தொடர்கள்
கதை
 ஜாதகமா, சாதகமா ? -   - பா அய்யாசாமி

20221019061333118.jpg

ஏண்டி,கமலா, நவக்கிரஹ சன்னதியிலே ஏன் விளக்கேத்திண்டு இருக்கே?

என்ன மாமி, பண்ணுவேன், என் பொண்ணு ராதாவிற்கு வரன் ஒன்றும் தகைய மாட்டேங்கிறது அதான் பகவான்கிட்டேமன்றாடுகிறேன்.

அதுக்கு? அதோ உட்கார்ந்துண்டு இருக்காரே அவரண்ட போய் கண்ணீர் விட்டு அழு, என் பெண் வாழ்க்கைக்குஒரு வழி காட்டு என அவர் பார்த்துப்பார் என சிவனைக்காட்டினாள் ருக்கு.

“அவாளா வலிய வந்தால் இவ பையனைப் பிடிக்கலை, வேண்டாங்கிறாள், இவளுக்கு ஜாதகம் தேடி மாப்பிள்ளைகிடைத்து அவள் புக்காம் போறதுக்குள்ளே, நான் பரலோகம் போயிடுவேன் போலிருக்கு, அதான் கிரஹம்போரலையோ ? என விளக்கேற்றுவதாகப் புலம்பினாள் கமலா.

இப்படி எதிர் மறையா பேசப்படாது, அதுவும் கோயிலில்
நோ, என சொன்ன ருக்கு, ஏன் அவள் வேண்டாங்கிறாள் ? என கேட்டாள்

தெரியலையே?! இது சரியில்லை, அது சரியில்லை, என ஒரே டார்ச்சர் போ, என ரொம்பவே அலுத்துப் பேசினாள்.

யாரையாவது….?! என இழுத்துக் கேட்டாள் ருக்கு,

அதெல்லாம் ஒன்றும் இல்லை, என கமலாவும் இழுத்தாள்.

“ என்ன மென்று முழுங்குகிறாய் ? அப்படி ஏதாவது இருக்கா ?
இருந்தால் என் கிட்டே சொல்லு நான் அவளோடு பேசுகிறேன்” என்றாள் .

நீ பேசினால் சரியாகதான் இருக்கும், உனக்கு எது நல்லது கெட்டது எல்லாம் தெரியும், நீயே புத்திமதி சொல்என்றாள் உரிமையுடன் கமலா.

“ நீ ராதாவை ஆத்திற்கு வர சொல்,என்று கூறி ஆலய தரிசனத்திற்கு சென்றாள் ருக்கு.

வழக்கம் போல் வந்த இடத்தில் கதை அளந்திண்டு இருந்த அய்யாசாமி, “ கமலா மாமி என்ன சொல்றா ? எனக் கேட்க, அவள் பெண்ணுக்கு ஜாதகம் ஒன்றும் அமையலையாம், அதான் புலம்புகிறாள்,என்றாள் ருக்கு.

“ எப்படி அமையும்? அந்த பெண்தான் யாரையோ காதலிக்கிறதே என அய்யாசாமி சொன்னதும்,

உங்களுக்கு எப்படித் தெரியும்? கேட்டாள் ருக்கு.

இதெல்லாம் நீ கேட்கப்படாது, அது எங்கள் திண்ணை அரட்டை ரகசியங்கள், அது மீறுவதற்கில்லை என்றார்

ஓ.. ஓ என்கிட்டேயேவா ? திண்ணையிலே இனி உட்கார முடியாமல் ஜலத்தை ஊத்திடுறேன் என்றாள் ருக்கு.

அந்த பெண் யாரையோ காதலிக்கிறது என்பது உண்மை, யார் என்றெல்லாம் நேக்குத் தெரியாது என சொன்னார்அய்யாசாமி.

அது ஒன்றும் தப்பில்லையே, மனசு என்று ஒன்று இருந்தால் காதலிக்கத்தான் செய்யும் என்றாள் ருக்கு.

அதுசரி என்றார் அய்யாசாமி.

மாலை நேரம்,

மாமி, என கூப்பிட்டபடி வந்த ராதாவை,வாஞ்சையோடு வரவேற்று,

“ வாழ்த்துகள்” என்ற ருக்குவை ஆச்சரியமாகப் பார்த்த ராதா,

அம்மா உங்களை போய் பார்த்து பேசிட்டு வா என சொல்லி அனுப்பினாள், எதற்கு வாழ்த்துகள் ? எனக் கேட்டாள்ராதா.

உன் காதலுக்குத்தான் என்ற ருக்கு, எல்லோருக்கும் காதல் வாழ்க்கை அமையாது, அமைந்தாலும் முடியாது, அந்தவகையில் நீ ஒரு தனித்துவம் எனப் பாராட்டியதும், ராதா வெட்கப்பட்டி ருக்கவேண்டும் முகம் அப்படி சிவந்து போய்இருந்தது.

“ ஆனால், உன் அம்மா கமலா உனக்காக பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்த்தால் நீ இதை செய்யத் துணிவாயா ? என கேட்டு நிறுத்தினாள் ருக்கு.

என்ன மாமி இது? நீங்களே இப்படி கேட்கிறேளே ? அம்மா மீது எனக்கு அதிக அக்கறையும் பாசமும் இருப்பதால்தான்நானும் இந்த விஷயத்தில் இத்தனைப் பிடிவாதமாக இருக்கேன் என மடக்கினாள் ராதா.

“ அத்தனை அக்கறை அம்மா மேல் வச்சுண்டு இருக்கிற நீ, உன் திருமணப் பேச்சில் அம்மா சொல்லைக்கேட்கிறதில்லையே ஏன்?

என் அப்பா தான் பார்த்த வேலையை இழந்து, என்னையும், அம்மாவையும் தனியா தவிக்க விட்டு எங்கோபோனபின்னே அம்மா எத்தனை கஷ்டப்பட்டாள்,

ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டமான நிலையிலும், கடனை உடனை வாங்கி இட்டிலி,முறுக்கு சீடை,அப்பளம் இட்டுவிற்று எனைப்படிக்க வைத்தாள். இப்போ வயதான பின்பு அப்பா திரும்ப வீடு வந்து சேர்ந்த பின்பாவது, நல்லவாழ்க்கையை அவர்கள் வாழவேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது என்று கண் கலங்கினாள் ராதா.

பிறகென்ன? அவர்கள் இஷ்டப்படி கல்யாணம் பண்ணிட்டு அவர்களை சந்தோஷம் படுத்தலாமே, என்றாள் ருக்கு.

இவர்கள் பார்க்கும் வரனில் பெண் என்ன வேலையில் இருக்கிறாள்? எத்தனை சாம்பாதிக்கிறாள்? அந்த சம்பளமும்மாப்பிள்ளை வீட்டாருக்கு வரவேண்டும், அப்படி வந்தால் சொந்த வீடு ஒன்று வாங்கிவிடலாம் என ஒரு கணக்கோடுதானே இருப்பார்கள்.

எனது வருமானத்தையும் அவர்களிடம் கொடுத்து விட்டால் என் அம்மா, அப்பாவின் நிலை? அதனால் என்னைப் பற்றிநன்கு தெரிந்த ஒருவரை, என்னை சரியாகப் புரிந்துக் கொண்டவரை, உயிர்களை தன் உயிர்போல உயர்வாய்மதிப்பவரை, தந்தையை இழந்து தாயுடன் தனித்து வாழும் ஒருத்தரைத்தான் நான் மனசார காதலிக்கின்றேன்,

நான் எப்பொழுதும் போல் வருமானத்தை என் பெற்றொருக்கு கொடுக்க சம்மதித்தத்தோடு, என்னிடமும், என் நலன்மீதும் அவரின் அக்கரையான அணுகுமுறை இவையெல்லாம் வைத்துப் பார்த்தால் அவர்கள் பார்க்கும் எந்த வரனிலும்கிடைக்காது என்றாள்.

சரியான முடிவு ராதா. இதை அம்மாவிடம் சொல்லிட வேண்டியதுதானே, ஏன் தயக்கம் ? என்ற போது ,

காதலிக்க வாழ்க்கையில் தாய், தந்தை, உறவு,நண்பர்கள், படிப்பு, தொழில்,கலை இப்படி எத்தனையோ இருக்கு, இருந்தும் ஏன் மனசுக்குப் பிடித்தவரை காதலித்தால் அது குற்றமாக சமூகம் பார்க்கிறது?

காதல் என்றாலே ஏதோ கெட்ட வார்த்தை போல் சமூகம் பார்ப்பதால், என்னால் உங்களிடம் சொல்லவதுபோலஎளிதாக என் அம்மாவிடம் சொல்லிவிட முடியலை என்றாள்.

எதையும் எதிர்பார்த்து வருவது காதல் இல்லை,ஆனால் உன் பெற்றோர்களின் எதிர்காலச் சிந்தனையோடு நீ எடுத்தமுடிவும், அதற்கு சம்மதித்த உன் காதலன் நிச்சயமாக நல்லவனாகத்தான் இருப்பான்.

உனக்கு ஜாதகப் பொருத்தத்தைவிட உனக்கு சாதகமானவனை தேர்ந்தெடுத்து இருக்கிறாய். தவறொன்றுமில்லை.
நான் பார்த்துக்கிறேன் விடு என ராதாவிற்கு தைரியமூட்டினாள்.

காதலித்து கல்யாணம் செய்வதற்கு உன் ஆதரவு உண்டா? என கேட்டார் அய்யாசாமி,

உண்மையான காதலுக்கு நாம என்றுமே ஆதரவா இருக்கனும்ணா..

ஏன் நீங்க எதிர்ப்பேளா? கேட்டாள் ருக்கு

நான் கல்யாணம் பண்ணிண்ட பின்னேதான் உன்னைக் காதலிக்கவே ஆரம்பித்தேன் என்றார் அய்யாசாமி.

போதுமே! வழிஞ்சது என்றாள் ருக்கு.