தொடர்கள்
அனுபவம்
சத்தியமாக இது செய்தி. டிவி சீரியல் இல்லை. மாமனாரை மூன்றாவது கணவராக மணந்த உ.பி. பெண் - மாலா ஶ்ரீ

20230104014153235.jpeg

உத்தரப்பிரதேச மாநிலம், பர்ஹல்கஞ்ச் கோட்வாலி அருகே சாபியா உம்ராவ் கிராமத்தை சேர்ந்தவர், 70 வயதான கைலாஷ் யாதவ். இவர், அங்குள்ள காவல் நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார். கைலாஷின் 3வது மகனுக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன் பூஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில ஆண்டுகளிலேயே பூஜாவின் கணவர் இறந்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து, பூஜாவுக்கு அவரது பெற்றோர் 2-வது திருமணம் நடத்தி வைத்தனர். எனினும், 2-வது கணவரின் நடத்தை காரணமாகவும், அவரது குடும்பத்தின் அடாவடி போக்கு காரணமாக இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவியது. இதனால் 2-வது கணவரிடமிருந்து விலகி, இறந்துபோன முதல் கணவரின் வீட்டுக்கே பூஜா திரும்பிவிட்டார்.

அவ்வீட்டில் தனிமையை உணர்ந்த பூஜா, முதல் கணவரின் தந்தையான கைலாஷ் யாதவ்வை 3-வதாக திருமணம் செய்துகொள்ள விரும்பினார்.

இந்நிலையில், கடந்த 27-ம் தேதி இருதரப்பு வீட்டார் முன்னிலையில், 70 வயதான மாமனார் கைலாஷ் யாதவ், மருமகளாக வீட்டுக்கு வந்த 28 வயது பூஜாவை 2-வது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களின் திருமண செய்தி, உ.பி மாநிலம் முழுவதிலும் பட்டிமன்ற விவாதத்துக்கு உரிய பொருளாக மாறியுள்ளது. மேலும், இவர்களின் திருமண படங்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பாராட்டு, கண்டனம் என பல்வேறு வகைகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவலறிந்ததும் பர்ஹல்கஞ்ச் போலீசார் விசாரித்தனர். பின்னர், ‘இத்திருமணம் – 2 நபர்களுக்கு இடையிலான பரஸ்பர விவகாரம். இதுபற்றி புகார் அளித்தால் மட்டுமே விசாரிக்க முடியும்’ என்று அதிரடியாகத் தெரிவித்தனர். தற்போது தனது இளவயது மனைவியுடன் மாமனார்-கம்-கணவரான கைலாஷ் யாதவ் சிறப்பாக குடும்பம் நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆனால் இது நம்மூர் டி.வி. சீரியல் பார்க்கும் பெண்மணிகளுக்கு ஒரு மிகச் சாதாரணமான விஷயமாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

மாலாஸ்ரீ