காவிரிமைந்தன்
என் மூச்சு நீயடி!
அன்பிற்கினியவளே!
அன்பில்மலர் காதலிலே அடைக்கலம் ஆவதுதான் இவ்வுலகில் உள்ள சுகம் அனைத்திலும் மேலானது என்பதனை அறிந்தவரே அறிவாராக!!
அதனால்தான் எந்த ஒரு மானுடரும் மறவாமல் காதல் கொள்கின்றார்!
மட்டுறுத்த முடியாத ஆசைவெள்ளம் மனதுக்குள் நாள் பார்த்தா வந்து செல்லும்?
வேண்டும் என்பார் இங்கு உண்டு.. வேண்டாம் என்பார் யாருமில்லை!!
தீண்டும் தென்றல் போன்ற இன்பம் தெளிந்து ஓடும் மனதிற்குள்ளே ஊடுருவும் உள்ளங்களின் கூடல் நடக்கும்!
இதயங்கள் இரண்டுமிங்கே இடம் மாறும் இயற்கை சிகிச்சை அரங்கேறும்!
சுவாசக் காற்று நீயென்று உதடுகள் உச்சரிக்கும்!
பேசவரும் வார்த்தைகள் எல்லாம் முழுமைபெறாமல் ஒலி இழக்கும்!!
அடிமனதில் உன்னை வைத்து பத்திரமாய் பாதுகாப்பு நடக்கும்!
எதுவரையில் இப்படியெல்லாம் நடக்கும் என்று கேள்வி எழுந்தால்.. முதுமைவரை என்று விடைபகரும்!
வளர்நெஞ்சில் சுகம்பாடும் மோகனமிது.. வாழ்க்கைக்கே புது அர்த்தம் தருகிறது!
தனக்காக தவிக்கின்ற இன்னொரு இதயம் கிடைத்துவிடும் போதுதான்.. எதற்காக பிறந்தோம்.. எதற்காக வளர்ந்தோம்.. ஏனிங்கே வாழ்கிறோம் போன்ற பல கேள்விகளுக்குப் பொருள் விளங்கும்!
தேடும் என் கண்களுக்கு விருந்துவைக்க.. தேவியுன் தரிசனங்கள் வேண்டுமென்று நான் பாடும் ராகங்கள் கேட்டபின்னும் வாராது இருப்பதென்ன நீயே! நீயே!!
மாறாத பாசம்தன்னை நெஞ்சில்வைத்து.. தீராத ஆசைகளை நாளும் வளர்த்து.. பாராமுகம் கொண்டால் என் செய்வேன் பைங்கிளியே!
ஓடோடிவந்த கங்கை உள்மூச்சு வாங்குகிறதோ?
என் மூச்சு நீயடி என்பதையே மறவாதே!
நிலப்பரப்பும் நீர்பரப்பும் சங்கமிக்கும் கடற்கரையில் அது என்ன அலைகள் கூட்டம்? ஆர்ப்பரிக்கும் அணிவகுப்பு!
நிலமகளை தழுவவரும் நீர்மகனின் முத்தங்கள்தான்!
அலையலையாய்.. நுரைநுரையாய்.. போதுமா எந்தன் கற்பனை?
நீயும் நானுமங்கே போவது எந்நாளோ?
வழிந்திடும் ஆசைகளை நுரைப்பது எப்போது? ஏதேதோ நினைவுகளில் எழுதிவைக்கும் ஆசையல்ல.. எல்லாமே உன் நினைவால் பொங்கிவரும் வார்த்தைகளே!!
காதலெனும் பாதையினைக் கடந்திட முனையும்போது வழித்தடங்கள் பல வகையில் தேர்வு வைக்குமே!
உறுதியான உள்ளங்கள் மட்டுமே இதில் வெற்றி கொள்ளுமே!
பிரிவு வந்து வழிமறிக்கும்.. தடைகள் பல இடையில் வரும்! மென்மையில் பூத்த மலர்கள் வாடிவிடாமல்.. காதல் உண்மைதான் என்பதை ஒன்றுபட்ட இதயங்கள் மட்டுமே கரைசேர்க்கும்!
உங்களின் கரங்களில் எழுதுகோலும் கொஞ்சம் வெள்ளைத்தாளும் கிட்டிவிட்டால்.. எண்ணங்களின் குவியல்கள் பொங்கிவழியும் என்பதை நானறிவேன்.. வந்துவிட்டேன் என்று இரகசியக்குரல் கொடுத்து அதே கரங்களில் நான் கிடைத்துவிட்டால்.. என்றாய்!
பாரிஜாதப்பூக்கள் மனதுக்குள் பூக்கும்!
பவளமல்லிகை கண்விழித்து எட்டிப் பார்க்கும்!
ஆலாபனைகள் அரங்கேறும்.. அன்பின் நாதங்கள் சுகம்தேடும்!
சம்மதமா என்றேன்.. சற்றே இழுத்தணைத்தாய்!
சரிகமபதநீ.. ஸ்வரங்களிலும்கூட இன்பலயம் நீ என்றேன்!
‘ச்’ என்றே சத்தம் கேட்டது!!
முத்தம் என்றே மோகம் சொன்னது!
Leave a comment
Upload