தொடர்கள்
கவர் ஸ்டோரி
அதானிக்கு வந்த சோதனை- (இந்தியாவுக்கும் ?) -K.பாலசுவாமிநாதன்

யார் இந்த அதானி?

20230102182134866.jpg

இந்தியாவின் கோடீஸ்வர .தொழிலதிபர்தான் 60 வயதாகும் கௌதம் அதானி, ஒரு பரம்பரை பணக்காரர் அல்ல. அதானியின் தந்தை ஒரு சாதாரண துணி வியாபாரி தான். ஆனால் அதானியின் சொத்தின் இன்றைய மதிப்பு 8,720 கோடி டாலர்கள். அதானியின் கூட பிறந்தவர்கள் மொத்தம் ஏழு பேர்.அதானி கல்லூரி படிப்பை தொடர விருப்பமின்றி பட்ட படிப்பின் இரண்டாம் ஆண்டு கல்லூரியை விட்டு விலகினார் அப்போதே தான் ஒரு பெரிய தொழிலதிபராக வேண்டும் என கனவு கண்டார். 1978 ஆம் ஆண்டு குஜராத்தில் இருந்து மும்பை வந்து வைர வியாபாரத்தில் ஈடுபட்டார். பின் தன் சகோதரரின் பிளாஸ்டிக் தொழிற்சாலையின் நிர்வாகத்தை கவனிக்க தொடங்கினார்.அவரது வெற்றிப் பயணம் அங்கே தான் ஆரம்பித்தது. வெளிநாடுகளில் இருந்து பிளாஸ்டிக் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து சிறு தொழிற் கூடங்களுக்கு விற்பனை செய்தார். அதானி எக்ஸ்போர்ட்ஸ் என்ற அவரது முதல் நிறுவனம் (பின்னால் அது அதானி என்டர்பிரைசஸ் என மாறியது )அவரது அசுர வளர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டது. 1992 ம் ஆண்டு தாராளமயமாக்கம்(Liberalisation) கொள்கையை இந்தியா கடைப்பிடிக்க ஆரம்பித்த சமயத்தில், உலோகம், துணி மற்றும் விவசாய பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு பல நிறுவனங்களை தொடங்கினார். 1995 ம் ஆண்டு குஜராத்தின் முந்த்ரா(Mundra) துறைமுகத்தை நிர்வகிக்கும் உரிமை இவருக்கு கிடைத்தது. அடுத்த ஆண்டு தனியார் அனல் மின் உற்பத்தி ஆலையை நிறுவினார்.சுமார் 4600 மெகாவாட் அனல் மின்சாரம் தயாரிக்கும் அதானி குரூப்பின் இந்த நிறுவனம், இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் நிறுவனம். 2009 ம் ஆண்டு அதானி சர்வதேச தொழிலதிபராக விஸ்வரூபம் எடுத்து ஆஸ்திரேலியா நாட்டின் அபோட் (Abbort port)துறைமுகம் மற்றும் நியூசிலாந்தின் கார்மிக்கெல்(Carmichael) துறைமுகத்தின் நிர்வாகத்தையும் கைப்பற்றினார். 2020 ம் ஆண்டு சுமார் 600 கோடி டாலர் மதிப்புள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி ப்ராஜக்டும் இவர் கைக்கு வந்தது. இதெல்லாம் போதவில்லை அதானிக்கு. அதே ஆண்டு(2020) மும்பை விமான நிலையத்தின் 74 சதவீத பங்குகளை வாங்கி அதன் நிர்வாகத்தை தன் கீழ் கொண்டு வந்தார். 2022 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் செல்வந்தர்களில் முதலானவராக ஆனார். உலகிலேயே பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தார் அதானி என்று பிரபல Fortune நிறுவனம் அறிவித்தது. கடைசியாக ஊடகத்துறையை ஏன் விட்டு வைப்பானேன் என்று 2022-ல் NDTV யின் 29.18 சதவீத பங்குகளை மறைமுகமாக வாங்கியதோடு மீதி பங்குகளையும் விரைவில் வாங்க திட்டமிட்டுள்ளார். விரைவில் NDTV யின் 64.71% பங்குகள் அதானியின் வசமாகும்.

இந்த வருடம் ஜனவரி மாதம் ஹின்டன்பர்க் ரிசர்ச் (Hindenburg Research) நிறுவனம் பயங்கரமான குற்றச்சாட்டுகளை அதானி குழுமத்தின் மீது சுமத்தியுள்ளது.

ஹின்டன்பர்க் ரிசர்ச் பற்றி இப்போது பார்ப்போம். நாதன் ஆண்டர்சன் என்பவரால் 2017 ஆம் ஆண்டு நியூயார்க் சிட்டியில் தொடங்கப்பட்டது. இது ஒரு தனியார் நிறுவன அமைப்பாகும். இந்த நிறுவனம் கார்ப்பரேட் கம்பெனிகளில் செய்யப்படும் முதலீடுகளை ஆராய்ந்து உலகில் உள்ள பங்குதாரர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் முதலீடு பற்றிய தகவல்களையும் தவறுகளையும் சுட்டிக் காட்டுவதற்காக நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் மொத்த எண்ணிக்கையே 9 தான். பங்கு சந்தையில் short selling என்று பணம் சம்பாதிக்கும் வழிமுறை ஒன்று உண்டு.

Short Selling என்றால் என்ன?

பொதுவாக பங்குகளை வாங்குவோர் அந்தப் பங்குகள் விலை ஏறும் என்று கணக்கிட்டு பொறுமையுடன் காத்திருந்து, அந்த பங்குகளின் விலை ஏறும்போது விற்றுவிட்டு லாபம் சம்பாதிப்பார்கள். ஆனால் short sellers விஷயம் இதற்கு நேர்மாறானது சிலர் பங்கு தரகர்களிடமிருந்து( sharebrokers) பங்குகளை சில காலத்திற்கு கடனாக வாங்கி அதை உடனே விற்றுவிட்டு, விற்ற பங்குகளின் விலை எப்போது குறையும் என்று காத்திருப்பார்கள். அந்த பங்குகளின் விலை குறையும்போது அதை குறைந்த விலைக்கு வாங்கி லாபம் பார்த்துவிட்டு வாங்கிய பங்குகளை கடன் வாங்கிய தரகரிடமே திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.

உதாரணமாக ஒரு பங்குத் தரகரிடம் இருந்து ஒரு பங்கின் விலை 100 ரூபாய் என்ற அப்போதைய விலையில் 50 பங்குகளை கடனாக பெறுகிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். கடனாக வாங்கிய பங்குகளை உடனே மார்க்கெட்டில் விற்று 5000 (100 ×50) ரூபாய் பெற்றுக் கொண்டு காத்திருப்பார்கள். குறுகிய காலத்தில் இவர் வாங்கிய பங்குகளின் விலை 80 ரூபாயாக குறைந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே இவர்கள் 50 பங்குகளை பங்கு ஒன்று 80ரூபாய் என்ற கணக்கில் வாங்கினால் 4000 தான் கொடுக்க வேண்டும், வாங்கிய பங்குகளை அந்தப் பங்குத் தரகரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு இவர்கள் ரூபாய் 1000 லாபம் பார்த்து விடுவார்கள். இது ஒரு ஆபத்தான பங்கு மார்க்கெட் விளையாட்டு தான். இவர்கள் கடனாக வாங்கிய பங்குகள் விலை ஏறிவிட்டால் இவர்கள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாவார்கள். ஆனால் எந்த பங்குகளின் விலை குறையும் என்று ஆராய்ச்சி செய்த பின்னரே இதில் இறங்குவார்கள்.

20230102182512522.jpg

அதானியின் மேல் குற்றம் சாட்டியுள்ள ஹின்டன் பர்க் நிறுவனத்தின் வருமானமும் இந்த short selling மூலமாகத்தான்.

சரி அதானி குழுமத்தின் மீது இவர்கள் சுமற்றியுள்ள குற்றச்சாட்டுகள் என்ன?

ஹின்டன்பர்க் ரிசர்ச் கூறும் முதல் குற்றச்சாட்டு:

அதானி குழும நிர்வாகத்தினர் பலர் சட்டமீறலுக்காக அரசாங்க வருமான புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். குறிப்பாக அதானியின் சகோதரர் சமீர் வோரா, வைர வியாபாரத்தில் முறைகேடுகளுக்காக Department of Revenue Intelligence (DRI) ஆல் குற்றம் சாட்டப்பட்டவர்.

அதானி குழுமத்தின் பதில்:

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட் உட்பட அனைத்து உயர்மட்ட குழுக்களும் நிராகரித்துள்ளன.

ஹின்டன்பர்க் ரிசர்ச் இரண்டாவது குற்றச்சாட்டு:

கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, பல பங்கு பரிமாற்றங்களை அதானி குடும்பத்துடன் செய்துள்ளார். அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. சட்டப்படி இது குற்றம். அதானி குழுமத்தின் பங்கு விலைகளை ஏற்றுவதற்காக,பினாமி நிறுவனங்கள் மூலமாக அதானி நிறுவனத்திற்கு நிதி முதலீடுகளை கொண்டு வந்துள்ளார்.

அதானி குழுமத்தின் பதில்:

வினோத் அதானி, அதானி குழுமத்தின் எந்த நிறுவனத்திலும், எந்த பொறுப்பிலும் இல்லை

."எங்கள் நிறுவனத்தில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவரின் தனிப்பட்ட விவகாரங்களை நாங்கள் சட்டப்படி தெளிவாக்க வேண்டிய அவசியம் இல்லை".

குற்றச்சாட்டு மூன்று:

அதானி குழுமத்திற்கும் அடி கார்ப்(Adi Corp) என்ற நிறுவனத்திற்கும் ஒரு கள்ளத் தொடர்பு இருக்கிறது சொற்ப லாபமே ஈட்டி வந்த அடி கார்ப் நிறுவனத்திற்கு அதானி குழுமம் 8.7 கோடி டாலர் தொகையை கடனாக அளித்துள்ளது. இதே அடி கார்ப் நிறுவனம் கடனாக வாங்கிய 8. 7 கோடி டாலர் தொகையில் 98 சதவீதம் அதானி பவர்(Adani power) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. அதானி குழுமத்தின் பல நிறுவனங்களின் நிதியை இந்த அடி கார்ப் நிறுவனம் மூலமாக பெற்றுள்ளது.

அதானி குழுமத்தின் பதில்:

" அடி கார்ப் அதானி குழுமத்தின் நிறுவனம் அல்ல அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி நாங்கள் எப்படி தகவல் தெரிவிக்க முடியும்?"

ஆனால் 8.7 கோடி டாலர் கடனாக அடி கார்ப் நிறுவனத்திற்கு ஏன் கொடுக்கப்பட்டது என்பதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

நான்காவது குற்றச்சாட்டு:

அதானி இன்ஃபிரா (Adani Infra) என்ற அதானியின் நிறுவனத்திற்கு சுமார் 8 கோடி டாலர் தொகை மொரிசியஸ் நாட்டில் இருந்து ஒரு வெள்ளி வியாபாரி மூலமாக கடனாக வந்துள்ளது. இந்த பரிமாற்றம் சந்தேகத்திற்குரியது. இந்த தொகை எங்கிருந்து வந்தது என்ற தகவல் இல்லை.

அதானி குழுமத்தின் பதில்;

அதானி குழுமத்தை சாராத நிறுவனங்களைப் பற்றிய நிதி பரிமாற்ற தகவல்கள் பற்றி எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஐந்தாவது குற்றச்சாட்டு:

அதானி குழுமத்தில் உள்ள பல நிறுவனங்களின் நிதி பரிமாற்றங்கள் இஷ்டப்படி நடந்து உள்ளன. PMC என்ற நிறுவனத்திற்கு 78 கோடி டாலர்கள் 12 வருட காலத்திற்குள் அனுப்பப்பட்டுள்ளன. PMC என்பது ஒரு பினாமி நிறுவனம் என்று DRI குற்றம் சாட்டியுள்ளது.

அதானி குழுமத்தின் பதில்:

அதானி குழுமமும், PMC யும் வெவ்வேறு நிறுவனங்கள் என்று மேல்முறையீட்டில் அதிகாரிகள் குறிப்பெழுதி இருக்கின்றார்கள்.

ஆறாவது குற்றச்சாட்டு:

அதானி குழும நிறுவனங்களின் வடிவமைப்பே வேண்டும் என்றே திட்டமிட்டு வியூகங்களாக அமைக்கப்பட்டுள்ளது. அதானியின் முக்கியமான ஏழு பொது நிறுவனங்களின் கீழ் 578 உபரி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. முதன்மை நிதி நிர்வாகிகள் (Chief Financial Officers) பலர் தொடர்ந்து வெளியேறி இருக்கிறார்கள். இவர்களின் கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் நிறுவனமான ஷா தந்தார்யா நிறுவனத்திலேயே 11 ஊழியர்கள் தான் வேலை செய்கிறார்கள். எல்லாமே அபாயகரமாக தோற்றமளிக்கிறது.

அதானி குழுமத்தின் பதில்:

வெளியேறியதாக கூறப்படும் நிதி நிர்வாகிகள் பதவி உயர்வு செய்யப்பட்டு மற்ற அதானி குழும நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அதானி குழுமத்தின் பல நிறுவனங்கள் உலகிலேயே பெரிய கணக்கு வழக்கு தணிக்கை நிறுவனங்களான BIG 4 எனப்படும் Deloitte, KPMG, E&Y, PWC போன்றவர்களால் ஆடிட் செய்யப்படுகிறது. கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் எந்த நிறுவனத்தின் வடிவமைப்பும் இப்படித்தான் இருக்கும். அவ்வப்போது தேவைக்கேற்ப ,புதிய, புதிய நிறுவனங்கள் உருவாகத்தான் செய்யும்.

ஏழாவது குற்றச்சாட்டு:

மொரீசியஸ் நாடு மூலமாக சுமார் 1100 கோடி டாலர் முதலீடுகள் வந்துள்ளன இவற்றில் அதானி குடும்பத்தினரின் பங்கு இருக்கிறதோ என்று சந்தேகம் வருகிறது.

அதானி குழுமத்தின் பதில்:

முதலீட்டாளர்களின் தகவல்களை வெளியிட இயலாது.(ப. சிதம்பரம் பதவியில் இருந்தபோது ஆரம்பித்த திட்டம் தான் Participatory Note எனப்படும் முதலீடு திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் எந்த தகவலும் தராமல் எவரும் எவ்வளவு தொகையையும் அந்நிய நாட்டு முதலீடாக கொண்டு வரலாம் என்பதே அந்தத் திட்டம். இதில் பெரும் பகுதி மொரிசியஸ் நாட்டின் மூலமாக இந்தியாவுக்கு வந்தது)

இது எப்படியோ ஒரு விஷயத்தில் ஹின்டன்பர்க் நிறுவனம் வெற்றியடைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தர் என்ற பட்டத்தை இழந்த அதானி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் இந்தியாவிலும் செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அதானி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். அதானி நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் தற்போது மீண்டும் ஏறத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

அதானியின் வளர்ச்சி அசுரத்தனமானது தான். ஆனால் ஹின்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்தால் சில உண்மைகள் புலப்படும். அநேகமாக எல்லா பெரிய நிறுவனங்களிலும் இந்த மாதிரி தகிடுதத்தங்கள் இல்லாமல் இருக்காது. ஒருவருடைய குற்றச்சாட்டினால் ஒரு மிகப் பெரிய நிறுவனம் அழிந்து ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் ஏற்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

ஒரு நிறுவனத்தின் முறைகேடுகள் எந்த காரணத்திற்காகவும் அனுமதிக்கப்படக் கூடாதுதான் ஆனால் எந்த மாதிரி முறைகேடுகள் என்பதையும் ஆராய வேண்டும்.

ஒரு சந்தேகமும் வருகிறது Short Selling ஐ தொழிலாகக் கொண்டுள்ள ஹின்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தற்போது வீழ்ச்சி அடைந்துள்ள அதானி குழுமத்தின் பங்குகளை ஏராளமாக வாங்க ஆரம்பித்திருக்குமோ??!!