தொடர்கள்
ஆன்மீகம்
கூற்றுவ நாயனார்!! - ஆரூர் சுந்தரசேகர்

கூற்றுவ நாயனார்


அறுபத்து மூன்று நாயன்மார்களில் குறிப்பிடத்தக்கவர் குறுநில மன்னரான கூற்றுவ நாயனார். இவர் சிவபெருமான் மீது தீராத பக்தியை உடையவர். சிவனுக்குரிய ஸ்ரீ பஞ்சாட்சர மந்திரத்தை இடையறாது சொல்லி வந்தார். சிவனடியார்களின் திருவடிகளைப் பணிந்து அவர்கட்கு உயர்ந்த திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தார்.

தில்லை சிற்றம்பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமான் தன் திருவடிகளை கூற்றுவ நாயனார் தலையில் முடியாக வைத்துப் பெருமைப்படுத்தினார்.
இறைவனின் திருவடித் தாமரைகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட கூற்றுவ நாயனாரை, சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில்..
“ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்”
என்று போற்றுகிறார்.

கூற்றுவர் என்ற சிற்றரசர்:
களந்தை என்னும் ஊரில் களப்பாளர் மரபில் தோன்றியவர் கூற்றுவ நாயனார். இவர் களப்பால் (களப்பால் என்பது களந்தை என்று மருவிவரும்) என்னும் சிவதல நகரத்தை உண்டு பண்ணித் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிற்றரசர். சிவபெருமானது திருநாமத்தை நாள்தோறும் ஓதியும், சிவனடியார்களுக்கு தொண்டு செய்தும் வாழ்ந்து வந்தார். அந்த ஒழுக்கத்தின் காரணத்தினால் இடைப்பட்ட வலிமையினால் நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று எதிரிகளுக்கு கூற்றுவன் போல விளங்கினார். [பகைவர்களுடன் போர்புரிகையில் கூற்றுவனைப் போல் (எமனைப் போல்) தோன்றி மிடுக்குடன் போர்புரிந்து வென்றமையால் இவர் கூற்றுவர் திருப்பெயர் பெற்றார்] அதுவே இவரது இயற்பெயர் மறைவதற்குக் காரணமாகவும் இருந்தது.

தனது தோள் வலிமையினால் பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று அவர்களது வள நாடுகளை எல்லாம் கவர்ந்தார். அந்த வெற்றிகளால் செருக்குறாமல் இறைவனை நினைத்த வண்ணம் இருந்தார்.

சிவபெருமான் திருவடியே மணிமுடி:

திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டிய கூற்றுவ நாயனார், அரசருக்கு உரிய முடி புனைதல் ஒன்று நீங்கலாக அரசியல் அங்கங்களை அனைத்தும் பெற்றிருந்தார்.

கூற்றுவ நாயனார்


கூற்றுவ நாயனாருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தில்லைவாழ் அந்தணர்களின் பாதுகாப்பிலுள்ள சோழ மன்னர்களுக்கே உரிய மணி மகுடத்தை இறைவனின் திருக்கோவில்களில் சிறந்த தலமான தில்லையில் முடிசூடிக் கொள்ள ஆர்வம் கொண்டார்.

மணிமகுடம் ஆதிகாலம் தொட்டே சோழர் மன்னர்களுக்குரிய சிறப்புப் பொருளாகவே இருந்து வந்தது. இம் மணி மகுடத்தைப் பாதுகாத்து வரும் தில்லைவாழ் அந்தணர்கள், இம்மணி மகுடத்தைத் தக்க காலத்தில் சோழ மன்னர்களுக்கு மட்டுமே சூட்டும் நியதியைக் கொண்டிருந்தனர்.

தில்லையை அடைந்த கூற்றுவ நாயனார் நடராஜப் பெருமானை வணங்கி வழிபட்டு, மணிமுடி சூடிக்கொள்ளும் தம்முடைய விருப்பத்தை தில்லைவாழ் அந்தணர்களிடம் தெரிவித்தார். சோழர் குலத்தில் தோன்றாதவருக்கு முடி சூட்டமாட்டோம் என்று அவர்கள் கூறிவிட்டனர்.

இவர்கள் அச்சமின்றி கூறிய வார்த்தை கேட்டு கூற்றுவ நாயனார் செய்வதறியாது திகைத்து வருந்தினாரே தவிர, தில்லைவாழ் அந்தணர்களை துன்புறுத்தியோ, தொல்லைப் படுத்தியோ, அம்மகுடத்தைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை.
கூற்றுவநாயனார், திருமுடி சூட்டிக்கொள்ளும் பேறு தமக்குக் கிட்டவில்லையே என்ற மனவேதனையோடு, திருக்கோயிலுக்குச் சென்றார். “எம்பெருமானே இந்த அடியேனுக்கு தமது திருவடியையே முடியாக தந்தருள வேண்டும். அடியேனுக்கு அந்தப் பாக்கியம் கிட்டுமா” என்று மனமுருக வேண்டினார். அன்றிரவு அவர் உறக்கத்தில் இருந்தபோது அவருக்கு காட்சி தந்த சிவபெருமான் தம்முடைய திருவடியை மணிமுடியாகக் சூட்டியருளினார்.

கூற்றுவ நாயனார்

சிவபெருமானுடைய திருவடியையே மணி மகுடமாகக் கொண்டு, சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் திருப்பணி செய்து கொண்டு நாட்டினை நீதிமுறையில் ஆட்சி புரிந்து உமையொருபாகர் திருவடியை அடைந்து இன்பமெய்தினார்.

குருபூஜை நாள்:
சிவபெருமான் கோவில் கொண்டுள்ள பலத் திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தும், சிவனுக்கும் அடியார்களுக்கும் திருத்தொண்டு செய்தும் இறைவன் மகிழ நல்ல அரசாட்சி புரிந்த கூற்றுவர் நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவர் அவதாரம் செய்த ஸ்தலமும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன (களந்தை) களப்பால் - கோயில்களப்பால் திருவாரூர் மாவட்டம் அ/மி. ஆதித்தேச்சரர் திருக்கோயிலில் சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலுள் கூற்றுவ நாயனாரின் மூலவுருவம் உள்ளது.

இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

“திருச்சிற்றம்பலம்”

அடுத்த பதிவில் கோச் செங்கட் சோழ நாயனார்…