தொடர்கள்
அனுபவம்
திறக்கப்பட்ட  சன்னல்கள் - மரியா சிவானந்தம்

20220830172208501.jpg

பளபளக்கும் வெயில் நேரத்தில் அந்த வீட்டின் பின்கதவு திறக்கப் படுகிறது . மரங்கள் அடர்ந்த புழக்கடைக்கு அவ்வீட்டின் பெண்மணி வருகிறார். கதவு திறக்கும் சப்தம் கேட்டு பக்கத்து வீட்டின் பின் கதவும் திறக்கப்பட, இரு பெண்மணிகளும் ஆவலுடன் ஒருவரை ஒருவர் பார்த்து உசாவிக் கொள்கிறார்கள் .

"என்ன கமலாக்கா, வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சதா , இன்று என்ன சமையல் ? "

"எங்கே இவ்வளவு சீக்கிரம் முடியுது விமலாக்கா ?" என்று அலுத்துக் கொள்ளும் கமலாக்கா "இன்னிக்கு முருங்கைக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு காரக்கறி, புடலங்காய் கூட்டு செஞ்சு தக்காளி ரசம் வச்சேன்" என்று தன் வீட்டு அன்றைய சமையலை விலாவரியாய் விவரிப்பார், சற்றே பெருமை பூக்க .

இம்மாதிரி அன்றடம் நிகழும் காட்சிகள் இன்று இல்லவே இல்லை. பூட்டிய கேட்டும் , இரட்டைத் தாழிட்ட முன் , பின் கதவுகளும் இன்று அக்கம் பக்கத்து வீட்டவரிடம் இருந்து நம்மைப் பிரித்து வைத்துள்ளன. இன்று பக்கத்து வீட்டில் வசிப்பவரைப் பார்த்து பேச நேரமில்லை என்பது ஒரு புறம் இருக்க, பார்க்கும் நேரத்திலும் ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொள்ள நாம் தயாரில்லை ..

ஆனால், இன்றைய 'கமலாக்காக்கள்' இப்போது கதவுகளைப் பூட்டி விட்டாலும், சன்னல்களை திறந்து வைத்து விட்டனர். ஆமாம், இணையம் என்னும் சன்னலைத் திறந்து கமலாக்கா தன் வீட்டு "இன்றைய சமையலை" வீடியோ பதிவாக்கி யூடியூபில் உலவ விட்டு, அவ்வப்போது வரும் லைக்குகளை கவனிக்க ஆரம்பிக்கிறார். அதிக லைக்குகள் வர வர கமலாக்கா பிரபலம் ஆவதும், தனி வருவாயாக அவருக்கு காசு வருவதும் உப கதை .

2005 ஆம் ஆண்டில் பேபால் (PayPal) என்னும் நிறுவனத்தில் பணி புரிந்த மூன்று ஊழியர்களால் தொடங்கப்பட்ட யூடியூப் இன்று பல லட்சம் பேர் பங்கு பெறும் இணைய தளமாகி விட்டது. கதைகளைப் படிப்பதை விட காட்சிகளைப் பார்க்கவே மனித மனம் விரும்புகிறது என்னும் எளிய உளவியலின் அடிப்படையில் அமைந்தது யூடியூப். இந்தியாவில் இணையம் துவக்கப்பட்ட காலங்களில் யாஹூ தளமே அதிகம் பார்க்கப்படும் இணையதளமாக முன்னணியில் இருந்தது. இப்போது முதல் இடத்தில் இருப்பது கூகுள் என்றால், அதிரடியாக அடுத்த இடத்தைப் பிடித்திருப்பது யூடியூப் தளம் தான்

சினிமா, திரைப்பாடல்கள், நாடகம், இலக்கிய நிகழ்ச்சிகள், ஆன்மிக நிகழ்வுகள், சமையல், சின்னத்திரை என்று எல்லாமே யூடியூபில் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு மிகப்பெரிய தகவல் களஞ்சியம் யூடியூப். தவிர, நல்ல வருவாயை ஈட்டித் தரும் இடமாக இது அமைந்து விட்டது. முதலில் வெறுமே பார்வையாளர்களாக மட்டுமே இங்கு சென்றவர்கள் தனி சேனலை தொடங்கி புகழும், பணமும் பெற்று வெற்றியாளர்களாக மாறியவர்கள் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. கதை, கட்டுரை, கவிதை என்று BLOG எழுதியவர்கள் கூட இன்று தன் வீட்டுக் குழந்தை ஆடுவதை, பாடுவதை விடீயோவாக எடுத்து யூடியூபில் ஏற்றி VLOG படைக்கிறார்.

ஒரு நல்ல கேமிரா, கொஞ்சம் எடிட்டிங் தெரிந்த நண்பர் இருந்தால் போதும், ஒரு சேனலை துவக்கி விடலாம். கிருத்திகா என்ற இளம் பெண் tastee with Kiruththika என்ற சேனல் வைத்துள்ளார். ஒவ்வொரு ஓட்டலாக போய் , அங்கு சாப்பிட்டு, அந்த ஓட்டலில் விற்பனையாகும் உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்துகிறார். ஓட்டலுக்கு விளம்பரமும் ஆயிற்று, இவர்களுக்கு வருமானமும் ஆயிற்று . உள்ளூர் மட்டுமல்ல, மலேசியா வரை சென்று வித விதமான உலக உணவுகளை நமக்கு விவரிக்கிறார். இவரைப் போல பலரும் இதை முழு நேர தொழிலாக வைத்துள்ளனர்.

சமீபத்தில் இர்பான் என்பவரும் இவரைப் போலவே ஒரு கடையை அறிமுகப்படுத்தினார். மறுநாள் அங்கு சென்ற சுகாதாரத் துறையினர் அக்கடையில் கெட்டுப் போன இறைச்சியை கைப்பற்றினர், இர்பானின் விடியோக்கள் கொஞ்ச காலம் தடை செய்யப்பட்டன. இந்த சம்பவம் இந்த வகை விடியோக்களின் உண்மைத் தன்மையை சந்தேகப்பட வைத்தன .

நிற்க , 'சமைத்துப் பார்' டைப் விடீயோக்கள் ஏகத்துக்கும் பெருகி விட்டன. Village Cooking Channel, Village food factory போன்ற எளிய மக்கள் நடத்தும் சேனல்கள் அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கின. கமலாக்கா போல பலர் தனி சேனல்கள் துவக்கி வீட்டில் செய்யும் சிம்பிள் சமையலை விடியோவாக்கி லைக்குகளை அள்ளுகிறார்கள். தவிர பயண வீடியோ, ஆன்மிகத்தலங்கள் சுற்றுலா, கிராமிய கோவில்கள், வழிபாடுகள், பட்டிமன்றங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், உணவுண்ணும் சவால் (food challenge), கவிதை முதல் கணினி வரை கற்றுத் தரும் சானல்கள் என்று வித விதமாக சானல்கள் இருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் அதிகமாக கவனிக்கப்பட்டும், அதிகமாக வெறுப்பையும் சம்பாதித்த டிக்-டாக் விடியோக்கள் ஒரு நல்ல நாளில் தடை செய்யப்பட்டு முடிவுக்கு வந்தன. உடனே புற்றீசல் போல கிளம்பின இன்ஸ்டா ரீல்ஸ் எனப்படும் சிறிய காணொளிகள். 30 நொடிகளே ஓடும் இந்த விடீயோக்களை எடுக்க நல்ல வெளிச்சமான இடமும், கைபேசியும், கைபேசி தாங்கியும் (Mobile stand) போதும். வீட்டின் அன்றாட நிகழ்வுகள், குழந்தைகளின் மழலைக் குறும்பு, பாடல்களுக்கு நடன அசைவுகள் , டிக்-டாக் போல உரையாடல்களுக்கு வாயசைப்பு என்று அதிக சிரமம் இல்லாத, விடீயோக்கள் வெளி வந்தன. பிரபலங்கள் முதல் சாதாரணர் வரை இந்த விடீயோக்களில் தோன்றுவதை பெருமையாகவே கருதி வருகின்றனர் .

மக்களிடையே இன்ஸ்டா காணொளிகளுக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு விழித்துக் கொண்ட யூடியூப் நிறுவனம், யூடியூப் ஷார்ட்ஸ் (youtube shorts) என்னும் குறும்படங்களை அறிமுகப்படுத்தியது. ஒரு நிமிடம் வரை ஓடும் விடீயோக்கள் வெளி வர தொடங்கின. இன்ஸ்டா ரீல்ஸ் போல இல்லாமல், இந்த குறும் படங்களுக்கு கொஞ்சம் மெனக்கிட வேண்டும். பொருளும், உள்ளடக்கமும் (Theme and Content) தெளிவாக இருக்க வேண்டும் .

இந்த யூடியூப் காணொளிகளில் பேசப்படாத பொருள் இல்லை, Anything and everything under the Sun என்றே சொல்லலாம். ரோட்டோர பரோட்டா கடை முதல், ஐந்து நட்சத்திர ஓட்டல் பப்பே வரை, ஹோம் டூர் முதல் வேர்ல்டு டூர் வரை , இயற்கை மருத்துவம் முதல் இதய நோய் சிகிச்சை வரை, சந்துமுனை கடை முதல் சந்திர மண்டலம் வரை, மலிவு விலை சேலைக்கடை முதல் மலிவான பயில்வான் ரங்கநாதன் பேட்டி வரை தினமும் காணொலிகள் கொட்டிக் கொண்டு இருக்கின்றன.

ட்ரெண்டிங் செய்திகளை ஒட்டி விறுவிறுப்பான குறும் படங்கள், நேர்க்காணல்கள் சுடச்சுட தயாராகி விடும், அது பொன்னியின் செல்வன் ஆனாலும் சரி, பக்கிங்காம் அரண்மனை அரசியின் மறைவானாலும் சரி. எப்போதும் விழிப்புடன் இயங்கி கொண்டே இருக்கும் படைப்பாளிகள் இங்கு நூறாயிரம் பேர் இருக்கிறார்கள்.

சில மலிவான, தனிமனித வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்து லைக்குகளுக்காக தயாரிக்கப்படும் காணொலிகள் தரம் குறைந்தவையாக இருக்கின்றன, சில பிராங்க் காணொலிகள் (Prank videos) இதில் அடங்கும். மனித நேயம், சக மனிதரை மரியாதையுடன் நடத்துதல், சமூக விழிப்புணர்வு, இயற்கையைப் பாதுகாத்தல் , குடும்ப உறவுகளைப் போற்றுதல், நேர்மை உயர்வைத் தரும் என்ற பொருள்களை உள்ளடக்கமாக கொண்ட காணொளிகள் உரத்த சிந்தனைகளை உள்ளடக்கியது என்றால் குழந்தைகளின் மழலைக் குறும்புகளை படம்பிடிக்கும் காணொளிகளும், கோவில் தேவாலய வழிபாடு காணொளிகளும் அழகியலின் உச்சம் .

ஆயிரம் சன்னல்கள் திறக்க, நமது அலைபேசிகள் நான்கு பக்கமும் சுழன்று சுழன்று பல்லாயிரம் பொழுது போக்குகளை நமக்கு அள்ளித் தரும் காணொலி யுகம் இது. சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை காணொலிகளில் கட்டுண்டு இருப்பதைக் காண்கிறோம்

நமது கண்ணையும், மனதையும், நேரத்தையும் கெடுக்காத வகையில் அவற்றை அனுபவிப்போம். தேவையற்ற எதையும் மௌனமாக கடப்போம் .

அதற்கான விசை நம் கைகளில் தான் இருக்கிறது …!