சதாசிவத்திற்கு பிறந்த ஊரே காரைக்குடி, பிள்ளையார்பட்டி கோவில் பிரிவைச் சார்ந்தவர் என்றார் துணை கண்காணிப்பாளர்.
அப்படி என்றால்? எனக் கேட்டார் ஆட்சியர்.
தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரிபுகும்பட்டினம் என்கிற பூம்புகாரே இம்மக்களின் பூர்வீகம் ஆகும்.
பின்னர் சிலர் காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 96 கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என அழைக்கப்படுகிறது.
96 ஊர்களின் வட்டாரத்தில் மொத்தம் 9 சிவன் கோயில்களின் அடிப்படையில் 9 பிரிவுகள் உள்ளன.
அவர்களில் ஒரே கோவிலைச் சார்ந்தவர்கள் ஒருவரையொருவர் பங்காளிகள் என அழைத்துக் கொள்வார்கள். திருமண உறவுகள் ஒரே கோயிலைச் சார்ந்தவர்களுக்குள் செய்யமாட்டார்கள்.
குறிப்பாக வட்டித்தொழிலில் சிறந்தவர்கள், சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடையவர்கள்.
இளையாற்றாங்குடி கோயில், மாத்தூர் கோயில், வைரவன் கோயில், இராணிகோயில், பிள்ளையார்பட்டி, நெமங்கோயில் இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி என்ற ஒன்பது கோயில்களில், இவர் பிள்ளையார்பட்டி கோயிலின் வம்சா வழியில் வந்தவர்.
வம்சாவழி சொத்துகள் நிறைய இருந்தாலும் இவரின் பங்கு அதில் பத்தில் ஒன்றுதான், ஒன்பது சகோதர - சகோதரிகளை கொண்ட பெரிய குடும்பம் சதாசிவத்தினுடையது. எல்லோரும் நல்ல நிலையில் குடும்பத்தை வெளியூரில் அமைத்திட இவர் மட்டும் காரைக்குடியில் மனைவி, தந்தை மற்றும் மனநிலை பாதித்த தன் ஒரே மகனோடும் இருந்தார்.
நன்றாக இருந்த மகன் மனநிலை பாதிப்பிற்கு காரணம், ஏதோ சிலை ஒன்றினை வீட்டில் வைத்து வழிபடுவதுதான், என ஊரார் மற்றும் அவர்களின் வீட்டாரது நம்பிக்கையாக இருக்கிறது.
அவரின் அப்பா சைக்கிளில் சென்று வியாபாரம் செய்து வந்த புடவை வியாபாரத்தை, செட்டியாரிடம் நிதியுதவி பெற்று கடை வைத்து செய்ய ஆரம்பித்தார். சிறிது சிறிதாக இடங்களை வாங்கி விற்று, அதன் மூலம் வருமானம் பெருக அதனை முதலீடாக துணிக்கடையில் போட்டு வியாபாரத்தை பெருக்கினார்.
சொத்து, வீடு வாங்கி விற்கும் பேரத்தில் ராமநாத செட்டியாரோடு ஏதோ பகையும் ஏற்பட்டிருக்கு, அதன் மூலம் பேச்சுவார்த்தை இல்லாமல் இருவரும் சில வருடம் இருந்திருக்கிறார்கள்.
ஒரு பிரச்சினை தீர்க்க அசோகனிடம், ராமநாத செட்டியார் உதவி பெற வேண்டி, இருவரும் திரும்பவும் ராசியாகியிருக்கிறார்கள். அதன் பின் சதாசிவம் வாங்கிய கடன் தொகை ரூபாய் மூன்று லட்சம் திருப்பப்படாமல் நிலுவையில் இருந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது என்றார்.
ராமநாத செட்ரடியாரோடு, அசோகனுக்கு நேரடியாக தொடர்பு இல்லையென்றாலும்... கருப்பையா மூலமாக சதாசிவத்திற்கும், அவரின் மூலமாக ராமநாதனிடம் அறிமுகமாகி பின் பழக்கமாகி இருக்கிறது.
வறுமையின் பிடியில் இருந்த அசோகன், கட்சியின் அடிமட்டத் தொண்டராக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒன்றிய பொறுப்பிலிருந்தார்.
காரைக்குடியில் வம்பு, வழக்கு என சுற்றி கட்சியின் உறுப்பினர்களின் நல்லது கெட்டதுகளில் எல்லாம் கலந்துக்கொண்டு, அவர்களுக்காக அதிரடியாக பல பஞ்சாயத்துகள் செய்து மக்கள் மத்தியில் ஒரு வித பயத்தை ஏற்படுத்தி, அதனை மூலதனமாகக்கொண்டு அரசியலில் ஒரு பெயரை தனக்கென தக்க வைத்தியிருந்தார்.
சின்ன சின்ன யூனியன் அளவிலான ஒப்பந்தங்களை எடுப்பது, பிறகு கமிஷனுக்கு ஆசைப்பட்டு, அதனை கருப்பையாவிற்கு விட்டுக் கொடுத்து விடுவதும், அவரது ஹார்டுவேர் கடையில் பொழுதுக்கும் அமர்ந்து அரசியல் பேசுவதும் என வளர்ந்த அசோகன், கருப்பையாவின் மூலமாக சதாசிவத்தின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
அவரின் வளர்ச்சியால் அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அசோகனுக்கு வாய்ப்பும் கிடைத்தது.
தேர்தலுக்கு பெரியத்தொகை செலவாகும் என நினைத்த அசோகன், கிடைத்த சீட்டையும் விட்டுக் கொடுத்து காசாக்கி விடலாமா என யோசித்து பின் கருப்பையா கொடுத்த துணிவில் தேர்தலில் நிற்பதற்கு தயாரானார்.
Leave a comment
Upload