தொடர்கள்
தொடர்கள்
மண்ணறை வாசி- எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

20230102155149794.jpg

ஊமைத் தூக்கத்துக்கு ஓலைவாங்கிய தஸ்தாகீர் ஆடாமல்
அசையாமல் படுத்திருந்தார். அவருக்கு வயது 70. மத்தியஅரசு பணியிலிருந்து
ஓய்வு பெற்றவர். மனைவி மகள் இருபேரன்கள் மகன் ஒரு பேத்தி.
தஸ்தகீர் ஒரு முன்கோபி. எதிராளியின் முகத்துக்கு நேராக கடினமான
உண்மைகளை பேசிவிடுவார். மகன்மகளுக்கு சகலத்தையும் கொடுத்துவிட்டு
கோவணத்துடன் நடுத்தெருவில் நிற்காமல் தனக்கும் தன் மனைவிக்கும்
தனது சொத்தில் ஒருபங்கு எடுத்துக்கொண்டு உல்லாசமாய் நாடு முழுக்க
சுற்றுலா போனவர். உறவினரிடமும் நண்பர்களிடமும் ஒரு ஆரோக்கிய
இடைவெளி விட்டு பழகியவர்.
வாராவாரம் வெள்ளிகிழமை மட்டும் தொழ செல்பவர். தொழுகை
நேரம் தவிர மீதிநேரங்களில் தலையில் தொப்பி அணியமாட்டார். பட்டை
நரை மீசையை டை அடித்திருப்பார்.
முந்தின நாள் இரவு மாஸிவ் ஹார்ட் அட்டாக் வந்து அடுத்த சில
நிமிடங்களில் இறந்து போனார் தஸ்தகீர். தெருக்காரர்கள் உதவியுடன்
தஸ்தகீரின் மனைவி தஸ்தகீரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாள்.
இறந்து ஒருமணி நேரமாகிறது என மருத்துவர் அறிவித்தார்.
பரக்கத்துனிஸா அத்தா மௌத்தானதை வெளியூரில் இருக்கும் மகன்
மகளுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கைபேசி மூலம் தகவல்
தெரிவித்தாள்.
உள்ளூர் வாட்ஸ்அப் குழுமம் தஸ்தகீரின் மரணச்செய்தியை பதிவு
செய்தனர்.
உறவுக்காரர்கள் வந்து சேர்ந்தனர்.
வெளிவாசலில் சாமியானா போடப்பட்டது. மௌத்தை விசாரிக்க
வருபவர்கள் அமர முப்பது பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டன.
விடியற்காலையில் மகன் மகள் குடும்பம் வந்து சேர்ந்தது.
எல்லாரும் சம்பிரதாயமாக அழுது துக்கம் விசாரித்தனர்.
மௌத் அடக்க செலவுக்கு தஸ்தகீர் ஒரு லட்ச ரூபாய் சேர்த்து வைத்து
விட்டு போயிருந்தார்.
தஸ்தகீரின் தம்பியும் தஸ்தகீரின் மகனும் ஓடியாடி வேலை செய்ய
ஆரம்பித்தனர். பள்ளிவாசலுக்கு தஸ்தகீரின் மௌத் செய்தி தெரிவிக்கப்
பட்டது. மௌத் செய்தியை பள்ளிவாசலின் கரும்பலகையில் எழுதி
வைத்தனர்.
மாலை அஸர் தொழுகைக்கு பிறகு ஜனாஸா அடக்கம் செய்ய
தீர்மானித்தனர்.
காலை டிபனை கடையிலிருந்து வரவழைத்தனர்.
மதியாணம் பிரியாணி சமைத்து வந்தவர்களுக்கு பரிமாறினர்.
துக்கம் விசாரிக்க வந்தவர்களையும் தீதார் பார்க்க வந்தவர்களையும்
உள்ளும் புறமும் அவதானித்தது தஸ்தகீரின் ஆன்மா.
மனைவியின் தலைகேசத்தை கோதிவிட்டார் தஸ்தகீர். ‘செல்லமே…
என் தொந்திரவு இல்லாமல் இன்னும் பத்து பதினைந்து வருடம் நிம்மதியாக
வாழ்!’
பள்ளிவாசலில் இருந்து சந்தூக்கு எடுத்து வரப்பட்டது.
தஸ்தகீர் ஜனாஸாவை எடுத்து கட்டிலில் கிடத்தினர். அந்தரங்க
பாகத்தை மறைத்தனர். ஜம்ஜம் நீரை வைத்து குளிப்பாட்டும் போது கையில்
ஒரு துணி வைத்து வயிறை பிசைந்து முன்பின் துவாரங்களில் வெளிப்
படுவதை கழுவினர். மையத்திற்கு ஒளு செய்தனர். வலது புற உறுப்புகளை
முதலில் கழுவி பின் இடது புற உறுப்புகள் கழுவினர். இறுதியாக மையத்தை
கற்பூரத்தால் சுத்தம் செய்தனர்.
கபன்துணி போர்த்தினர். “கடைசியா தீதார் பாத்துக்கிரவங்க
பாத்துக்கங்க!”
பிரேதம் மல்லிகைப்பூ சரங்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தூக்கில்
ஏற்றப்பட்டது. நான்கு முனைகளையும் நால்வர் தூக்கினர்.
பள்ளிவாசலுக்கு ஊர்வலம் போயினர்.
ஜனாஸாவை வைத்துவிட்டு அஸர் தொழப்போயினர். தொழுது
முடித்து வந்த இமாம் நான்கு ரக்காயத் ஜனாஸா தொழுகை நடத்தினார்.
மூன்று வரிசைகளில் மஹல்லா மக்கள் நின்று தொழுகையில் கலந்து
கொண்டனர்.
கபர்ஸ்தானுக்கு ஜனாஸா எடுத்து செல்லப்பட்டது.
கபுர் ஆறு அடி நீளமும் நான்கடி அகலமும் ஆறடி ஆழமும்
கொண்டிருந்தது. கபன் துணி தலைபகுதி தளர்த்தப்பட்டது.

‘பிஸ்மில்லா அலா மில்லதி ரசூலில்லாஹ்’ எனக்கூறி ஜனாஸாவை
குழிக்குள் இறக்கினர் முகம் கிப்லா நோக்கி இருந்தது.
கபுருக்கு பக்கத்தில் பிள்ளைக்குழி வெட்டப்பட்டிருந்தது.
ஓலைப்பாய் சுருட்டிய ஜனாஸாவின் குறுக்கு நெடுக்கே விறகு
கட்டைகள் வைக்கப்பட்டன. மும்முறை கைகளால் மண்ணை போட்டனர்.
“கபுரை மூடுங்க!”
மண்வெட்டி ஆட்கள் அசுரமாய் செயல்பட்டு குழியை மூடி மேடு
பண்ணினர். தலைமாட்டுக்கு ஒரு கல் வைத்து அடையாளம் குறித்தனர்.
இமாம் துஆ ஓதினார். அனைவரும் ‘ஆமீன்ஆமீன்!’ என கோரஸ்
இசைத்தனர்.
அனைவரும் கபுரிலிருந்து விலகி நடக்க ‘தஸ்தகீர்’ கூவினார்
“எங்கப்பா என்னை விட்டுட்டு போறீங்க? இன்னும் கொஞ்சநேரம் என்னோடு
நீங்கள் இருக்கக் கூடாதா?”
எல்லாரும் போன பின் மண்ணறைக்குள் வெளிச்சம் பூத்தது. சிறு
பூச்சிகளும் கரையான்களும் எறும்புகளும் ஊர்ந்து கொண்டிருந்தன.
மண்ணறையை ஊடுருவிக் கொண்டு இரு நீலநிற வெளிச்சங்கள்
உய்க்கிபுய்க்கின.
“அஸ்ஸலாமு அலைக்கும் மண்ணறைவாசியே!”
“வஅலைக்கும் ஸலாம். யார் நீங்கள்?”
“நாங்கள் முன்கர், நகீர் எனப்படும் இரு வானவர்கள். உன்னிடம்
பூர்வாங்க பாவபுண்ணிய கணக்குகளை தணிக்கை செய்ய வந்தோம். மறுமை
நாள் விசாரணைக்கு இது முதல்படி!” இருவர் கையிலும் சிஜ்ஜின் ஏடு
இருந்தது.
“ஓஹோ… மண்ணறையிலேயே கேள்விகணக்கு ஆரம்பிக்கிறதா?”
“ஆம்..மண்ணறை மறுமை நிலைகளில் முதல் நிலை…’
“நல்லது!”
“உன் பெயர் தஸ்தகீர். உன் பெற்றோரின் பெயர் ஜெய்னலாப்தீன்/ரமீஜா.
உன் உடன் பிறந்தோர் இரு தம்பிகள் இருதங்கைகள். உன் பூமி வயது 70
உன் மனைவி பெயர் பரக்கத்துனிஸா. உனக்கு ஒருமகள் ஒருமகன். மருமகள்
மருமகன். இரு பேத்திகள் ஒரு பேரன். இந்த விவரங்கள் எல்லாம் சரியா?”
“சரிதான் வானவர்களே!”
“முதலில் உன் பாவகணக்கை பார்ப்போம்!”
“நான் பாவங்களே செய்திருக்க மாட்டேன்!’
வானவர்கள் சிரித்தனர்.
“நல்ல கதைபோ… வண்டிவண்டியாய் பாவங்கள் செய்திருக்கிறாய்..”
“அப்படியா சொல்கிறீர்கள்?”
“ஆம்!”
“கடுமையான பாவங்கள் என்று எவற்றை கூறுவீர்கள்?”
“சிறுநீர் கழிக்கும் போது அந்தரங்க உறுப்பை மறைக்காதவர்கள். கோள்
சொல்லி திரிந்தவர்கள். அவதூறு கூறியவர்கள். வட்டி வாங்கியவர்கள்.
விபச்சாரம் புரிந்தோர். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல்
இருப்பவர்கள் மாபாவிகள். மாபாவிகள் மண்ணறையிலே தண்டிக்கப்
படுவார்கள். மண்ணறையில் பாவிகள் வேதனை செய்யப்படுவதை மனிதர்கள்
ஜின்கள் தவிர மற்ற உயிரினங்கள் முழுவதும் செவியுறுகின்றன மனிதனே…”
“மறுமைநாள் எப்பவரும்?”
“எப்ப வரும்னு எங்களுக்கு தெரியாது. விரைவில் வரும். அல்லாஹ்
மறுமைநாளில் மக்கிப் போன மண்ணிலிருந்து உன்னை எழுப்பும் வரை
மண்ணறையே உனக்கு தங்குமிடம்!”
“காத்திருக்கிறேன் வானவர்களே!”
“அல்லாஹ்வின் போதனையை புறக்கணிப்பவன் மறுமைநாளில்
குருடனாக எழுப்பப்படுவான். 99பாம்புகள் ஒவ்வொன்றுக்கும் ஏழுதலைகள்
அவை கொடும்பாவிகளின் மீது மறுமைநாள் வரை விஷக்காற்றை
ஊதிக்கொண்டு தீண்டிக் கொண்டு உராய்ந்து கொண்டிருக்கும்…”
விக்கித்துப் போனார் தஸ்தகீர்.
“இப்போது உன் பாவ பட்டியலை பார்ப்பம்..”
“திகிலுடன் காதுற காத்திருக்கிறேன்!”
“உனக்கு நான்கு வயதாய் இருக்கும் போது உன் விளையாட்டு
தோழனின் தலையில் ஆணி வைத்து அடித்து இரத்தக்காயப்படுத்தி விட்டாய்.
பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் மூத்தவர்களுக்கும் கீழ்ப்படியாத
சிறுவனாய் இருந்தாய். உயர்கல்வி கற்கும் போது மார்க்கக்கல்வி கற்காமல்
தவிர்த்தாய். கல்லூரி நாட்களில் பெண் பித்துபிடித்து அலைந்தாய்.
திருமணத்திற்கு பிறகும் பிற பெண்களை கண்டு மோகித்தாய். பணி செய்யும்
இடத்தில் நிர்வாகத்தை திருப்திபடுத்த ஊழியர்களை கொடுமைபடுத்தினாய்.
குழந்தைகள் வளர்ப்பில் பாரபட்சம் காட்டினாய். உறவினர்களுடன்
இணக்கமாக இருக்கத் தெரியாமல் அவர்களிடமிருந்து விலகி நின்றாய். சில
முறை புகைபிடித்தாய் சிலமுறை குடித்தாய். மனைவியின் மீது காதல்
இருந்தும் அதனை முறைமையாக காட்ட தெரியாமல் முரடனாக குடும்பம்
நடத்தினாய். ஜக்காத் முறைமையாக வழங்கவில்லை” பாவகணக்கை
அடுக்கி கொண்டே இருவானவர்கள் போயினர்.

“உனக்கு வயது 70 முதலிரு வருடங்களில் நீ பாவம் எதுவும் செய்ய
வில்லை. மீதி 68வருடங்களில் நீ செய்த பாவங்கள் 68369…”
“நான் செய்த பாவங்கள் அதிகமாக உள்ளனவே.. நான் நன்மைகள்
எதுவும் செய்யவில்லையா?”
“நன்மைகள் சிலவற்றை செய்திருக்கிறாய். சாலையில் கர்ப்பிணி
மனைவியுடன் வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் நின்றவருக்கு பெட்ரோல்
கொடுத்து உதவியிருக்கிறாய். ரயிலில் பயணம் செய்யும் போது உன்னுடைய
லோயர் பெர்த்தை இன்னொரு வயோதிகருக்கு விட்டுக் கொடுத்தாய். வருடா
வருடம் பிறமத சகோதரர்களுக்கு ரம்ஜான் பக்ரீத் விருந்தளித்தாய்.
மாற்றந்தாய் மகள்களுக்கு உன் தந்தையின் சொத்தை விட்டு தந்தாய்.
மதவெறி தவிர்த்து மனிதம் போற்றினாய். எப்போதும் அந்நியர்களிடம்
புன்முறுவல் முகமும் இன்சொல் பேச்சும் காட்டினாய். ஹஜ் யாத்திரை
செல்ல ஓரு ஏழைக்கு பணஉதவி செய்தாய். பொய்யும் வீண்பெருமையும்
தவிர்த்தாய். .மனைவியை உயிருக்கு உயிராய் காதலித்தாய். வாழ்க்கையில்
போதும் என்ற மனம் கொண்டாய். மொத்தத்தில் நீ 1845 நன்மைகள்
செய்துள்ளாய்!”
“அவ்வளவுதானா?”
“எண்ணிக்கையில் நீ செய்த புண்ணியங்கள் மிகக்குறைவு என்றாலும்
இறைவனின் பார்வையில் உன் புண்ணியங்கள் மகத்தானவை..”
“யா அல்லாஹ்!”
‘மறுமைநாளில் இறுதி தீர்ப்பு வரும் முன் ஒரு இடைக்கால தீர்ப்பை
நாங்கள் இறைவன் சார்பாக வழங்குகிறோம். உனக்கு ஜன்னத்தல் பிர்தௌஸ்
சொர்க்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது!”
“ஜசாக்கல்லாஹ் கைர் வானவர்களே!”
“சொர்க்கத்தை உனக்கு காட்டுகிறோம்.. பார்!” வானவர்கள் ஒரு சதுரம்
வரைந்தனர். சதுரத்திற்குள் சொர்க்க சோலைகளும் நதிகளும் உணவுகளும்
சொர்க்கப் பெண்களும் தெரிந்தனர்.
தஸ்தகீர் மானசீகமாக சொர்க்கத்திற்குள் புகுந்து சொர்க்க நதியில் நீராடி
சொர்க்க உணவுகளை புசித்து சொர்க்கப் பெண்களை சுகித்து பேருவகை
அடைந்தார்..
‘மறுமைநாளில் சந்திப்போம்!’‘ முன்கரும் நகீரும் ஒளிப்புள்ளிகளாய்
மாறி வான் பறந்தனர்.
நிம்மதி பெருமூச்சு விட்டபடி தஸ்தகீர் மண்ணோடு மண்ணாக மக்கிப்
போக ஆரம்பித்தார். அவர் உடல் மீது மெகாட் புழுக்கள் நெளிந்தன.