தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் -70- - ஆர் . ரங்கராஜ்

பராஜிதவர்ம பல்லவன் எடுத்த கற்கோயில் இது ஒன்றேயாகும் -- திருத்தணி வீரட்டானேசுவரர்

20230103180325634.jpg

பல்லவ பேரரசின் கடைசி அரசரான அபராஜிதவர்ம பல்லவன் காலத்தில் நம்பியப்பி என்பவரால் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் தூங்கானைமாட அமைப்புடையது. சிவ பெருமான் தணிகை முருகன் ஓங்காரப் பொருளுரைத்த திறன் கேட்டு, உவகை பொங்க பெருமுழக்கமிட்டு சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எனவே, இங்கு எழுந்தருளியுள்ள இறைவர் வீரட்டகாசர் என்னும் பெயர் பெற்றார். தணிகைப் புராணம் அருளிய கச்சியப்ப முனிவர் வீரட்டகாசப் படலத்தில் 128 பாடல்களில் இத்தலத்து இறைவனைப் பாடியுள்ளார்.

பல்லவர்களின் கலைச் சிறப்பை உலகுக்கு எடுத்துக்கூறும் இடமாக, தொண்டை மண்டலம் திகழ்கிறது. அவர்களுடைய கட்டக் கலை, ஓவியக் கலை, சிற்பக்கலை என அனைத்து அம்சங்களையும் இப்பகுதியில் பரவலாகக் காண்கிறோம். இத்தகு பல்லவ கலைச் செல்வங்களில் ஒன்றான வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருத்தணி நகரில் அமைந்துள்ளது. இது பல்லவர்கால ஆட்சியின் இறுதியில் ஆண்ட அபராஜிதவர்மன் காலத்தியது ஆகும்.

அபராஜித வர்மன் பல்லவன்

பல்லவ மன்னர்களின் இறுதிக்கால மன்னனாக ஆட்சி செய்தவன் அபராஜிதவர்மன். இவன் அபராஜித விக்கிரம வர்மன் என்றும் அழைக்கப்பட்ட இவனது ஆட்சிக் காலம் கி.பி. 885 முதல் கி.பி.903 வரை ஆகும். சோழ பாண்டிய மன்னர்களின் ஆதரவால் ஆட்சியில் அமர்ந்தவன், நென்மேலி வைகுந்தவாசப் பெருமாள் கோயிலுக்கும், நம்பி அப்பு தலைமையில் திருத்தணி வீரட்டானேஸ்வரர் கோயிலுக்கும் இவன் ஆற்றிய பணிகளைப் பற்றி மாங்காடு வெள்ளீஸ்வரர்கோயில், உத்திரமேரூர்,திருக்கழுக்குன்றம் ஆகிய ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் காணலாம்.

தேவ கோட்டங்களில் கணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகியோரையும் பிரகாரத்தில் சப்தமாதர் சிற்பங்களையும் வழிபாட்டுக்காக அமைக்கும் பாணி இவனது காலத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது..

தொன்மைச் சிறப்பு

"தணிகை வீரட்டேசுவரர் ஆலயத்தின் தென்சுவரில் காணப்படும் கல்வெட்டின் மூலம் (கி.பி. 913) நம்பி அப்பி என்பவன் மூலம் அபராஜிந்த வர்மனால் இவ்வாலயம் கட்டப்பட்டதையும், திருப்பணி மற்றும்
பூசனைக்காகக் கொடை அளிக்கப்பட்டதையும் அறியலாம். இதே பகுதியில் காணப்படும் மற்றொரு கல்வெட்டில் இறைவன் பெயர் செஞ்சடை ஈசர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது; மேலும் பராந்தகச் சோழன் (கி.பி. 907), உத்தம சோழன் (கி.பி. 986), இராஜகேசரி வர்மன் (கி.பி.985), முதலாம் இராஜேந்திரன் (கி.பி. 1022), முதலாம் இராஜாதிராஜன் (கி.பி. 1049), விக்கிரம சோழன் (கி.பி. 1129). விஜயகண்ட கோபாலதேவன் (சி.பி. 1263), மாறவர்மன் (சி.பி. 1298) எனப் பல்வேறு மன்னர்கள் இந்தச் சிவாலயத்திற்கும், நந்தியாற்றின் வடகரையில் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி திருக்கோயில் மற்றும் விஜயராகவப் பெருமாள் ஆலயங்களுக்கும், திருப்பணி செய்து கொடையளித்த விவரங்களையும் அறிய முடிகிறது", என்று விவரிக்கிறார் திரு ஆ. சரவண குமார், வரலாற்று ஆய்வாளர், சென்னை.

அபராஜிதவர்மனின் பதினெட்டாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டின் மூலம் (கி.பி. 903) நம்பி அப்பி என்பவரால் இக்கோயில் கற்றளியாக அமைக்கப்பட்டதை அறிகிறோம். இச்செய்தி.

"திருந்து திருத்தணியற் செஞ்சடை யீசற்குக்
கருங்கல்லாற் கற்றளியா நிற்க - விரும்பியே
நற்கலைகளெல்லா நவின்ற சீர் நம்பியப்பி
பொற்பமையச் செய்தான் புரிந்து"


என்னும் பாடலாகக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறார் திரு ஆ. சரவண குமார்.


(தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)