தொடர்கள்
ஆன்மீகம்
பாரதத்தின் மலைக் கோவில்கள்! - 5 பாலகுர்த்தி மலை, தெலுங்கானா!! சோதனைகள் தீர்க்கும் சோமேஸ்வர லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி ! - ஆரூர் சுந்தரசேகர்.

சோமேஸ்வர லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில்


இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஜங்கான் மாவட்டத்தில் உள்ள பாலகுர்த்தி நகரில் உள்ள சோமேஸ்வர லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில் அமைப்பிலும் இருப்பிடத்திலும் முற்றிலும் தனித்துவமானது. இந்த மலை சுமார் 4000 ஆண்டுகளுக்கும் மேலானது. இக்கோயில் ஸ்வயம்பு விஷ்ணு மற்றும் சிவ க்ஷேத்திரம். இங்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் ரிஷிகள் தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. சப்த முனிவர்களின் விருப்பத்தின் பேரில் சோமேஸ்வரர் இங்கு வெளிப்பட்டார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மலையின் மீது நூற்று இருபது மீட்டர் உயரத்தில் இரண்டு அருகருகே உள்ள குகைக்குள் ஸ்ரீ சோமேஸ்வர லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில் உள்ளது. இரண்டு சந்நிதிகளும் ஒரு குறுகிய பாதையால் இணைக்கப்பட்டுள்ளன.


மலையில் 75% உயரத்தைச் சாலை வழியாகவும், மீதி உயரத்தை
பாறை வெட்டப்பட்ட படிகள் மூலம் ஏறவேண்டும். இந்த கோயில் ஒரு பிரபலமான புனித யாத்திரை தலமாக உள்ளது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து பக்தர்கள் அதிகம் வருகின்றனர். முக்கியமாக வீர சைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

சோமேஸ்வர லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில்

பாலகுர்த்தி பெயர்க் காரணம்:
பல்லாயிரம் ஆண்டுக் கால வரலாறு கொண்ட இந்த மலைக் குகைகளில் இருந்து பால் போன்ற தண்ணீர் பாய்ந்து கோதாவரியில் கலக்கிறது. எனவே, பாலேறு பிறப்பித்த இந்த மகாக்ஷேத்திரம் பாலகுருதி என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் பாலக்குறிக்கி ஆகி பின்பு பாலகுர்த்தி ஆனது.
இது முன்னோர்களால் "க்ஷீரகிரி" என்றும் அழைக்கப்படுகிறது.

கோயில் அமைப்பு:

சோமேஸ்வர லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில்


சோமேஸ்வர லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயிலைச் சுற்றியுள்ள மலைகள் பக்தர்கள் கோயிலைச் சுற்றி வர இயற்கையான பாதை அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் ஒரு சிறிய குகை விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில்
கோவிலைச் சுற்றியுள்ள சிறிய பாதையைப் பக்தர்கள் பிரதட்சிணம் செய்யப் பயன்படுத்துகின்றனர். கோயிலின் நுழைவதற்கு முன்பு நந்தியும், பலிபீடத்திற்கு அருகே துவஜஸ்தம்பமும், அணையா விளக்கும் அமைந்துள்ளது. ஶ்ரீ சோமேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்வாமி சந்நிதிக்கு செல்ல இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.

சோமேஸ்வர லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில்


சோமேஸ்வர ஸ்வாமி சந்நிதிக்கு நுழையும் போது, நடராஜர் தோரணையில் சிவனைப் போன்ற இரண்டு கருங்கல்லால் ஆன துவாரபாலகர்களைக் காண முடிகிறது. இரண்டு சந்நிதிகளும் குறுகிய குகைகளுக்குள் அமைந்துள்ளன. குகைக்குள் ஸ்ரீ சோமேஸ்வரர் சுமார் ஒன்றரை அடி உயரத்தில் பக்தர்களுக்கு தெற்கு நோக்கியபடி அருள்பாலிக்கின்றார். சோமேஸ்வர ஸ்வாமிக்கு இடப்புறம் நரசிம்ம குகைக்குச் செல்லும் பாதை உள்ளது. அங்கு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்வாமி உத்தரஸ்தானத்தில் மூன்றடி உயரமான லட்சுமியுடன் ஸ்ரீ நரசிம்மர் சிரித்த முகத்துடன் அமர்ந்து சோமேஸ்வரரைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் உள்ளது. இந்தக் குகையின் பக்கவாட்டில் வீராஞ்சநேய ஸ்வாமி சந்நிதி உள்ளது. குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க அங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கின்றனர்.

​ சோமேஸ்வர லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில்  ​

திருவிழாக்கள்:
மகாசிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மாநிலத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
ஆவணி மாதத்தில் ஷத சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், லட்ச வில்வார்ச்சனை, லக்ஷ கும்குமார்ச்சனை செய்யப்படுகிறது.


கார்த்திகையில் தீப உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
மார்கழி மாதத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி மார்கழி அதிகாலை காலார்ச்சனைகள், ஸ்ரீ சோமநாத மகாகவி சிவயோகம் பெற்ற பங்குனி மாதத்தில் சிறப்பு விழாக்கள் உண்டு. ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி அன்று ஸ்ரீ ஸ்வாமிக்கு திருக்கல்யாணம், நடக்கும்.

கோயில் திறக்கும் நேரம்:
கோயில் காலை 6:30 முதல் மாலை 7:30 வரை திறந்திருக்கும்.

பிரார்த்தனை:
திருமணத் தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும், சோதனைகள் தீரவும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

கந்ததீபம்:
மலை உச்சியை அடைந்து தீபம் ஏற்றுகிறார்கள். இதனை கந்ததீபம் என்று அழைக்கின்றனர். பக்தர்கள் இங்கு விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

​ சோமேஸ்வர லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில்  ​

நேர்த்திக்கடன்:
திருமணத் தடை உள்ளவர்கள் திருமணம் முடிந்த பின்பு ஸ்வாமிக்குக் கல்யாணம், ஸ்வாமிக்குப் பல்லக்கு சேவை செய்கின்றனர். குழந்தை வரம் கேட்டவர்கள் குழந்தை பிறந்த பிறகு தொட்டிகளைக் கட்டி பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தவுடன் நோய் குணமடைந்த உறுப்புகளை வெள்ளியில் செய்து போடுகின்றனர்.

கோயிலுக்குப் போவது எப்படி:
இந்த கோவில் வாரங்கலில் இருந்து 55 கிமீ தொலைவிலும், ஹைதராபாத்தில் இருந்து 120 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையங்கள் ஜன்கான் மற்றும் ஹனம்கொண்டா ஆகும்.

விமானம் மூலம்: ஜங்கானில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஹைதராபாத் விமான நிலையம் அருகில் உள்ளது

இரயில் மூலம்: அருகிலுள்ள இரயில் நிலையம் 25 கிமீ தொலைவில் உள்ள ஜங்கொனாட்டில் அமைந்துள்ளது.

சாலை வழியாக: மாவட்டத் தலைமையகமான ஜங்கனுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது

முகவரி:
பாலகுர்த்தி சோமேஸ்வர லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில், தர்தேபள்ளி, பாலகுர்த்தி, ஜங்கான் மாவட்டம், தெலுங்கானா 506146

சோதனைகள் தீர்க்கும் சோமேஸ்வர லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவிலை தரிசித்து சோதனைகளிலிருந்து விடுபடுவோம்!!