தொடர்கள்
பொது
பயமா ? பலமா ?? - மரியா சிவானந்தம்

20221018094250271.jpg

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடமை

ஒப்பில்லாத சமுதாயம்

உலகுக்கு ஒரு புதுமை (பாரதியார் )

என்று பாரதி வாழ்த்திப் பாடிய "பாரதச் சமுதாயம்" நூறாண்டுகளில் பலுகிப் பெருகி விட்டது. அன்றைய கணக்கீட்டின்படி இந்தியாவின் மக்கள் தொகை முப்பது கோடிகள். இன்று 141 கோடி ஆகி விட்டது. ஆம் பாரத அன்னைக்கு 141 கோடி முகங்கள்.

இந்த நவம்பர் 14 ஆம் தேதி, உலக மக்கள் தொகை நாள் அன்று ஐ.நா சபை உலக மக்கள் தொகை 800 கோடி அதாவது 8 பில்லியனைத் தாண்டியதை அறிவித்தது. அதன்படி பார்த்தால் இன்று உலக மக்கள்தொகையில் 17.5% இந்தியரே. இந்நேரத்தில் மற்றும் ஒரு மிரள வைக்கும் உண்மையை ஐ.நா சபை அறிவித்துள்ளது . இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா சீனாவின் மக்கள் தொகையை முறியடித்து, அடுத்த ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகி விடும் என்னும் புள்ளி விவரத்தை முன் வைக்கிறது .இந்த அதிர வைக்கும் புள்ளி விவரங்கள் நிஜமாக கூடிய சாத்தியங்கள் நிறையவே இருக்கிறது .

மூன்று ஆண்டுகளுக்கு முன் உலகில் நுழைந்த கொரோனா 'மக்கள் தொகை குறைப்பை 'அமைதியாக நடத்திக் கொண்டிருந்தது. Nature's down sizing of population என்றே மக்கள் பயந்தனர். உலக அளவில் பல நாடுகளில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்தனர். அகில உலக அளவில் 66 லட்சத்துக்கு மேல் மக்கள் இறந்தனர் .இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாமல் அரசுகள் திணறின.

கொரோனாவுக்கு எதிரான கடுமையான யுத்தத்தில் இந்திய அரசும் எல்லா படைகளுடன், தளவாடங்களுடன் போரிட்டது. கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்தது. இருப்பினும் இந்தியாவில் 5.3 லட்சம் பேர் இறந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் மரண பயத்தையும், ஆறாத துயரத்தையும் தந்த பின்பே கொரோனா தன் வீரியத்தைக் குறைத்துக் கொண்டது .

கொரோனாவைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவே. இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் 69.8 வருடங்கள். இங்கு ஆயிரம் பேருக்கு 16.42 பிறப்பு விகிதம் என்றால் இறப்பு விகிதம் 9.42 ஆகும் . தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி பிறப்பு விகிதம் 2.2 புள்ளிகளில் இருந்து 2 புள்ளிகளாக குறைந்துள்ளது. இவை மக்கள் தொகை பெருக்கத்துக்கான காரணம் ஆகும்

20221018094345561.jpg

உலக மக்கள் தொகையில் இந்தியா முதலாவது என்று பெருமையை அடையும் காலம் நெருங்கி வருகையில் மக்கள் தொகைப் பெருக்கம் கொண்டு வரும் சவால்களைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. உலக அரங்கில் முதலாவது என்ற பெருமை ஒருபுறம் இருக்க , அந்த பெருமை கொண்டு வரும் சங்கடங்களை நாம் எதிர் கொள்ள வேண்டும்.

இப்போதே உணவு, வேலை வாய்ப்பு , கல்வி என்று அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசும் , மக்களும் போராட வேண்டிய நிலை இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் உருவாகும் கூடுதல் ஐந்துக் கோடி ஜனத்தொகைக்கு தகுந்த விதத்தில் உணவு உற்பத்தி பெறுக வேண்டும். உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றால் அது மக்களின் அடிப்படை தேவையையே பூர்த்தி செய்ய இயலாத நிலைமையில் கொண்டு வந்து விடும்.

உணவைப் போலவே கல்வி,மருத்துவமும் அடிப்படை தேவைகளே. கூடுதல் ஜனத்தொகைக்கு ஏற்ப கல்வி கூடங்கள், மருத்துவ நிலையங்கள் , கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். வானுயர்ந்த உயர் கல்வி நிலையங்கள் ,நவீன மருத்துவமனைகள் நகர்ப்புறங்களில் அமைப்பதைக் காட்டிலும் ,கிராமப் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த நாடெங்கும் உள்ள சிறிய மருத்துவமனைகளில் எல்லா வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் .

வேலையில்லா திண்டாட்டம் எப்போதுமே நம் நாட்டின் பெரிய சவாலாக இருந்து வருகிறது. வரும் ஆண்டுகளில் அது மேலும் அதிகரிக்குமென்று நிபுணர்கள் கணிக்கிறார்கள் .இந்த ஆண்டு இறுதிக்குள் நான்கு சதவீத வேலை வாய்ப்பின்மை 8 சதவீதமாக ஆகி விடும் என்று இந்திய பொருளாதார மேம்பாட்டு கழகம் அடித்துக் கூறுகிறது . வேலை வாய்ப்பில் காலி இடங்களுக்கு ,விண்ணப்பிப்பவர்கள் அதிகமாவார்கள் .

சென்னையில் துப்பரவு பணியாளர் வேலைக்கு முதுகலை பட்டதாரிகளும் ,பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்த கதைகளை நாம் மறக்கவில்லை . இந்நிலை வரும் ஆண்டுகளில் மேலும் மோசமாகும் .ஏற்கனவே அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து, அரசு வேலை வாய்ப்பு கதவுகளை அரசுகள் அடைத்து வருகின்றன .

தொழிற்துறை அபிவிருத்தி, புதிய தொழில்களை உருவாக்குதல் கிராமப்புற குறுந்தொழில்கள் வளர்த்தல் இவை பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன .புதிய வரிகளை தீட்டித் தீட்டி , மக்களை வரிக் குதிரைகளாக்குவதை நிறுத்தி விட்டு புதிய தொழில் வாய்ப்புகளை அரசுகள் சிந்திக்க வேண்டும். மத்திய ,மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த திட்டமிடலும் ,நிதி ஒதுக்கிடலும் தேவை.

இங்கு விலைவாசி ஏற்கனவே தலை சுற்ற வைக்கிறது . அதைக் கட்டுக்குள் கொண்டு வரா விட்டால், பெரும் பொருளாதார சீரழிவை எதிர் கொள்ள நேரிடும் . தனி மனித வருமானம் குறைகையில் அதன் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை நாம் அறிவோம்.

ஜனத்தொகைப் பெருக்கம் பல எதிர் மறை சவால்களை நம் முன் வைக்கிறது .நேர்மறை விளைவு ஒன்றுண்டு .அது உழைக்கும் கரங்களின் எண்ணிக்கை பெருக்கமே .மனித வளம் பெருகிய சூழலில் ,அதை சிறந்த முறையில் பயன்படுத்த தவறினால் , பேரிழப்பு நமக்குத்தான். முறையான திட்டமிடல் இல்லை என்றால் மக்களும், சமூகமும் பெரிய பாதிப்புக்குள்ளாவார்கள் .

பல ஆண்டுகளாக உலக அரங்கில் மக்கள் தொகை கணக்கில் முதலாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் சீனாவை பின்னுக்குத் தள்ளி விட்டு , இந்திய முதலிடத்தைப் பிடிக்க முந்துகிறது. இது பல்வேறு பயங்களை மக்கள் மனதில் விதைத்தாலும், முறையான திட்டமிடலும் தொலைநோக்கும் இருந்தால் நாட்டின் மேம்பாட்டுக்கு திட்டங்களைத் தீட்டி, செயல் படுத்த வாய்ப்பாக இதைக் கருத வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்தை பயத்துடன் அணுகுவதை விட்டு, அதை ஒரு பலமாக நினைக்க வேண்டும். இந்தியாவை வல்லரசாக்கும் கனவுகள் மெய்ப்பிக்கப்படும் .இந்திய ஜனத்தொகையில் 67% இளைஞர்களாக இருக்கையில், உழைக்க கூடிய பலம் மிக்க பெரும் படை இங்குள்ளது . உழைக்கும் மக்கள் பெருக வேண்டும் . அரசின் வாய்ப்புகளும் ,மக்களின் ஒத்துழைப்பும் வளர வேண்டும் .

அப்போது இந்தியா மக்கள் தொகையில் மட்டுமல்ல, எல்லா துறையிலும் முதன்மையான நாடாக உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் , மூவர்ண கொடி பட்டொளி வீசி பறக்க .