மாருதி ஸுசுகி எர்டிகாவில் வந்திறங்கினார் ஹாஜி இம்தியாஸ் அலி. வயது 65. தலையில் பூக்கள் வரையப்பட்ட வலைத்தொப்பி. நெற்றியில் தொழுகை அடையாளம், கண்களில் சுருமா ஈஷியிருந்தார். பாலஸ்தீன மூக்கு. மீசை இல்லாத கனத்த மேலுதடு. மருதாணி பூசிய பிசிறு பிசிறு தாடி. ஜிப்பா பைஜாமா. கால்களில் கட் ஷு. நெருக்கத்தில் அத்தர் நறுமணம் வீசினார்.
தொழிற்சாலையின் மேலாளர் அர்ஜுன்தாஸ் ஓடி வந்து வணங்கினார். பதிலுக்கு வலது கையை இடது நெஞ்சில் பொத்தி வைத்தார் இம்தியாஸ் அலி.
“தாஸ்!”
“சொல்லுங்க முதலாளி!”
“இந்த வருஷ ரமலான் மாதத்தில் நான் தர வேண்டிய ஜக்காத் தொகையை கணக்கிட்டு விட்டீர்களா?”
“இரண்டரை சதவீதம் கணக்கிட்டேன். கொடுக்க வேண்டிய ஜக்காத் தொகை 4.5 இலட்சம்”
“நல்லது எப்படி கொடுக்கப் போகிறோம்?”
“ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 450 பேருக்கு ஜக்காத் தரலாம். நான் ஜக்காத் லிஸ்ட் தயார் செய்யட்டுமா?”
“நான் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வைத்து என்ன செய்ய முடியும்?”
“ஜக்காத் பெறுபவர் தன் குழந்தைகளில் ஒன்றுக்கு புதுத்துணி வாங்க முடியும். அல்லது ரம்ஜான் அன்று பிரியாணி சமைக்க நாம் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் உதவும்….”
“எனக்கொரு யோசனை தோன்றுகிறது தாஸ்!”
“என்ன யோசனை?”
“நாம் கொடுக்க போகும் 4.5 இலட்சம் ஜக்காத்தை இரண்டு விதங்களாய் கொடுப்போம். 4.5இலட்சத்தில் மூன்று இலட்சத்தை தகுதியான ஒருவருக்கு ஜக்காத் கொடுத்து அவரின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்.. மீதி 1.5இலட்சத்தை 150பேருக்கு பிரித்துக் கொடுப்போம்!”
“தகுதியான ஒருவர் என்றால்?”
“சொந்தமாய் தொழில் தொடங்க தேவையான முதலைத்தேடி அலையும் நபரே தகுதியான ஒருவர்…”
“நாம் கொடுக்கும் பணத்தை குடித்தே அழித்து விடப் போகிறார்!”
“எண்பது சதவீத இஸ்லாமியர்கள் குடிக்க மாட்டார்கள். புகைப்பிடிக்கும் பழக்கம் வேண்டுமானால் இருக்கும். நம்ம மஹல்லாவில் முப்பதாயிரம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாருக்கு நாம் மூன்று இலட்சம் ஐக்காத்தை கொடுத்தால் அவர் அதனை முதலீடாக வைத்து லியாபாரம் செய்து முன்னேறுவாரோ அவருக்கு கொடுக்க வேண்டும்!”
“நாம் கொடுக்கும் ஜக்காத்தை உபயோகரமாக பயன்படுத்தப் போகும் ஒற்றை நபரை எப்படி கண்டுபிடிப்பது?”
“நம்ம மஹல்லாவில் ஆறு பள்ளிவாசல்கள் உள்ளன. பள்ளிவாசல் முத்தவல்லிகள் இடம் இமாம்கள் இடம் விசாரிப்போம்!”
“மூணு இலட்சத்தை லம்ப்பா ஒருத்தருக்கு ஜக்காத்தா கொடுக்க போறீங்க. அவர் உங்களுக்கு எதனை திருப்பிக் கொடுப்பார்?”
“எதனையும் எதிர்பார்த்து செய்வதல்ல ஜக்காத். ஜக்காத் வாங்குபவருக்கு நாம் எந்த நிபந்தனையும் விதிக்கக்கூடாது. அதனால் மூன்று இலட்சம் ஜக்காத் வாங்குபவரிடம் ஒரு வேண்டுகோள் வைக்க இருக்கிறேன்!”
“என்ன வேண்டுகோள்?”
“கொடுக்கும் கை மேன்மையானது. ஜக்காத்தை வாங்கிக்கொணடே இருக்கும் கை ஒருநாள் கொடுக்கும் கையாக மாறவேண்டும்!”
“உங்களிடம் மூன்று இலட்சம் ஜக்காத் வாங்கும் நபர் அடுத்த ரமலாளில் ஜக்காத் கொடுக்கும் நபராக மாறவேண்டும் என்கிறீர்கள்!”
“ஒரே வருஷத்ல ஜக்காத் கொடுக்ற நபரா ஒருத்தர் திடீர்னு பொருளாதாரத்ல உயர முடியாது. இரண்டு மூணு வருஷ அவகாசத்ல அந்த நபர் மற்றவங்களுக்கு ஜக்காத் தரலாம்!”
“வாங்க ருசி கண்டவன் வெகுசீக்கிரம் கொடுப்பவனாக மாறமாட்டான். ஜக்காத்தை சரி வர கணக்கிட்டு தராத முஸ்லிம் கோடீஸ்வரர்கள் பலரை நான் அறிவேன். மார்க்க லேபிளை முதுகில் ஒட்டி இருப்பார்கள் ஆனால் உள்ளடக்கத்தில் ஏமாற்றுவார்கள்..”
“நீங்கள் சொல்வது உண்மைதான் தாஸ். நான் பிறரின் முதுகு அழுக்குகளை சுட்டிக் காட்டாமல் என் முதுகு அழுக்கை அகற்ற விரும்புகிறேன்!”
“உங்களிடம் வேலைபார்க்க பெருமைப்படுகிறேன்…” அர்ஜுன் தாஸ்.
பள்ளிவாசல்.
நோன்பு திறந்துவிட்டு கொட்டரா நோன்புக்கஞ்சியை மசால்வடைகடித்துக் கொண்டு குடித்தார் ஹாஜி இம்தியாஸ்அலி.
“அஸ்ஸலாமு அலைக்கும் பாய்!”
“வஅலைக்கும் ஸலாம்!”
“தனி ஒருவருக்கு மூன்று இலட்ச ரூபாயை ஜக்காத்தாக கொடுக்கப் போறீங்களாமே உங்க மேனேஜர் காலைல வந்து என்னிடம் தகவலை கூறினார்.”
“சரி…”
“நம் மஹல்லாவில் வட்டி இல்லா கடன் வழங்கும் இஸ்லாமிய வங்கியில் மூன்று இலட்சம் கேட்டு ஒரு வாரமாய் நடையாய் நடக்கிறார் ஓமர் ஷெரீப் எனும் இளைஞர். ஓமர் ஷெரீப் ஐவேளை தொழுகையாளி. மாற்றுமத சகோதரர்களுடன் இனிமையாக பழகுவார். அவருக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகின்றன. எட்டுவயதில் மகனும் ஆறுவயதில் மகளும் இருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு தொழில் செய்து நசிந்து விட்டார் ஓமர் ஷெரீப்..”
“என்ன தொழில் செய்து நசிந்து போனார்?”
“‘மீன் வியாபாரம் பண்ணினார். ஒரு தடவை அவரின் ஒரு லாரி லோடு மீன் கெட்டுப் போய் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது!”
“இப்ப மூணுலட்சம் பணம் கிடைத்தால் என்ன வியாபாரம் செய்வாராம்?”
“பிரியாணி புரோட்டா கடை நடத்துவேன் என்கிறார்!”
“நல்லது!”
“ஜக்காத் கொடுக்கும் கையாக மாறுவேன் என்கிறார் ஓமர் ஷெரீப். உங்க வேண்டுகோள் மிக விரைவில் நிறைவேறும்!’‘
“நாளை மாலை ஐந்து மணிக்கு அவரை என் கம்பெனிக்கு வரச் சொல்லுங்க முத்தவல்லி. ஒரு கேள்வி… இஸ்லாமிய வங்கி அவருக்கு ஏன் மூணுலட்சம் வட்டி இல்லா கடன் தரல?”
“நூறு பேர் விண்ணப்பித்தால் ஒரு ஐந்து பேருக்குதான் அவர்களால் வட்டி இல்லாகடன் கொடுக்கமுடிகிறது. அவர்களின் சட்டதிட்டங்கள் நிபந்தனைகள் அப்படி!”
“இந்தியா முழுக்க இஸ்லாமிய வங்கிகள் வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை வட்டி மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி. அட்டைப்பூச்சிகளிடமிருந்து மக்கள் நிரந்தரமாய் தப்பிக்க வேண்டும். இஸ்லாமிய வங்கிகளின் நடைமுறைகளும் எளிமைபடுத்தப்படவேண்டும்!”
“எல்லாவற்றுக்கும் போதுமானவன் இறைவன் இம்தியாஸ் பாய்!”
புறப்பட்டார் ஹாஜி இம்தியாஸ் அலி.
தனக்கு எதிரில் நின்று அழகிய முகமன் கூறும் இளைஞனுக்கு பதில் முகமன் கூறினார் இம்தியாஸ் அலி.
“உன் பெயரில் ஒரு ஹாலிவுட் நடிகர் இருத்தார்.. உனக்கு தெரியுமா? அவர் நடித்த ‘மெகனாஸ் கோல்ட்’ படம் பார்த்திருக்கிறாயா?”
“எகிப்து நடிகர் 10.4.1931ல் பிறந்து 10.7.2015 ல் இறந்தார். அவரின் மனைவி பெயர் பதேன் ஹமாமா. அவரும் நடிகைதான். ஷெரீப்பின் இரண்டாவது மனைவி பெயர் ஜரீன் கஸல். ஷெரீப்பின் மகனின் பெயர் தாரக். ஷெரீப்பின் பேரர்கள் ஓமர் ஷெரீப் ஜுனியர் மற்றும் கரீம். என் தந்தை ஓமர் ஷெரீப்பின் வெறித்தனமான ரசிகர். .ஓமர் ஷெரீப் பேசும் ஆங்கிலத்துக்கு அவர் அடிமை…”
“உன் பெயர் காரணம் அறித்தேன் நல்லது. உனக்கு இப்போது மூன்று இலட்ச ரூபாய் பணத்தை ஹாட் கேஷாக தரப் போகிறேன். ஒரே ஒரு வேண்டுகோள் அடுத்த ஐந்து வருடங்களில் நீ ஜக்காத் கொடுக்கும் அளவுக்கு முன்னேற வேண்டும். செய்வாயா?”
“செய்வேன் பாய்!”
ஐநூறு ரூபாய் கட்டுகள் ஆறை மேலாளர் அர்ஜுன்தாஸ் எடுத்து வந்தார். பணத்தை ஓமர் ஷெரீப்பிடம் நீட்டினார் ஹாஜி இம்தியாஸ் அலி. “அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யவானாக!”
போர்டிகோவில் ஒளிந்திருந்த ஒருவன் தலையை நீட்டினான்.
“அவசரப்பட்டுட்டியே ஹாஜி… ஜக்காத் வாங்கப் போறவங்கள்லயிருந்து சீட்டு குலுக்கி ஒரு ஆளை தேர்த்தெடுத்திருக்கலாமில்ல? பாத்துக்கிட்டே இரு… நீ குடுக்ற மூணு லட்சம் பணத்தை கறிமீனா நெய் சோறா தின்னு நாலஞ்சு மாசத்ல தீர்க்கப் போரான் அவன். ஏவ்..” வயிற்றை டொப்டொப்பென்று தட்டினான்.
ஹாஜி இம்தியாஸ்அலி அவனிடம் “சகமனிதன் மீது உனக்கு இருக்கும் அவநம்பிக்கையை கண்டு பிரமிக்கிறேன். இந்தா உனக்கான ஜக்காத் ஆயிரம் ரூபா.. கறிமீன் செஞ்சு சாப்பிடு..”
ஓமர் ஷெரீப் தீர்க்கமான முகத்துடன் கிளம்பிப்போனான்.
ஒரு வருடம் கழித்து ரமலான் மாதத்தில்-
ஒரு வீட்டின் முன் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர் முண்டியடிப்பும் கைகலப்பும் தொடர்ந்தன.
ஓட்டி வந்த காரை நிறுத்த சொன்னார் ஹாஜி இம்தியாஸ் அலி. “என்னப்பா கூட்டம் அங்கே டிரைவர்?”
“தெரியலையே..”
“இறங்கிப் போய் பாரு..”
பார்த்து வந்தான் ஓட்டுநர். “ஓமர் ஷெரீப் என்கிற மஹல்லாகாரன் ஏழை மக்களுக்கு ஜக்காத் கொடுக்கிறான். தலைக்கு நூறு ரூபாய்…”
“சபாஷ்.. இறைவனுக்கு நன்றி… வாங்கும் கையை கொடுக்கும் கையாக மாற்றி விட்டாயே ரப்புவே…”
நோன்பு திறந்த ஹாஜி இம்தியாஸ் அலி ஓமர் ஷெரீப்பை பார்த்து விட்டார். .அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“ஜக்காத் குடுத்த போல…”
“இரண்டரை சதவீதம் கணக்கிட்டேன்.., ஒண்ணேகால் லட்சம் வந்தது. ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆட்டோ வாங்கி தகுதியான நபருக்கு கொடுத்துவிட்டேன். மீதி ரூ25000 ஐ 250 பேருக்கு தலைக்கு நூறு ரூபாய் வீதம் ஜக்காத் இன்று கொடுத்தேன் ஆட்டோ வாங்கித்கொடுத்த நபருக்கு நான் வைத்த ஒரு வேண்டுகோள். வெகுசீச்கிரம் வாங்கும் கை கொடுக்கும் கையாக மாறட்டும் என்பதே..”
“பிரமாதம் ஓமர் ஷெரீப். உனது செயலை கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன். கொடுக்கும் கைகள் கூடி வாங்கும் கைகளே இல்லாது போகட்டும். பண்டிகை நாட்களில் மட்டும் ஈகைகுணம் காட்டாது வருடம் முழுக்க ஆயுளுக்கும் ஈகை குணம் விஸ்வரூபிக்கட்டும்..”
“ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கு இதோ ஒரு பைவ் ஸ்டார் சாக்லேட்!” சிறுதுண்டை உடைத்து தன் வாயில் போட்டுக்கொண்டு இன்னொரு துண்டை ஓமர் ஷெரீப் வாயில் ஊட்டினார் இம்தியாஸ்அலி.
Leave a comment
Upload