தொடர்கள்
கதை
ராஜகுமாரி - சத்யபாமா ஒப்பிலி

20221019060512613.jpeg

வேகவேகமாக பேருந்திலிருந்து இறங்கினாள் ராஜகுமாரி. கைபேசி பைக்குள் இருக்கிறதா என்று தடவி பார்த்துக்கொண்டாள். ஒருமுறை பேருந்தில் கைபேசியை தொலைத்ததிலிருந்து அந்த பழக்கம். அந்த கைபேசியை ஒவ்வொரு முறை நினைக்கும் பொழுதும் தொலைத்த வலி மறுபடியும் மேலெழும். அவளின் முதல் சம்பாத்யத்தில் வாங்கிய கைபேசி. வாங்கிய இரெண்டு மாதத்திலேயே தொலைந்தது. கொஞ்ச நாட்கள் கைபேசியே வேண்டாம் என்று இருந்தாள். ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து சாதாரண ஒன்றை வாங்கி வைத்து கொண்டிருந்தாள். ஸ்மார்ட் போனுக்கு பழகிய கைகள்! மாதக்கட்டணத்தில் ஒரு கைபேசியை வாங்கிக்கொண்டாள். அதிலிருந்து கூடுதல் கவனம் உண்டு அதன் மேல்.

நாலு மணிக்குள் வீட்டிற்கு செல்ல வேண்டும். மணி இப்போதே மூணு நாப்பது. ஒரு ஷேர் ஆட்டோ பிடிக்கவேண்டும் ஏழு எட்டு நிமிட தூரம். பின் வீடு போய் சேர ஒரு பத்து நிமிடம் நடக்க வேண்டும். ராஜகுமாரி! எப்படித்தான் இந்த பெயர் தேர்ந்தெடுத்தாரோ அப்பா என்று அடிக்கடி யோசிப்பாள். நீ நாட்டை ஆள பிறந்தவள் என்று சிரித்துக்கொண்டே அப்பா கூறுவார். அவர் இறந்த போது அவர் கையில் இருந்த பணம், பதினைந்தாயிரம் ரூபாய். அதை வைத்துக்கொண்டு எப்படியோ இறுதி காரியத்தை முடித்தார்கள். இப்பொழுது அவளும் அவள் அம்மாவும் தான். அண்ணன், அப்பா இருக்கும் போதே வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டான். அவன் கொள்கைக்கு சார்ந்த அரசியல் கட்சியாம். நாட்டை சீர்திருத்த வேண்டுமாம். அவன் அம்மாவை பார்த்து ஆறு மாதம் ஆகிவிட்டது. அம்மாவும் இப்போது ஏதும் கேட்பதில்லை. பழகி இருக்கும்.

ஷேர் ஆட்டோ வில் ஏறிக்கொண்டாள். சரியாக ஏழு நிமிடங்களில் அவள் இறங்கும் இடம் வந்தது. பதினைந்து ரூபாய் கையில் வைத்திருந்தாள். குடுத்துவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவர்கள் நான்கு மணிக்கு வருவார்கள் என்று கல்யாணத் தரகர் மணி சொன்னார். அவர்கள் வருவதற்கு முன் வீட்டிற்குள் நுழைந்து விட வேண்டும். இல்லையென்றால், உடல் குழைந்து, மையமாய் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அனைவரும் பார்க்க உள் புக வேண்டும். நடையை துரிதப்படுத்தினாள்.

வீடு நெருங்க வாசலைப் பார்த்தாள். செருப்புகள் இல்லை. நிம்மதியாக, தன் செருப்பை வெளியில் விட்டு விட்டு, உள்ளே சென்றாள்.

"வந்துட்டியா! காணுமேன்னு தவிச்சு போய்ட்டேன். " சமையல் அறையிலிருந்து எட்டி பார்த்து சங்கரி கூறினாள்.

"வராம எங்கம்மா போகப்போறேன்!" இதெல்லாம் வேண்டாம் ஆள விடுன்னா கேக்கறயா!"

"சரி சரி. இப்போ எதுவும் பேசாதே. அவங்க வந்துரப்போறாங்க! உள்ள போயி முகம் கழுவிட்டு புடவைய மாத்திட்டு வா. பச்சை பட்டு புடவை எடுத்து வைச்சிருக்கேன் பாரு"

"ஓ! இந்த தடவை பச்சையா!" அலுத்துக்கொண்டே தன் அறைக்குள் சென்றாள் ராஜகுமாரி.

சங்கரி எதுவும் சொல்லாமல் வருகிறவர்களுக்கு பலகாரம் செய்வதில் கவனத்தை திருப்பினாள்.

இந்த முறையாவது எல்லாம் கூடி வர வேண்டும். ஒவ்வொரு முறையும் ஏதோ தடுத்துக்கொண்டே இருக்கிறது. மனதில் முருகனை வழிபட்டுக்கொண்டாள்.

சங்கரியின் கணவன் இறந்த பின், யார் உதவியும் இல்லாமல், தன்னந் தனியாக நின்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டவள் ராஜகுமாரி. அவர் இறந்த போது அவள் ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து பத்து நாட்கள் ஆகி இருந்தன. ஒரு மாச சம்பளம் கூட தந்தை கையில் குடுக்க வில்லையே என்ற மனக்குறை அவளுக்கு எப்போதும் உண்டு. சிறுக சிறுக சேர்த்து வைத்து, இப்போது அவள் திருமணத்தை அவளே நடத்திக்கொள்ள போகிறாள். சங்கரிக்கு பெருமையாகத்தான் இருந்தது.

ஒரு காரின் சத்தம் கேட்டு வாசலில் எட்டிப் பார்த்தாள். தரகர் மணி காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்தார். அவர் பின் ஒரு நான்கு பேர் வந்தனர். அவசர அவசரமாக மகள் அறைக்கு அருகில் சென்று, கதவை தட்டி விஷயத்தை சொன்ன பின் வாசலுக்கு வந்தாள். வருகிறவர்களின்நேர் எதிரே நிற்காமல், சற்று ஒதுங்கி நின்றே வரவேற்தாள். ஒரு வேளை தன்னை அபசகுனமாக கருதினால் என்ற ஐயம் அவளுக்கு. மணியின் பின் அந்த நால்வரும் தயங்கிய படியே வந்தனர். வணக்கம் சொல்லி அவர்களை இருக்கையில் அமரச் சொன்னாள்.

"இது தான் சங்கரி அம்மா! ராஜகுமாரியோட தாயார்." என்று அறிமுகம் செய்து வைத்தார் மணி . பின் வந்திருந்தவர்களை காண்பித்து, இவங்க தான் மாப்பிளையோட அப்பா ஷண்முகம் சார், இவங்க அவரு அம்மா, இது மாப்பிளை ஆனந்த், இது அவரோட தம்பி மகேஷ். அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா,மலர்விழி. இப்போ வரதுக்கு சௌகரிய படல. எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதுன்னா பிறகு வந்து பாக்கறேன்னு சொல்லியிருக்காங்க."

ஒரு சிறு குறிப்பாக எல்லாவற்றையும் சொல்லி முடித்தார், மணி.

சங்கரி நின்று கொண்டே கை கூப்பி வணங்கினாள். " நீங்க வந்தது ரொம்ப சந்தோசம். பொண்ணு இப்போ தான் வேலைலிருந்து வந்தா. தயாராய்ட்டிருக்கா." பேசிக்கொண்டே உள்ளே சென்று அவர்களுக்கு செய்த பலகாரத்தை சிறு சிறு பேப்பர் தட்டுகளில் வைத்து எடுத்துகொண்டுவந்து கையில் குடுத்தாள்.

பெற்றோர்கள், சங்கரியின் பிறந்த ஊர், அவள் கணவன் வேலை பார்த்த இடம், அவனின் ஊர் என்று பேசத்தொடங்கி இருக்க, ஆனந்த் மெதுவாக வீட்டை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். சிறிய வீடென்றாலும், நேர்த்தியாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அனாவசிய பொருட்கள் எதுவுமே இல்லை. சுவற்றில் அவள் தந்தையின் படம் மாலையோடு தொங்கிக்கொண்டிருந்தது. பிறகு ஒரு பெரிய முருகன் படம், அதற்கு கீழ் பல வருடங்களுக்கு முன் எடுத்த அவர்கள் குடும்பப்படம்.

பார்த்துக்கொண்டிருக்கும் போதே ராஜகுமாரி அவள் அறையிலிருந்து வெளியில் வந்தாள்.

அம்மா எடுத்து வைத்திருந்த பச்சை பட்டுப்புடவையை அணிந்திருந்தாள். அனைவரையும் பார்த்து வணக்கம் சொல்லி விட்டு, ஒரு இருக்கையில் அமர்ந்தாள். இன்னொரு இருக்கையை தன் அருகில் நகர்த்தி விட்டு, சங்கரியை பார்த்து "உட்காரு மா" என்றாள்.

பின்," இங்க நான் தான் பேசணும். அம்மாக்கு கொஞ்சம் பயம் எல்லாத்திலயும். எங்கப்பா இறந்ததுக்கப்பறம் எல்லாமே நான் தான். அண்ணன் உண்டு. அரசியலில் முழுநேரம் இருக்கிறான். போனில் தான் தொடர்பு. இங்கு வந்து ஐந்து ஆறு மாதம் ஆகிறது. அது அவன் வழி. நாங்கள் தடை சொல்ல வில்லை. ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். மணி சார் சொல்லி இருப்பார். சீர் வரிசைகள் பேசும் முன் ஒரே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். திருமணத்திற்கு பின் என் அம்மாவை நான் தான் கவனித்துக்கொள்ள வேண்டும். என் கூட வந்து தங்குவார் என்று சொல்லவில்லை. அவசியம் ஏற்படும் பொது அழைத்துக்கொள்வேன்."

விழி தழைக்காமல் நிமிர்ந்து நிதானமாக சொன்னாள்.

ஆனந்த்தும் மற்றவரும் தலையை அசைத்தனர்.

"அதுக்கென்னமா, எல்லாரும் ஒரே குடும்பம் தானே. நல்ல பாத்துக்குவோம் கவலை படாதே என்று ஷண்முகம் சொன்னார். அவர் மனைவி தலையை ஆட்டி ஆமோதித்தாள்.

ஆனந்த், தரகரிடம் ஏதோ சைகை காட்ட அவர் உடனே,

"சரி, நாம் மத்த விஷயங்கள் பேசலாம், பிள்ளை பெண்ணிடம் தனியாக பேச வேண்டுமாம்."

இது ஒரு சம்ப்ரதாயம். எரிச்சலாக வந்தது ராஜகுமாரிக்கு. நிறைய நடந்து விட்டது இது போல். ஆனந்தை தன் அறைக்கு அழைத்து சென்றாள். அவனுக்கு ஒரு இருக்கையை குடுத்து விட்டு, தன் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

ஆனந்த் அவள் அறையை ஒரு நோட்டம் விட்டான். அவளின் பரிசு கோப்பைகள், புத்தகங்கள், பாதி வரையப்பட்டிருக்கும் ஓவியம் எல்லாம் அவளை பற்றி கொஞ்சம் சொல்லியது.

தன் பார்வையை திருப்பி ராஜகுமரியை பார்த்து,

"உங்க கையில ஒரு பெரிய தீ காயம் இருக்கே! எப்படி வந்தது?" என்று கேட்டான்.

சற்று திடுக்கிட்டு போனாள். பின் சுதாரித்துக்கொண்டு, தன் வலது கையின் உட்புறம் ஒரு விறல் நீளமிருந்த தழும்பை தடவிக்கொண்டே,

"அது ஒரு கதை. நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒருவன் என்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்தான். வீட்டுக்கு ஓடி வந்து விறகு கட்டைல துணிய சுத்தி பத்தவைச்சுகிட்டு, அவனை தேடி போனேன். அங்க நடந்ததுல பட்டது தான் இது."

ஆனந்த் இதை எதிர் பார்க்கவில்லை.

"ஐயோ! அந்த பையனுக்கு என்ன ஆச்சு?"

"ஒன்னும் ஆகலை, ஒரு கண்ணு கொஞ்சம் சரியாய் தெரியல. அவ்ளவு தான்."

ஆனந்துக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. மெதுவாக எழுந்து அறைக்கு வெளியே சென்றான். அவன் பெற்றோர்களிடம் கண் ஜாடை காண்பித்து, பின் சங்கரியை திரும்பி பார்த்து,

" நாங்க வரோம் மா". மணி உங்ககிட்ட பேசுவார் என்று சொல்லிவிட்டு விடு விடு என்று வெளியில் நடந்து சென்றான். அவன் பெற்றோர்களும் செய்வதறியாது அவனை பின் தொடர்ந்தனர்.

சங்கரிக்கு ஒன்றும் புரியவில்லை.

மகளின் அறைக்கு அவசரமாக சென்றாள்.

"என்னடி ஆச்சு. இவரு ஏன் ஒன்னும் சொல்லாம போய்ட்டாரு?"

அதுவரைக்கும் அடக்கி வைத்துக்கொண்டிருந்த சிரிப்பை மேலும் அடக்க முடியாமல், வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள் ராஜகுமாரி.

சங்கரிக்கு ஒன்றும் புரியவில்லை. கோவமாக வந்தது.

"நான் தான் சொல்றேனே! எப்போ பாத்தாலும் அம்மாவை பாத்துக்கணும், அம்மாவை பாத்துக்கணும்னு. அதெல்லாம் சொல்லக்கூடாதுடி. எனக்கென்ன நான் பாட்டுக்கு இருப்பேன். உங்க அண்ணன் என்ன அப்படியே விட்ருவானா? நீ இருக்கன்னு கவலை படமா இருக்கான். உனக்கு கல்யாணம் ஆயுடுச்சுன்னா என்ன அவன் பாத்துப்பான். உனக்கு இதை எத்தனை தடவ சொல்றது. "

ராஜகுமாரி கட்டிலில் இருந்து எழுந்து வந்து, சங்கரியின் தோள் தொட்டு ஒரு இருக்கையில் அமர வைத்தாள்.

" அம்மா, அதை சொல்லாம எல்லாம் இருக்க முடியாது. மறுபடியும் இதுபோல் நடந்தால், மறுபடியும் அதை நான் சொல்லத்தான் செய்வேன். அதெல்லாம் அனுமதி இல்லம்மா. செய்திதான். ஆனா நீ நினைக்கறமாதிரி இந்த தடவ அந்த பிரச்னை இல்லை "

"அந்த பிரச்னை இல்லையா? பின்ன?"

" என் கையில இருக்கற தீ காயத்தை பத்தி கேட்டான். என் அறைல நான் வாங்கிய பரிசு கோப்பைகள் இருக்கு, நான் படிக்கும் புத்தகங்கள் இருக்கு, வரைஞ்ச ஓவியம் இருக்கு. எதை பத்தியும் கேக்க தோணலை அந்த ஆளுக்கு."

"ஏதோ அக்கறையில கேட்ருப்பாரு."

"ஒரு பெண் யாருன்னு தெரியும் முன் உடம்பில் உள்ள தழும்பை பத்தி பேசும் அக்கறை எனக்கு அருவருப்பா இருந்தது."

" சரி நீ என்ன சொன்ன?"

" யாரோ ஒரு பையன் என்கிட்டே வம்புக்கிழுத்தான். அவனை தீவெட்டி வெச்சு தாக்கினேன். அதுல வந்த காயம்ன்னு சொன்னேன்."

" அடி பாவி. அவரு என்ன சொன்னாரு?"

"ம்ம். அந்த பையனுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டாரு."

ராஜகுமாரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"ரொம்ப அநியாயம் ராஜி இது. தீபாவளி சமயம் காயம் பட்டதுன்னு உண்மைய சொல்ல வேண்டியது தானே!"

" அம்மா, அவன் நல்லவனா கெட்டவனா எல்லாம் எனக்கு தெரியல. இதை மாதிரி எத்தனை பேருகூட உக்காந்து பேசியாச்சு. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு காரணம். அண்ணன் அரசியலாமே சரிப்பட்டு வராது, பொண்ணு வேலைக்கு போக கூடாது, கொஞ்சம் உயரம் கம்மி, இன்னும் கொஞ்சம் மாடர்ன்ஆ பையன் எதிர்பாக்கறான், அந்த பொண்ணே எல்லாம் பேசுதே, வீட்டுக்கு வந்தா நம்மையும் அதிகாரம் பண்ணுமோ!..இப்படி எத்தனை கரணங்கள். போதும்மா. எனக்கு அலுத்து போச்சு. இன்னைக்கு இந்த பொய் எனக்காக நான் சொன்ன பொய். சந்தோஷமா இருந்தது! தீவெட்டிய தூக்கிகிட்டு நான் ஓடுறத நெனைச்சு பாக்கும் போதே தைரியம் வருது. நீ இனிமே கவலைய விடு!! அண்ணனை வர சொல்லி இருக்கேன். அவனோட கொஞ்சம் பேச போறேன் "!"

சங்கரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"வர்றவன் கொஞ்ச முன்னாடி வந்துருக்கலாமில்ல. எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்."

"அண்ணனுக்கு இதெல்லாம் பிடிக்கதுமா"

"அதுவும் சரிதான்!"

"அவன்கிட்ட என்ன பேசப்போற?"

"ம்ம்ம், நானும் அரசியல்ல சேர போறேன். அவன் கட்சி தான். உறுப்பினர் அட்டைகெல்லாம் மனு போட்டாச்சு."

சங்கரி ஒன்னும் புரியாமல் பார்த்தாள்

"அவன் கட்சியில மகளிர் அணிக்கு நம்ம தொகுதியில படிச்சவங்க யாரும் இல்லையாம். எனக்கும் அந்த களம் பிடிச்சுருக்குமா. வேலையெல்லாம் விட மாட்டேன். அதுவும் தொடரும் இதுவும் தான். இங்க நான் ஒரு இடத்திற்கு வரும் வரை. இது தான் எனக்கு என்னவோ அப்பாவோட ராஜகுமாரி கனவா தோணுதும்மா"

"பெண்களுக்கு உகந்த இடமா அது ராஜி? எனக்கு கவலையா இருக்கு"

"கவலை படாதேம்மா. நான் பழகும் ஆண்களிடத்தில் சொல்வதற்கு தான் ஒரு கதை இருக்கே! அந்த கதையை சொல்லிவிடுவேன்."

"என்ன கதை?"

சிரித்துக்கொண்டே சொன்னாள் ராஜகுமாரி, " தீவெட்டியும். தீக்காயமும்!"