தன் தம்பியின் கையை பிடித்துக்கொண்டு வேகவேகமாக நடந்தாள் செல்வி.
"எங்கக்கா போறோம்?" என்று கேட்டுக்கொண்டே கூடவே ஓடிவந்தான் சேகர்.
" மேல் வீட்டுல புதுசா வந்துருக்காங்க இல்ல, அவங்க வீட்டுல பெருசா டிவி இருக்கு. ஏதோ படம் போட போறாங்களாம். உன்னையும் கூட்டிட்டு வர சொன்னாங்க."
சேகரின் வேகம் அதிகரித்தது.
"நம்மள உள்ள விடுவாங்களா அக்கா?"
"அவங்க தான்டா கூட்டிகிட்டே வர சொன்னங்க."
வீடு நெருங்கும்போது சடக்கென்று செல்வி நின்றாள். சேகரும் தடுமாறி கூடவே நின்றான்.
"என்ன அக்கா?"
" டேய், படம் முடியறவரை எதுவும் பேசக்கூடாது. அமைதியா என் கூடவே உக்காரணும்."
"சரி அக்கா" என்றான்.
செல்விக்கு ஒரு ஒன்பது வயது இருக்கும். சேகர் அவளுடன் நான்கு வயது சிறியவன். தனக்கு தம்பி பிறந்ததும் செல்வி சில பொறுப்புகளை தானே எடுத்துக்கொண்டாள். அதில் மிக முக்கிய பொறுப்பு தம்பியை பார்த்துக்கொள்வது.
செல்வியின் அம்மா வயல் வேலைக்கு செல்பவள். தந்தை என்ன செய்கிறார் என்பதே அவளுக்கு தெரியாது. காலையில் போய்விட்டு இரவு தான் திரும்புவார். அனாவசியமாக யாரிடமும் பேச மாட்டார். அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்கிறார்களா என்றே செல்விக்கு தெரியாது.
மேல் வீட்டிற்கு வந்ததும் வாசற்படியிலேயே சற்று தயங்கி நின்றனர். உள்ளே இன்னும் சில குழந்தைகள் தரையில் அமர்ந்திருந்தனர். செல்வியும் சென்று அவர்களுடன் அமர்ந்து கொண்டாள். சேகரை தன் அருகில் அமர்த்திக்கொண்டாள்.
"சேகரு, அக்காவ விட்டு எங்கேயும் போகக்கூடாது என்ன?"
" சரிக்கா."
இன்னும் சற்று அருகில் அமர்ந்து கொண்டான் சேகர்.
அக்கா அவனை எப்போவாவது இந்த வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவாள். அம்மா வேலை பார்க்கும் வீடு. வயலுக்கு போகும் முன் இந்த வீட்டிற்கு வந்து வேலையை முடித்து விட்டு செல்வாள். சேகருக்கு அந்த வீடு மிகவும் பிடிக்கும். அந்த வீட்டிற்குள் நுழையும் போதே ஏதோ ஒரு வாசனை வரும். நிறைய கண்ணாடி கதவுகள், அதற்குள் இருக்கும் விதவிதமான பொருட்கள், முக்கியமாக அந்த கார் பொம்மை. அக்காவின் அருகே அமர்ந்ததும் அவன் கண் அந்த கார் பொம்மையை தேடியது. மரத்தினால் ஆன பொம்மை அது. நான்கு சக்கரம், சற்று நீளமான முன் வடிவம் , நல்ல காபி போடி கலரும் , மஞ்சள் கலருமாய் இருக்கும். இரெண்டே இரண்டு இருக்கைகள். எப்பொழுது வந்தாலும் அதையே பார்த்துக்கொண்டிருப்பான். போன முறை வந்த போது கண்ணாடி அலமாரிக்குள் இருக்கும் பொம்மையை தடவிப் பார்த்தான். கண்ணாடியை தான் தடவ முடிந்தது. ஏதோ வேலை செய்து கொண்டிருந்த செல்வி வேகமாய் ஓட்டிவந்து,
"அதெல்லாம் தொடாத சேகரு." என்று சொல்லி வாசலில் கூட்டி கொண்டு போய் விட்டுவிட்டாள்.
ஏதோ படம் ஓட தொடங்கியது. சிங்கம், புலி, கரடி, குரங்கு, யானை என்று அத்தனை மிருகங்களும் இருந்தன. முதலில் ஆர்வமாக இருந்த சேகருக்கு போக போக கவனம் குறைந்தது,
"அக்கா, படம் எப்போ முடியும்?"
"இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்"
"வீட்டுக்கு போலாமா?"
" இப்போ முடியாது. படம் முடிஞ்சாதுக்கப்பறம் தான். பேசாம இரு."
கொஞ்சம் கோவமாக சொன்னாள்.
ஒன்றும் பேசாமல் அமர்ந்து கொண்டான். அவனுக்கு படம் புரிய வில்லை. கண்கள் தானாகவே கண்ணாடிக்குள் இருக்கும் காரை நோக்கி சென்றது. பாத்துக்கொண்டிருக்கும் போதே அந்த கார் அவனை நோக்கி திரும்பியது போல் இருந்தது. அதன் முன்னால் வரைந்திருக்கும் இரெண்டு கண்கள் சேகரை பார்த்து கண் சிமிட்டியது போல் இருந்தது. கண்களை நன்றாக கசக்கி கொண்டு பார்த்தான். கார் கண்கள் மறுபடியும் அவனை பார்த்து கண் சிமிட்டியது. மெதுவாக அக்காவிடமிருந்து தவழ்ந்து அலமாரியின் அருகில் வந்தான். எல்லோரும் படம் பார்ப்பதில் மும்முரமாய் இருந்ததனால் சேகரை யாரும் கவனிக்க வில்லை. மெதுவாக எழுந்து கண்ணாடியில் முகத்தை பதித்து காரை பார்த்தான். இவனை பார்த்ததும் கார் குதி குதி என்று குதித்தது.
ரகசியமான குரலில் அதனிடம், " நீ என்ன கூப்பிட்டாயா" என்று கேட்டான்.
கார் கொஞ்சம் கண்ணாடி கதவுக்கு அருகில் நெருங்கி வந்து பக்கவாட்டில் நின்று கொண்டு முன்னும் பின்னும் நகர்ந்தது. கதவு லேசாக ஓரத்தில் திறந்து கொண்டது. சேகர் அந்த ஓரத்தில் போய் நின்று கொண்டான். கார் தன் முகத்தை அவன் பக்கம் திருப்பி நின்று கொண்டது. அந்த இடுக்கில் தன் விரலை விட்டு காரை தொட்டான். வழு வழு என்றிருந்தது. ஒரு விரலாலேயே எட்டும் வரை தடவிப்பார்த்தான். காரின் ஒரு பக்கத்து முன்னும் பின்னும் உள்ள சக்கரத்திலிருந்து அதன் முகம், வாய் போல அமைந்த முன் பாகம், இருக்கைகள், மேற்பகுதி வரை தொட முடிந்தது. மறுபக்கமும் பின் பாதிக்கும் விரல் எட்ட வில்லை. மெதுவாக மறுபடியும் முன் பாகத்திற்கு வந்து கார் கண்களில் கை படாமல் விரலை வெளியே எடுத்தான்.
" நீ ரொம்ப அழகா இருக்க" என்றான் அந்த காரை பார்த்து.
" ம்ம். என்ன வெளிய கூட்டிட்டு போறயா? இந்த கண்ணாடிக்குள்ள இருக்க என்னக்கு பிடிக்கவே இல்ல."
"நீ எப்படி வருவ? மேல்வீட்டு அம்மாக்கு தெரியாம உன்ன நான் எப்படி கூட்டிட்டு போவேன்?"
" சரி தான் "
இரெண்டு பெரும் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார்கள்.
" நீ நினைச்சா நான் வருவேன்." என்றது கார் மறுபடியும் சேகரிடம்.
" எப்படி நினைக்கணும்?"
"அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ நினைச்சேன்னா நான் உன் கிட்ட வருவேன்." என்று திருப்பி சொல்லியது.
சேகர் பதில் சொல்லாமல் மறுபடியும் இடுக்கில் கை விட்டு காரை தொட்டான்.
"சேகரு சேகரு" என்று அக்கா குரல் கேட்டதும், அப்படியே தரையில் அமர்ந்து கொண்டான்.
"இங்க எப்படா வந்த? என்ன விட்டு போக கூடாதுன்னு சொன்னேன் இல்ல?"
தம்பியை கவனிக்க தவறிய குற்ற உணர்வுடன் கூறினாள்.
பதில் ஒன்றும் சொல்லாமல்,
"வீட்டுக்கு போகலாமா அக்கா?" என்று கேட்டான்.
சரி வா என்று அவன் கையை பிடிக்க போனாள்.
"ஐயோ அக்கா, இந்த விரலை மட்டும் தொட்டுறாத" என்றான்.
"ஏன்டா என்ன ஆச்சு? அடி பட்டுக்கிட்டயா?"
"இல்லக்கா. சும்மா" சிரித்துக்கொண்டே ஓட ஆரம்பித்தான்.
"சேகரு, சேகரு" என்று கத்திகொண்டே செல்வி பின்னால் ஓடினாள்.
வீடு வந்து சேரும் போது அப்பா வந்திருந்தார்.
செல்வி தான் பார்த்த படத்தை பற்றியே பேசிக்கொண்டிருந்தாள்.
" என்ன சேகரு, நீ ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறாயே? படுக்க பாய் விரித்துக் கொண்டே அம்மா அவனிடம் கேட்டாள்.
" அந்த காரு என்கூட பேசிச்சுமா".
"காரு பேசிச்சா? சரிதான். பேசாம படுத்து தூங்கு" சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.
கண்ணாடி அலமாரியும், காரும், அதன் கண்களும் மாறிமாறி மனதுக்குள் தோன்றிக்கொண்டிருந்தன. யோசித்துக்கொண்டே தூங்கிவிட்டான்.
காலையில் சேகர் எழுந்து வரும்போது அம்மா செல்வியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
" நேத்து பாத்தது ஏதாவது கார் படமாடி?"
" இல்லம்மா. மிருங்கங்க படம்."
" ராத்திரி எல்லாம் தூக்கத்துல சேகரு காரு காருன்னு உளறிக்கிட்டிருந்தான்."
" மேல்வீட்டுல ஒரு கார் உண்டும்மா. இவனுக்கு அது ரொம்ப பிடிக்கும். படம் முடியும் பொது அது பக்கத்துல தான் இருந்தான். அதுனால உளறிருப்பான்."
அவள் தந்தை பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார். போயிட்டு வரேன் என்று கூட சொல்ல மாட்டார். வெளியில் இறங்கி வீட்டை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு செல்வார் எப்பொழுதும். அம்மாவும்,
"நான் இன்னிக்கு சீக்கிரமா போகணும். கதவை சாத்திட்டு பள்ளிக்கூடம் போ" என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
சிறிது நேரம் கழித்து சேகரும் செல்வியும் பள்ளிக்கு கிளம்பினார்.
"அக்கா ஒரு தடவ மேல்வீட்டுக்கு போயிட்டு போலாமா?"
" இப்போ வா? எதுக்கு டா?
"சும்மா தான் அக்கா."
"சரி வா. அம்மாவும் இப்போ தான் போய் இருக்கும், கோவிலுக்கு வர சொல்லி பூசாரி சொன்னாரு. சொல்லிட்டு போய்டலாம். "
வேகமாக மேல்வீடு நோக்கி சென்றார்கள்.
வாசலில் அம்மா இல்லை. நீ இங்கயே இரு நான் அம்மா கிட்ட போய் பூசாரி வர சொன்னதை சொல்லிட்டு வரேன்." கூறிவிட்டு வீட்டிற்குள் ஓடினாள் செல்வி.
சேகர், எதையும் கவனிக்காமல் ஆர்வமாய் கண்ணாடி அலமாரி நோக்கி சென்றான். முன் தினம் பார்த்த இடத்தில் கார் இல்லை. கண்ணாடியில் முகத்தை ஓட்ட வைத்து அங்கும் இங்கும் தேடினான். கார் அங்கே இல்லை. அழுகை பொத்துக்கொண்டு வந்தது. வேறு எங்கேயாவது இருக்கா என்று அந்த அறை முழுவதும் தேடினான். எங்கேயும் இல்லை.
கண்களை துடைத்துக்கொண்டே வெளியில் வந்து வாசற்படியில் அமர்ந்தான்.
" நீ நினைச்சேன்னா நான் கிடப்பேன் ன்னு சொல்லிச்சே!"அவனை அறியாமலே விசும்பல் வந்தது.
" ஏன்டா வெளில வந்துட்ட?" செல்வி கேட்டுக்கொண்டே வெளியில் வந்தாள்.
" போலாம் கா." பையை மாட்டிக்கொண்டு கிளம்பினான்.
"சேகரு, இந்தா, மேல்வீட்டு அம்மா உனக்கு குடுத்தாங்களாம், நாங்கெல்லாம் படம் பாக்கும்போது நீ மட்டும் இந்த காரையே பாத்துக்கிட்டிருந்தயாம். புள்ளைக்கு கொடுன்னு உனக்கு கொடுத்துட்டாங்க!"
செல்வி பாதி பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் கண்கள் காரை கண்டுவிட்டன. வேகமாக கையில் வாங்கிக்கொண்டான்.
" சாயங்காலம் வந்து விளையாடலாம். இப்போ பள்ளிக்கூடம் போகலாம் வா." சொல்லிவிட்டு செல்வி நடக்க ஆரம்பித்தாள்.
காரை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தான் சேகர். . வலப்புறம் சக்கரம் அருகில் லேசாக உடைந்திருந்தது. முன் தினம் கண்ணாடி கதவை அது திறக்க முயன்ற போது உடைந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, அதை பத்திரமாக பைக்குள் வைத்தான்.
Leave a comment
Upload