் பார்க்க கயிலையில் கூடிவிட வடபக்கம் தாழ்ந்து தென் பகுதி உயர்ந்தது, அதனை சரி செய்திட இறைவனாரால் தென் பகுதிக்கு அனுப்பப்பட்டார் அகத்தியர். பொதிகை மலையில் தங்கியிருந்து அதனை சரி செய்தார். அகத்தியர் தான் குடகு மலையிலிருந்து காவிரியை தமிழகத்திற்கு கொண்டுவந்தார் என்று ஒரு வரலாறு உண்டு. சிவனாரால் அனுப்பி வைக்கப்பட்டவர் என்பதால் அகத்தியர் மீது தமிழ் மக்கள் பெரிய மரியாதையும் பக்தியும் வைத்திருந்தனர். அவர்களுக்கு நல்வழி காண்பிக்க விரும்பி பலரையும் வடநாட்டிலிருந்து தமிழகம் வரவழைத்தார்.
பழனி மலையில் முருகப்பெருமானை வேண்டி அவர் மூலம் தமிழ் கற்றார்.

முருகன் தனக்கு தமிழ் மொழி அருளியதை படலாகவே பாடியிருக்கிறார் அகத்தியர்.

“ஒண்ணாது இன்னமொரு மார்க்கம் சொல்வேன்
உத்தமனே புலத்தியரே சொல்லக் கேளும்
நண்ணமுடன் வடிவேலர் தம்மிடத்தில்
நாட்டமுடன் வெகுகாலம் அடுத்திருந்தேன்
கண்ணபிரான் பெற்றதுபோல் அடியேன் நானும்
காசினியில் உபதேசம் பெறவே வந்தேன்
வண்ணமுடன் நாதாந்த சித்து தாமும்
வணக்கமுடன் வேலவரைக் கேட்டார் தாமே.

கேட்டவுடன் அடியென்மேல் மனது வந்து
கேள்வியின் உத்தாரச் சொல்பழக்கி
நீட்டமுடன் ஞானோபதேசம் தன்னை
நெடுங்காலம் போதிப்பேன் என்று சொல்லி
வாட்டமுடன் வடிவேலர் சந்தோஷித்து
வாக்குடனே அகத்தியருக்கு உபதேசங்கள்
கூட்டமுடன் நந்தீசர் முன்னதாக
கூறுவார் உபதேசம் கூறுவாரே.

தமிழுக்கு இலக்கண நூலும் செய்தார். அது அகத்தியம் என்ற பெயரில் இன்றளவிலும் போற்றப்படுகிறது. அந்தச் சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் காய்ச்சினவழுதி, அகத்தியரின் பெருமையை உணர்ந்து தனது அவையில் உயர்ந்த இடமளித்தான். அப்போது இருந்த முதல் தமிழ் சங்கத்தில் இடம்பெற்றதோடு, அதன் தலைவராகவும் ஆனார். கி.பி 203 நவம்பர் 30 அன்று தமிழகத்தில் உள்ள பரங்கிப்பேட்டை என்னும் ஊரில் ஒரு குழந்தை பிறந்தது. நாகராஜ் என்று பெயரிடப்பட்ட குழந்தை வளர்ந்து வாலிபனானதும் தான் ஆன்மிகத் தேடலைத் துவங்கியது. குறிப்பாக அகத்தியரிடம் தீட்சை பெற ஆர்வமாக இருந்தார். அவரே பிற்காலத்தில் உலகம் போற்றி வணக்கும் பாபாஜி ஆவார்.

பொதிகை மலை என்று அழைக்கப்பட்ட குற்றாலத்திற்கு பாபாஜி வந்தார். அகத்தியரிடம் உபதேசம் பெறவேண்டி தொடர்ந்து 48 நாட்கள் தியானத்தில் அமர்ந்தார். 48-ம் நாள் வாழ்க்கையின் விளிம்பை கிட்டத்தட்ட அவர் அடைந்த நிலையில், மிகுந்த ஏக்கத்துடன் அகத்தியர் பெயரையே ஜபம் செய்துகொண்டிருந்தார். அப்போது அருகிலிருந்த காடு ஒன்றிலிருந்து திடிரென்று வெளிப்பட்ட அகத்தியர், பாபாஜியின் வைராக்கியத்தைக் கண்ட அகத்தியர் மகிழ்ந்து அவருடைய பெயரை மெல்ல அழைத்து அவருக்கு உணவும் நீரும் வழங்கினார். பின்னர் பாபாஜிக்கு கிரியா, குண்டலினி தீட்சை வழங்கினார். அது உணர்வு நிலைகளின் உச்சத்துக்கு கொண்டு சென்றிடும் விதம் பற்றி விளக்கினார். அவரை இமயத்தில் உள்ள பத்ரிநாத்திற்கு செல்லப் பணித்தார். பாபாஜியின் தீட்சை குரு அகத்தியரே.

அகத்தியரின் ஏராளமான சீடர்கள், அகத்தியர் என்ற பெயரோடு மக்களுக்கு பல சேவை செய்திருக்கிறார்கள். சித்த ஆராய்ச்சியாளர். திரு அ. சிதம்பரனார் கூற்றுப்படி அகத்தியர் என்ற பெயரில் 37 பேர் இருந்திருக்கிறார்கள். இவர்களில் தமிழகத்தில் மட்டும் 11 பேர் இருந்ததாகக் தம்முடைய “அகத்தியர் வரலாறு” என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

அவருடைய அறிவுரைப் பாடல்கள், மற்ற குறிப்புகள் சிலவற்றை இனி வரும் வாரம் காண்போம்.

சித்தர் வழி தொடர்வோம்.....