தொடர்கள்
கதை
வளைகாப்பு - லதா சரவணன்

20220021213229898.jpeg

நீலம், பச்சை, சிகப்பு வண்ண கண்ணாடி வளையல்களுக்கு அரணைப்போல் சிங்க முகம் பதித்த வெள்ளிக்காப்பு நின்றது. “இன்னும் கொஞ்சநாள்தான் செல்லம், அம்மா உன்னை நேர்ல பார்த்துக் கொஞ்சப் போறேன். லட்டும்மா, இது உனக்கான விழா சந்தோஷமா செல்லம்!” அவள் தன் வளையல்களை குலுக்கினாள்.

இடுப்பின் கனம் அணிந்திருந்த பட்டுப்புடவையினால் சற்றே கூடுதலாய், எதிரே பழவகைகளும், இனிப்புகளும் ஏழு வண்ண கலவையான சாதங்களின் சுவை நாக்கில் எச்சில் ஊறவைக்க, பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் மதன். கண்கள் மொத்தமும் அகல்யாவின் முகத்தில் தான்.
சடங்குகள் அனைத்தும் இனிதே நிறைவேற, அகல்யாவின் உருவம் பதித்த பேனரின் முன்னால் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்திருந்தார் ஜனார்த்தனம், “சார் பந்திக்கு கொஞ்சம் அதிகமா இலை விழுந்திருக்கு வந்திருந்தவங்க அதிகம்.... பேசினதை விடவும் ஆயிரம் இரண்டாயிரம் போட்டுக் கொடுங்க?” என்ற சமையல்காரரின் கேள்விக்கு சுள்ளென்று விழுந்தார்.

ஏம்பா..? ஏற்கனவே எல்லாம் திட்டவட்டமா பேசித்தானே சொன்னோம்?” “உன் இஷ்டத்துக்கு திடும்னு கேட்டா என்ன அர்த்தம்?”

“சார் மதன் தம்பிகிட்டே கேட்டுத்தான்.....! அவர்தான் நான் சொல்லிக்கிறேன்னு சொன்னார்.”

ஜனார்த்தனம் கோபம் பொங்கிய முகத்தோடு, “அவன் ஆயிரம் சொல்லுவான்யா இங்கே முடிவெடுக்கிறது நான்தான். இந்தாங்க கூட ஐநூறு தர்றேன். இலை போடறப்போ மட்டும் பக்கத்திலே இருக்கக்கூடாது, இலை எடுக்கறப்பவும் பக்கத்திலே இருக்கணும் அப்பத்தானே தெரியும், யாரு எவ்வளவு சாப்பிட்டாங்கன்னு?” என்று அவர் பேசியபடியே மகனைத்தேடி நகர்ந்தார்.

அந்தச் சத்திரத்தில் மணமகள் என்று போர்டு சுமந்திருக்கும் அறைக்கு உள்ளே மதனின் குரல் கேட்டது.

“அம்மா வீட்டுக்கு கூட்டிப்போறேன்னு சொல்றாங்க! நீங்கதான் மாமாகிட்டே பேசணும். நான் ஆடிப்பாடி விளையாடிய இடத்தையெல்லாம் பார்க்கணும். மாமாகிட்டே கேளுங்க!”

“மாப்பிள்ளை..! கல்யாணமாகி அங்கே மறுவீட்டுக்கு வந்ததோட சரி அதுக்குப்பிறகு ஆடி, தீபாவளின்னு, பொங்கல்ன்னு நான்தான் வந்து சீர் செய்திட்டுப் போறேன். நீங்க இரண்டு பேரும் ஊர்ப்பக்கம் தலைகூட காட்டலை, ஏழாம் மாசமே அவளை கூட்டிப்போகலான்னு நினைச்சேன். ஆனா உங்கப்பா ஒன்பதாம் மாசம் போகலான்னு சொல்லிட்டாங்க, நானும் வந்ததில் இருந்து கேட்டுப் பார்த்துட்டேன் அவருக்கு பிரசவத்துக்கும் அனுப்ப விருப்பம் இல்லை போலயிருக்கு, தலைப்பிரசவம் அம்மா வீட்டுலேதானே நடக்கணும்!”

“சம்பந்தியம்மா எனக்கு என்னத்தை புரிய வைக்கணும்? என்கிட்டேயே சொல்லலாமே?”

“ஒண்ணுமில்லை சம்பந்தி, வளைகாப்பு முடிஞ்சிட்டது நான் அப்படியே அகல்யாவைக் கூட்டிட்டு ஊருக்குப் போகலான்னு....!” என்று தன் அடர் ஜரிகையிட்ட கைத்தறிப் புடவையை தோளின்மேல் போர்த்தியபடி எழுந்து நின்ற அகல்யாவின் அம்மா.

“சம்பந்திம்மா... அவ இப்போ உங்கப் பொண்ணு மட்டும் இல்லை, எப்போ எனக்கு மருமகளா வந்திட்டாளோ அப்பவே எல்லாம் என் பொறுப்பு இங்கே என்ன குறை, என் பிள்ளையும், நானும் அவளைத் தங்கத்தட்டுலே வச்சி தாங்கறோம். எம்மருமகளுக்கு இந்த வளைகாப்பை கூட நான்தான் செய்யணுன்னு லட்சலட்சமா செலவு பண்ணி இந்த விழாவை நடத்தலையா?!”.

“அய்யோ நீங்க கவனிக்கலைன்னு நான் சொல்லலை சம்பந்தி, மகளுக்கு நாக்கு ருசியா ஆக்கிப்போட்டு பார்த்துக்கிடலான்னு எனக்கும் அவளை விட்டா வேற புள்ளைகுட்டியா இருக்கு.!?”

“உங்க வீட்டுக்கு கூட்டிப்போறது அத்தனை சரிப்படாது, அந்தப் பட்டிக்காட்டுலே என்ன பெரிய வசதியிருக்கு. சென்னையிலே பேர்போன ஆஸ்பிட்டல கைராசியான டாக்டர்கிட்டே சகல வசதிகளோட பிறக்கறதைத்தான் நான் விரும்பறேன்.!”

“அது முறையில்லைங்களே?”

“முறையெல்லாம் நம்ம வசதிக்கு உருவாக்கிறது தாம்மா, இப்போ என்ன நீங்க உங்கப் பொண்ணுகூட இருக்கணுன்னு ஆசைப்பட்டா, நம்ம வீட்டுலே தாராளமா தங்கலாம்.!”

அத்தோடு விஷயம் முடிந்தது என்பதை போல் அறையை விட்டு வெளியேறினார் ஜனார்த்தனன்.

“என்ன மாப்பிள்ளை... அப்பா இப்படி சொல்லிட்டாங்க நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன்.”

“அப்பா சொல்றதும் சரிதானே! அதான் அப்பவே, அப்பா லீடிங் டிஜிஓ கல்யாணிக்கிட்டே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டாங்க, பிரசவத்திற்கு நேரமும் குறிச்சாச்சு. நீங்களும் இப்போ என் கூட இருந்தா, அவளுக்கு மட்டுமில்லை எனக்கும் தைரியமா இருக்கும். வாங்க போகலாம்!” என்று மதன் மனைவியிடம் சைகை காட்டிவிட்டு நகர்ந்தான்.

மாமனார் ஜனார்தனத்தின் பிடிவாதம் அகல்யா அறிந்ததே, அவளும் அதனால் எத்தனையோ இழந்திருக்கிறாளே? இந்தப் பெண்ணை விரும்புகிறேன் என்று மதன் தன் தந்தையிடம் அவளைக் கொண்டு போய் நிறுத்தியபோது, ஒருமுறை உறுத்துப்பார்த்துவிட்டு, பின் ஒப்புக்கொண்டார்.

திருமணத்திற்கு தேதி குறிப்பதில் இருந்து, உடைகள் எடுப்பது, அலங்காரம் செய்வது, ஹனிமூன் வரையில் எல்லாம் அவருடைய திட்டமிடல்தான். ஒரு கடமைக்கு கூட இது உனக்கு விருப்பமா என்று யாரையும் அவர் கேட்கவில்லை,

ஆசைப்பட்டு ஒன்று கேட்டால் பத்து கொண்டுவந்து ஆசையே இல்லாமல் செய்துவிடுவார். கட்டுப்பெட்டியும் இல்லை, கஞ்சமும் இல்லை மாறாக நான்தான் எல்லாம் செய்வேன் என்ற ஒரு மூர்க்கம். “தங்க கூண்டில் அடைபட்ட கிளியைப் போலவே சில நேரம் என்னை உணர்கிறேன்!” என்று சொல்வாள் கணவனிடம்.

“ஏன் அகல்யா உனக்கு என்ன குறை?”

“குறை ஏதும் இல்லை, எல்லாமே நிறைவா இருக்கிறதால என்னால எதையும் உயிர்ப்பிக்க முடியலை!”

“புரியலை...?”

“அது உங்களுக்குப் புரியாதுங்க, நம்ம நெஞ்சுக் கூட்டிற்குள் எத்தனை அளவு மூச்சுக்காற்றை சுவாசிக்க முடியுமோ, அவ்வளவுதான் சுவாசிக்கலாம். இங்கே நிரம்பி வழிவதில் மூச்சு முட்டுது !” என்று அவள் சொன்னது நிஜமாகவே மதனுக்குப் புரியத்தான் இல்லை.

ஒருவருடம் கழித்து தான் கருவுற்று இருப்பதாக தெரிந்த போது கூட சந்தோஷ மிகுதியில் மருமகளுக்கு ஒரு வைர நெக்லஸ் பரிசளித்தார். அவர்கள் ரூமிற்கு அருகில் உள்ள அறையை பேரக்குழந்தைக்காக உருவாக்கியிருக்கிறார்.

அகல்யாவின் மாடி அறை கீழே மாற்றப்பட்டது.

“மதன் எனக்கு மூச்சு முட்டுது! என்னாலே இயல்பா இருக்க முடியலை இந்த அறையிலே!”, அவள் அந்த அறைமாற்றத்தைச் சொல்கிறாள் என்பதை மதன் உணர்ந்தான்.

அந்த மாடியறையின் பால்கனிதான் அகல்யாவின் விருப்பமான இடம். ஊஞ்சலில் ஆடுவாள் கடலலைகளின் உப்புக்காற்றும், அந்திநேரச் சிவப்பும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். பெளர்ணமி அன்று கடற்கரை சென்று காலார நடந்து அந்த பெளர்ணமி நிலவொளியில் குளிக்க இருவருமே விரும்புவார்கள்.

மதன் இது குறித்து ஜனார்த்தனனிடம் கேட்ட போது...

“டேய் எனக்குத் தெரியாதா..? அவளுக்கு மாடிப்படி ஏறிஎறங்கிறது குழந்தைக்கு நல்லது இல்லை, போ போய் நேரநேரத்துக்கு அவளைச் சாப்பிடச் சொல்லு, கம்பளீட் ரெஸ்ட் அவளுக்கு வேணும்.!”

அகல்யாவின் குட்டி குட்டிக் கனவுகள், ஆசைகள், விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் அட்டவணைகள் போடப்பட்டது. வாசிக்கும் புத்தகங்கள் கூட.. இதெல்லாம் என்னம்மா.. கொலை, கொள்ளைன்னு படிச்சிகிட்டு நல்ல விஷயங்களை வாசி என்று தேவாரம், திருவாசகம், புராண இதிகாசங்களை கொண்டு வந்து அவர் அவ்வறையில் அடுக்கும் போது எனக்கு எதுவுமே வேண்டாம் என்று கத்த வேண்டும் போலிருந்தது. அடக்கிக்கொண்டாள்.

வீட்டில் அன்று அகல்யா மூச்சிரைப்போடு தாய் தந்தப் பாலை குடித்து முடித்தாள். சற்றே கலைந்து போயிருந்த முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டு, “ என்ன அகல்யா ஏதோ போலிருக்கே.. பயப்படறீயா? நம்ம குலதெய்வத்துக்கு வேண்டிகிட்டு மஞ்சத்துணியிலே காசு முடிஞ்சி வைச்சிருக்கேன், நீ கவலைப்படாத நல்லபடியா பிரசவம் ஆகும்!”

“நான் பயப்படலைம்மா, இந்தப் பிரசவ வலியை, நான் அனுபவித்து அதை உணரனும். ஒவ்வொரு நிமிடமும் என் வயிற்றில் இருக்கிற ஜீவனோட அசைவை நான் எப்படி உணர்கிறேனோ, அதேபோல் அதன் ஜனனத்தையும் நான் உணரவேண்டும்!”.

“அந்த வலி என் நாடி நரம்புகளில் எல்லாம் ஊடுருவும் போது கிடைக்கற தாய்மை சுகம் எனக்கு வேணும்” என்று சொன்ன மகளை, மார்போடு அணைத்துக் கொண்டார் பர்வதம்மாள்.

ஜனார்த்தனம் உள்ளே நுழைந்தார். “அம்மா நாளைக்கு காலையிலே நேரம் நல்லாயிருக்கு, அகல்யாவை கூட்டிட்டு வரச்சொல்லி டாக்டர் கல்யாணி சொல்லிட்டாங்க. சீக்கிரம் தயாராகிடுங்க!” என்று அகல்யாவின் நெற்றியில் விபூதியிட்டு அவளை ஆசீர்வதித்து விட்டு வெளியே நகர்ந்தார்.

“சரியான பிடிவாதம் பிடிச்ச மனுஷன், எல்லாம் இவரு இஷ்டப்படிதான் நடக்கணும்” முணுமுணுத்த அம்மாவைப் பார்த்து சிரித்தாள் அகல்யா.

அகல்யாவின் தலைக்குமேல் நிறைய ஒயர்கள் மிஷினோடு கனெக்ட் ஆகியிருந்தது. பெரிய பெரிய விளக்குகள் தன் வெளிச்சத்தை இப்போது வெளிப்படுத்தமாட்டேன் என்று கங்கணம் கட்டி மெளனமாயிருக்க, அகல்யா தான் அணிந்திருந்த பச்சை நிற கவுனில் புடைத்திருந்த வயிற்றை ஒருமுறை ஆசையாய் தடவினாள்.

“கையை அசைக்காதேடி !” “அகல்யா டிரிப்ஸ் போட்டிருக்கு, வீங்கிடப்போகுது. என்ன பெரிய ஆஸ்பத்திரியோ, டெலிவரிக்கு இன்னமும் ஒருவாரம் இருக்கு. இப்பவே வந்து இந்த ரூம்லே போட்டு இருக்காங்க” என்ற அம்மாவின் அங்கலாய்ப்பில் சிரித்தாள் அகல்யா.

“ஹொவ் டூ யூ பீல் அகல்யா....? “ “டாக்டர் கல்யாணி புன்னகை முகமாய் கேட்க

கல்யாணி பதில் சொல்ல வாயெடுப்பதற்குள், “டாக்டர், அனஸ்தீஸ்யா டாக்டர் வந்திட்டாங்க!” என்றது ஒரு சீருடைபெண்.

அருகில் நின்ற பர்வதம்மாளை, “ வெளியே வாங்கம்மா” என்று நகர்த்தியது இன்னொரு சீருடை.

“என்ன நடக்கிறது இங்கே?” என்று யோசிப்பதற்குள், அகல்யாவின் புஜத்தில் ஒரு சிரஞ் ஆசையோடு ஒட்டிக்கொண்டு, தான் அடைத்திருந்த மருந்தை கொட்டிவிட்டுப் போக, மெல்ல மெல்ல ஒரு தூக்கம் தழுவுவதை உணர்ந்தாள்.

“டாக்டர் இங்கே என்ன நடக்குது? எனக்கு...! எனக்கு....! இப்போ டேட் இல்லையே?”

கல்யாணி தன் மாஸ்க்கை அகற்றி சிரித்தாள். “உங்களுக்கு சிசேரியேன் பண்ணி குழந்தையை எடுக்கப்போறோம். இன்னைக்கு நாள் நல்லாயிருக்கு, இந்த நேரத்திலே குழந்தைப் பிறந்தா உங்க குடும்பத்திற்கு ரொம்ப நல்லதுன்னு மிஸ்டர். ஜனார்த்தனும், உங்க ஹஸ்பெண்ட் மதனும் கேட்டுகிட்டாங்க ?!”

“அவர்.. அவர்... எங்கே ?”

“பார்மில் கையெழுத்துப் போட்டுட்டு வெளியேதான் நிற்கிறார்!”

“அம்மா எனக்கு பிள்ளைவலி வந்து வலிக்க வலிக்க என் பிள்ளையைப் பெத்துக்கணும்மா!” கடைசியாய் அம்மாவிடம் கூறிய வார்த்தைகள் எல்லாம் அரை மயக்கத்தில் அகல்யாவின் நினைவில் வந்து வந்து போனது.

“எனக்கு ஆபரேஷன் வேண்டாம்!” என்று உச்சரிக்க, நினைத்து ஒத்துழைக்காத நாக்கைச் சபித்தாள் அகல்யா.

“ பேஷண்ட் மயங்கிட்டாங்க பி ரெடி கரெக்டா 6.30-க்குள்ளே குழந்தையை வெளியே எடுக்கணுன்னு ஜனார்த்தன் கேட்டுகிட்டார். அப்பறம் !” டாக்டர் ஏதோ பேசிக்கொண்டே போக தன் வயிற்றில் ஆழமான ஒரு கீறலை வலியில்லாமல் உணர்ந்தவாறே மீளாத மயக்கத்தில் ஆழ்ந்தாள் அகல்யா.

“மன்னிச்சிடுங்க மிஸ்டர். ஜனார்த்தனன்!”

“என்னவோ தெரியலை, அகல்யாவோட ஆர்க்கன்ஸ் எதுவும் ஒத்துழைக்கலை, அதனால எங்களால பேஷண்டையும், குழந்தையையும் காப்பாத்த முடியலை?!”, என்று கண்ணாடியைக் கழட்டிவிட்டு கண்ணீர் வராத கண்களை ஒற்றியெடுத்தார் டாக்டர் கல்யாணி.

“உன் பிடிவாதம் இப்போ என்னாச்சு ?” என்று பார்வையாலேயே சுட்டெரிக்கும் பர்வதம்மாளின் விழிவீச்சை தாங்க முடியாமல் ஜனார்த்தனன் முதன் முறையாய் தலைகுனிகிறார். மதனிடம் அவள் முன்னொரு நாள் சொன்ன, “மூச்சு அடைக்குதுங்க” என்ற வார்த்தையின் அர்த்தத்தை இன்று புரிந்து கொள்வான். ஆனால், இதையெல்லாம் பார்க்காமல் அகல்யா எங்கோ ஒரு மேகக் கூட்டத்திற்குள் தன் பிள்ளைக்கு தாயமுதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். இனி அவளுக்கு மூச்சு அடைக்கப் போவதில்லை.!”