தொடர்கள்
தொடர்கள்
சென்னை  மாதம்  --  பாகம் 36 -ஆர் . ரங்கராஜ்

20220414163835674.jpg

கடல்-திரையில் மிதந்து வந்த பிள்ளை ஆதலால் திரையன் ; தொண்டைக் கொடியால் சுற்றப்பட்ட நாக இளவரசி மகன் தொண்டைமான் எனப்பெயர் பெற்றான்

சோழ அரசன் கிள்ளிவளவன் சிறிதளவு காலத்துக்காவது நாக அரசன் வளைவணன் மகளாகிய பீலிவளை மணந்துகொண்டான். இதனையடுத்து அவன் தன் மனைவியாக ஓர் அரசன் மகளான சீதத்தக்கைய ஏற்றான். சீதத்தக்கை மூலம் அவனுக்கு பிறந்த மகன், உதயகுமாரன், ஓரிரவு தற்செயலாக கொலைக் காளானான்.
இதன்பின் அரசன் நாக இளவரசி மூலம் பிறந்த தன் மற்ற மகனுக்குச் சொல்லியனுப்பினான். அவள் தன் மணிபல்லவத்திலிருந்து காவிரிப்பட்டினம் வந்த ஒரு வாணிகக் கப்பலில் அனுப்பிவைத்தாள். அவள் தான் பெற்ற ஆண் குழந்தையைத் தொண்டைக் கொடியால் சுற்றிக் கப்பல் மூலமாகச் சோழனுக்கு அனுப்பினாள். அவன் கழுத்தில் அடையாளமாக தொண்டை என்பது ஒரு வகைக் கொடி. தொண்டைக் கொடியால் சுற்றப்பட்ட அம் மகன் தொண்டைமான் எனப் பெயர் பெற்றான். அவன் சோழப் பிரதிநிதியாக இருந்து சென்னை பெருநகர் உள்பட வட தமிழ்நாட்டை ஆண்டான் என்பது வரலாறு. தொண்டை நாட்டை ஆண்டான். அதனால் இந்த நாடு தொண்டை நாடு எனப்பட்டது.

மணிமேகலையில் சோழ மன்னன் கிள்ளிவளவன் மற்றும் நாக இளவரசி பீலிவளை உறவை சுட்டிக்காட்டி, அப்படி பிறந்த மகன் திரையன் எப்படி கிள்ளிவில்லவன் அரண்மனையை சென்றடைந்தான் என்ற செய்தியை தெரிவிக்கிறது.

மணிபல்லவத்தில் உள்ள புத்த பீடிகையில் பீடிகையின் காவல் தெய்வயமான தீவதிலகை மணிமேகலையிடம் இவ்வரலாற்றை தெரிவிக்கிறார்.

"நாகநாட்டரசன் மகளாகிய பீலிவளை தன் மகனுடன் இந்திரனால் காக்கப்படும் இந்தத் தீவுக்குப் புத்தர் பீடிகையைக் காண வந்தாள். அவள் இங்கே தங்கியிருக்கும்போது காவிரிப்பட்டினத்தில் ஒரு வணிகனுக்கு உரிமையான ஒரு கப்பல் இத்தீவில் நங்கூரமிட்டுத் தங்க நேர்ந்தது. கப்பல் காவிரிப்பட்டினத்துக்குப் போக இருக்கிறது என்பதை உணர்ந்த இளவரசி, தன் மகனை வணிகன் வசம் ஒப்புவித்து அவன் தந்தையாகிய சோழ அரசன் கிள்ளிவளவனிடம் அனுப்புவித்தாள்.

வணிகன் இளவரசனை மனமகிழ்வுடன் தன் கப்பலில் ஏற்றிக் கொண்டு உடன் தானே கப்பல்பாய் விரித்தகன்றான். ஆனால், நள்ளிரவில் வன்புயல் காற்று எழுந்து கப்பலை அடுத்துள்ள ஒரு கூடற்கரையில் மோதி உடைத்தது. தப்பிப் பிழைத்த வணிகனும் சில கப்பலோடிகளும் அரசனிடம் சென்று இத்துயரச் செய்தியைக் கூறினர்.

“கிள்ளிவளவன் தன் புதல்வனைத் தேடிச் சென்றதால் இந்திரனுக்குரிய விழாவை ஆற்றும் கடமையை மறந்துவிட்டான். வானவர் வேந்தனுக்குச் செய்த அவமதிப்பால் கொதித்தெழுந்த கடல் தெய்வம் ஒரு மாபெரிய கடலலையை அனுப்பிக் காவிரிப்பட்டினத்தைக் கடலுளாழ்த்திற்று.

நாக நாட்டிலிருந்து கடல்-திரையில் மிதந்து வந்த பிள்ளை ஆதலால் திரையன் எனப்பட்டான் என அறிஞர்கள் உய்த்துணர்கின்றனர். அவனை தொண்டமான் என்றும் திரையன் என்றும் அழைத்தனர்.

தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பாட்டு பெரும்பாணாற்றுப்படை. இந்தப் பாடலில் இவன் பல்வேல் திரையன் எனப் போற்றப்படுகிறான். (மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்கு தானை மூவருள்ளும் இலங்குநீர்ப் பரப்பின் வளை மீக்கூறும் வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் பல்வேல் திரையன் - பெரும்பாணாற்றுப்படை 37)

இந்தப் பாட்டுக்குப் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பபட்ட வெண்பாவில் “கான் பயந்த கண்ணிக் கடுமான் திரையன்” எனப் போற்றப்பட்டுள்ளான்.

வேங்கட நாட்டு அரசன்

இந்தத் திரையன் திருவேங்கடமலைப் பகுதி நாட்டுக்கு அரசன். (வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை - காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் பாடல் அகம் 85-9)

பவத்திரி தலைநகர்

பொலம்பூண் திரையன் எனப் போற்றப்பட்ட இந்தத் திரையன் பவத்திரி என்னும் ஊரில் இருந்துகொண்டு செங்கோலோச்சி வந்தான். (செல்லா நல்லிசை பொலம்பூண் திரையன் பவத்திரி அன்ன நலம் - நக்கீரர் பாடல் அகம் 340-6).

காஞ்சிபுரத்தையும் புழலையும் தலைநகரங்களாகக் கொண்டு தொண்டைமான் சக்ரவர்த்தி ஆண்டான் என்பதை சென்னை பெருநகர் பகுதியிலுள்ள பல இடங்களில் செய்திகள் உள்ளன.


-- (தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com