தொடர்கள்
அனுபவம்
நம் பாதுகாப்பு ,நம் கையில்-மரியா சிவானந்தம்

20220413121932417.jpg

சமீபத்தில், தமிழகத்தை உலுக்கிய சம்பவம் மைலாப்பூரின் இரட்டைக் கொலைகள் . வீட்டில் தனியாக இருந்த முதியவரைத் தாக்கிக் கொன்று ஏராளமான நகைகளையும் பணத்தையும் எடுத்துச் செல்ல துணிந்த துணிகர சம்பவம் அச்சம் கொள்ள செய்தது. பாதுகாப்பற்ற சூழலைத்தான் இந்த சமூகம் நமக்கு அளித்துள்ளதா என்ற கவலை நம் மனதில் எழுகிறது .

பொருளாதார தேவைகள் , பெருகி வரும் வேலை வாய்ப்புகள் என்று வீட்டில் பிள்ளைகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்று தங்கள் வாழ்வின் உயரத்தை அடைய உழைக்கிறார்கள் . முன்காலம் போல, தந்தை செய்த விவசாயத்தையோ , நெசவுத் தொழிலையோ,குடிசைத் தொழிலையோ செய்பவர்கள் அருகி விட்டனர் . பெருகி வரும் புதிய வேலை வாய்ப்புகள், அதிக வருமானம், வசதியான வாழ்க்கை போன்ற காரணிகள் நம் பிள்ளைகளை சொந்த ஊரை , வீட்டை விட்டு பறக்க வைக்கின்றன . விளைவு காலி கூடுகளாக (Empty Nests ) நம் வீடுகள் மாறி விட்டன. தாய்ப் பறவைகளும், தந்தைப் பறவைகளும் தனியே வசிக்க தம்மை தயார் படுத்திக் கொள்கிறார்கள். இது காலத்தின் கட்டாயம் என்றே சொல்ல வேண்டும் .

தகவல் தொழிற்நுட்பம் பெருகிய நாட்களில் இவர்களின் பிரிவு பெற்றவரை அதிகம் பாதிப்பதில்லை . நினைத்த நேரத்தில் வீடியோ காலில் பேரன், பேத்திகளைக் கொஞ்ச முடியும் , பாசத்தைப் பரிமாறிக் கொள்ள முடியும் . இருப்பினும் ஒரு நிரந்தர தனிமை உணர்வு இருப்பதை நாம் காண முடிகிறது . அதை எந்த செல்வத்தாலும் நிரப்ப முடியாது

இப்போது நடைபெறும் கொலைகள், தாக்குதல்களால் பாதுகாப்பற்ற தன்மையே சமூகத்தில் நிலவுகிறது. வீட்டில் தனித்திருக்கும் முதியவரின் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கான தீர்வு என்ன என்னவென்று சமூக பொறுப்புள்ள அனைவரின் உள்ளங்களில் எழுகிறது .

தனித்து வாழும் முதியவர்களின் வாழ்க்கை முறை பெரும்பாலும் ஒரு திட்டமிட்ட வாழ்க்கை முறையாகவே இருக்கிறது .ஓய்வு காலத்தில் உணவு வழக்கம் , நடைப்பயிற்சி, பூஜை, கோவில்,நூல் நிலையம் என்று ஒழுங்கு செய்யப்பட்ட அட்டவணைக்குள் தங்களை புகுத்திக் கொள்வது வழக்கம் . அக்கம் பக்கத்தில் இருப்பவர் யார் என்றே தெரியாத நகர வாழ்க்கை இன்று பெருகி வருகிறது . இந்த சூழ்நிலையை சற்று மாற்றி, நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது . ஒன்றாக நடைப்பயிற்சி செல்லுதல் , சின்ன சின்ன கூடுகைகளில் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்துக் கொள்ளுதல் என்று வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் .

தனித்தனி தீவுகளாக வாழும் வாழ்க்கை முறையை நிச்சயம் மாற்றியாக வேண்டும் . நம் தெருவில் , நம் பக்கத்து வீட்டில் இருப்பவரைப் பற்றிய அறிவும், அவர்கள் நலத்தில் அக்கறையும் கொள்ள வேண்டும் . பரஸ்பர அன்பும், நட்பும் வளர நமக்கென சிலர் இருப்பார்கள் என்ற நம்பிக்கை தழைக்கும் . ஓய்தியர்கள் வசிக்க , gated community, பொதுச் சமையலறை கொண்ட வீடுகளைப் பற்றிய விளம்பரங்கள் பார்க்கிறோம். பொருளாதாரம் அனுமதித்தால் அவ்வித வீடுகளில் வசிக்கலாம்

நம்மில் பலர் சமையல், வீட்டுவேலை, தோட்ட வேலை என்று வேலையாட்களை நம்பி வாழ்கிறோம். நமது உடல்நலம் அனுமதிக்கும் வரை நம் வேலைகளை நாமே செய்து பழக வேண்டும் . இவர்கள் மேல் பூரண நம்பிக்கையும் கொண்டு வீட்டு விவரங்களை பகிர்ந்துக் கொள்வது ஆபத்து .நீண்ட காலமாக பணி புரிபவரையும் , பேராசை ஆட்கொண்டால் நம் பாதுகாப்பு கேள்வியாகும். ஓட்டுநர்களும் இதே வகையில் சேர்க்கலாம் . காரில் செல்லும் போது , பிள்ளைகளிடம் போனில் பேசும் போது, பல விவரங்களை சொல்வது தவிர்க்க வேண்டும் .வீட்டில் தேவைக்கு மேல் பணமும், நகையும் வைத்து இருப்பது வேலைக்காரர்களின் ஆசையை நாமே தூண்டி விடுவதாகும் .

வந்த பின் தவிப்பதைக் காட்டிலும், வரும் முன் காத்தலே அறிவுடைமை . வெளியூர் செல்லும் போது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் சொல்லி செல்வது அவசியம் . பூட்டிய வீட்டை நோட்டம் விட்டு திருடுவார்கள். வெளிநாடு சென்று நீண்ட நாட்கள் தங்க வேண்டி இருக்கும் போது , நம்பிக்கையான உறவினர்களை இரவில் வீட்டில் படுக்க சொல்லி ஏற்பாடு செய்யலாம் .

அரசும் , காவல் துறையும் இரவு ரோந்துகளை அதிகப்படுத்த வேண்டும் . மெயின் ரோடுகளில் மட்டும் அன்றி , குடியிருப்பு பகுதிகளில் இரவு ரோந்துகளை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும் . சந்தேகப்படும் நபர்களை காவல் நிலையத்தில் அழைத்து விசாரிக்க வேண்டும் . பெண்கள் பாதுகாப்புக்கு 'காவலன் செயலி' அமைத்ததைப் போல முதியோரின் பாதுகாப்புக்கு செயலி நிறுவுவது அவசியம்.

சீனியர் சிட்டிசன் ஹெல்ப் லைன் 14567 என்ற எண் இயக்கத்தில் உள்ளது . காவல் துறை உதவி, மருத்துவ உதவி ,கௌன்சிலிங் போன்ற தேவைகளுக்கு இந்த எண்ணை அழைத்து வேண்டிய உதவிகள் பெறலாம் .

அரசு தரும் பாதுகாப்பு ஒரு புறம் இருப்பினும், தனி மனித முயற்சிகளே நம் பாதுகாப்பை அதிகரிக்கும், . கவனமாக இருப்போம் ,

நம் பாதுகாப்பு ,நம் கையில் .