கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் அருகே ஜெய்நகரை சேர்ந்தவர் பெயின்டர் பாலாமணி. இவர், கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகே பல்லூர் பகுதியை சேர்ந்த மம்தா என்ற பெண்ணை காதலித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முதலில் ஊனமுற்ற நிலையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறகு இரண்டாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அதற்கு சுமந்த் என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் பாலாமணி-மம்தா தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் கணவரை பிரிந்த மம்தா, தனது 2 குழந்தைகளுடன் ஓசூர் அருகே பல்லூர் கிராமத்தில் உள்ள தாய்வீட்டுக்கு வந்து தங்கிவிட்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன் தனது 2 குழந்தைகளை பார்க்க ஓசூருக்கு பாலாமணி வந்துள்ளார். அங்கு தனது மகள் மட்டும் இருக்கவே, மகன் சுமந்த் குறித்து மம்தாவிடம் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமான மம்தா, தனது மகளையும் பாலாமணியிடம் விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து, தனது மகளுடன் பாலாமணி பெங்களூர் திரும்பியுள்ளார். பின்னர், காணாமல் போன தனது மகன் சுமந்த்தை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். இதற்கிடையே, தனது மகனை பணத்துக்கு ஆசைப்பட்டு, வேறொருவருக்கு மம்தா விற்றிருப்பது தெரியவந்தது. மேலும், தனது மகன் சுமந்த் ஈரோடு அருகே ஒரு கிராமத்தில் மற்றொரு தம்பதியுடன் வசிப்பதும் பாலாமணிக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, தனது பகுதி கட்சி பிரமுகர் உதவியுடன் கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் மகன் காணாமல் போனது குறித்து பாலாமணி புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் விசாரித்தனர். பின்னர், கடந்த 16-ம் தேதி ஈரோட்டுக்கு பாலாமணி-மம்தா தம்பதியை அழைத்து சென்று, அங்கு ஒரு தம்பதியின் வீட்டில் இருந்த சுமந்த்தை மீட்டனர். அங்கிருந்த தம்பதியை விசாரித்ததில், தங்களுக்கு கிடைத்த மகனுக்கு ‘செல்வமணி’ என பெயர் சூட்டி சிறப்பாக வளர்த்து வந்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
பின்னர் சுமந்த்தை பெற்றெடுத்த பாலாமணி-மம்தா தம்பதி, அவனை வளர்த்த தம்பதி ஆகியோரை அத்திப்பள்ளி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து போலீசார் விசாரித்தனர். விசாரணையின்போது, தங்களுக்கு கிடைத்த மகனை தாங்களே நன்றாக வளர்த்து கொள்கிறோம். எங்களிடமே கொடுத்துவிடுங்கள் என சுமந்த்தை வளர்த்த தம்பதி கால்களில் விழுந்து கெஞ்சினர். எனினும் பாலாமணி விடாப்பிடியாக, ‘ஊனமுற்ற எனது மகளுக்கு சகோதரன் தேவை. அதனால் எனக்கு சுமந்த் கண்டிப்பாக வேண்டும்’ என பிடிவாதமாக இருந்துள்ளார்.
இதனால் சுமந்த்தை வளர்த்த தம்பதி வேதனையுடன் ஈரோடு கிளம்பி சென்றனர்.
கதை இங்கு முடியவில்லை.
ஒரு வேளை தன் தவறை உணர்ந்து மம்தா கணவருடன் மீண்டும் சேர்ந்திருப்பார் என்று நீங்கள் நினைத்தால் வருகிறது டிவிஸ்ட்.
தான் வாங்கிய பணத்தை திருப்பி தரவேண்டுமோ? என்ற பயத்தில் இருந்த பாலாமணியின் மனைவி மம்தா, ‘தனக்கு கணவரும் வேண்டாம்… அந்த ஊனமுற்ற பெண்ணும் வேண்டாம் என்று கூறி கிளம்பி விட்டார்.
இது தான் போலீசார் உள்பட அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
வேறு வழி தெரியாமல் தனது மகன், மகள் ஆகியோருடன் பாலாமணி பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார்.
Leave a comment
Upload