நவராத்ரி என்றதும் பளிச்சுனு நினைவுக்கு வருபவள் பராசக்தி, பார்வதிதேவி. அவளே ஸ்ரீலலிதாதேவியின் ஸ்வரூபம். இவரைத்தான் உலகம் ஸ்ரீலலிதா மஹா திரிபுரசுந்தரி என்றும் போற்றி பாடுகின்றது.
சுருக்கங்கூறின், இந்த நவராத்ரி, பெண் சக்திகளின் கொண்டாட்டமே. மும்மூர்த்தியரின் சக்திகள் இந்த ஒன்பது நாட்களிலும் மும்மூன்று நாளாக முதலில் சரஸ்வதியாக, பின்னர் மஹாலக்ஷ்மியாக, இறுதியில் பார்வதியாக கொண்டாடப்படுகின்றனர். சக்தி ஒன்று தான் ரூபங்கள் அனேகம்.
இங்கு நாம் பார்க்க இருப்பதுஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம், அதாவது, உரை எழுதிய ஸ்ரீபாஸ்கரராயரைப் பற்றி தான்.
கி.மு (509-477) காலத்தில், அதாவது 2,531 ஆண்டுகளுக்கு முன் பிறந்து 32 வருஷங்கள் இப் புவியில் பாதயாதிரையாய் நடமாடிய ஸ்ரீஆதி சங்கரர் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு உரையெழுதும் முகமாக ஸஹஸ்ரனாம புத்தகத்தை எடுத்து வர பணிக்க இரண்டு மூன்று முறை கூறியும் ஒரு சிறு கன்னியா குழந்தை விஷ்ணு ஸஹஸ்ரநாமம் புத்தகத்தை எடுத்து வந்ததாம். இதுவும் தேவியின் சித்தம் போலும் என்று அதற்கு உரை எழுதினாராம். இதன் தொடர்பாகவே தனது ஸஹஸ்ரனாமத்திற்கு ஒரு சிறந்த வியாக்கியாயனம் வேண்டுமென்றே தேவியின் சங்கல்பத்தினால் ஸ்ரீபாஸ்கரராயர் தோன்றி இந்த சிறந்த பாஷ்யத்தை மிகச் சிறந்த முறையில் எழுதும்படி செய்தாளோ? இந்த பாஷ்யத்தை எழுதும் சௌபாக்கியம் தனக்கு கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் தன்னுடைய உரை நூலுக்கு சௌபாக்கிய பாஸ்கரம் என்றே பெயரிட்டார். இந்த நூலை திருக்கோடிக்காவல் என்ற த்ரிபுரசுந்தரி அம்பாளின் ஸன்னிதியில் எழுதி அரங்கேற்றியதாகவும் அக்கோயிலில்
குறிப்பு உள்ளது. இந்த ஆல யம் பாஸ்கரராஜபுரம் மற்றும் மஹாராஜபுரத்திலிருந்து ஒரு ஃபர்லாங்க் தூரத்தில் உள்ளது.
அவருக்குப் பிற்காலத்தில் எழுதப்பட்ட உரைகளில் தலை சிறந்ததாக விளங்குவது என்று அனைத்து பண்டித பெருமக்களாலும் ஏகோபித்த முடிவு பெற்றது ஸ்ரீபாஸ்கரராயர் எழுதிய உரைதான். அதில் ஐய்யமேதுமில்லை. இவரே ஸ்ரீபாஸ்காரானந்த நாதர் என்றும் அறியப்படுகிறார்.
இவர் வாழ்ந்த காலம் கலி ஆண்டு (4790 – 48830, அதாவது கி.பி. (1690-1785).
பாஸ்கர ராயர் பிறந்தது மஹாராஷ்டிராவில். தஞ்சை அரசரின் நன்மதிப்பை பெற்றுக் காவிரிக்கரையில் குடியேறித் தனது குருனாதராகிய கங்காதர வாஜபேயீ வாஸம் செய்த திருவாங்காட்டுக்குச் சமீபத்தில் 95 வயது வரை வாழ்ந்தார். அவர் வசித்த இடமே இன்று பாஸ்கரராஜபுரம் என்று அவரின் பெயராலேயே வழங்கப்படுகிறது.
ஸ்ரீவேத வ்யாஸர் ஸ்ரீமத் பகவத் கீதையை மஹாபாரதத்தின் நடு நாயகமாய் அமைத்தது போல் மந்த்ர ஸாஸ்த்திரத்தின் ஸாரமான ஸ்ரீலலிதா ஸஹஸ்ரனாமத்தை ப்ரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்யாகியானத்தில் நடு நாயகமாய் பொக்கிஷத்தில் வைக்கப்பட்ட நிதி போல் வைத்துள்ளார்.
ப்ரம்ம வித்யையும் ஸ்ரீவித்யையும் ஒன்றே. ப்ரம்ம வித்யை என அறியப்படும் வேதாந்தம் கூறும் உண்மைகளை எளிதில் அனுபவத்திற்குக் கொண்டு வருவதற்கு வழி காட்டுவது ஸ்ரீவித்யை.
மந்திரமும், யந்திரமும், தந்திரமும் ஸ்ரீவித்யையிலடக்கம். ஸர்வ மந்த்ரஸ்வ்ரூபிணி ஸர்வயந்த்ராத்மிகா ஸர்வ தந்த்ரரூபா என்று அந்த ஸஹஸ்ரநாமத்திலேயே 204 வது நாமாவளியாகக் காணலாம்.
மந்திரத்திலுள்ள கருத்தை உருவகப்படுத்திக் காட்டுவது யந்திரம். அதில் சித்தத்தை நிறுத்துவதற்காகப் பயன்படும் பாஹிய பூஜையும் மானசீக பூஜையுமஷ்டாங்க யோகமும் மற்ற சாதனங்களும் தந்திரத்திலடங்கும்.
ஸ்ரீவித்யையின் முக்கியமான மந்திரம் பஞ்சதசாக்ஷரி, முக்கியமான யந்திரம் ஸ்ரீசக்ரம், முக்கியமான தந்திரம் ஐக்கியானுசந்தானம்.
மந்திர சித்திக்கு யந்திரமும் தந்திரமும் பக்க துணைகள். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் தனது சரீரத்தையே யந்திரமாகக் கருதினார். அவர் அன்னை பராசக்தியிடம், “அமீ யந்த்ர, துமீ யந்த்ரீ, அதாவது நான் யந்திரம், நீ யந்த்ரீ”, எனக் கூறுவாராம்.
இமயமலை போன்ற சனாதன தர்மத்தினின்று உதித்து பல திசைகளில் பாய்ந்தோடும் நதிகள் போன்ற மதங்களின் சங்கமஸ்த்தானமாகியா சமுத்திரம் ஸ்ரீவித்யை. காணபத்யம், ஸௌரம், பைஷ்ணவம், சைவம் என்ற எல்லா உபாஸனா மார்கங்களும் இங்கு சமரசமடைகின்றன. உள்ளே சாக்தன், வெளியே சைவன். வியவகாரத்தில் வைஷ்ணவன் என்றபடி ஒரே சாதகனிம் கூட முரண்பாடின்றி வெவ்வீறு மார்கங்களைச் சமரஸ்ப்படுத்திக் கைய்யாளலாம். இந்தச் சமரசம் அடங்கியிருப்பதை காயத்ரியை வழிபடுவோர் அறிவர். காயத்ரியும் பஞ்சதசாக்ஷரியும் ஒன்றே என்பதை தனது “வரிவஸ்யாரஹஸ்யம்” என்ற படைப்பில் தெளிவுற விளக்கியிருக்கிறார்.
அர்ஜுனன், ஸ்ரீகிருஷ்ணனுடைய நண்பன், சிவ பக்தன், தேவி உபாசகன். இதனால் சமய சமரசம் சுட்டிக் காட்டப்படுகிறது.
ஸ்ரீ ஆதி சங்கரர் காட்டிய சாதன மார்கத்தில் பஞ்சாயதன பூஜையும், அவரேர்படுத்திய ஸ்ரிங்கேரி, காஞ்சி பீடங்களில் தேவி உபாசனையும், அவரெழுதிய நூல்களில் பிரபஞ்சசாரம், சௌந்தர்யலஹிரி, த்ரிசதீ பாஷ்யம் முதலியவையும் தேவி புஜங்கம் போன்ற ஸ்தோத்திரங்களும் இச்சமரஸத்தையே நிலை நாட்டுகின்றன.
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தை இன்ட அடிப்படையான ஸமரஸ பாவனையுடன் அணுகி ஒழுகுபவற்கு நிர்குணமும், ஸகுணமும், கருமமும். பக்தியும், யோகமும், ஞானமும், வாமாசாரமும், தக்ஷிணாசாரமும், கோரமும், சாந்தமும், இல்லற துறவறமும், எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும் எல்லாமாயிருக்கும் அவளை அடையும் மார்கங்களாகவும் காட்சியளிக்கும். எனில், அவளே ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன். எனில், அவளே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், ஆட்கொள்ளல் எனும் ஐந்தொழிகளையும் செய்கிறாள். எனில், இவளை வழிபடுவதற்கு எல்ல வர்ணத்தாற்கும் ஆடவ்ர்க்கும், பெண்டிர்க்கும் சம உரிமையுண்டு. இது வித்யைகளுக்கு அரசு, ரஹஸ்யங்களில் சிறந்தது, உத்தமமானது, நேரில் கண்டனுபவிக்கக்கூடியது, தர்மத்தினின்று பிறழாதது, கைய்யாள்வ(அனுஷ்டிப்ப)தற்கு மிக எளியது, என்றும் அழியாதது, என்று ஸ்ரீமத் பகவத் கீதை கூறுகிறது.
அவளின் பராக்கிரமத்தைக் கொண்டாடும் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமதிற்கு உரை செய்த ஸ்ரீ பாஸ்கர ராயர் வாழ்ந்த பாஸ்கர ராஜபுரம், திருக்கொடிக்காவல், மஹாராஜபுரம், திருவாலங்காடு என்ற இடங்களுக்கு இடையே அமைந்திருக்கிறது.
இளம் வயதிலேயே 18 வித்யைகளையும் கற்றார். இவரே ஸ்ரீபாஸ்கரராய ஆச்சார்யா, ஸ்ரீபாஸ்கரராய தீக்ஷிதர், ஸ்ரீ பாஸ்கரராய மஹி என்றும் அற்யப்படுகிறார். ஸ்ரீவித்ய மந்த்ரங்களை உபதேசம் பெற்று கிடைத்தற்கரிய பூர்ணாபிஷேக தீக்ஷை பெற்றார். அஷ்டாதஸ வித்யைகளக் கற்றதால் பண்டிதர் ஆனார். ஹோமம் யாகம், அக்னிஹோத்ரம் செய்ததால் யஜ்வா என்றும், தீக்ஷிதர் என்றும் அழைக்கப்பட்டார். பல் வேறு பண்டிதர்களை தர்க்க ஸாஸ்த்திரத்தில் வென்றதால் மகி எண்டும் போற்றப்பட்டார். நாற்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களை இயற்றியதால் பாரதி என்றும் அழைக்கப்பட்டார்.
பல திக்விஜய யாத்திரைகளை மேற்கொண்டு, பல ஆலயங்களை நிர்மாணித்து சிறந்த சிஷ்யர்களை உருவாக்கி செயற்கரிய செயல்களை செய்து அதிசயமான அற்புதங்களை நிகழ்த்தி, ஆச்சார்யார் என்றும் போற்றப்பட்டார்.
இவரெழுதிய சௌபாக்ய பாஸ்கரம் என்பதுதான் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்திற்கான உரைநூலாகும்.
எந்த நூலுக்கும், அதுவும் இப்படிப்பட்ட உயர்ந்த ஸ்ரீலலிதா ஸஹஸ்ரனஹாமத்திற்கு அர்த்த்ம் எழுதுவது சாமான்ய காரியமில்லை. அவரே தனது வரிவஸ்யாரஹஸ்யம் என்ற நூலில் 15 வகையான அர்த்தங்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
அவைகளாவன,
அர்த்தம்,
பாவார்த்தம்,
ஸம்ப்ரதாய அர்த்தம்,
நிகர்ப்பார்த்தம்,
கௌளிகார்த்தம்,
ரஹஸ்யார்த்தம்,
மஹாதத்வார்த்தம்,
நாமார்த்தம்,
சப்தரூபார்த்தம்,
நாம ஏகதேச அர்த்தம்,
சாக்த்த அர்த்தம்,
ஸமரச அர்த்தம்,
ஸமஸ்த்தார்த்தம்,
ஸகுணார்த்தம்,
மஹாவாக்யார்த்தம்,
இதற்கு மேலும், மனுஷ்ய சக்திகளுக்கு அப்பாற்பட்டு தியான, சமாதி நிலைகளில் இருக்கும்போது தெய்வீக அருளால்(ப்ரேரணை) உதிக்கும்(ஸ்புரிக்கும்) அதி ரஹஸ்யமான அர்த்தமும் உண்டு.
இதனாலேயே, ஸ்ரீபாஸ்கர ராயர், எந்த ஒரு பாராயணத்தையும் நூலையும், அர்த்தம் தெரிந்துகொண்டு படிப்பது சாலச் சிறந்தது”, என்கிறார்.
கம்பீர ராயர்-கோனமம்பா தம்பதியர்க்கு இரண்டாவது மகனாக பாகா நகர் (தற்போதைய ஹைதராபாத்)உதித்தவர் தான் நமது ராயர். தனது இளம் பிராயத்திலேயே கல்வி கேள்வி ஞானங்களை தனது தந்தையிடமே கற்றுத் தேர்ந்தவர். பல பண்டிதர்களிடம் பல தீக்ஷைகளைப் பெற்றார்.
அதர்வண அத்யயனம் மறைந்து வருவதால் அதை மீட்கும் பொருட்டு தானே அடை அத்யயனம் செய்து தனது சிஷ்யர்களுக்கும் போதித்தார். சமீபத்தில், இந்த நலிந்து வரும் அதர்வண அத்யயனத்தை வளர்ப்பதற்காக மஹா பெரியவா, குஜராதிலிருக்கும், அங்கிருக்கு ஒரே வேதாத்யாயியிடம்(செயல்படுத்தும் ஆசிரியரிடம்) கற்று வர ஒரு கிரஹஸ்த்தரை அனுப்பினாராம்.
தனது மனைவி ஆனந்தீக்கு தீக்ஷை செய்வித்து பத்மாவதியம்பா என்ற தீக்ஷா நாமத்தை சூட்டினார். குஜராத்தில் வாதத்தில் வென்றமையால் அந்த தோற்றுப்போன சன்னியாஸியின் உறவு மகளான பார்வதி என்ற பெண்ணை மணந்தார்.
இவரிடம் அறிவுமுறையில் விரோதம் கொண்ட பல பண்டிதர்கள் இவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தருணம் நோக்கியிருப்பதை ராயர் அறிந்தார். அவர் காசியில் தான் நடத்தும் யாகத்திற்கு வருமாறு அந்த பண்டிதர்களை அழைத்தார். வாதத்திற்கும் வழி செய்தார். கேட்ட வினாக்களுக்கு தக்க பதிலும் தந்தார்.
பின்னர், அவர்கள் ராயரை மஹா சதுஷ்ஷஷ்ட்டி கோடி யோகினி பரிசேவிதா என்ற நாமத்தில் கூறியிருக்கும் 64 கோடி யோகினி தேவதைகளின் பெயர்கள், உத்பத்தி, சரித்திரம் முதலியவற்றை கேட்க, உடனேயே ராயர், தயங்காது, “கூறுகிறேன், எழுதிக்கொள்ளுங்கள் என்று மடை திறந்த வெள்ளம் போலே அந்த 64 கோடி யோகினி தேவதைகளைப்பற்றிக் கூறத்தொடங்கினார். அந்த வினவினவர்ளுக்கோ எழுத முடியாமல் கை சளைத்தனர். அங்கு வந்திருந்த ஸ்ரீ பரம ஹம்சர் குங்குமானந்தர் அந்த வினவினவர்ளிடம், “ இந்த மஹானை சாமன்யனாக நினையாதீர்கள். இவர் அம்பாளின் அருளைப் பெற்ற பெரிய உபாசகர். அம்பாளே அவரது தோளில் அமர்ந்து உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறாள். எனவே உங்களால் இவரை வெல்ல முடியாது என்று கூறி அபிஷேக தீர்த்தத்தை அவர்களது கணகளிள் தெளித்து பார்க்கச் சொன்னார். அவர்களும் அம்பாளை தரிசிக்கும் பாக்கியத்தப் பெற்றனர். ராயரிடம் மன்னிப்பும் கோரினர்.
இங்கு குறிப்பிட்ட ஸ்ரீ பரம ஹம்சர் குங்குமானந்தர் ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற்ற ஞானி. இவர் சரீரத்தின் மீது பூசப்படும் விபூதியெல்லாம் குங்குமமாகிப் விட்டதால் இவருக்கு அந்த பெயர் காரணப் பெயராகி விட்டது.
ஒரு முறை, இவரிடம் வந்து சத்ரபதி சிவாஜியின் சேனாநாயகனான தாணாஜி ஜாதவின் பிள்ளை சந்த்ரசேன ஜாதவ், குழந்தை வரம் வேண்ட, அவரும் ஜாதவுக்கு மகன் பிறப்பான் என்று வரம் தந்தார். அவனது மனைவியும் கருவுற்றாள். இதற்கிடையில், ராயரின் சிஷ்யர் நாராயண தேவர் என்பவர் இந்த சந்த்ரசேன ஜாதவின் நாட்டிற்கு விஜயம் செய்ய, அவரிடமும் தம்பதி சமேதராக நமஸ்கரித்து, தனது மனைவிக்கு என்ன குழந்தை பிறக்கும் எனக் கேட்க, அவரும் பெண் குழந்தை எனக் கூறிவிட்டார்.
திடுக்கிட்ட ஜாதவ் அவரிடம் முன்பு நடந்ததைக் கூற, கோபமுற்ற ராயரின் சீடர்,” என் குருவின் வார்த்தையை என்னிடமே சோதனை செய்து அபசாரம் செய்துவிட்டாயே. உனக்கு ஆணும் இல்லாது பெண்ணும் இல்லாது திருநங்கையே பிறக்கும் என்றும் சபித்து விட்டார். ஜாதவுக்கு திருநங்கையே பிறந்தது. இருந்தும் ராமச்சந்திர ஜாதவ் என்ற பெயர் அவனுக்கு இடப்பட்டது.
சில வருஷங்களுக்குப் பின் அந்நாட்டின் வழியே யாத்திரையாக வந்த ராயரிடம் நடந்ததைக் கூற, அவனை மன்னித்து, தன் வாக்கை மெய்ப்பிக்கும் பொருட்டு அங்கி அருகிலிருந்த கிருஷ்ணா நதிக்கரையில் முளிமடு என்ற இடத்தில் ஆசிரமமைத்து சூரியனைக் குறித்து த்ருசார்க்யப்ரதானம் என்ற உபாஸனையை ஆரம்பித்தார்.
தினமும் நதிக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பகலுக்குப்பின் ஆசிரமம் வந்தடைவர். சிஷ்யர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிருஷ்ணா நதியின் ஒரு கிளையை தனது ஆசிரமம் வழியாய் ஓடிட சூரியனிடம் வரமாய் பெற்றார் ராயர். முதலில் ராயருக்கும் சூரியனுக்கும் வாதம் ஏற்பட, சூரியனார், ராயரின் நல்லெண்ணம் மற்றும் செயலின் காரணமாய் அந்த வரத்தை வழங்கினான்.
உபாஸனை நல்ல படியாய் முடிய அந்த ராமச்சந்திர ஜாதவும் தன் ஆண்மைத் தனத்தை அடைந்தான். இதற்கு ஆதாரமாக இன்றும் முளிமடு என்ற ஊரில் கிருஷ்ணா நதி இப்போடு ஓடும் வழி முன்பு ஓடிய பாதை என்று இரு வழிகள் உள்ளனவாம்.
இந்த முறையில் சூரியனை வழ்படுவதை “த்ருசபாஸ்கரம்” என்று ஒரு நூலாகவும் இயற்றியுள்ளார்.
இவர் மாலை வேளைகளில் திண்ணையில் சுவற்றில் சாய்ந்துகொண்டு பாதங்களை தூணில் மேல் உயர்த்தி வைத்திருப்பது வழக்கம். இதனை தினமும் ராயரின் வீட்டு வழியாக திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி கோவிலுக்கு செல்லும் ஒரு சன்னியாசி பார்த்துவிட்டார். அந்த தெருவில் ராயரைத் தவிர அனைவரும் அந்த சன்னியாசிக்கு எழுந்து நின்று மரியாதை செய்வர்.
ஸன்னியாஸியின் மனதில் விரோதம் வளர்ந்தது.
ஒரு பிரதோஷ கால பூஜையில் இருவரும் எதிரும் புதிருமாக சந்த்தித்தனர். சன்னியாஸி ராயரை கூடியிருந்த ஜனங்களுக்கு முன் இழிவாக பேசினார்.
ராயர்,தான் இல்லற் தர்மப்படி அந்த சன்னியாஸியை மற்றவர்களைப்போல் வணங்கியிருந்தால் அவருடைய சிரம் வெடித்திருக்கும் என்றும், அவரைக் காப்பாற்றவே அவ்வாறு செய்யவில்லை”, என்றார்.
அதை நிரூபணம் செய்யவே, அந்த யதியின் தண்டம், கமண்டலம் இவற்றை ஓரிடத்தில் வைத்து அதற்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய அவகள் சுக்கு நூறாயின. சன்னியாஸி ராயரின் மகிமையை உணர்ந்தார். மன்னிப்பு கேட்டார்.
அன்றிலிருந்து, கிரஹஸ்த்த தர்மத்தின்படி, யதிகளுக்கு செய்ய வேண்டிய மரியாதை பிறழாமல் இருக்க சன்னியாஸி அவரது தெருவைக் கடக்கும் சமயம் வீட்டுக்குள் சென்றுவிடுவாராம். ஸ்ரீபாஸ்கர ராயருக்கு இத்தகைய மஹிமை ஏற்பட்டதன் காரணம் அவர் தினந்தோறும் செய்த மஹாஷோடாந்யாஸத்தினால். இந்த ந்யாஸத்தை விடாது செய்து வருபவர்கள் அர்த்தனாரீஸவர வடிவமாகிவிடுகிறார்கள் என்பது தான் சித்தாந்தம்.
42 நூல்களை இயற்றிஉள்ளார். பல தேசங்களில் பற்பல சிவ மற்றும் தேவி ஆலங்களை நிர்மாணித்து அதன் பூஜாக் கிரமங்களையும் தந்துள்ளார்.
இவரது காலத்திற்கு பிறகு, பாஸ்கரராஜபுரத்தில் அவரது முதல் மனைவி பத்மாவதி அம்பாளால் ஸ்ரீபாஸ்கரேசவரர் ஆலயம் ஒன்று காவேரிக் கரையில் நிர்மாணிக்கப்பட்டு இன்றும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.
இன்றும் இவரது மகள் வழி தலைமுறையினர் பாக்யாநகரில் வசித்து வருகின்றனராம்.
சொல்லுக்கடங்காதே பராசக்தி சூரத்தனங்களையெல்லாம் என்றான் மஹா கவி பாரதி. ஆக, கோரிய வரங்களைப் பெற அவளைச் சரணடைவோம்.
Leave a comment
Upload