தொடர்கள்
பொது
காணாமல் போகும் கடற்கரைகள்...!- ஆர்.ராஜேஷ் கன்னா

20230102153910561.jpg

படம்: மேப்ஸ்

சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகள் பல இன்று நிஜமாகியிருக்கின்றன. ஜீனோ போல இன்று சோஃபியா ரோபோட் சகலமும் அறிந்திருக்கிறது.

ஒரு கதையில் கிளைமாக்ஸில் நிலாவும் ஆத்மாவும் நீர்மூழ்கிக் கப்பலில் சென்னையை சுற்றிப் பார்ப்பது போல முடியும். வயிற்றில் பகீர் என்று ஒரு உணர்வு எழும். இந்தக் கதை ஏனோ நினைவுக்கு வந்து தொலைகிறது.

உலக வெப்பமயமாக்கலினால் சென்னை அதன் சுற்றுபுற மாவட்டங்களில் அமைந்திருக்கும் கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் பாதிக்கப்படும் என ஆய்வறிக்கைகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

சென்னை,திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளை விண்ணில் இருந்து 5 இந்திய செயற்கைகோள்கள் படமெடுத்து சமீபத்தில் அனுப்பியுள்ளது.

செயற்கைகோள்கள் எடுத்தபடங்கள் அழகாக இருந்தாலும் சென்னை அதனை ஓட்டியுள்ள கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பு நிகழந்து வருவதை கண்கூடாக விளக்குகிறது.

கடல் அரிப்பினை தடுக்க கடற்பரப்பின் மணல் பகுதிகளில் பாறாங்கல் கொட்டப்பட்டும், துண்டில் வளைவும் அமைக்கப்பட்டுகடல் அரிப்பு ஏற்படாமல் இருக்கும் என அரசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

20230102073526736.jpg

சென்னை மற்றும் வட சென்னை பகுதியில் அமைந்திருக்கும் துறைமுக கடற்கரை பகுதிகளில் 26 கிமீ அளவிற்கு செயற்கை மணல் திட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கடலரிப்பு சுவர்கள் கட்டப்பட்டதும் இதனை ஓட்டியுள்ள கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பு நடைபெற்றுள்ளது.

தமிழக கடற்கரை 991.5 கிமீ தூரம் கொண்டது.இதில் 134 கிமீ கடல் அரிப்பை தடுக்கும் செயற்கை கட்டமைப்புக்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக கடற்கரை பகுதிகள் நாட்டிலே நான்காவதாக மிகவும் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கிறது.

சென்னையில் மெரினா கடற்கரை உட்பட 25 கிமீ தூரம் கடற்கரை பகுதி உள்ளது.சென்னையில் தெற்கு கடற்கரை ஓர பகுதியில் துறைமுகம் அமைந்துள்ளது. ஆனால் இதன் வடக்கு கடற்கரையோர பகுதிகள் கடல் அரிப்பால் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது.

20230102073616370.jpg

சென்னையில் ஏற்கனவே கூவம் , அடையார் ஆறுகளில் இருக்கும் நீர் மனித பயன்பாட்டிற்கு லாயிக்கற்று ஆறுகள் இறந்துவிட்டது என்று சமீபத்தில் ஆய்வு வெளியானது. இந்த ஆய்வு படி இந்த இரு ஆறுகளின் தண்ணீர் கடல் கலப்பது முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது.

20230102153951153.jpg

இதனால் வெள்ள காலங்களை தவிர மற்ற நேரங்களில் கூவம் , அடையார் நதிகளில் ஓடும் சாக்கடை நீர் கடலில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது .ஆற்று நீரும் , கடலும் ஓன்றோடு கலப்பது தான் சுற்றுசுழலுக்கு நல்லது. ஆனால் சென்னையில் கூவம் அடையாறு நதிகள் நீர் கடலில் கலக்காமல் இருப்பதால் சுற்றுசூழுலுக்கு பெருத்த பாதிப்பு என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட கடற்கரை அரிப்புக்கு காரணம் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடசென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் மற்றும் விரிவாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.அத்தோடு இந்த புதிய வடசென்னை துறைமுகம் அமைந்த பிறகு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம் அமைந்திருக்கும் கடற்கரை ஓரங்கள் கூட கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

20230102074018378.jpg

காஞ்சிபுர மாவட்டத்தில் 84 கிமீ கடற்கரை பகுதியில் 53 கிமீ கடற்பரப்பு கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுர மாவட்டத்தில் மகாபலிபுரம் பகுதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி நடவடிக்கையால் மூன்றாவதாக பெரிய அளவில் கடல் அரிப்பினால் இந்த மாவட்ட கடற்பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 272 கிமீ கடற்கரை பகுதியில் 109 கிமீ தூரமும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 126 கிமீ கடற்கரை பகுதியில் 60 கிமீ தூரம் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை நீலாங்கரை மற்றும் அடையாறு கடற்கரை ஓரத்தில் நவீன லக்சரி வில்லா வீடுகள் கட்டுமானங்கள் மற்றும் அதிகளவு கார்பன் வெளியிட்டால் கடல் அரிப்பு நிகழ்ந்து இந்த பகுதியில் கடல் மட்டம் உயர்ந்து கடல்நீர் உள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது . இதே நிலைதான் சென்னை மெரீனா கடற்கரைக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கையாக உள்ளது.

20230102074047977.jpg

இத்துடன் 2025 ஆண்டிற்க்குள் சென்னையின் கடற்கரை பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கடல்மட்டம் உயர்ந்து 7 செமீ வரை உயரும் . இந்த நூற்றாண்டு இறுதிக்குள் சென்னையின் கடற்கரையில் இருந்து 1 கிமீ தூரத்திற்கு கடல்நீர் மட்டம் உயர்ந்து கடல்நீர் கிட்டதட்ட 77.88 செமீ உயரும் என ஆய்வுகள் வெளியாகி உள்ளது.

கடலரிப்பினை தடுக்க கடற்கரை பகுதிகளில் செயற்கை பாறைகள் உருவாக்கி இருக்கும் பாண்டிச்சேரி மாநிலம் தனது கடற்கரை பகுதி கடல் அரிப்பில் இருந்து தடுத்துள்ளது என்பது ஒரு ஆறுதலான செய்தி.

கடலில் புதிதாக நாம் நமது பயன்பாட்டிற்காக கடலின் அலைகள் செல்லும் பாதையை மாற்றி கல்மேடாக்கி புதிய கட்டுமானங்களை ஏற்படுத்தினால் அது நமது அடுத்த கடற்கரை எல்லை பகுதியில் தனது அலையின் வேகத்தினை கூட்டி வேகமாக கடற்கரைபகுதியை கடலரிப்பின் முலம் அழித்து கபளீகரம் செய்து விடுகிறது.தமிழகத்தில் 22 கடற்கரை பகுதிகள் அதிகளவு கடலரிப்பு ஏற்படும் .அத்துடன் 8 இடங்கள் கடற்கரை மணல் திட்டுகளாக மாறும் அபாயமான ஹட் ஸ்பாட் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

20230102154021122.jpg

சென்னை , திருவள்ளுர் , காஞ்சிபுரம் மாவட்டங்களில் 150 கிமீ தூர கடற்கரை ஒரத்தில் 50 சதவீதம் கடலரிப்பு ஏற்பட்டு கிட்டதட்ட இந்த பகுதியில் கடற்கரை ஓர மணல் பகுதிகள் 747 ஏக்கர் காணாமல் கடல் நீர் உள்ளே சென்று இருப்பது கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCCR) நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடல் அன்னையை நல்லவிதமாக நாம் பயன்படுத்த தவறினால் அது திருப்பி தாக்கும் போது சென்னை, திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கடற்கரைகள் கடலரிப்பால் கடலில் முழ்கிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

இயற்கையை பகைத்தால் அது திருப்பி தாக்கினால் தாங்க முடியாது!