தொடர்கள்
வரலாறு
சென்னை 2000 ப்ளஸ் (பாகம் 21) - மூத்த பத்திரிகையாளர் ஆர். ரங்கராஜ்

செங்கற்பட்டு மாவட்டம் அணைக்கட்டில் குறும்பர்களின் கோட்டை

20220021195027654.jpg

மெக்கன்சி சுவடிகளில், சென்னை பெருநகரின் முதல் ராஜா குறும்பர்கள் தலைவர் என்றும் குறும்பர்களைப் பற்றிய செய்திகளை நாம் கடந்த சில வாரங்களாக பார்த்து வருகின்றோம். சென்னை பெருநகர் பகுதியில் குறும்பர்களின் ஆட்சியைப் பற்றியும், அவர்கள் கட்டிய கோட்டைகளை பற்றியும், அவர்களின் போர்களைப் பற்றியும், வாழ்க்கை முறையைப் பற்றியும் பல செய்திகளை ஆராய்ந்து வருகின்றோம்.

அந்த வரிசையில் இன்று நாம் அணைக்கட்டில் குறும்பர்களைப் பற்றிய செய்திகளை தெரிந்துகொள்வோம்.

அணைக்கட்டு

அணைக்கட்டில் குறும்பர்களின் கோட்டை இருந்ததென்று குறிப்பு மட்டுமே இரண்டு (டி.2867, டி.3114) மெக்கன்சி சுவடிகளிலும் இடம்பெற்றுள்ளன. செங்கற்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் அணைக்கட்டு என்ற ஊரு பாலாற்றின் மறுகரையில் அமைந்துள்ளது. நெறும்பூரிலிருந்து, புதுப்பட்டினம் செல்லும் பேருந்தில் 2 கி.மீ பயணத்தில் பனங்காட்டுசேரி சென்று, அங்கிருந்து பாலாற்று மணலில் இரண்டு கி.மீ நடந்து சென்றால் அணைக்கட்டை அடையலாம். பேருந்திலேயே அணைக்கட்டுக்குச் செல்ல செம்பூரிலிருந்தும் மதுராந்தகத்திலிருந்தும் பேருந்தில் செல்லலாம்.

சேவூர் கிராமத்திலிருந்து தொடங்கும் பல்லவன் குளம் ஏரி தண்டரையில் முடிகிறது. எனவே அப்பகுதியில் உள்ள 20 கிராமங்களில் விவசாயம் நடக்கிறது. சேவூர் அருகில் அணை ஒன்றுள்ளது. அதனருகே ‘சோழக்கட்டு’ எனும் பெயரில் ஒரு கிராமம் உள்ளது. அருகில் மற்றொரு கிராமம் பரமேசுவர மங்களம் என்று உள்ளது. அங்குள்ள மிகப்பெரிய ஏரி, பல்லவன் குளம் ஏரியாகும். அங்கு வில்லியர் எனப்படுபவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அப்பகுதியில் உள்ள பார்த்தசாரதி பிள்ளை மேலும் விவரங்கள் தருகிறார்:

அணைக்கட்டில் ஏறத்தாழ 700 பேர் வாழ்கின்றனர். கோட்டைக்கரை என்று அழைக்கப்படும் பகுதியில் குறும்பர்கள் கோட்டை இருந்தது. அப்பகுதியில் இப்போதும் யாதவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

20220021195119135.jpg

ஐந்து ஏக்கர் அளவில் கோட்டைக்கரை உள்ளது. சுற்றிலும் அகழி உள்ளது. இரண்டு ஆள் உயரமான மேடாகக் கோட்டைக்கரை உள்ளது. கோட்டையின் அடிப்படை சுவர் செங்கற்களால் ஆனது. இப்போதும் சில இடங்களில் செங்கற்கள் தென்படுகின்றன.

“இரண்டு தலைமுறை முன்புவரை யாதவர்களின் வீடுகள் கோட்டைக்கரைமேட்டில்தான் இருந்தன. கிராமப் பொது நிலமாக இருந்த கோட்டைமேடு இப்போது தனிநபரின் உடைமையாகி விட்டது. மழைக்காலங்களில் முன்பு ஆடு மாடுகளைக் கொண்டு போய் யாதவர்கள் கோட்டை மேட்டில்தான் நிறுத்துவார்களாம். இப்போது கோட்டைக்கரை மணிலா விளைச்சல் நிலமாக மாறியுள்ளது”.

பரமேஸ்வர மங்கலத்தில், பல்லவ காலத்தின் செண்பகேஸ்வரர் எனும் பழமையான சிவன் கோயில் உள்ளது. குலோத்துங்கன் சோழ-1, ராஜேந்திர சோழ -1, ராஜராஜ - III, மறவர்மன் சுந்தர பாண்டியன் மற்றும் விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன. பரமேஸ்வர மங்கலத்தில் சௌமிய தாமோதர பெருமாள் கோயிலும் உள்ளது. இதுவும் பல்லவ அரசர் நிருபதுங்கன் கட்டிய கோயில் என்று கூறப்படுகிறது.

(தொடரும்)
- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை, 9841010821

rangaraaj2021@gmail.com