இதயக் கதவுகள் திறவாதா?
அன்பே!
என் நினைவுகளின் ஊர்வலம் உன் நெஞ்சமாளிகை நோக்கி நிதம்தோறும் நடப்பதென்ன உனக்குத் தெரியாததா?
பால்மழை பொழியும் தேன்நிலா என்றுனை நான் தேடியலைவது புரியாதா?
கார்குழல் மேகச்சித்திரங்கள் கூட என் காதலியை நினைவூட்டுவது இங்கேதான்!
பேசும் சிலையே கண் திறந்து கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா?
மெளன மொழியில் இருவர் படிக்கும் இலக்கியம், காதல் ஆகாதா?
விழிகள் நான்கும் சந்திக்கும் வேளை மொழியேன் அங்கு என்னும் கேள்விகள் தோன்றாதா?
இதழ்கள் தீண்டும் சுவையைக் கேட்டு இதயங்கள் துடிப்பது இயற்கைதான்!
ஆசைமோதும் கணங்களில் எல்லாம் அச்சம் நாணம் விலகாதா?
அடியே என்று ஆசையில் அழைத்தால் அள்ளியணைக்கக் கூடாதா?
ஒற்றைச் சொல்லால் உயிரைத் தொடுகின்ற அற்புத நிகழ்வுகள் தொடராதா?
விரல்நுனி தருகிற ஸ்பரிச உணர்வுகள் இதயக் கதவுகள் திறவாதா?
கன்னித்தமிழ் என்னும் பெயரும் காதலால் தோன்றியது என்பது சரிதானே!
தேக வீணையை நீட்டும்போதே நாதலயங்கள் வழிந்திடுமே!
மிச்சம் மீதி இல்லாதிருக்க அச்சம்விட்டு வரட்டுமே!
முத்தங்கள் நூறு முன்பின் என்று உன்னைக் கேட்டுத் தரட்டுமா!
அசலைப்பெற்று வட்டியை மட்டும் தருவது உந்தன் பழக்கமா?
அதுவே போதும் அடிமையாகிறேன் என்பதே நான் பாடும் கீதமே! சேலைத்தலைப்பில் செல்லமாய் என்னைச் சீராட்டும் காலங்கள் வேண்டுமே!
செவ்விதழ் தொட்டு சேவைகள் புரிதல் எந்நாளும் இன்பம் கூட்டுமே!
மோகவலைக்குள் மூழ்கியெழுந்தால் மூச்சுமுட்டுதல் நடக்குமே!
தாகம்தணியும் வரையில் தழுவல் நாடகங்கள் தொடருமே! பட்டுப்பூவைத் தொட்டுப் பார்த்தல்போல பவளமல்லிகை சிலிர்க்குமே!
கட்டுக்கடங்கா ஆசையில் புரள பகலும் இரவாய் மாறுமே!
கவிதைமலர் வேண்டுமென காத்திருக்கும் பூங்கொடியே!
காத்திருந்த வேளையிலே என் நெஞ்சில் பூத்தமலர் இந்த மடல்!
அன்புதனைப் பரிமாற நித்தம் நித்தம் பூக்கும் மலர்!
கண்ணெதிரே நீயிருக்கும் பாவணையில் யாத்த மலர்!
உன்னுடனே நான் பேசும் உரையாடல் கலந்திருக்கும்!
உள்ளமலர் தொட்டபடி உனைத் தழுவி நாளும் கிடக்கும்!
ஒவ்வொரு முறையும் இந்த உயிர்மலர் பூப்பதெல்லாம் உன் மனதில் பெற்ற இடம் தந்த செழிப்பிலன்றோ?
கண்மலரில் ஆயிரமாயிரம் கதை சொல்லும் காதலியே.. உன் கண்கள் காட்டும் திசைதானே.. என் பாதை வழியாகும்!
கரம்பிடித்து உன்னுடனே செல்லும்போது உற்சாக வெள்ளம் உள்ளத்துள் கரைபுரண்டோடிவருமே!
கேட்டது எல்லாம் கிடைத்துவிட்டால் வந்தது சொர்க்கம் இங்கே காண்!
கனிவாய் கொஞ்சம் திறந்தால் மஞ்சம் என்றால் மயக்கம் தோன்றாதா?
மலர்வாய் கண்ணே மைவிழியாலே மாலையிடுவாய் என்னை!
Leave a comment
Upload