தொடர்கள்
Other
இளம்வீராங்கணை ப்ரியா மரணம்! – மாலா ஸ்ரீ

20221018155206438.jpg

சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு உடற்கல்வி படிப்பில் சேர்ந்த வியாசர்பாடி ப்ரியா கால்பந்தாட்டத்தில் தேசிய வீராங்கனையாக திகழ்ந்தார்.

சென்ற ஆண்டு நடந்த ஒரு கால்பந்தாட்ட போட்டியில் ப்ரியாவின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு அவ்வப்போது ப்ரியா மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துகொண்டு கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கு பெற்று வந்துள்ளார்.

சென்னையில் மூன்று மாதங்களுக்கு முன்பு கால்பந்து போட்டியில் பங்கேற்ற ப்ரியாவிற்கு காலில் வலி ஏற்பட்டதால் அக்டோபர் 28 தேதி பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ப்ரியாவிற்கு கால் பந்தாட்டத்தின்போது வலது காலில் தசைபிடிப்பு ஏற்பட்டதை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது அவருக்கு வலது காலில் சவ்வு விலகிவிட்டதாக டாக்டர்கள் பரிசோதனையில் கண்டறிந்தனர்.

ப்ரியாவிற்கு பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை முலம் வலது கால்சவ்வு சரிச்செய்யப்பட்டது, ப்ரியாவிற்கு காலில் தொடர்ந்து வலி அதிகரிக்கவே இங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.ப்ரியாவின் வலது கால் சவ்வில் இருந்து திசுக்கள் அறுவை சிகிச்சைக்கு பின் அழுகிய நிலையில் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

ப்ரியாவின் காலில் பிடித்துள்ள சீழ் மற்ற பாகங்களுக்கும் பரவி பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அறுவை சிகிச்சை செய்த காலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தீர்மானித்து அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு ப்ரியாவின் வலதுகால் முட்டி வரை அகற்றப்பட்டது.

ப்ரியாவின் உடல் நிலை அறுவை சிகிச்சைக்கு பின் மோசமாகி கடந்த 15 ந் தேதி இறந்துவிட்டார். ப்ரியாவின் மரணத்திற்கு மருத்து

வர்கள் கவனக்குறைவே காரணம் என ப்ரியாவின் பெற்றோர் கதறி துடித்த காட்சி மருத்துவமனையில் இருந்தவர்களை பதற செய்தது.

ப்ரியாவின் உடலை வாங்க மறுத்த அவரது பெற்றோர்கள் தங்கள் மகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த மருத்துவர்கள் மீது வழக்கு போட வேண்டும் என்று ஆம்புலன்சில் பாடியை ஏற்ற விடாமல் தர்ணா செய்தனர்.காவல்துறையினர் ப்ரியாவின் பெற்றோரை சமாதானப்படுத்தி ஆம்புலன்ஸில் ப்ரியாவின் உடலை அவரது இல்லத்திற்கு அனுப்பி வைத்தது.

இதற்குள், கால்பந்தாட்ட இளம் வீராங்கணை சிகிச்சை பலனில்லாமல் இறந்த செய்தி மீடியா ப்ளாஷ் நியூசாக ஒடியது.

இளம் கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவிற்கு சென்னை ,பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் மூட்டு சவ்வு ஆப்பரேஷன் (Surgical procedure to rectify ligament tear) என்பது ஒரு சாதாரண அறுவை சிகிச்சை தான். அறுவை சிகிச்சைக்காக ப்ரியாவை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து வந்த பின் மயக்க மருந்து நிபுணர் இடுப்புக்கு கீழ் மரத்து போகும் ஒரு ஊசி போட்டதும் பத்து நிமிடத்தில் இரு கால்களும் மரத்து போனது. பின்னர் இடுப்புக்கு கீழ் செல்லும் ரத்த ஓட்டத்தினை குறைப்பதற்கு இடுப்பில் ஒரு பட்டை tourniquet கட்டப்பட்டுள்ளது. இது கால்களுக்கு ரத்தம் செல்வதை கட்டுபடுத்துவதால் அறுவை சிகிச்சையின் போது வெட்டுப்பட்ட இடத்திலிருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும்.

இந்த பட்டையை அதிக பட்சமாக இரண்டு மணி நேரம் தான் அறுவை சிகிச்சை செய்யும் நபரின் இடுப்பில் கட்டியிருக்க வேண்டும். அதன்பின் இந்த பட்டையை அவிழ்க்காமல் இருந்தால் உடலின் கீழ்ப்பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் முற்றிலுமாக தடை பட்டு கால் பகுதியில் உள்ள தசைகள் முழுவதுமாக செயல் இழந்து விடக்கூடிய அபாயம் உள்ளது.

ஆனால் ,ப்ரியா விஷயத்தில் ,ஆபரேஷன் முடிந்த பின்னர் இடுப்பில் கட்டியிருந்த tourniquet எனப்படும் அந்த பட்டையை பெரியார்நகர் அரசு புறநகர் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் நர்ஸ் கழட்ட தவறி விட்டார்கள்‌.

இரண்டு மணி நேரத்தில் கழட்டப்பட வேண்டிய அந்த tourniquet பட்டையை 20 மணி நேரத்திற்கும் மேலாக கழட்டாமல் அப்படியே விட்டு வைத்திருந்த காரணத்தால் ப்ரியாவின் காலுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் முழுமையாக தடைப்பட்டு காலில் உள்ள தசைப்பகுதி முற்றிலுமாக செயல் இழந்து விட்டது. ப்ரியாவின் காலில் ரத்தகசிவும் கால் வீக்கமும் அதிகரித்துள்ளது.

ப்ரியாவின் நிலைமை மோசமானதை தொடர்ந்து பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையிலிருந்து உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பரிசோதனை செய்து ப்ரியா உயிரை காப்பாற்ற அவரது வலது காலை உடனடியாக மருத்துவர்கள் வெட்டி எடுத்தனர்.

ப்ரியாவின் காலை வெட்டி எடுத்த பின்னரும் கூட அந்த பெண் உயிர் பிழைத்திருக்கக்கூடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு காலை வெட்டி எடுத்த பின்னர் அந்த காயம் செப்டிக் ஆகி செப்ஸிஸ் (sepsis) என்கிற நிலை வந்து அந்த பெண்ணின் உடல் முழுவதும் பரவி அந்த பெண்ணின் பல உடல் உறுப்புக்கள் ஒரே சமயத்தில் செயல் இழந்து போய் மரணம் சம்பவித்து விட்டது .

ப்ரியாவின் காலை அறுவை சிகிச்சை செய்த பின் டோப்லர் அல்ட்ராசவூண்ட் மற்றும் ரத்தம் செல்லும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவரது உடலில் இடுப்பிற்கு கீழ் ரத்த ஒட்டம் முழவதுமாக செல்லாமல் தடைப்பட்டு போனது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் அல்லது மயக்க மருந்து நிபுணர் ப்ரியாவிற்கு கட்டியிருந்த tourniquet பட்டையை அறுவை சிகிச்சை முடிந்ததும் கழட்டி இருந்தால் ப்ரியா இறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கருதுகின்றனர் .

எனது மகளை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை 10 நாட்கள் வைத்திருந்தனர். ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு வேண்டும் என்றார்கள். பின்னர் ஸ்கேன் செய்து அவரது காலை நீளமாக கிழித்துவிட்டனர். இதனால் நரம்புகள் துண்டிக்கப்பட்டது.

ப்ரியாவின் காலில் இருந்து ரத்தம் வடிந்ததால் அஞ்சிய மருத்துவர்கள், ரத்த போக்கை நிறுத்த முட்டியிலிருந்து கெண்டைக்கால் வரை துணி வைத்து இறுக்கமாக கட்டிவிட்டனர். திடீரென கால் வீங்கியதால் ப்ரியாவை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்குதான் இதுபோல் கட்டு கட்டியதால்தான் ரத்த ஓட்டம் பாயாமல் தசைகள் அழுகிவிட்டது. தொற்று பரவிவிட்டது. ரத்தமும் உறைந்துவிட்டது. எனவே அவருக்கு முழங்காலுக்கு மேல் வரை நீக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி, அங்கு அறுவை சிகிச்சை நடந்தது. எனது மகள் ஒரு மணி நேரத்தில் நன்றாக ஆகிவிடுவார் என்றனர். ஆனால், ப்ரியா சடலமாகத்தான் வெளியே வந்தாள். பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்த சோமசுந்தரம், பால் ராம்சங்கர் என்ற 2 டாக்டர்களை கைது செய்து, பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று ப்ரியாவின் தந்தை ரவிக்குமார் தெரிவித்தார்.

ப்ரியாவின் வலது கால் அகற்றப்படுவதற்கு முன்….நான் சீக்கிரமாகவே ரெடி ஆயிட்டு திரும்பி வருவேன். அதனால் எதுக்கும் ஃபீல் பண்ணாதீங்க. என்னோட மாஸ் என்ட்ரி குடுப்பேன். என்னோட கேம் என்னை விட்டு போகாது., நான் திரும்பி வருவேன்னு நம்பிக்கையோடு இருங்க. லவ் யூ என தனது பேஸ்புக் பக்கத்தில் ப்ரியா பதிவிட்டு இருந்தார்.

ஏற்கனவே அரசு பொதுமருத்துவ மருத்துவமனைகளில் காலாவதி மருந்துக்கள் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறதா அத்தோடு மருந்து கொள்முதல் கூட அரசு மருத்துவமனைகளில் முறையாக நடக்கிறதா என்ற கேள்வியையும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

சமீபத்தில் வேலூர் மாவட்டம் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் டாக்டர்கள் இருப்பதில்லை என நோயாளிகள் , அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனை விசிட் செய்த போது சொன்னார்கள் . இதனால் கோபமான அமைச்சர் துரைமுருகன் இங்கிருக்கும் மருத்துவரை கன்னியாக்குமரிக்கு டிரான்ஸ்பர் செய்யுங்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியணியத்திடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை பயிற்சி பெறும் ஸ்டேடியங்கள் மற்றும் விளையாட்டு அரங்கில் உரிய மருத்துவர்கள் உள்ள அவுட் போஸ்ட் ஆம்புலன்ஸ் உடன் தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது தான் விளையாட்டில் அடிப்படும் வீரர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்தால் , இளம் வீராங்கணை ப்ரியா போன்ற அகால மரணம் ஏற்படாது என்று பயிற்சியாளர்கள் தெரிவித்தார்கள்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறைய பணியிடங்கள் காலியாக உள்ளது. அரசு பெரிய மருத்துவமனைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பாட்டிற்கு கொடுப்பதில்லை. அத்துடன் அரிய வகை அறுவை சிகிச்சைகள் கூட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல முறையில் மருத்துவர்கள் செவிலியர்கள் டீம் செய்து வருகிறது. ஆள் பற்றாக்குறையால் தினமும் அறுவை சிகிச்சையில் ஈடுபடும் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து அறுவை சிகிச்சையில் இடைவிடாது செய்வதால் அவர்களுக்கும் மன ஆழுத்தம் ஏற்படுகிறது. இதனால் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியிடங்களை போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று மருத்துவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

வியாசர்பாடியில் உள்ள மாணவி ப்ரியாவின் இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ப்ரியாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த ப்ரியாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையும், ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையையும், ப்ரியா குடும்பத்தினருக்கு வசிக்க ஒரு வீட்டிற்கான ஆணையையும் முதல்வர் வழங்கினார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல எப்போது இதுபோன்று அகால மரணங்கள் நிகழ்ந்தாலும் அரசு தரப்பிலும் இழப்பீடுகள் எப்போதும் போல் தருகிறார்கள்.

மனித உயிருக்கு விலை நிர்ணயம் செய்ய முடியுமா? அரசின் கடமை வரி கட்டும் மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்வது தான். காசில்லாத மக்கள் அரசு மருத்துவமனைகளை தான் தங்களது மருத்துவ சிகிச்சைகளுக்கு நம்பி இருக்கிறார்கள். தரமான மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது ஒரு அரசின் தார்மீக கடமை. அரசு அதை தவற விடக்கூடாது. என்ன தான் இருந்தாலும் ஒரு உயிரோடு இரு மருத்துவர்கள் விளையாடியது ஜீரணிக்க முடியாதது என்று வியாசர்பாடி மக்கள் குமுறலாக உள்ளது.

ப்ரியாவின் மரணம் மருத்துவர்கள் மற்றும் அந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்களின் அலட்சியம் தான் என மருத்துவ கல்வி இயக்குநர் தனது அறிக்கையினை சென்னை காவல்துறை தலைமைக்கு அனுப்பி வைத்தார்.இதில் ப்ரியாவிற்கு தவறான சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் மற்றும் உடனிருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை கமிஷன் தாமாகவே முன் வந்து ப்ரியா மரண வழக்கினை விசாரிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

மொத்தத்தில் இரு மருத்துவர்களின் கவனக்குறைவால் ,இந்தியாவின் வருங்கால தேசிய இளம் புட்பால் வீராங்கனையை இழந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.