2022
ஹாங்காங் சீனாவுடன் மீண்டும் இணைந்து 25 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னமும் ஒரு 25 வருடம் ஒரு நாடு இரண்டு அமைப்பை உயிர்ப்புடன் சீனா வைத்திருக்க வேண்டும்.
அதையும் தாண்டியும் அந்த அமைப்பு இருக்கும் என்று கோடி காட்டியிருக்கிறார் சீன அதிபர் ஷீ ஜின்பிங். அவருடைய மனைவியுடன் முதல் முறையாக சீனாவிலிருந்து ஹாங்காங்கிற்கு தரை மார்க்கமாக முதல் நாளே வந்து விருந்தில் கலந்து கொண்டு மீண்டும் சீனாவிற்கு அதிவேக இரயிலில் சென்று இரவு தங்கி விட்டு மீண்டும் 1ந்தேதி ஜூலை ஹாங்காங் வந்து 25வது ஆண்டு விழாவை கொண்டாடி விட்டு தான் சென்றார் அதிபர்.
உலகின் அதிக பலம் வாய்ந்த தலைவர்.
இந்த 25 ஆண்டு குட்டி சரித்திரத்தில் ஹாங்காங்கைப் பற்றி சொல்ல விட்டுப் போன ஏராளமான செய்திகள் உண்டு.
உதாரணத்திற்கு உலகிலேயே விலை உயர்ந்த நகரம் என்று ஹாங்காங்கையும் சொல்லலாம். நியூயார்க், டோக்கியோவைப் போல ஹாங்காங்கும் அதிக செலவு பிடிக்கும் நகரம். ஒரு கார் பார்க் நம்மூர் காசுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மாத வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.
மலைகள், கடல்,அதி நவீன அடுக்கு மாடி கட்டிடங்கள் என்று அதிசயத்தக்க நில அமைப்புக்களை கொண்ட நகரம் ஹாங்காங்.
எண்பது லட்சம் பேர் ஜனத்தொகை கொண்ட நகரத்தில் குறைந்த பரப்பளவில் அதிக மக்கள் வாழும் ஊர் என்று சொல்லலாம்.
அடிமட்ட அளவில் லஞ்சம் இல்லாத ஊர். கட்டின பசு போல 99 சதவிகிதம் பேர் சட்டத்தை மதிக்கும் மக்கள்.
காந்தி சொன்னதாக சொல்லப்படும் நள்ளிரவில் நகைகளோடு செல்லும் பெண்களின் சுதந்திரம் அக்மார்க்காக செயல்படுத்தப்படும் நகரம்.
அடுத்தவர் வம்புக்கு போகாதவரை பாதுகாப்பில் உலக நகரங்களுள் முதல் பத்துக்குள் ஹாங்காங் வந்து விடும்.
ஹாங்காங் உலகத்தில் பார்க்க வேண்டிய நகரங்களுள் ஒன்று.
இந்த இருபத்திஐந்து வருடங்களில் ஹாங்காங்கில் என்னென்ன மாறுதல்கள். ??
ஒரு சின்ன பட்டியல்.
1997க்குப் பின் ஒரு புதிய விமான நிலயம்.
ஒரு புதிய கண்டெய்னர் டெர்மினல்.
சீனாவுடன் இணைக்கப்பட்ட ஒரு அதிவேக இரயில் இணைப்பு மற்றும் பிரம்ம்மாண்ட இரயில் நிலையம்.
ஆறு புதிய பாதாள இரயில் பாதைகள்.
போக்குவரத்தின் விலைவாசிகளும் ஏறாமல் இல்லை. அன்று டாக்சியில் குறைந்த பட்ச கட்டணம் 14 டாலர்கள். இன்று 27 டாலர்கள் வரை வந்து விட்டது.
அன்றைய ஜனத்தொகை 64 லட்சம். இன்று சுமார் 74 லட்சம்.
அன்று ஒரு சதுர கி.மீக்கு 5675 பேர் இருந்தனர். இன்று 6850 பேர். சில பகுதிகளில் இது மிக அதிகம். உதாரணத்திற்கு குன் டான் என்ற பகுதியில் ஒரு ச.கி.மீக்கு 59704 பேர். அடர்த்தின்னா அப்படி ஒரு அடர்த்தி. அக்கடான்னு கையை நீட்டினால் அடுத்தவர் மூக்கில் குத்தும் அளவு நெருக்கம்.
வீடு விலை சராசரியாக ஒரு சதுர மீட்டர் அன்று எட்டரை லட்சம் ரூபாய். (இன்றைய மதிப்பில்) இன்று சுமார் பத்தொன்பது லட்சம் ரூபாம்.
அன்று ஜனத்தொகையில் 60 சதவிகிதம் பேர் பிரிட்டிஷ் என்று சொல்லிக் கொண்டனர். இன்று 90 சதவிகிதம் பேர் சீனர்கள்.
பொருளாதாரத்திலும் அன்று சீனாவின் ஜி.டி.பிக்கு ஹாங்காங் 14 சதவிகிதம் பங்களித்தது. இன்று 2.5 சதவிகிதம் மட்டுமே. ஏனெனில் மற்ற சீன நகரங்கள் முன்னேற்றத்தில் ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளியது என்றே சொல்லலாம்.
அருகாமை ஷென்ஜென் நகரம் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் அசுர வளர்ச்சியடைந்து ஹாங்காங்கை ஒரு சின்ன நகரமாக மாற்றி விட்டது.
அன்று ஒரு அமெரிக்க டாலருக்கு சீன கரென்ஸி ரெமன்பீ 9 சொச்சம். இன்று அது 6.7 என்ற அளவில் இருக்கிறது.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஹாங்காங் சீனாவின் சிறப்பு அந்தஸ்து பெற்றிருக்கும் என்று சொல்கிறார்கள்.
ஜாக்கி சான் படங்களில் வரும் சாகசக் காட்சிகளிலிருந்து சமீபத்திய பாட்மான் படங்கள் வரை திரையுலகிலும் ஹாங்காங் வசீகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
ஹாங்காங் பற்றிய ஆச்சரியங்கள் ஏராளம் ஏராளம்.
விரைவில் ஹாங்காங்கைப் பற்றிய தொடரே விகடகவியில் வரக்கூடும்.
வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் ஏதேனும் ஒரு வாக்குறுதி எடுத்துக் கொள்ள வேண்டாமா பின்னே?
படங்கள் நன்றி நேஷனல் ஜியாகிரஃபிக்.
Leave a comment
Upload