தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 2

20230102223240174.jpg

சங்க காலத்தில் அழிந்து போனதாக கூறப்பட்ட ஒரு ஆறு இன்றும் நம் அருகிலேயே ஓடுகிறது என்ற பீடிகையோடு போன வாரம் நிறுத்தியிருந்தீங்க.

போன வார பகுதியில் திணைகள் நான்கு என்றீர்களே? ஐந்தல்லவோ? என்றேன்.

பரணீதரன்: தமிழகத்தில் பாலை நிலம் கிடையாது. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெப்பத்தால் தன்னிலை இழந்து பாலையாக மாறும். இதை அன்று கடறு, பாலை என்று அழைத்தனர். நாம் இன்று பாலைவனம் (பாலை காடு (முல்லை)) என்று அழைக்கிறோம். இந்த பாலை ஒரு தற்காலிக நிகழ்வே. கார்காலம் (மழைக்காலம்) வந்தவுடன் இந்த நிலை மாறி மீண்டும் குறிஞ்சி முல்லையாக மாறும். இதை

மாயோன் மேய காடு உறை உலகமும்

சேயோன் மேய மை வரை உலகமும்

வேந்தன் மேய தீம் புனல் உலகமும்

வருணன் மேய பெரு மணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே என்று தொல்காப்பியர் கூறுகிறார்

இதை சிலப்பதிகாரமும்

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

என்று கூறுகிறது”.

இப்படி தற்காலிக நிலப்பரப்பாக இருப்பதால் நான் இதை கூறவில்லை என்கிறார் அவரே தொடர்ந்து.

அவரே அடுத்த தலைப்பை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்.

எழுத்து என்பது ஒரு மொழிக்கு முதல் உறுப்பாகும். அந்த எழுத்தில் இருந்து உருவாவது சொல். சொற்கள் தனித்து நின்றோ அல்லது சேர்ந்தோ ஒரு பொருளைக் கொடுக்கும். இது இயல்பாக நடப்பதால் இம்மூன்றும் இயல் தமிழில் (இயற்றமிழ்) இருக்கும். இந்த சொற்களையும் பொருளையும் மனிதர்கள் சுவைத்து மகிழ பண் அமைத்து, இசைக் கருவிகளால் இசைத்து பாடுவது யாப்பு ஆகும். யாப்பு பொதுவாக இசைத் தமிழில் வரும். இப்போது இயலில் உள்ள செய்திகளை எடுத்து இசையை கோர்த்து மனிதர்கள் புரிந்து கொள்வதற்கு அந்த செய்யுள்களில் வரும் மாந்தர்களை போல் நடித்து, தன்னுடைய கற்பனை திறனை ஏற்றி (அணி) மக்களை மகிழச் செய்வதே நாடகத்தமிழ். அணி பொதுவாக சொல்லுக்கும் பொருளுக்கும் உருவத்தையும் உருவகத்தையும் கொடுக்கும். இயல் தமிழ் மனதிற்கும், உடலுக்கும் இன்பத்தை கொடுக்கும். இசைத்தமிழ் செவிக்கும்(காது) சேர்த்து இன்பத்தை கொடுக்கும். நாடகத் தமிழ் இவைகளோடு கண்ணிற்கும், மூக்கிற்கும் (நாடக மேடைகளில் போடப்படும் அகில் புகை, சந்தனம் போன்றவை) , வாயிற்கும் (நாடக இடத்தில் கொடுக்கபடும் உணவு) இன்பத்தை கொடுக்கும். இவ்வாறாக புலன்களுக்கும் அறிவிற்கும் விருந்தை கொடுப்பது இயல் இசை நாடகமாகும். மூன்று தமிழில் ஐந்து இலக்கணமும் கலந்துள்ளது.

தமிழ் இலக்கணம் எவ்வளவு பழமையானது ?

புறப்பொருள் வெண்பா மாலை - ஐயனாரிதனார்

பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்

வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு

முன் தோன்றி மூத்த குடி!

இந்த செய்யுளின் விளக்கம் யாதெனில் பொய்கள் அகன்று உண்மையான புகழ் இந்த உலகில் வெளிப்படுவது ஒன்றும் வியப்பான செயல் இல்லை. இந்த பூமி எனப்படும் வையகத்தை மூடி இருந்த கடல் நீர் விலகி கற்களால் உருவாக்கப்பட்ட மலைகள் வெளிப்பட்டு அவை காற்றின் உராய்வு நாள் மண் ஆவதற்கு முன்னே வாள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்த தெரிந்த மூத்த குடி என்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது.

குறிஞ்சி என்கிற மலைகளுடைய கல்பகுதியில் தமிழ் மக்கள் உருவாகி பிறகு காடுகள் அடங்கிய முல்லை பகுதிகளுக்கு வந்து அதன் பிறகு மண் நிறைந்த மருத நிலப்பகுதிக்கும் நெய்தல் நில பகுதிக்கும் மக்கள் வந்ததை இவ்வாறு கூறுகின்றனர் என்றும் சிலர் கூறுகிறார்கள். பல்வேறு இலக்கண இலக்கிய நூல்கள் தொன்மதுரை பற்றியும் கபாடபுரம் பற்றியும் நமக்கு பல்வேறு விதமான செய்திகளை கூறுகிறது. வடமொழி இலக்கியங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூட பாண்டியர்கள் மற்றும் பாண்டிய நாட்டின் செய்திகள் இருக்கிறது. எடுத்துக்காட்டாக வால்மீகி ராமாயணத்தில், சுக்ரீவன் அனுமனுக்கு தெற்கில் உள்ள நாடுகளைப் பற்றி கூறும்பொழுது கபாடபுரத்தை பற்றி இவ்வாறு கூறுகிறார்.

வால்மீகி

ததோ ஹேமமயம் திவ்யம் முக்தாமணி விபூஷிதம்

யுக்தம் கவாடம் பாண்ட்யானாம் கடா த்தரக்ஷ்யத வானராஹா

‘பொன்னிறைந்ததாயும் அழகுடையதாயும், முத்து மயமான மணிகளால் அலங்கரிக்கப் பெற்றதாயும்

பாண்டியர்க்குரியதுமாகிய கவாடத்தைப் பார்க்கக் கடவாய் வானர வீரனே.’ தொன்மதுரையானது கடலுக்குள் சென்றதைப் பற்றிய செய்திகள் உள்ளது. பஃறுளி ஆறு என்கிற பல் துளி ஆறும், பல மலைகள் சேர்ந்த அடுக்கமும், குமரிக்கோடும் கடல்கோள் பற்ற பாண்டியர்கள் தென்திசையில் இருந்து வடதிசை நோக்கி வந்து கங்கையையும் இமயத்தையும் வெற்றி கொண்டு தென்னகத்தை ஆண்டனர் என்கிற செய்தியானது சிலப்பதிகாரத்தில் உள்ளது.

கீழே உள்ள படங்களில் பாரதம் முழுதிலும் பல இடங்களில் நிலம் நீருக்குள் சென்றுள்ளது. இதில் தென் தமிழகத்தில் சுமார் 120 லிருந்து 150 கிலோமீட்டர் கடலுக்குள் சென்று இருக்கிறது. இதை சரி கட்டவே பாண்டியர்கள் சேரர் மற்றும் சோழர்களின் நிலத்தை போரிட்டு பாண்டி நாட்டுடன் சேர்த்துக் கொண்டனர். கன்னியாகுமரியில் இருந்து மதுரை சுமார் 215 கிலோமீட்டர். இந்த கணக்கை பார்த்தால் சங்க இலக்கியங்கள் கூறப்பட்டுள்ள சான்றுகள் சரியென்று தோன்றுகிறது. கீழே உள்ள படங்களில் தென் தமிழகத்தில் எத்தனை கிலோமீட்டர் தண்ணீரில் மூழ்கியுள்ளது என்று காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திலும் உள்ள வரிகள் கிலோமீட்டர் கணக்கை காட்டுகிறது. இதை நீங்கள் கூகுள் மேப் செயலியிலும் (அப்ளிகேஷன்) சென்று பார்க்கலாம்.

20230102223537141.jpg

20230102223630381.jpg

20230102223710458.jpg

20230102223743938.jpg

20230102223819850.jpg

இளங்கோவடிகள்

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி

இந்த பஃறுளி ஆறு இன்றும் கூட குமரி மாவட்டத்திலிருந்து பறளியாறு என்ற பெயரில் மகேந்திர கிரியில் உற்பத்தி ஆகிறது. அது தாமிரபரணியில் கலந்து கடைசியில் இந்திய பெருங்கடலில் இப்பொழுது கலக்கிறது ஒரு காலத்தில் இந்த ஆறானது குமரிக்கு தெற்கே உள்ள நிலத்தில் பாய்ந்து உள்ளது அதனுடைய ஆற்றங்கரையிலேயே முற்கால பாண்டியர்கள் முதல் சங்கம் வைத்து ஆட்சி செய்துள்ளனர்.

20230102225844467.jpg

பன்மலை அடுக்கம் என்பது கிழக்கு தொடர்ச்சி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளைப் போன்ற தொடர்ச்சி மலைகள். மகேந்திர கிரி என்ற மேற்கு தொடர்ச்சியில் உள்ள மலைத்தொடரின் பல பகுதிகள் இன்றும் இந்திய பெருங்கடலுக்குள் இருப்பதாக கூறுகின்றனர். இவ்வாறாக பஃறுளி ஆற்றுக்கும் பன்மலை அடுக்கத்திற்கும் இன்றும் சான்று உள்ளது.

இன்றைய பஃறுளி ஆற்றினைப்பற்றிய புகைப்படங்கள் கீழே உள்ளன.

20230102223927564.jpg

20230102224010999.jpg

20230102224133591.jpg

இந்த ஆறு உற்பத்தியாகும் மகேந்திரகிரி மற்றும் அதன் தொடர்புடைய நிலப்பரப்புகள், அதனுடைய இன்றைய நிலவரங்கள் ஆகியவற்றின் படங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

20230102224504387.jpg

20230102224541569.jpg

இதுவரை நாம் பார்த்த அனைத்தும் தமிழ் மற்றும் தமிழர் வரலாறு.

இனி நாம் பார்க்கப் போவது தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கண வரலாறு.

சிவபெருமான் பார்வதி தேவி திருமணம் கையிலையில் நடந்தது. அதைக் காண அனைத்து மக்களும் கையிலைக்கு வந்தனர். அதனால் வடக்கு திசை தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. அதை சரி செய்வதற்காக சிவபெருமான் அகத்திய முனிவரை தெற்கு செல்ல பணித்தார்.

20230102225346539.jpg

20230102225616654.jpg

அகத்திய முனிவரும் அவரது மாணவர்கள் புடைசூழ தெற்கு நோக்கி வந்தார். அவர் வரும் வழியில் பல்வேறு செயல்களை செய்தார். தெற்கு வந்து அவர்கள் அங்கு நிலவிய தட்பவெட்ப நிலைக்கேற்ப (இரண்டு பக்கங்களிலும் பல்வேறு மலைகள், மேலும் கீழும் பெரிய ஆறுகள், அதைத் தவிர கடலும் சூழ்ந்து இருந்த பகுதி. அதனால் மிகுந்த வெப்பம் உள்ள பகுதி பழைய தமிழ் நிலங்கள்.) கடுமையான வல்லின எழுத்துக்களை குறைத்தும் மென்மையான எழுத்துக்களையும், இடையின (வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் இடைப்பட்ட எழுத்துக்கள்) எழுத்துக்களையும் மிகுந்து எடுத்தும் கையாண்டனர். அதனாலேயே சுத்தமான தமிழ் சொற்களில் வல்லின எழுத்துக்கள் குறைந்தும் மெல்லின மற்றும் இடையின எழுத்துக்கள் மிகுந்தும் காணப்படுகின்றன.

தமிழ்ச்சங்கம் என்றால் என்ன, நம்மிடம் உள்ள பழம்பெரும் நூல்கள் என்னென்ன, தமிழர் நெறிக்கும் இலக்கணத்திற்கும் என்ன தொடர்பு போன்ற தகவல்களை அடுத்த வாரம் பார்ப்போம்.