தொடர்கள்
கவர் ஸ்டோரி
சாதனைப்பெண்கள் - மரு.பிரதீபா -அகில இந்திய சாதனையாளர் விருது- வேங்கடகிருஷ்ணன்

20220830000706639.jpg

" காலையும் கையையும் வெச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டியா?" என்று பசங்களை திட்டும் பெற்றோர் உண்டு. ஆனால் , அதே காலும் , கையும் வேலை செய்யாமல் சும்மா இருந்தால் , அது மிகப் பெரிய வேதனை. அந்த வேதனையை சரி செய்யும் மருத்துவத்தில் சாதனை படைத்திருக்கிறார் மருத்துவர். பிரதீபா.

அவர்களின் வேளச்சேரி மருத்துவமனையில் விகடகவி வாசகர்களுக்காக சந்தித்தேன். அழகான நேர்த்தியான மருத்துவமனை, உள்ளே நுழைந்ததுமே நம்மை வரவேற்கும் அன்பான செவிலியர்கள். புன்னகையுடன் நம்மை வரவேற்றார் பிரதீபா.

20220830000816463.jpg

விருதுக்கு வாழ்த்தினைச் சொல்லி அவரிடம் கேள்விகள் கேட்கத் துவங்கினோம். அவர் சொன்ன பதில்களில் இருந்து நாம் தெரிந்து கொண்டது, அவரை இந்த துறைக்கு இழுத்து வந்தது அவரது தந்தை தான்.

பயோ மெக்கானிக்ஸ் பட்டம் பெற்றவரை ஆர்த்தோ மருத்துவராக்கி அழகு பார்க்க நினைத்திருக்கிறார். அப்பாவின் ஆசையை அசாத்திய துணிச்சலுடன் நிறைவேற்றி இருக்கிறார்.

இந்த விருது அகில இந்திய அளவில் வழங்கப்பட்டுள்ள விருது. இதற்கு முழுவதும் தகுதியானவர்தான் என்பது அவரோடு பேசும்போதே நமக்குத் புரிந்தது.
ஒவ்வொரு நோயாளியும் அவருடைய நண்பர்களே, அப்படிதான் அவர் நடந்து கொள்கிறார். வரும் ஒவ்வொருவரும் இவரையே தேடுகிறார்கள். சிரித்த முகத்தோடு அவர்களை அணுகி மருத்துவம் செய்கிறார். முன்னாள் கவர்னர் பி.சி. அலெக்ஸ்சாந்தரோடு பழகி மருத்துவம் செய்த அனுபவத்தை அவர் விவரித்த போது, வியக்காமல் இருக்கமுடியவில்லை. அவரிடமிருந்து தான் நேரம் தவறாமையை நான் கற்றுக்கொண்டேன் என்று அவர் சொன்னார்.

20220830000914203.jpg

தனது அம்மா, மாமியார் எப்படி தனக்கு இத்துறையில் நிலை நிறுத்திக்கொள்ள உதவினார்கள் என்று சொன்னபோது அந்த இரண்டு பெண் தெய்வங்களையும் வணங்கத் தோன்றியது.

தனது ஆசான், தொழில் சொல்லித் தந்தவரைப்பற்றி அவர் சொல்லும்போது , அவரின் குருபக்தி நம்மை ஆச்சரியப்படுத்தியது. பழையதை மறக்காத குணம் இன்றைய உலகில் அனைவரும் கைக்கொள்ள வேண்டிய ஒன்று.

நமது வாசகர்களுக்காக சில ஆரோக்கிய குறிப்புகளையும் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டார். மேலும் கிளைகளை துவங்கி, இன்னும் பலருக்கும் இந்த சேவைகள் கிடைக்கவேண்டும் என்பதே தனது கனவு என்று சொன்னபோது அவரின் உறுதியையும், சாதிக்கத் துடிக்கும் அவரின் ஊக்கத்தையும் பாராட்டி அவருடைய கனவு விரைவில் நிறைவேற விகடகவி சார்பாக வாழ்த்தி விடை பெற்றோம்.

மருத்துவர் ப்ரதீபாவுடன் நமது சந்திப்பின் காணொளி ...