அந்த ஆட்டோ குடித்தனம் எனக்கு வியப்பாகத்தான் இருந்தது. அலுவலகம் செல்லும் வழியில் திடீரென முளைத்திருந்த ஒரு குடித்தனம் அது. ஆட்டோ ஒரு திரை போட்டு மூடி இருக்க அதன் முன்னே அடுப்பு மூட்டி சமையல் நடந்துகொண்டிருந்தது. யாரோ ஒரு பெண் அதனருகில் கை அகலக்கண்ணாடியில் முகம் பார்த்து பவுடர் போட்டுக்கொண்டிருந்தாள். காலை நேர அவசரம். அவர்களைக் கடந்து அலுவலகம் சென்றேன். அலுவலக வேலையில் ஆழ்ந்து போனாலும் அவ்வப்போது மனதில், திரை போட்டு மூடிய ஆட்டோ நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. உனக்கென்ன அதைப்பற்றி என்று நீங்கள் கேட்கலாம். நான் அப்படித்தான், எல்லாவற்றிலும் கதை தேடுபவள்.
அலுவலகம் முடிந்து வரும்போதும் பார்த்தேன். அந்த ஆட்டோவின் அருகே அமர்ந்து ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி யாரிடமோ பலத்த குரலில் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள். ஏதாவது பேசி அவள் யார் என்று தெரிந்து கொள்ளலாமென்றிருந்தேன். இப்பொழுது முடியாது என்று தோன்றியது. மெதுவாக அவர்களைக்கடந்து சென்றுவிட்டேன்.
நான் ஒரு பதினைந்து வருடமாக அந்த வழியில் சென்றுகொண்டிருக்கிறேன். ஓரு பெரிய குப்பைதொட்டியும் அதன் பக்கத்தில் ஒரு ஆட்டோ நிறுத்தமும் இருக்கும். எதிர்தார்போல் ஒரு டீ கடை, அதற்கு அடுத்து ஒரு பழைய பேப்பர் கடை. பேப்பர் எல்லாம் மூட்டையாய் கட்டிக் கிடக்கும். அதன் அருகே ஒரு பெண்மணி ஒரு தெர்மக்கோல் தட்டியில் தோடுகளை தொங்கவிட்டு கடை விரித்திருப்பார். ஒரு ஐநூறு அடிக்குள் நாலைந்து தொழில்கள். இதெல்லாம் கண்ணுக்கு பழக்கப்பட்ட காட்சிகள். இதற்கு நடுவில் இப்போது ஒரு திடீர் குடும்பம்.
ஒவ்வொரு முறை அவளைத்தாண்டும் போதும் யாருடனாவது கோபமாகத்தான் பேசிக்கொண்டிருப்பாள். கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் எனக்கு அவளிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. அதற்கு மேல் சற்று அச்சமாகவும் இருந்தது.
சில சமயம் அவள் பேச்சு வரைமுறை தாண்டிப்போகும். கேட்கவே அறுவறுப்பாக இருக்கும். அவளை கடந்து செல்பவர் அனைவரும் தலை குனிந்தபடியே செல்வார்கள். எதை பற்றியும் கவலைப்படாதவள் என்று தோன்றியது.
சென்னையில் நடை பாதையில் வசிப்பவர்கள் ஏராளம். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதமான போராட்டமாகத்தான் இருக்கும். நினைத்துப்பார்க்கவே சற்று கலக்கமாகத்தான் இருந்தது. பெண்கள் எப்படி சமாளிப்பார்கள்? கோபமும், ஆங்காரமும் ஒரு கவசம் தானோ! அதனாலேயே அந்த பெண் கோபப்படும்போது எனக்கு அருகில் நெருங்க பயமாக இருங்கிறதோ!
ஒரு நாள் மதியம் அதீத தலைவலி காரணமாய் விடுப்பு எடுத்துக்கொண்டு வீடு கிளம்பினேன். இப்போது வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்பாடி என்று இருந்தது. என் தலைவலிக்கு தேவை அமைதியான, ஆள் அரவமற்ற வீடு. சில சமயம் நம் வீடு நமக்கே நமக்காக மட்டுமே வேண்டி இருக்கிறது. வேலை பார்க்கும் பெண்களுக்கு கிடைக்காத ஒன்று அமைதியான மதியம். ஒரு ஆட்டோ பிடித்து போனால் இருபது நிமிடத்தில் வீடு போய்விடலாம். இரண்டு மணிக்கு போனால் கூட நாலு மணி வரை கொஞ்சம் ஓய்வெடுக்கலாம். ஏதேதோ யோசித்துக்கொண்டே ஆட்டோ நிறுத்தம் அருகே வந்தேன்.
"அக்கா, ஒரு நிமிஷம் உங்க போன் தரீங்களா? பேசிட்டு தரேன்."
திடுக்கிட்டு திரும்பினேன். அந்தப் பெண் கைகளை நீட்டியபடி நின்று கொண்டிருந்தாள். ஒரு நொடி யோசித்தேன். இப்பொழுது கைபேசியை கொடுத்தால், இதை காரணமாய் வைத்து ஒரு நாள் பேசலாம் என்று தோன்றியது. கைபேசியைக் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு, தன் கையில் சுருட்டி வைத்துக்கொண்டிருந்த பேப்பரை பிரித்து எண்களை அழுத்தினாள். சற்று நகர்ந்து போய் யாரிடமோ பேச ஆரம்பித்தாள்.
ஒரு நிமிடம் ஐந்து நிமிடமானது, பத்து நிமிடமானது. உச்சி வெயில், தலை வலி, யாரிடமோ கைபேசியை கொடுத்துவிட்டு, ஏதோ கதை கிடைக்கும் என்று நின்று கொண்டு இருக்கிறேன். இது ஆர்வமா இல்லை வம்பா? இன்னும் சற்று நிமிடங்கள் காத்திருந்துவிட்டு, பொறுமை இழந்து அவளிடம் கோபமும் எரிச்சலுமாய், " போதும்மா! போன் குடு" என்றேன். "தோக்கா. என்று கூறி அதற்கு பிறகும் இரண்டு நிமிடங்கள் கழித்ததுதான் கொடுத்தாள்.
வாங்கிக்கொண்டு நகரலாமென்றுதான் நினைத்தேன். முடியவில்லை.
"நீ இங்கேயா இருக்க?"
"ஆமாக்கா. அவரு ஆட்டோ ஓட்டறாரு. ராவுல வீட்டுக்கு வர முடியறதில்லை அதனால நானும் இங்கேயே வந்துட்டேன்"
என் தலைவலி "போதும். கிளம்பு! என்றது.
"ஏம்மா ராத்திரி எல்லாம் நீங்க மட்டும் தானே இருப்பீங்க. வேற யாரும் தங்கற மாதிரியே தெரியலையே!"
"நாங்க மட்டும் தான். யாரும் கிடையாது". அலட்சியமாகச் சொன்னாள்.
"போலீஸ் தொந்தரவு எல்லாம் இருக்குமே இல்ல?"
"அதெல்லாம் சமாளிச்சுக்கலாம்" என்று சிரித்தாள்.
எனக்கு கொஞ்சம் புரியவில்லை. தலைவலி அதிகமானது. போதுமென்று கிளம்பி விட்டேன்.
மறுநாள் அவளைக் கடந்து சென்றபோது என்னை தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை. எனக்கும் ஆர்வம் குறைந்து விட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை. புதிதாக முளைத்த போது கண்ணுக்கு உறுத்தியது. நாளாக நாளாக பழகி விட்டது. ஆனாலும் சில சமயம் ஒரு கேள்வி மட்டும் தோன்றும். "வீட்டை விட்டு ரோட்டில் வந்து ஏன் தங்கவேண்டும்?
ஒரு வெள்ளிக்கிழமை மாலை அலுவலகம் முடிந்து ஆட்டோவில் ஏறினேன். சனி, ஞாயிறு விடுமுறை என்பதே தெம்பைக் கொடுத்தது. கொஞ்சம் வம்பு பேசலாமென்று தோன்றியது. இது என் வாடிக்கை ஆட்டோ. அவருக்கு இன்னும் அதிகமாய் விஷயம் தெரிந்திருக்கலாம்.
மெதுவாக ஆரம்பித்தேன்
"இந்த ஆட்டோல இருக்காங்களே ஒரு புருஷன் பொண்டாட்டி அவங்க இங்கேயே தான் தங்கறாங்களா?"
“புருஷன் பொண்டாட்டியா! அதெல்லாம் இல்லம்மா. கொரோனால சேந்துருச்சுங்க. அந்தாளு ஏதோ ஆட்டோ வாடகைக்கு விட்ருக்காராம். இந்த பொம்பளை தெருத்தெருவா போய் குப்பை பொறுக்கிட்டு, வித்துட்டு வரும். தெனம் காலைல அஞ்சு மணிக்கு கிளம்பும், ஒம்போது பத்துக்குள்ள வந்துடும். மத்தபடி அத பத்தி ஒன்னும் தெரியாது. யாரை பாத்தாலும் போன் கேக்கும். எப்ப பார்த்தாலும் அந்தாளுகிட்டதான் போன் பேசிக்கிட்டே இருக்கும் போல”
திடீரென ஆட்டோ அருகில் ஒரு நாய் குட்டி பார்த்த ஞாபகம் வந்தது.
"நாய் குட்டி வேற வளக்கறாங்களா என்ன?"
"அது குப்பை பொறுக்க போகுமில்ல, அங்க எங்கயாவது தனியா இந்த மாதிரி குட்டி இருக்கறத பாத்தா தூக்கிட்டு வந்துடும். நல்ல சோறு போட்டு பாத்துக்கும். போனவாட்டி ஒன்ன கூட்டிட்டு வந்துச்சு. நாய் நல்லா இருக்கறத பாத்து யாரோ திருடிட்டு போய்ட்டாங்க. இப்போ இது இன்னோன்னு.”
எனக்கு வேறு எதுவும் கேட்க தோணவில்லை.
அவள் என்னிடம் சொன்ன கதை வேறு. இவள் எல்லோரிடத்திலேயும் ஏதோ ஒரு பொய்கதை தான் சொல்லி இருப்பாளோ?. இவளின் பொய்களை உரித்தால் மிஞ்சும் உண்மை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். என்னைப்போல் எத்தனை பேர் அவளிடம் கேள்வி கேட்டிருப்பார்களோ? அனைவரிடத்திலும் உண்மை சொல்லவேண்டும் என்று என்ன கட்டாயம்?
மனிதர்களிடம் கதை தேடுவது கூட சிலசமயம் அத்துமீறல் தானோ! புதிதாக ஒன்று கண்களை உருத்தினால் மனம் கதை தேட ஆரம்பிக்கிறது. இது சரியோ தவறோ! நான் இப்படித்தான் இருக்கிறேன்.
சனி, ஞாயிறு நன்றாகவே கழிந்தது. அவளை பற்றி மறந்தே தான் போய் இருந்தேன். திங்கள் காலை அலுவலகம் செல்லும் போது கண்கள் தானே ஆட்டோவைத் தேடிச்சென்றது. அங்கு ஆட்டோவும் இல்லை, நாய் குட்டியும் இல்லை. மதிய உணவின் போதும் என் சிந்தனை எல்லாம் அந்த பெயர் தெரியாத பெண்ணைப் பற்றித்தான். எங்கே போயிருப்பாள்? அவர்களுக்குள் தகராறா? நாய்குட்டியையும் காணவில்லையே!
அலுவலகம் முடிந்து ஆட்டோவில் ஏறிய உடனே ஆட்டோ ஒட்டுநரே பேச்சை ஆரம்பித்தார். .
"அம்மா, அந்த ஆட்டோவை காணமே, கவனிச்சிங்களா?
"காலைலயே கவனிச்சேன். என்ன ஆச்சு?"
"சனிக்கிழமை காலைலேர்ந்து இங்க ஒரே அமக்களம். யாரோ ஒரு அமைச்சர் ஒரு விழாவுக்கு புதன் கிழமை வாராராம். அதனால சனி கெழமைலேந்தே போலீஸ், கார்பொரேஷன் அதிகாரிகளெல்லாம் வந்து ஏரியாவ சுத்தமாக்கிட்டு பெறவு எல்லா குப்பையோட அந்த ஆட்டோவையும் சேர்த்து அள்ளிட்டுபோய்ட்டாங்க. அந்த பொம்பளை எவ்வளவோ சண்டை போட்டுச்சு. ஆனாலும், அதிகாரிங்க அந்த ஆட்டோவை எடுத்துட்டுபோய்ட்டாங்க. பாவம் அந்த பொம்பளை அந்த நாய்க்குட்டியோட போலீஸ் வண்டி பின்னாடியே ஓடிச்சு, ஆனா ஒன்னும் பண்ணமுடியால."
அவளின் அடுத்த அத்யாயம்! அவள் என்ன செய்வாள்? மறுபடியும் இங்கேயே திரும்பலாம். அடுத்த முக்கிய பிரமுகர் வரும் வரை தங்கலாம். அல்லது வேறு இடத்திற்கே சென்றுவிட முடிவெடுக்கலாம். மற்றோரு அனுபவத்தால் இன்னும் இறுகியிருக்கலாம் கதைக்காக காத்திருக்கும் என் போன்றவர்களுக்கு வெவ்வேறு கதை புனையலாம்.
போலீஸ் வண்டி பின்னால் அவள் நாய் குட்டியுடன் ஒடியது மனதில் வந்தது.
அவள் எதுவானாலும் சமாளிப்பாள் என்று தோன்றியது.
கண் மூடி ஆட்டோவில் சாய்ந்தேன். எனக்கு சரியான கதை அவளிடமிருந்து கிடைத்ததா என்று தெரியவில்லை. ஆனால் என் ஏதோ ஒரு கதைக்கு நாயகி கிடைத்தாள்.
Leave a comment
Upload