கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கும் வேளையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சுற்றுலா தலமான ஊட்டியில் இரவு ஊரடங்கை தொடர்ந்து ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்தது.
ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்களுக்கு இந்த ஊரடங்கு அறிவிப்பை பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லையாம். அவர்கள் புக் செய்த ஹோட்டல்களில் கூட, இதைப் பற்றி முன்னரே தெரிவிக்கவில்லை என்பது தான் வேதனையான விஷயம்.
நாம் முதலில் ஊட்டி படகு இல்லம் சென்றோம். அதன் மெயின் கேட் பூட்டி இருந்தது. அந்தச் சாலையில் சுற்றுலாவிற்கு வந்த ஒரு கேரள குடும்பம் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு பிடித்தார் போன்று நடந்து கொண்டிருந்தனர்.
அடுத்து. எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் காந்தல் பகுதி முழுமையாக வெறிச்சோடி கிடந்தது. ஒரு சில பொடியர்கள் சாலையில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். சிலர் தங்களின் கார்களை கழுவி கொண்டிருந்தனர்.
அப்படியே பிங்கர் போஸ்ட் பகுதி. ஊட்டி - மைசூர் சாலை வெறிசென்று இருந்தது. சாலை நடுவில் இன்ஸ்பெக்டர் ஒருவரும், ஒரு பெண் போலீஸும் நம்மை நிறுத்தினார்கள். நம் வாகனத்தில் பிரஸ் என்று எழுதியிருந்ததை பார்த்து, எந்த பிரஸ் என்று கேட்க....
நாம் ‘விகடகவி’ என்று கூற.... ஓகே சொல்லி நம்மை அனுப்பினார்கள்.
ஒரு கார் வர... அவர்களை தேவையற்று சுற்ற வேண்டாம் என்று போலீசார் அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தனர்.
பிறகு, நாம் நேராக ரயில் நிலையம் சென்றோம். குன்னூர் செல்ல மலை ரயில் ரெடியாக இருந்தது. அதில் மொத்தமே ஐம்பது பேர் தான் அமர்ந்து இருந்தனர். அனைவரும் சுற்றுலாக்கு வந்தவர்கள் என்று அறிமுகபடுத்திக் கொண்டனர். மலைரயிலின் ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறினோம்.
குருமூர்த்தி - ப்ரீத்தி தம்பதியினரிடம் பேசினோம்... “இப்படி ஒரு லாக் டவுன் இருப்பது எங்களுக்கு தெரியாது. இங்கு வந்த பின் தான் தெரிந்து, சற்று முட் அவுட். லக்கிலி ட்ரெயின் இருக்கிறது என்று புக் செய்து விட்டோம். கூட்டமே இல்லாமல் ஒரு மலை ரயில் பயணம், சூப்பர் என்று சொல்ல... ப்ரீத்தி ஊட்டி ரொம்பவே அழகாக இருக்கிறது. நாங்கள் தங்கிய ஹோட்டலில் உணவு ரெடி செய்து கொடுத்து விட்டனர். அதனால் ஓகே. இல்லை என்றால் கஷ்டம் தான். இனி எங்கு போவது என்றாலும் விசாரித்து விட்டு தான் போக வேண்டும் என்றனர்.
அடுத்து ஊட்டி பஸ் நிலையம் சென்றோம். தமிழக விரைவு பேருந்துகள் திருப்பி நிறுத்தப்பட்டு அமைதியாக காட்சி அளித்தது. ரயிலில் இருந்து ஊட்டி வந்த ஒரு வடநாட்டு குடும்பம் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். எங்கு செல்ல வேண்டும் என்று கேட்க... எங்களுக்குத் தெரியும் என்று ஸ்லொவ் மோஷனில் நகர்ந்தனர்.
லோயர் பஸார் சாலையில், ஒரு சிறுவனுக்குசைக்கிள் கற்று கொடுத்துக் கொண்டிருந்தனர் அவனது பெற்றோர்.
கடந்த தொடர் லாக் டவ்னில், நன்றாக சைக்கிள் ஓட்ட கற்று கொண்டான். அதன் பின் ஓவர் ட்ராபிக். மீண்டும் லாக் டவன் என்பதால் சைக்கிள் எடுத்து ஓட்டுகிறான். போட்டோ வேண்டாம் ப்ளீஸ் என்று சைக்கிள் ஒட்டும் சிறுவனும், அவனது பெற்றோரும் நகர்ந்தனர்.
எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் ஊட்டி மாரியம்மன் கோயில் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
மார்க்கெட் சொல்லவே வேண்டாம், எப்போதும் படு பிசியாக இருக்கும். வழக்கமாக பந்த் போன்ற நேரங்களில்... வியாபாரிகள் கிரிக்கெட், புட்பால் போன்றவை விளையாடுவார்கள். தற்போது அதுவும் இல்லாமல், ஒரு சில போலீசை தவிர யாரும் அங்கு இல்லை.
அப்படியே கமர்ஷியல் சாலை வழியாக சேரிங் கிராஸ் சென்றோம். அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு ஒரு வித அமைதி இருந்தது.
சேரிங் கிராஸ் காந்தி சிலை அருகே ஒரு பைக்கை நிறுத்தி டோஸ் விட்டுக்கொண்டிருந்தனர் காவல் துறையினர். நம்மை எங்க போறிங்க என்று கேட்க... பிரஸ் ரௌண்ட்ஸ் என்று கூறியதும் வழி விட்டனர்.
போக்குவரத்து ஆய்வாளர் அப்துல் காலம். அன்றைய லோக்கல் ஆங்கில நாளிதழை பார்த்து கொண்டிருந்தார்.
நம்மை பார்த்தவுடன்... “மக்கள் யாரும் வெளியெ வரவில்லை... கொரோனவும், ஓமிக்ரோனும் மறைந்து விட்டால் நிம்மதி தான். டூரிஸ்ட் யாரும் ஹோட்டல்களை விட்டு வெளியே வரவில்லை. அரசின் உத்தரவிற்கு மக்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது, பரவி வரும் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும். எங்களுக்கும் மற்றவர்களின் அருகே போய் விசாரிக்க சற்று தயக்கம் தான், என்ன செய்வது... பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் கூறி விடைகொடுத்தார்.
அடுத்து கோத்தகிரி சாலை வழியாக பொட்டானிக்கல் கார்டன் சென்றோம். முன் வாயில் கேட் மூடப்பட்டு இருந்தது. “இனி காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை தான் கார்டன் திறந்திருக்கும் என்று கலெக்டரின் உத்தரவு பளிச் என்று தெரிந்தது.
கார்டன் உள்ளே நுழைந்தோம். ஆள் நடமாட்டமே இல்லாமல் மிகவும் அழகாக காட்சி அளித்தது ஊட்டி பொட்டானிக்கல் கார்டன். மனிதர்கள் நடமாட்டம் இல்லாததால், பறவைகள் ஆனந்தமாக சத்தம் எழப்பிக் கொண்டிருந்தன. லாக் டவுன் என்பது வருத்தமான ஒன்றாக இருந்தாலும், பெரும் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள தான் இந்த ஞாயிற்றுக்கிழமை லாக் டவுன்.
லாக் டவுன் அன்று ஊட்டி ரொம்பவே அழகாக இருந்தது.
Leave a comment
Upload