தொடர்கள்
ஆன்மீகம்
தமிழ் நாட்டிலுள்ள ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி கோயில்கள்!--சுந்தரமைந்தன்

மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தைத் தமிழ் நாட்டில் பல்வேறு ஸ்தலங்களில் தரிசிக்கலாம். அதில் சில….

ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி எனும் உலகநாயகி அம்மன் கோவில்:

ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி கோயில்கள்!


இராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள தேவிபட்டினத்தில் ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி எனும் உலகநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அம்பிகையின் சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாக வழிபடப்படுகின்றது. இங்கு மூலவராக மஹிஷாசுரமர்த்தினி வீற்றிருக்கிறார். மூலவர் சந்நிதிக்கு மேல் ஏக தள விமானம் அமைந்துள்ளது. Madurai சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி மகிஷாசூரனை அழித்த கோபம் குறைந்து சாந்த நிலையில் சுயம்பு வடிவில் இத்தலத்தில் அருட்பாலிக்கிறார். இந்த கோயிலில் நவராத்திரி, பௌர்ணமி ஆகியவை விசேஷ தினங்களாகும். இந்த அம்மனை வழிபட்டால் பயந்த சுபாவம் உள்ளவர்களுக்குச் சகல பயங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்களும், எல்லாவிதமான வெற்றிகளைப் பெற அம்மனை வந்து வணங்குகின்றனர்.

வாள்வச்சகோஷ்டம் ஶ்ரீ மகிஷாசுரமா்தினி கோயில்:

ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி கோயில்கள்!


நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் காட்டாத்துறை ஊரில் இருந்து இடதுபுறம் 5 கி.மீ. தூரத்திலும், நாகர்கோவிலில் இருந்து இந்த ஊர் 35 கி.மீ. தூரத்தில் வாள்வச்சகோஷ்டம் ஶ்ரீ மகிஷாசுரமா்தினி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஶ்ரீ மகிஷாசுரமா்தினி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோயில் அந்தக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் போரில் வெற்றி பெற்றுத் திரும்பும் பாதையில், ரத்தக்கறை படிந்தவாளை இந்தக்கோயிலின் பக்கத்திலுள்ள குளத்தில் கழுவிய பின்னர் ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினியை வழிபட்டுச் செல்வார்கள். தரைமட்டத்திலிருந்து சுமார் மூன்று மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு ஏழு படிக்கட்டுகள் ஏறிச்செல்ல வேண்டும். இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. தேங்காய் மூடியில் நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி வழிபட்டால் கன்னிப் பெண்கள் சுமங்கலிகள் வேண்டிய அனைத்தும் கிட்டும் என்பது ஐதீகம்.

மத்தூர் ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில்:

ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி கோயில்கள்!


திருத்தணியில் இருந்து திருப்பதி போகும் மார்க்கத்தில் ஏழு கி.மீ தூரத்திலும், பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கி.மீ தூரத்தில் மத்தூர் ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயில் 64 சக்தி பீடங்களுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது. இங்கு ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி புன் சிரிப்பு முகத்தில் தவழ ஈசான மூலையை நோக்கியபடி காட்சி தருகிறாள். இங்குச் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகால சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. பௌர்ணமி நாட்களில் 108 பால்குட அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடத்தப்படுகின்றன. நவராத்திரி விழாவில் ஒன்பது நாட்களிலும் நிகழும் சிறப்புப் பூஜைகள், அலங்காரங்கள் நடைபெறும். இங்குள்ள ஸ்தல விருட்சமான வேப்ப மரத்தின் வேப்பிலை கசப்பதில்லை. இந்த
வேப்பிலை பிரசாதம் சகல சௌபாக்கியங்கள் கிடைக்கச் செய்யும்.

ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம்:
அசுரனை அழித்த ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினியின் கோபத்தைச் சாந்தப் படுத்த இந்த ஸ்லோகம் பாடப்பட்டது…ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் பாடல் சில வரிகள்…
“அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே”
பொருள்: மலையரசனின் மகளே, உலகை மகிழ்விப்பவளே, விளையாட்டாக உலகை நடத்திச் செல்பவளே, நந்தனால் வழிபடப்பட்டவளே, சிறந்த மலையான விந்திய மலையில் உறைபவளே, திருமாலுக்குப் பெருமை சேர்ப்பவளே, வெற்றி வீரர்களால் துதிக்கப்படுபவளே, பகவதி, நீலகண்டரின் பத்தினியே, உலகமாகிய பெரிய குடும்பத்தை உடையவளே, அரியவற்றைச் சாதிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி காயத்ரீ
(துயரம் நீங்கி செல்வம் பெருக)

"ஓம் மகிஷாசுரமர்த்தினி ச வித்மஹே,
விஸ்வ விநோதின்யை க்ருஷ்ணப்ரியாய ச தீமஹி
தந்நோ துர்க்கா ப்ரசோதயாத்"
(மகிஷனை அழித்த விஷ்ணுவின் பத்தினியே வறுமை துயரம் துடைப்பாய், வரமருள் துர்க்கையே.) என்ற மகிஷாசுரமர்த்தினி காயத்திரியைச் சொல்லி வணங்குவோம் ஞானத்தையும், வெற்றிகளையும் பெறுவோம்.

ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி வழிபாடு செய்து, நல்வாழ்வு வாழப் பிரார்த்திப்போம்.

ஓம் சக்தி.. பராசக்தி…

2022901080340279.jpg