தொடர்கள்
தமிழ்
காசியும் தமிழும் - இன்று

20230103122916422.jpg

இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் 'விடுதலையின் அமுதப் பெருவிழா'-வின் ஓர் அங்கமாக 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வை உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் சமீபத்தில், நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை, இந்திய அரசு ஒரு மாத காலம் வெகு சிறப்பாக கொண்டாடி முடித்திருக்கிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். அதனாலேயே இந்த முயற்சிகளை பாராட்டுவதோடு மட்டுமல்லாது முறைப்படி பதிவும் செய்வது நமது கடமையாகும் .

இந்த விழா பிரதமர் நரேந்திர மோடியால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.

​இது தமிழ்நாட்டுக்கும் வாரணாசிக்கு இருக்கும் நீண்டகாலப் பண்பாட்டுத் தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சியாக இருந்தது என்பதில் ஐய்யமில்லை.

இந்நிகழ்ச்சி மூலம் தமிழர் கலை கலாச்சார பண்பாட்டு முறைகள் அங்கு வெளிக்கொணரப்பட்டு கௌரவிக்கப்பட்டன. பிரதமர் வேஷ்டி அங்கவஸ்திரத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை இரு புராதன அடையாளங்களின் உறவு எப்படி உருவானது எப்படி காலப்போக்கில் அந்த உறவு எப்படியெல்லாம் வளர்ந்தது என்றெல்லாம் சென்ற இரு இதழ்களில் இலக்கிய வரலாறு சான்றுகளைப் பார்த்தோம்.

இன்று இந்த தலைமுறை இந்த தொப்புள்கொடி உறவு எப்படி மென்மேலும் உறுதிப்படுத்த முயற்சித்து வருகிறது என்பதை இந்த சங்கமம் ஒரு பாலமாக அமைந்தது வாயிலாக உணர்கிறோம்.

வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கிவைத்துப் பேசுகையில், "தமிழ் மொழியைக் காக்க வேண்டியது இந்தியர்கள் அனைவரின் கடமை" என்றார்.

தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்ற பிரதமர், தொடர்ந்து பேசும்போது,” நாட்டின் கலாச்சாரத் தலைநகரான காசியின் கலாச்சாரமும், நாட்டின் தொன்மையான தமிழ்க் கலாச்சாரமும் ஒன்றிணைந்துள்ளன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காசியும், தமிழகமும் காலத்தால் அழியாத கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மையங்களாகும். மேலும், உலகின் மிகப் பழமையான சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளின் மையமாகும். காசிக்கு விஸ்வநாதர் பெருமை சேர்க்கிறார். தமிழகத்தின் ராமேசுவரத்துக்கு ராமநாத சுவாமி பெருமை சேர்க்கிறார். காசியும், தமிழகமும் சிவமயமாக, சக்திமயமாகத் திகழ்கின்றன.

இந்திய ஆன்மிகத்தின் பிறப்பிடமாக காசியும், தமிழகமும் திகழ்கின்றன. காசி நகரம் துளசிதாசரின் பூமியாகும். தமிழகம் திருவள்ளுவரின் பூமியாகும். காசியை நிர்மாணித்ததில் தமிழர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரரும், கவிஞருமான பாரதி காசியில் பல ஆண்டுகள் தங்கியிருந்தார். பாரதியைப் போன்ற பலர் காசியையும், தமிழகத்தையும் இணைத்தனர்.

உலகின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ். இதில் இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம். தமிழைக் காக்க வேண்டியது இந்தியர்கள் அனைவரின் கடமை. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், உத்தர பிரதேச ஆளுநர், முதல்வர் மற்றும் தமிழகத்திலிருந்தும் அறிஞர் பெரு மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இந்தி, உருது, அரபி உள்ளிட்ட 13 மொழிகளில் மொழி பெயர்த்துள்ள திருக்குறள் நூல்களை பிரதமர் வெளியிட்டார். தமிழர்களின் கலாச்சாரம் குறித்த குறும்படத்தையும் பார்த்தார்.

தொடக்க விழாவில் பிரபல இசையமைப்பாளரும், எம்.பி.யுமான இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனனி, ஜனனி... என்ற பாடலை இளையராஜா பாடினார். தொடர்ந்து, `நான் கடவுள்' படத்தில் இடம்பெற்ற "ஓம் சிவோஹம்" பாடலை, தனது குழுவினருடன் சேர்ந்து அவர் பாடினார். அவரது இசைக் கச்சேரியை பிரதமர் மோடி உள்ளிட்டோர் மெய்மறந்து ரசித்தனர்.

நிகழ்ச்சியில் இளையராஜா பேசும்போது, "அறிவியல் முன் னேற்றம் இல்லாதபோதே, காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்க கருவி செய்வோம் என்று பாரதி பாடினார். கர்நாடக சங்கீத மாமேதை என்று போற்றப்படும் மூம்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் காசியில் பல இடங்களில் பாடியுள்ளார். பெருமை மிகுந்த காசி நகரில் தமிழ்ச் சங்கமத்தை நடத்த வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு தோன்றியது குறித்து வியக்கிறேன்" என்றார்.

மத்திய கல்வி அமைச்சகத்தால் இந்த சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐஐடி மெட்ராஸ் அதன் இணையதளமான www.kashitamil.iitm.ac.in மூலம் மாணவர்கள், கைவினைஞர்கள், இலக்கியவாதிகள், ஆன்மீக வணிக ஆசிரியர்கள், பாரம்பரியம், தொழில்முனைவோர், கோவில்கள், கிராமப்புறங்கள் என ஒவ்வொரு குழுவிலும் 210 பேர் வீதம் 12 குழுக்களாக மொத்தம் 2500 பிரதிநிதிகளை வாரணாசிக்கு தேர்ந்தெடுத்து அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்தது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் தனது வளாகத்தில் சங்கமத்தை ஒட்டிய விழாவை நடத்தியது. அறிஞர்கள், வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இடையே அவர்களின் நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதற்கும் ஒவ்வொரு குழுவின் பாடப் பகுதிக்கும் என 12 கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரதிநிதிகள் தவிர சில நூறு நிபுணர்கள் விஐபிக்கள் மற்றும் விவிஐபிகள் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலைகள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து வகையான கலைகளையும் காட்சிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகள் மாதம் முழுவதும் ஒவ்வொரு மாலையும் நடைபெற்றன, இதற்காக கலாச்சார அமைச்சகம் தமிழகத்திலிருந்து சுமார் 750 கலைஞர்களை காசிக்கு அழைத்து வந்திருந்தது. தமிழ்நாட்டின் அனைத்து வகையான கைவினைக் கைத்தறிகள் மற்றும் தனித்துவமான தயாரிப்புகளின் கண்காட்சிகள் மற்றும் விற்பனைக் கூடங்கள் மற்றும் ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்ப்புடன் கூடிய செம்மொழி தமிழ் நூல்களின் ஸ்டால்கள் இத்திருவிழாவின் மற்றொரு ஸ்பெஷலாக இருந்தன. இருந்தாலும், தமிழ்நாட்டின் உணவுக் கூடங்கள் ஒரு ஸ்டார் அந்தஸ்த்தாக அனைவரையும் ஈர்த்தன. பயிலரங்குகள், புத்தக வெளியீடு ஆகியவை விழா நடைபெறும் இடத்தில் நடைபெற்றன. கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் விஸ்வநாத் காரிடார் மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு மையங்களிலும் நடைபெற்றன.

அடுத்த இதழில் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' (ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்) என்ற உணர்வை எவ்விதம் இந்த சங்கமம் எடுத்துக்காட்டிட முயற்சித்தது பற்றி பார்ப்போம். இந்த வகையில் இந்த முயற்சி வரலாற்றில் இடம் பெற வேண்டியதே.