தொடர்கள்
அனுபவம்
பள்ளிக்கரணைக்கு வந்த வரித்தலை வாத்து  - சத்யபாமா ஒப்பிலி

20230030102830683.jpg

(வரித்தலை வாத்து)

பொதுவாகவே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிந்து வரும் ஒரு இயற்க்கை வளம் என்று பறவையிலாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. அனால் இதை பொய்ப்பிக்கும் வகையில் வருடாவருடம் குளிர்காலங்களில் அரிய வகை பறவைகள் இங்கு வலசைக்கு வருவது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதன் முறையாக வரித்தலை வாத்து பள்ளிக்கரனைக்கு வருகை தந்துள்ளதை பறவையிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். பறவையின ஆராச்சியாளர், ச. பாலச்சந்திரன் , கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு வந்த பத்து வரித்தலை வாத்துகளுக்கு கால்களில் கண்காணிப்பு வளையங்களை பொருத்தி அவற்றின் வாழ்விடம், வழித்தடம், அவை உணவருந்த தரை இறங்கும் நீர்நிலைகள் மற்றும் அவை பறக்கும் தூரம் ஆகியனவற்றை பதிவு செய்துள்ளார். இவ்வகை வாத்துக்கள், க்ரைகிஸ்தான், மங்கோலியா மற்றும் சீனாவிலிருந்து பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பறந்து வலசை வருகின்றன. இந்த வாத்துக்கள் வானத்தில் 27,000 அடி உயரத்தில் பறக்கக்கூடியவை. இந்த இனம் மட்டுமே இந்த அளவு உயரத்தில் பறக்கக்கூடியவை. மற்ற வாத்து இனங்களை ஒப்பிடுகையில் இந்த இன வாத்துக்கள் உருவத்திலும் பெரியன.

தி நேச்சர் ட்ரஸ்ட் அமைப்பின் தலைவர் K V R K திரு நாரணன் அவர்கள் கூறியதாவது, "கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக பள்ளிக்கரணையில் வலசை வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இந்த வருடம் தான் முதல் முறையாக வரித்தலை வாத்துக்கள் பள்ளிக்கரணைக்கு வந்துள்ளன. இந்த வரவு பறவையிலாளர்களிடம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இந்த சதுப்பு நிலப்பகுதி சிறிது சிறிதாக அழிந்து வரும் நிலையில் இவ்வகையான பறவைகளின் வருகை இந்த இயற்கை வளம் அழிவிலிருந்து தன்னை தானே தற்காத்துக்கொள்ளுவதாக தோன்றுகிறது. இதற்கான உதாரணம் தான் இந்த அரிய வகை பறவைகளின் வருகை.”

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் இதுவரை 195 பறவை இனங்களின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மொத்த எண்ணிக்கையில் 25 பறவையினங்கள் அரிய வகையை சார்ந்தவை.

பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நில பகுதிகளில் அந்த நிலத்தின் தன்மை, அப்பகுதியில் நிகழும் சூழலியல் மாற்றங்கள் ஆகியவை வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கைகளை குறைக்க வாய்ப்புண்டு. ஆனால், பள்ளிக்கரணையை பொறுத்தமட்டில் மனிதர்களால் பலவிதமான செயற்கை இன்னல்களுக்கு ஆளான போதும், அது தன் தனித்தன்மையை இழந்ததாக தெரியவில்லை. இதனாலேயே வருடம் தோறும் ஒன்று அல்லது இரண்டு அரிய வகை பறவையினங்கள் இந்த சதுப்பு நிலத்திற்கு வருகை புரிந்து வருவது ஒரு அத்தாட்சியாகும், என்கின்றனர் பறவையிலாளர்கள்.

பள்ளிக்கரணைக்கு வரும் சில அரிய பறவைகள் - வரித் தலை வாத்து, செவ்விறகுக் குயில், கருவால் வாத்து, வெள்ளைகூழைக்கடா, புள்ளிக் கழுகு, சிறு குயில், சாம்பல் தலை ஆள்காட்டி, சிறிய பூ நாரை, பெரிய வல்லூறு, வெள்ளை வாலாட்டிமற்றும் செங்கால் நாரை.

இவ்வகைப் பறவைகளில் சிறியதாக இருப்பது உள்ளான் வகையைச் சார்ந்தவை. இவற்றிற்கு நீர் மட்டம் குறைவாக உள்ளசதுப்பு நிலங்கள் உணவு உண்ண சரியான இடங்கள். அளவில் சிறியதாக இருந்தாலும் இவ்வகைப் பறவைகள் பல ஆயிரம்கிலோமீட்டர் பறக்கும் திறன் கொண்டது. இம்மாதிரியான சிறிய வகை பறவைகளை கண்டறிவதுதான் மிகக் கடினம்என்கிறார் திருநாரணன்.

இந்த வகைப் பறவைகள் பொதுவாக வட மத்திய ரேகை பகுதிகளில் இருந்து குளிர் காலங்களில் வெப்ப மண்டல பகுதிகளில்வலசை வருகின்றன. ஏனெனில் குளிர் பிரதேசங்களில் உணவு கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு, எனவேதான் பலஆயிரம் கிலோமீட்டர் பறந்து இரை தேடி கூட்டமாக இந்த சிறிய வகை பறவைகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிபோன்ற நீர்நிலைகளை நாடி வருகின்றனர்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் பறவைகளின் நண்பன் மட்டுமல்லாமல் வேறு பல சூழலியல் பணிகளையும் செவ்வனேசெய்து வருகிறது. உதாரணமாக இந்த சதுப்பு நிலம் தென் சென்னை பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கான வழிவகுக்கிறது. அதே போல இந்த சதுப்பு நிலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழை காலங்களில் மழை நீர் தேங்காத வண்ணம்வடிகாலாக செயல் படுகிறது. இத்தகைய பன்மைத்தன்மை சூழலியல் மேம்பாட்டுக்கு உதவும் சதுப்பு நிலத்தை பாதுகாப்பதுநம் அனைவரின் கடமை என்கிறார் திருநாரணன்.

பறவையியலாளர் சாந்தாராம் கூறுகையில் 1980களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகளை காண்பது என்பது மிகக் கடினம். ஏனெனில் பறவைகள் வெகு தூரத்தில் இருக்கும். கையில் பைனாகுலர் கொண்டு சென்றால் தான் பறவைகளைகாண முடியும். ஆனால், இன்று அவை இருக்கும் பகுதிகளுக்கு அருகில் சென்று பார்த்துவர வசதிகள் தமிழக வனத் துறையால் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்கிறார் அவர்.

அது சரி, 195 பறவைகளில் எத்தனை பறவைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.....

சாம்பிளுக்கு சில இங்கே.....

20230103151100771.jpeg

பொரி வல்லூறு

20230103151119483.jpeg

சிறிய பூ நாரை

20230103151136360.jpeg

சிறு குயில்

20230103151154497.jpeg

Grey-headed lapwing (Vanellus cinereus) Large தமிழ்ல பெயர் தெரியலை. நேர்ல பாத்தா கேட்டு சொல்றோம்.

20230103151217106.jpeg

பெரிய புள்ளிக் கழுகு (நம்மூர் பெரும்புள்ளி போல இல்லை)

2023010315124721.jpeg

வெள்ளை கூழைக்கடா

20230103151310839.jpeg

கருவால் வாத்து

20230103151333789.jpeg

கொடிக்கால் வாலாட்டி

2023010315135500.jpeg

செவ்விறகுக் குயில்

20230103151419740.jpeg

செங்கால் நாரை

20230103151459780.jpeg

வெள்ளை வாலாட்டி