தொடர்கள்
ஆன்மீகம்
திருப்புகழ் - இசையும், இலக்கணமும். 1. - குருநாதன்

20221018150027430.jpg

நாத விந்துக லாதீ நமோ, நம!

வேத மந்த்ரசொ ரூபா நமோ நம!

கீத கிண்கிணி பாதா நமோ நம!

தூய அம்பல லீலா நமோ நம! அருள்தாராய்!!

திருப்புகழ்ப் பாடல்களில் ஆர்வமும், ஈடுபாடும் உடையவர்கள் தற்போது பெருகிவருகின்றனர். உலகெங்கும் வாழும் தமிழர்களில் பலர் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடுவதிலும், ஓதுவதிலும் விருப்பமுடையவர்களாக இருக்கின்றனர். இது மிகவும் மகிழ்ச்சிதரும் செய்தியாகும். திருப்புகழைப் பொருளறிந்து, உணர்வொன்றி, உற்ற உணர்வெழுச்சியோடு, பிழையின்றி ஓதுதல், பாடுதல் வேண்டும்! அப்போதுதான் அதற்குரிய முழுப்பயனும் கிட்டும்! அதுபோன்றே, திருப்புகழ்ப் பாடல்களின் பொதுவான இசைவடிவினையும், இலக்கிய வகையையும், இலக்கண‌ நெறிமுறைகளையும் ஓரளவிற்காவ‌து தெரிந்துகொள்வது மேலும் நலம் பயக்கும். அது அப்பாடல்களை முறையாகப் பாடுவதற்குத் துணைசெய்யும்.

அடுத்தமுறை திருப்புகழ் இசைக்கும்போது, இந்தத் தெரிதலின் துணையுடன் பாடல்களை நாம் இன்னும் சற்று நுட்பமாக, ஆழமாக ரசித்துத் துய்துத் திளைக்கலாம். இத்தெரிதலின் பயனால் பாடல்கள் கேட்பவரின், இசைப்பவரின் ஆழ்மனத்தில் பசுமரத்தாணிபோல் ஊடுருவிச் சென்று, அங்குப் பதிந்து, நீடித்து நிலைக்கக்கூடும்; பாடல்களின் பல்வேறு கூறுகளும், கட்டுகளும், நுட்பங்களும், குழைவுகளும் பிடிபடவும்கூடும். எனவே, திருப்புகழின் இசையியல் அமைப்பினையும், இலக்கண வடிவத்தையும் எளிமையாக, தெளிவாக, சுருக்கமாகச் சொல்லுகின்ற ஒரு முயற்சிதான் இந்தப் பதிவு.

20221019053226370.jpeg

(குருநாதன்.

சிறந்த இலக்கியவாதி. தமிழறிஞர். ஆன்மீகவாதி.பக்திமான். திருப்புகழ் ஆர்வலர். கடந்த 65 வருடங்களுக்கும் மேலாக திருப்புகழ், திருமுறைப் பாடல்களைப் பாராயணம் செய்துவருபவர். தமிழ் இலக்கணப் பயிற்சியும் உள்ளவர். ஓதுவார்மூர்த்திகளின் பண்ணிசைப் பாராயணங்களைக் கேட்டு வளர்ந்தவர். என்றும் ஒரு மாணவர் என்றே தம்மை சொல்லிக் கொள்பவர். சீக்கிய கோவில் கட்டுரையிலும் இவரது வழிகாட்டுதல் உண்டு.)

திருப்புகழ்ப் பாடல்களின் இந்த இருபெரும் கூறுகளையும் தெரிந்துகொள்ளும் உளவிழைவில்லாதவர்களுக்கு இப்பதிவு தேவையற்ற ஒன்று. எனவே, அவர்கள் இந்தப் பதிவை புறம்தள்ளிவிடலாம். நாம் மேலே செல்லுமுன் ஒரு பொறுப்பு மறுப்போடுத் (disclaimer) தொடங்குவதுதான் நமக்கு நல்லது என்ற ஓர் எச்சரிக்கையுணர்வு எழுகின்றது. படித்தது, கேட்டது, அவற்றைப் புரிந்ததுகொண்டது இவற்றின் அடிப்படையில் இப்பதிவு ஒரு பேதையின் உளத்தூணிவுடன் எழுதப்படுகின்றது. இப்பதிவைப் பார்க்க/படிக்கநேரும் இசையியல் அறிஞர்களும், இலக்கணப் புலவர்களும் இப்பதிவில் இருக்கும் பிழைகளை, குறைகளை, போதாமைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, விலக்கியும், விளக்கியும், விரித்தும், நிறைத்தும் எல்லோரும் அறியத் தருதல் வேண்டும்!

ஒலி

ஓங்காரத்தின் ஒலி அதிர்விலிருந்துப் பிறந்தது இப்பெரும்புடவி. ஒலியால் நிறைந்தது இப்புடவி. அதில், நாதனே நாதவடிவில் அங்கிங்கெனாது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றான். எண்குணத்தானான அவன் தன் ஐந்தொழிலை ஆற்றுவதில் அவனுடைய‌ முடிவிலாது நீண்டப் பெருங்கரங்களாக ஒலியும், ஒளியும் இருக்கின்றன. ஒலி அண்டத்திலும், பிண்டத்திலும், பண்டத்திலும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.

ஒலி, ஓசை, இசை

அப்படி எங்கும் நிறைந்திருக்கும் ஒலி இருவகைப்படும். ஒழுங்குபடா ஒலியை ஓசை எனவும், ஒழுங்குபட்ட ஒலியை இசை (நாதம்) எனவும் ஒலியை இருவகைப்படுத்தலாம். ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலியை இசை என்றும், ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஓலியை இரைச்சல் எனவும்கூட இருவகைப்படுத்தலாம். இசை இனிமையானது; இன்பம் பயப்பது. இசை என்ற சொல்லுக்கு இயைந்துவருவது, இசைவிப்பது, வயப்படுத்துவது, ஆட்கொள்வது என்று பல்பொருள் கொள்வர். இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் அமைந்து, செவிப்புலனைக் குளிர்வித்து, உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஒலியே ஆகும்.

இசையுணர்வு

ஏழிசையாய், இசைப்பயனாய் இறைவன் இருக்கின்றான். இறைவன் எல்லா உயிரினங்களிலும் ஆன்மாவாக, தூய அறிதலாக, உணர்வாக இருப்பதால், இசையும் இசையுணர்வும் எல்லா உயிரினங்களிலும் இருக்கின்றன. மனிதரிடம் மட்டுமின்றி, இசையுணர்வு அனைத்து உயிரினங்களிலும் உள்ளது என்பது ஓர் அறிவியல் உண்மை. கேட்டபொழுதில், நல்ல இசை என்பது ஆன்மாவை அசைக்கின்றது. இசைக்கு அசையா மனிதமனம் இருப்பின், அது பிறழ்வன்றி வேறில்லை. இசையுணர்வு நம்மில் இயற்கையிலேயே இருப்பதால்தான், நல்ல இசையில் - அது எந்த வகையில், எந்த மொழியில் இருந்தாலும் கூட - நம் மனம் அனிச்சையாக அதில் ஈர்க்கப்பட்டு, ஈடுபடுகின்றது; அதனால் மனம் மகிழ்கின்றது, நெகிழ்கின்றது; அமைதியடைகின்றது.

நல்ல இசையின் ஒழுக்கையும், அதன் நடையையும் செவிவழி அறியும் நம் உடல் தானே அதிர்கின்றது; நம் கைகால்கள் அனிச்சையாகத் தாளமிடுகின்றன. நல்லதல்லாத ஓர்இசையை கேட்கநேரின், மனம் அதை உடன் வெறுத்தொதுக்குகின்றது. இனிமையான இசைக்கு ஆதாரம் இராகமும், தாளமும். ஒழுங்குபடுத்தப்பட்ட ஒலியான நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரக் கோர்வை அல்லது சேர்க்கைகளினால் இராகங்களும் உண்டாகின்றன. ஓர் இசைப்பாடலின் ஒழுக்கை, நடையைச் சீராக இருக்கச் செய்வது லயம் அல்லது தாளம். இசையில் சுருதி ‘மாதா’ எனவும் லயம் ‘பிதா’ எனவும் அழைக்கப்படுகின்றன. ஓர் இராகத்திற்கான ஸ்வரக்கோர்வை முறையாக‌ இசைக்க‌ப்படும்போது அது தன்னளவிலேயே இனிமையாக ஒலிக்கக்கூடியது. அதனுடன் தாளமும் இணையும்போது அதன் இனிமையும், ஈர்ப்பும் இரட்டிப்பாகின்றன.‌

இராகமோ அல்லது தாளமோ அல்லது இரண்டுமோ ஒரு பாடலில் அமையும்போது அந்தப் பாடல் இன்னும் சிறக்கின்றது. இராகமும், தாளமும் இசையின் இனிமையைக்கூட்டி உணர்வுகளுக்கு விருந்தளிக்கின்றன. இசையோடு அமைந்தப் பாடல் உணர்வுகளுக்கு மட்டுமின்றி சிந்தனைக்கும் விருந்தளிக்கின்றது. ஒரு பாடலின் சொற்களுக்கு, அப்பாடல் சுட்டும் கருத்துக்கு, காட்டும் காட்சிக்கு, ஊட்டும் உணர்வுக்கு இசை ஒரு புதியப் பரிமாணத்தை, செறிவை, சிறப்பை, ஏற்றத்தை அளிக்கின்றது. இசையினால் ஒரு பாடல் எழுப்ப விழைகின்ற மெய்ப்பாடுகளை முழுமையாக, மிகச் சரியாக, மேன்மையாக எழுப்பிவிட முடியும். எப்படி இசை ஒரு பாடலின் சீர்மையை உயர்த்துகின்றதோ, அதுபோன்றே ஒரு பாடல் இசையின் மகத்துவத்தைச் சரியாகவும் முழுமையாகவும் வெளிக்கொணரமுடியும். பாடல் இசைக்கும், இசை பாடலுக்கும் உற்ற‌ உறுதுணை. ஒன்று இன்னொன்றை மேலும் மேன்மையுறச் செய்கின்றது. பாலும் தேனும் தன்னளவிலேயே இனிமையானவை; ஊட்டம் மிகுந்தவை. அவை இரண்டும் கலக்கும்போது ஒன்றையொன்று உயர்த்தி, இரண்டுமே இன்னும் ஒரு மேலான உயர்வை அடைகின்றன. அதுபோன்றே இசையும், பாடலும்!

(தொடரும்)

இந்தக் கட்டுரை தொடரைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் கீழே எழுத்தாகவோ அல்லது ஒலிப்பதிவாகவோ அனுப்பவும். குருநாதன் அவர்கள் கட்டுரை தொடர் முடிவில் பதில் கூற இசைந்துள்ளார்.