தொடர்கள்
பொது
ஏழுமலையானுக்கு பட்டு - மாலா ஶ்ரீ

20220830220117531.jpg

திருமலை பிரமோற்சவத்தில் வழங்க

காஞ்சியில் தயாரான பெருமாளின் 427 முகங்களுடன் பட்டுச் சேலை!

காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் கோயில், தோப்பு தெருவை சேர்ந்த தம்பதி குமரவேலு-கலையரசி. இவர்களிடம் கடந்த 2 ஆண்டுகளாக சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர், திருமலையில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரமோற்சவத்தில் பெருமாளுக்கு சமர்ப்பிக்க பட்டுச்சேலை தயாரித்து வழங்க ஆர்டர் கொடுப்பது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் சென்னை வாடிக்கையாளர் இத்தம்பதியிடம் பட்டுச்சேலைக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, கடந்த 8 நாட்களாக 4 நெசவாளர்கள் துணையுடன் 192 மணி நேரத்தில் பெருமாளின் 427 பல்வேறு அழகிய முகங்களுடன், ஸ்ரீரங்கநாதர்-மகாலட்சுமியுடன் பாற்கடலில் இருக்கும் படத்தை இத்தம்பதி வடிவமைத்து உள்ளனர்.

இந்த பட்டுச்சேலை இருபத்தொன்றரை முழ நீளத்தில், ஒரு கிலோ 386 கிராம் எடையில் கொண்டது எனக் குறிப்பிடத்தக்கது. இந்த சேலையில் பார்டரில் 27 ஜோடி யானைகளும், முந்தானையில் ஆதிசேஷன்மீது சயன கோலத்தில் ஸ்ரீரங்கநாதரும், காலடியில் வீற்றிருக்கும் மகாலட்சுமியும், நாபியில் வளரும் தாமரைப் பூவில் பிரம்மாவும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் உற்சவர் உருவரும் பட்டு ஜரிகை இழைகளால் குமரவேலு-கலையரசி தம்பதி உருவாக்கியுள்ளனர்.

‘திருமலையில் நடைபெற்று வரும் புரட்டாசி மாத பிரமோற்சவத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் பெருமாளுக்கு சென்னை வாடிக்கையாளரால் சமர்ப்பிக்கப்படும்’ என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டுச் சேலை தயாரிக்க சில லட்சங்கள் செலவானதாகவும் கூறப்படுகிறது.

மாலாஸ்ரீ

2022901083413526.jpg