தொடர்கள்
பொது
அயலி - வெப் சீரீஸ் - இந்துமதி கணேஷ்

20230104005953288.jpg


கிராமம் என்றதும் பசுமையான வயல் வெளிகளும், தென்னத்தோப்பும், மரபு வழிஉணவுகளும், வற்றாத நீர்நிலைகளும் தான் நம் மனதில் நிலைகொண்டுள்ளசித்திரங்கள். வழிவழியாக வந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களை கிராமங்கள் தான்சரியாக அடைகாக்கின்றன என்ற ஒரு எண்ணம் நம் மனங்களில் ஆழபதிந்துவிட்டது. கல்வியும் அது தரும் விழிப்புணர்வும் அவர்களிடையே குறைவாகஇருப்பதால் அங்குள்ள மக்களால் கேள்வி கேட்காமல் சடங்குகளை கடைபிடிக்கமுடிகிறது. அதனாலேயே சில கிராமங்கள் நவீனத்துவத்தை முழுவதும் உள்வாங்கிகொள்ளாமல் பழமையின் வனப்புடன் துலங்குகின்றன. ஆனால் இவைஎல்லாவற்றையும் தாண்டி சில மூட நமபிக்கைகளும் அதை கடை பிடிக்கஉயிரையும் எடுக்கும் பிடிவாத குணமும் கூட கிராமங்களின் அடையாளங்களில்ஒன்று தான். இப்படி ஒரு மூட நம்பிக்கையால் முடங்கி போன கிராமமாகஇருக்கிறது வீரப்பண்ணை. அங்குள்ள பாரம்பரிய வழக்கத்தை உடைத்தெறிந்துவிட்டு தன்னுடைய மேற்படிப்பிற்காகவும் மற்ற பெண்களின் முன்னேற்றத்திற்காகவும்போராடுகிறாள் தமிழ்ச் செல்வி. பதின்மத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் உணர்வுபாதை வழி பயணிக்கிறது அயலி என்ற வலை தொடர்.

எட்டு பாகங்களாக இருக்கிறது இந்த தொடர். குழந்தை திருமணங்கள் எல்லாம்இன்னுமா நடன்து கொண்டு இருக்கிறது என்று நமக்குள் ஒரு கேள்வி எழலாம், எனினும் எங்கோ அப்படி ஒரு திருமணம் னிகழலாம் அதை தடுக்க நாம் என்னசெய்கிறோம் என்ற குற்றவுணர்வே இந்த கதை உருவாக காரணம் என்கிறார்இயக்குனர் முத்துகுமார். பெரியாரின் கருத்துகள் தொனிக்கும் கதை போலதெரின்தாலும் எந்த இடத்திலும் பிரச்சார தொனி தெரியாமல் அளவாக பேச படும்வசனங்கள், இயக்குனர் நடுநிலையானவர் என்பதை பறைசாற்றுகிறது.

தொண்ணூறுகளில் பயணிக்கும் கதையானது அதற்கு ஐநூறு ஆண்டுகள் முன்புசென்று எப்படி வீரப்பண்ணை உருவானது என்ற பூர்வாங்க கதையுடன்தொடங்குகிறது. ஒரு காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிப் போனதால் சில கலவரங்கள்நடக்கிறது. அதனால் ஊரில் பல அழிவுகள், தொடர்ந்து அம்மை நோயும் பரவுவதால்அம்மனின் கோபத்திற்கு ஆளானது மட்டுமே காரணம் என்று நம்பி தன் குடிகளைகாப்பாற்ற ஊரை விட்டு வேறு இடத்திற்கு புலம் பெயர்கிறார்கள் மக்கள். கிளம்பும்போது அம்மனின் பிடிமண்ணை எடுத்து வந்து புதிதாய் ஒரு இடத்தை கண்டடைந்துஅங்கு கோவில் எழுப்பி அங்கேயே குடிபெயர்கிறார்கள், வீரப்பண்ணை என்கிறகிராமம் உருவாகிறது. ஒரு பெண் ஓடிப்போனதால் தான் இத்தனை பிரச்சனைகளும்உருவானது என்பதால் இனி அந்த ஊரில் இருக்கும் பெண்கள் வயதிற்கு வந்தஉடனேயே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற பழக்கம் உருவாகிறது. பொதுவாக எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் போதே பெண்கள் பருவமடைன்துவிடுவதால் அந்த ஊரில் ஒரு பெண் கூட பத்தாம் வகுப்பு படித்ததாக சரித்திரம்இல்லை. அதே ஊரில் பிறந்த தமிழ்ச் செல்வி பத்தாவது படித்து பின்பு டாக்டர் ஆகவேண்டும் என்று கனவு காண்கிறாள். அதற்காக தான் வயதிற்கு வந்ததை ஊருக்குதெரியாமல் மறைக்கிறாள். தாய் அறியாத சூல் இல்லை என்பதால் விரைவிலேயேமகளின் நிலையை கண்டு பிடித்து விடும் குருவம்மாள் முதலில் வெகுண்டாலும் பின்புமகளுக்கு உதவுகிறாள்.

தமிழின் தோழிகளுக்கு நடக்கும் கொடுமைகள் அவளை துண்டாடுகிறது, அதைஅவள் எப்படி உணர்கிறாள்? அது தனக்கும் மற்ற பெண் தோழிகளுக்கும்நடக்காமல் இருக்க அவள் யோசிக்கும் குழந்தை தனமான உபாயங்கள் என்னென்னஎன்று தமிழின் சிந்தனையின் வழி திரைக்கதை நகர்கிறது. பருவமடைந்த பின்புஅதை மறைந்து விட்டு அயலியை நெருங்கி அபிஷேகம் செய்தால், அப்படிசெய்தவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்ற கிழவியின் கூற்றுக்கு ஒருகுழந்தையாய் தமிழ் பயப்படுவது ரசிக்க வைக்கிறது. தமிழின் தோழிகளாக வரும்கயல் மற்றும் மைதிலி பாத்திரங்கள் நேர்த்தியாக செதுக்க பட்டிருக்கிறது, அவர்களும் நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள். பருவமடைந்ததை எப்படி அறிந்துகொள்வது என்று தமிழ் தன் தோழி மைதிலியிடம் கேட்பதும், அதை அவள்வெட்கத்துடனும் குறுகுறுப்புடனும் பகிர்ந்து கொள்வது கவிதையான காட்சி. 90களின் பிரபலமான சிலோன் பாப் பாடல்களின் பின்னணியில் விழா நடந்துகொண்டிருப்பது வெகு யதார்த்தமாய் பொருந்தி போகிறது. அக்கறையுடன் கூடியதமிழின் தலைமை ஆசிரியர் பாத்திரம் அருமை. அவர்களுக்கு இன்னும் நிறையவேலை இருக்கும் என்று நாம் எதிர்பார்த்தாலும் அதிகமாக அவர்களை சாராமலேயேதமிழ் ஊருக்குள் மாற்றத்தை நிகழ்த்துவது வியப்பான ஆச்சர்யம்.

தன்னை அக்காவின் கணவனுக்கே இரண்டாம் திருமணம் செய்து வைக்கபோகிறார்கள் என்று உணரும் தருணம் தமிழின் தோழி, கயல் கேட்கும் கேள்விகள் நச் ரகம். ஒரு காதல் ஜோடி ஓடி போனதால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்கே, அப்போ அவங்க போய் சேர்ந்த இடத்தில் அவங்களுக்கு என்னென்ன தொல்லைகள் வந்திருக்கும் ? அந்த ஊருல அதுனால் இன்னும் என்ன மூட நம்பிக்கைகள் எல்லாம்உருவாகி இருக்குமோ ? என்று வருந்தும் கயல் அற்புதமான கதாபாத்திரம். படத்தில்தாய், தந்தை மக்களுக்கான பிணைப்பு வெகு அழகாக சொல்லப் பட்டிருக்கிறது. தமிழும் குருவம்மாளும் பேசும் காட்சிகள் பெரும்பாலும் ஹெலிகாப்டர் ஷாட்டுகளாக எடுக்கப்பட்டிருப்பது ராம்ஜி அவர்களின் ஒளிப்பதிவின் அழகைசொல்கிறது. அயலி அம்மன் கோவில் தோட்டமும் வெகு சாந்தமானஅந்த அயலியின் சிலையும் நம் மனதை கொள்ளை கொள்கின்றன. ரேவாவின் இசைதேவையான இடத்தில் தேவையான உணர்வுகளையும் குறுகுறுப்பையும்ஆசுவாசத்தையும் மீட்டித் தருகிறது.

பொதுவாக எதிர்த்து பேசுதல் என்பது பெரியவர்களுக்கு ஏற்புடைய விஷயமாகஇல்லாதிருப்பினும் தமிழ் பேசும் வசனங்கள் சுரீர் ரகம், மிக நியாயமான கேள்விகள்அவை. கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை எனில், ஊர் தன்னை கொன்று விட்டுதன்னையும் ஒரு அயலியாக்கி வணங்கும், என்று ஒரு தருணத்தில் தமிழ் சொல்லும்போது வசனகர்த்தாவின் ஆழ்ந்த வாசிப்பு புலப்படுகிறது. சமீபத்தில் வெளியான ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் "தெய்வமே சாட்சி" புத்தகம் இதை போன்று வன்முறையால் கொல்லப்பட்டு பின் தெய்வமாய் வழிபடப்பட்ட தெய்வங்களின் கதைகளைத் தான் பேசுகிறது. மேலும் தமிழின் தோழி மைதிலியின் கணவன்இறந்து போகும் தருணத்தில் அவள் கையில் பூக்களுடன் கூடிய செம்புகொடுக்கப்படுகிறது. அதில் இருந்து அவள் எடுத்துபோடும் பூக்களின்எண்ணிக்கையை வைத்து அவள் கருவுற்றிருக்கிறாளா, எத்தனை மாதங்கள்என்பதை அறியும் பழக்கம் அந்தநாட்களில் இருந்திருக்கிறது. இதை எழுத்தாளர் தொ. பரமசிவன் அவர்கள் தன்னுடைய "பண்பாட்டுஅசைவுகள்" புத்தகத்தில்பதிவுசெய்திருக்கிறார். அதைமுன்னிறுத்தி ஒரு படக் காட்சி எடுக்கப்பட்டிருப்பதுவெகுசிறப்பு. இதற்காக ஒரு சபாஷ்.

என்ன தான் மகளின் விருப்பத்திற்கு பின்னால் இருக்கும் உண்மைகளை மனம்ஏற்றுக் கொண்டாலும் கணவனுக்கு அடிப்பட்ட உடன் நாம் செய்வது தவறோ என்றகுற்ற உணர்வுக்கு தள்ளப்படும் குருவம்மாளின் கதாபாத்திரம் மிக செம்மையாகவடிவமைக்க பட்டிருக்கிறது. பெண்ணுடன் தான் சின்ன வயதில் ரசித்த ஆங்கிலஆசிரியை பற்றி பகிர்ந்து கொள்வதாகட்டும், முதல் முறையாக கணவனின்மேற்பார்வை இல்லாமல் பெண்ணை வெளி ஊர் தேர்வுக்கு அழைத்து போகும் போதுமனம் சிறகடிக்க ஜன்னல் இருக்கையில் அமர்ந்து போவதாகட்டும் அனுமோளின்நடிப்பு வெகு கச்சிதம். இவர் தான் தமிழின் நிஜ தாயோ என்று தோன்றும் அளவுக்குஒரு பிணைப்பை காட்டுகிறார். அம்மாவும் மகளும் கண்கள் மின்ன உரையாடிக்கொள்ளும் காட்சிகள் அனைத்திலும் உயிர்பான ஒவிய பாவைகள் நடமாடுவதை போல ஒளிர்கிறார்கள். தன் தாயையும் தைரியம் கொடுத்து வெளிக்கொண்டு வரும் இடத்தில் தமிழ் புதுமைப் பெண்ணாய் மின்னுகிறாள். தான் பருவமடைந்து விட்டதைஉணர்ந்த தருணம், தமிழுக்குள் நடக்கும் உணர்ச்சி போராட்டமும் பிறகு ஒவ்வொருசிக்கலான தருணத்தையும் அவள் கலங்காமல் எதிர் கொள்ளும் இடங்களிலும் தமிழ்செல்வியாக அபி நட்சத்திரா வாழ்ந்திருக்கிறார். வருத்தம், கோபம், ஆற்றாமை, குழந்தைமையின் குதூகலம் என்று அனைத்து உணர்வுகளையும் மிகையில்லாமல்வெகு இயல்பாக வெளிப்படுத்துகிறார்.
20230104010342578.jpg
தமிழின் தந்தை தவசியாக நடித்திருக்கும் மதன் வெகு எதார்த்தமாகசெய்திருக்கிறார். மகள் மேல் பிரியத்தில் இவர் விட்டுக் கொடுக்கும் இடங்களில்தமிழை போல நமக்கும் இதயம் துள்ளுகிறது. கெளரவத்தை ஏன் பெண்களின்கால்களுக்கு இடையில் வைக்கிறீர்கள் என்ற கேள்வி தவசியை போலவேனம்மையும் உலுக்குகிறது. வெகு நாட்களுக்கு பிறகு கன்னத்து குழியுடன் ஒருநடிகரை பார்க்க முடிகிறது. அனைவரும் வெறுக்கும் படியான கதாபாத்திரமாககச்சிதமாக அமைந்திருக்கிறது அமோஸ் வாத்தியார்கதாபாத்திரம். முறைப்பையனாக வில்லனைப் போல் வரும் சக்திவேலின்(லிங்கா) கதாபாத்திரமும் கூட தன் நம்பிக்கைகளுக்காக மட்டுமே வில்லத்தனம் செய்கிறது. கதை முழுவதிலுமே கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் மிக சிறப்பாக பொருந்திஇருக்கிறார்கள். அடிக்கடி திருடும் கதாபாத்திரம், எப்போதுமே சக்களத்திசண்டைபோடும் பாட்டிகள் என்று ரசிக்க சின்னச் சின்னதாய் நிறைய விஷயங்கள்உண்டு. கதையை ஒருவரியில் சொல்லிவிடலாம் எனினும் படமாக்க பட்டிருக்கும்விதம் வெகு அற்புதமாக இருக்கிறது. இன்று பெண் சிசு கொலைகள், பெண்கல்வி, பால்ய விவாகம் போன்ற விஷயங்களில் எல்லாம் நம் நாடு எவ்வளவோ முன்னேற்றம்அடைந்து விட்டது எனினும் அன்று அதற்காக போராடிய தமிழை, கயலை, மைதிலியை, அவர்களின் அம்மாக்கள் போன்ற ஏராளமான பெண்கள்இருந்திருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களும் போராட்டங்களும் தான் இன்றுபெண்கள் தலைநிமிர்ந்து நடந்திட உதவுகிறது. வழி வழியாக கடைபிடித்து வந்தபழக்கத்தை மாற்றும் போது மனம் தடுமாறும், தைரியமும் மன உறுதியும் மட்டுமேமாற்றதிற்கான விதைகள், தமிழ்செல்விக்கு தன் குழந்தை தனமானசெய்கைகளிலேயே இதை சாதிப்பது அழகு.

தெய்வத்தின் பெயரால் ஒரு சமூகமே பின்தங்கி போனதையும், ஒரு சிறு பெண்ணின்மாற்றுச் சிந்தனையால் நிகழ்ந்த மாற்றங்களையும் அழகாகவும் ஆழமாகவும்சொன்ன விதத்திற்கு இயக்குனர் முத்துக்குமாருக்கும் ஒருசபாஷ். இனி ஒரு விதி செய்வோம் என்ற பாரதியின் கூற்றை மெய்பித்த தமிழே அயலியாய் மிளிர்கிறாள். அனைவரும் அவசியம் காண வேண்டிய தொடரிது.