தொடர்கள்
follow-up
ஆட்சியும் போச்சு கட்சியும் போச்சு - முழு நீள ரிப்போர்ட் மும்பையிலிருந்து பால்கி

20220602090633220.jpeg

மும்பை 30.6.2022 மாலை 7.30 மணிக்கு மஹராஷ்டர மாநிலத்திற்காக திரு.ஏக்னாத் ஷிண்டே முதல்வர், ஃபட்னவிஸ் துணை முதல்வர் என பதவி ப்ரமாணம் இனிதே நடந்தேறியது. இந்த கூட்டில் 170 எம் எல் ஏக்கள் உள்ளனர். இது செய்தி. ஷிண்டே, மோடியையும் ஃபட்னவிஸையும் இந்த பெருந்தன்மைக்காக நன்றி தெரிவித்துகொண்டார்.

இதற்கு பின்னால் நடந்தேறிய காட்சிகள் தாம் இந்த முடிவுக்கு முன் நடந்த செம விறு விறு.

பின் வரும் நிகழ்வுகள் கண்ணிசைக்கும் நேரத்திலும் மள மள வென திடு திடுவென நடந்தேறியது.

இந்த அதிருப்தி மேட்டர் புகைகையிலே தனது வெளியேற்றம் தவிர்க்கமுடியாது என்ற நிலை தெரிந்த உத்தவ் தாக்கரே, “காட்சி மாறினாலும், அடுத்த முதல்வர் சிவ சேனையை சேர்ந்தவராகத்தான் இருப்பார்” என்று தனது கணிப்பில் கூறியிருந்தபடியே நடந்தும் விட்டது. ஆம் ஏக்னாத் ஷிண்டே சிவ சேனாவை சேர்ந்தவர்தானே? அவர் எண்ணியது என்னமோ, அதிருப்தியாளார்கள் தம்முடன் சேர்ந்திடுவார்கள், தான் விலகி அவர்களின் ஒருவரை முதல்வராக்கிடலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால் நடந்தது என்னமோ வேறு விதம் !

முக்கியமாக, ஃபட்னவிஸ்க்கு மட்டும் தான் தெரியும், அவர் முதல்வராக இருக்கப் போவதில்லை என்று. இது, அவராக எடுத்த முடிவு தான் ஏக்னாத் ஷிண்டேவை முதல்வராக அறிவித்தது. இது அவரைத் தவிர ஏக்னாத் ஷிண்டே முதல்கொண்டு ஏனைய அனைவருக்குமே, தெரியாது. ஆம். பா.ஜ.க கட்சி தலைமைக்கு கூட தெரியாது என்பது தான் பின்னர் தெரிய வந்தது ட்விஸ்ட்.

30 ஜூன், வியாழன் மாலை 4.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவி பிரமாணத்திற்கு முன் நடந்த பிரஸ் மீட்டில் முதலில் பேசிய ஃபட்னவிஸ் இதை அறிவிக்கையில், ஆச்சர்யத்தில் அமிழ்ந்தார் ஏக்னாத் ஷிண்டே. அங்கிருந்தவர் பாஜக எம்எல்ஏக்கள் உட்பட அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். கேட்டதை நம்பத்தான் முடியவில்லை. அதற்காகவே ஃபட்னவிஸ் இரண்டாம் முறையாகவும் மராட்டியிலும், பத்ரிகையாளர் கேட்டுக்கொணடதின் பேரில் தனது மராட்டி உரையை ஹிந்தியிலும் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியது, தான் அரசு அமைப்பில் இருக்கமாட்டேன் என்றும், பாஜக ஷிண்டே அரசை ஆதரிக்கும் என்றும் கூறியிருந்தார். இதனால், ஆச்சர்யமும் இன்னும் குழப்பமும் ஏற்பட்டது. அதாவது, பாஜக அரசில் சேருமா? அல்லது வெளியில் இருந்து ஆதரவு தருமா? ஷ்ண்டே மராட்டியில் தான் பாலாஸாஹேப் தாக்கரேவின் கொள்கையை நிலை நாட்டவே இந்த முடிவெடுத்தேன். எனது நண்பர்களும் இதற்கு ஆதரவு அளித்தனர் என்று பேசி முடித்தபின் ப்ரஸ் மீட் முடிந்தது. அன்றே மாலை 7.30 மணிக்கு, அதாவது, அடுத்த இரண்டு மணி நேரத்தில் பதவி ப்ரமாணம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்பப்பா, நிமிடத்திற்கு நிமிடம் ஸ்வாரசியங்கள் தெறிக்க ஆரம்பித்தன. முதலில் அங்கு கூடியிருந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தனர். ஏன் ஃபட்னவிஸ் இப்படி தனக்கு வந்த பதவியை துறக்கிறார் என்று. இது மேலிடத்தின் ஸ்ட்ராடஜீ யாக கூட இருக்கலாம் என்று அடக்கியே ரியாக்ஷன் தந்த வண்ணமிருந்தனர்.

அந்த சமயத்தில் தான் இன்னொரு அதிர்ச்சி விழுந்தது. இந்த ப்ரஸ் மீட்டிற்கு பிறகான எதிர்வினையை பாஜக தலைவர் ஜே.பீ.நடடாவிடம் கேட்க, அவர் கூறியது இன்னும் ஆச்சர்யத்தை அதிகரித்தது. “எக்னாத் ஷிண்டேவை முதல்வராகியது ஃபட்னவிஸின் மாண்புமிகுந்த செயல். ஆனால் அவர் அரசில் சேரப்போவதில்லை என்ற முடிவை மாற்றிக்கொண்டு அரசில் துணை முதல்வராய் சேருமாறு கட்சி தலைமை சார்பாய் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்ற அவரது பேச்சிலிருந்து மராட்டிய மாநிலம் பற்றிய அனைத்து முடிவுகளும் ஃபட்னவிஸுக்கே விடப்பட்டிருந்தது தெள்ளத்தெளிவாகிறது. அதிலும் கட்சி தலைமைக்கும் அவரது இந்த தியாகம் தெரியாது என்பதும் ஒரு இன்ப அதிர்ச்சி தான்.

ஆனால் இன்னொன்றும் கவனிக்க தவறக்கூடாது. அதாவது, தொலைக்காட்சி மூலம் கட்சி தலைவரின் வேண்டுகோளை தட்டாது, முதல்வாராகும் தகுதி அனைத்தும் இருந்தும் அவராகவே விட்டுக்கொடுத்து பின்னர் கட்சித் தலமையின் கடைசி நிமிட வேண்டுகோளையும் ஏற்று துணை முதல்வராக, இப்பதவி ஒரு டிமோஷன் என்பதையும் பாராமல் ஒரு கட்டுப்பாடுள்ள கட்சி தொண்டராக கட்சி தலைமையின் ஆணையை நிறைவேற்றியது அனைவரையும் ஸ்தம்பிக்கவைத்தது. சில அரசியல் தலைவர்கள் இதை பாராட்டியும் பேசியிருந்தனர்.

20220602090704506.jpg

எம்எல்சி தேர்தலிலும் சிவ சேனைக்கு சறுக்கல் கொடுத்த அதிருப்தியாளர்கள் கடந்த இரு வாரங்களாக மும்பையிலிருந்து சூரத், அங்கிருந்து கோவா, அஸ்ஸாமின் கவுஹாதியில் குடியேறினர். இதற்கிடையில், ஷிண்டே தனது முடிவான, “சிவசேனை இந்த முக்கூட்டணியிலிருந்து விலகி பீஜேபீயுடன் மறுபடியும் பாலாஸாஹேபின் ஹிந்துத்வாவை விடாது அரசு நடத்திட வேண்டும்” என்ற முடிவில் திண்ணமாயிருந்தது” இரு கோஷ்டிகளுக்குமிடையே இன்னும் இழுபறி அதிகரித்தது. அதற்குள், ஃபட்னவிஸ் தனது தலைமை மூலம் சட்ட வல்லுனர்களுடன் ஆராய்ந்து, ஷிண்டே உட்பட அதிருப்தியாளர்கள் மீதான உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை எப்படி எதிர்கொள்வது மற்றும் சரியான சமயம் எதுவென பார்த்து, அனைவரும் சொல்வது போலே, சட்டசபையில் பலத்தை நிரூபிப்பது தான் சரி என்று எண்ணிட, கவர்னரும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இரு நாட்கள் அவகாசம் கொடுத்தார்.

இதை எதிர்த்து உத்தவ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடுக்க அதற்கான விசாரணையில் பல பல ஹேஷ்யங்கள் கூறப்பட்டாலும், உச்ச நீதிமன்றம், சட்டசபையில் தான் பெரும்பான்மை தெரியும் என்று கூறிவிட்டது.

இந்த சமயத்தில், உத்தவ் அமைச்சரவையை கூட்டி ஓஸ்மானாபாத்துக்கு தாராஷிவ் என்றும், ஔரங்காபாத்துக்கு சம்பாஜி நகர் என்றும் நாமகரணம் சூட்ட, கூட்டத்திற்கு வந்த இரு அமைச்சர்கள் வெளியறினார்கள். அமைச்சரவை கூட்டத்திலிருந்து வெளியேறிய உத்தவ் எப்போதும் காண்பிக்கும் விக்டரி சைகையின்றி நமஸ்தே செய்த வண்ணம் வெளியேறினார். அமைச்சரவையிலே இதுதான் தான் கலந்திடும் இறுதி கூட்டம் என்பது போலவும், ஏதாவது தவறு செய்திருப்பின் மன்னிக்கவும் என்றும் வேண்டினாராம். அந்த சமயம் உச்ச நீதிமன்றம் அவரது எதிர் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.

உடனே அடுத்த ஒரு மணி நேரத்தில் சோஷியல்மீடியாவில் உத்தவ் எமோஷனலா, “என்னை என் வீட்டுகாரங்களே ஏமாத்திட்டாங்க” னு சொல்லி ராஜினாமாவை தெரிவித்துவிட்டார்.

ஆக அனைவரின் கவனம் புதிய கூட்டணி மற்றும் அமையவிருக்கும் அரசின் பக்கம் திரும்பியது.

ஏதோ திரைக்கதையில் வரும் அடுத்தடுத்து வரும் காட்சி போலே, இந்த முடிவு தெரியும் போது அங்கு கவுஹாத்தியில் இருந்து தனது படையுடன் ஷிண்டே கோவாவுக்கு வண்டியைத் திருப்பினார்.

இந்த களேபரத்திற்கிடையில் உத்தவின் தொண்டர்கள் அதிருப்தி எம்எல்ஏக்களின் மீது தங்களது கோபத்தை காண்பிக்கவும் தொடங்கினர். சிவ சேன ராஜ்ய சபா எம்பீ சஞ்சய் ராவூத் ஒரு படி மேலே போய், கவுஹாதியிலிருந்து பிணங்கள்தான் வரும் என்று கூறிட அது ஒரு சர்ச்சயை ஏற்படுத்தியது. பின்னர், அவர், சிவேசேனை என்ற உணர்வு செத்த மனிதர்களாக வருவார்கள் என்றேன் என்று வார்த்தை ஜாலத்தில் இறங்கினார். அப்போதிருந்த கலவர நிலையிலிருந்து அதிருப்தியாளர்களின் குடும்பத்தினருக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

30.06.2022 காலை நம்பிக்கை வாக்கெடுப்பு தான் இல்லையே என்று ஷிண்டே மட்டும் மும்பைக்கு வர அவரது கோட்டையான தானேவில் அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

ஃபட்னவிஸுடன் பேச்சு வார்தை. பின்னர் அவருடன் கவர்னர் மாளிகைக்கு இருவரும் சென்றது என்று மள மளவென காட்சிகள் தொடர, செய்தி சானல்கள் மாறி மாறி தத்தம் செய்திகள் தாம் முதலில் வந்தது என்று அலறிக்கொண்டிருந்தன. அடாது மழை பெய்து மும்பை குளிர்ந்திருந்தாலும் இருந்த அரசியல் சூட்டிற்க்கு துணையாக கணத்தில் மாறிடும் காட்சிக்கு ஈடு கொடுத்து தனக்கு வந்த செய்திகளை breaking news ஆக போட சானல்களில் விறு விறுப்பு தான். பதவியேற்பு நாளை என்றும் கூடவே அனுமானங்கள் ஹேஷ்யங்கள் என ஃபட்னவிஸ் தான் முதல்வர், ஷிண்டே தான் துணை முதல்வர் என்றனர். கூட்டணிக்குள் எத்தனை பேர் மந்திரிகளாவார் என்றும்ஒரு படி மேலே போயி ஆரம்பித்துவிட்டிருந்தனர்.

அதற்குள் கவர்னர் மாளிகையில் அன்றே பதவியேற்பு விழாவிற்கு தயாராகிவிட்டிருந்தது. கவர்னர் கோஷியாரிடம் தத்தம் பலங்களாக தமது எம்எல்ஏக்கள் லிஸ்ட்டை கொடுத்துவிட்டு அவரிடமிருந்து ஸ்வீட்டுகளை அவரது கரத்தால் ஊட்டிக்கொண்டு அங்கேயே ப்ரஸ் மீட்டுக்கு தயாரானார்கள்.

அங்கு நடந்ததைத் தான் மேலேயே மாஸ்டர் ஸ்ட்ரோக்கில் பார்த்தோம்.

இந்த சமயத்தில் ஸ்டுடியோவிலிருந்த செய்தியாளர் களத்திலிருந்த நேரலை கமண்டரி சொல்லும் செய்தியாளரிடம், அமைச்சரவையில் யார் யார் என்ற் கேட்க, நான் இந்த ஆட்டத்துக்கு வல்லபா என்ற தொனியில், “ ப்ளீஸ் அத மட்டும் கேக்காதே.. இங்க எல்லாமே சொல்லி வெச்சாப்போலே நடக்கலியே. நடக்கும் போது சொல்லுவோம்” என்று அயர்ந்தவாறே கூறிவிட்டாள்.

ஏன் பாஜக ஷிண்டேவை தேர்ந்தெடுத்தது என்று ஒரு ஆராய்ச்சியில் இறங்கினால் தென்படுபவை இதோ.

 1. 2019ல் கூட்டு சேர்ந்து தானே தேர்தலில் போட்டியிட்டோம். பதவி ஆசைக்காக கூட்டணியை மறந்து, முக்கியமாக, இருவரும் சேர்ந்த கூட்டிற்காகத்தானே மக்கள் ஓட்டளித்தனர், சேராத, அதிலும், தேர்தலில் யாரை கடுமையாக எதிர்த்து, கொள்கையில் எதிலும் ஒத்துப்போகாத காங்கிரஸ், என்சிபி கட்சிகளுடன் கூட்டு வைத்தது. இன்று தான் 2019 தேர்தல் வெற்றி தீர்ப்பு கிடைத்தது.
 2. தான் முதல்வரான போதுதான் பாலாஸஹேபின் சிவ சேனா தொண்டன் முதல்வரானது என்று கூறி, இதற்கு முன் அவரது கட்சியினர் முதல்வராயிருந்ததை உத்தவ் குறைத்து கூறியது.
 3. நாங்கள் ஆட்சிக்கு அலைபவர்களல்ல என்று கூறியது.
 4. எங்களுக்கு ஆட்சியை விட கொள்கைதான் முதல் என்று தெரிவித்துக்கொண்டது.
 5. பாலாஸாஹேப் தாக்கரேவை முன்னிறுத்தி புகழ்ந்து அவரது தொண்டனையே முதல்வராக்கியது அதற்கு மேலும் புகழ் சேர்ந்திருப்பது.
 6. உத்தவ் தாக்கரேவிற்கு முழுவதுமாக அரசியலில் முற்றுப்புள்ளி வைத்தது
 7. இதன் மூலம் உத்தவிற்கு அவரது கட்சியையே அவரிடமிருந்து பிரித்து ஷிண்டே பக்கம் திருப்பியது.
 8. குடும்ப ஆட்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
 9. ஏற்கெனவே முக்கூட்டு அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை நோட்டீசுகள் உள்ளன. இருவர் உள்ளே தான் இருக்கின்றனர்.
 10. இதற்க்கு பயந்தே உத்தவ் கோஷ்டியில் இருக்கும் 14 வர் ஷிண்டேவுடன் வரும் சனிக்கிழமை வாக்கெடுப்பிலோ அல்லது அதற்கு முன்னமே இணைய பெரும் வாய்ப்பு உள்ளது. காரணம், ஷிண்டே கோஷ்டியில் தான் 40 சிவ சேன எம் எல் ஏக்கள் ஏற்கெனவே இருப்பதால் அது தான் கட்சி தாவல் குற்றத்திலிருந்து தப்பித்ததாயிற்றே. அவர்களின் கொறடா தான் செல்லும். இந்த சமயத்தில் வாக்கெடுப்பில் மாறி ஓட்டிடிடுபவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. உத்தவின் மகன் ஆதித்யாவும், சஞ்சய் ராவூத்தின் தம்பி சுனில் ராவூத் மட்டும் மிஞ்சிடலாம்.
 11. ஆட்சியும் போச்சி. கட்சியும் போச்சி நிலையும் நிதர்ஸனம். இனி இந்த இரு கோஷ்டிகளுக்கிடையே கட்சி சின்னமான (வில்லும் அம்பும்) மீது போட்டி வரும்.
 12. ஏழைகளின் சாணக்கியன் எனப்படும் ஷரத் பவாரின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டது என்று தான் கொள்ளவேண்டும். முக்கூட்டு அரசின் மூலம் உத்தவை தனது இஷ்டம் போல ஆட்டிபடைத்துக் கொண்டிருந்தது நிறுத்தப்பட்டது. இதன் மூலம் தனது மகளை முன்னிறுத்தி வைத்ததும் நின்றிடும்.
 13. ஷிண்டேவும் ஃபட்னவிஸும் பக்கா மாராட்டிய மக்கள். அந்த பாயின்டிலும் யாரும் குறை கூற இயலாது.
 14. இரண்டரை வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வளர்ச்சி திட்டங்கள் இனி ஃபாஸ்ட் ட்ராக்கில் எடுக்கப்படும்.
 15. மும்பை முனிசிபாலிடி எலக்ஷன், 2024 பாரளுமன்ற தேர்தலில் சாதகமான கூட்டணி அமையும்.

இவ்வளவு நடந்து கொண்டிருக்கையில் யாரும் கேட்க தயங்கிய கேள்விகள்

 1. சஞ்சய் ராவூத்தின் பேச்சுகள், முடிவுகள், அவரது தாக்கம்
 2. ஷரத் பவார் உத்தவை தனது அசைவுக்கு ஆக்கி கொண்டது.
 3. தனது கட்சியின் மீது உத்தவுக்கு இருந்த கண்ட்ரோல்

இனி வெளிவர இருக்கும் மூடி மறைக்கப்பட்ட விஷயங்கள்:

 1. பால்கர் நகரில் பட்டப் பகலில் நடந்த மூன்று சாதுக்களின் அகோர கொலை
 2. நடிகர் சுஷாந்த் ராஜ்புத்தின் தற்கொலை? வழக்கு
 3. ஹனுமான் சாலீசா
 4. அர்னாப் கோஸ்வாமி சம்பத்தப்பட கேஸ்
 5. முகேஷ் அம்பானி இல்லத்தருகே புதைக்கப்பட்ட வெடி குண்டு விஷயம்

இனி வரும் நிகழ்வுகள் ஷிண்டேவுக்கு சாதாரணமல்ல.

 1. சனிக்கிழமை நடக்கும் பெரும்பான்மை பலப் பரிட்சை.
 2. உத்தவ் கோஷ்டியின் நடத்தை.
 3. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பதவி நீக்கம் பற்றிய இரு கோஷ்டிகளுக்கிடையேயான எதிரெதிர் வழக்குகள்.
 4. யார் உண்மையான சேனாபதி? கட்சி யாரிடம்? தன் குழுவை சிவ சேனா பாலாஸாஹேப் என்று தற்போது பெயரிட்டுள்ளனர்.

இது இப்பிடியிருக்க, இந்த நிகழ்வு மூலம் பீஜேபீக்கு உடனடி தேவையான ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு வோட்டு சற்றே உயர்ந்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

இந்த கூட்டு 2024 நாடளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு துணை நிற்கும் என்று காலம் பதில் சொல்லும்.