தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் - 76-- ஆர் . ரங்கராஜ்

முதற் குலோத்துங்கன் காலத்தில் எடுப்பிக்கப்பெற்ற கோயில் -- திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் .

20230217181451662.jpg


திருப்பாலைவனத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் கட்டப்பட்டதற்கானத் தல வரலாறு ஒன்று கூறப்படுகிறது. இதே வரலாற்றைத் திருப்பாலைவனம் கைபீதும் கூறுகிறது.

குலோத்துங்க சோழன் பூமியெல்லாம் சிவலிங்கப்பிரதிட்டை செய்தபோது இந்தத் திருப்பாலைவனத்திலே சிவலிங்கம் பிரதிட்டை செய்ய வேண்டுமென்று தன்னுடைய சேனையோடு திருப்பாலைவனத்திலே வந்து இறங்கி, சிவலிங்கம் ஒன்றினைச் செய்து பிரதிட்டை செய்வதற்கு இடம் பார்த்து, காமாட்டிகளை விட்டு அங்கேயிருந்த பாலை மரங்களையெல்லாம் வெட்டுவித்தான். அதிலே ஒரு சிவலிங்கம் இருந்தது. அந்தச் சிவலிங்கத்துக்குத் தலையிலே கோடாரிக்காயம் ஏற்பட்டது. குலோத்துங்க சோழனுடைய பட்டத்துயானை கீழே விழுந்து இறந்தது.

20230217181518784.jpg

"அப்போது, குலோத்துங்க சோழன்க பயந்து, இறைவனை வணங்கி அந்தப் பழைய சிவலிங்கத்தைக் கருவறையில் வைத்துப் பிரதிட்டைச் செய்து அவிமுத்தீஸ்வர சுவாமியென்று பெயரிட்டுப் பின்னர், தான் உருவாக்கிய சிவலிங்கத்தையும் ஒரு பக்கத்திலே வைத்துப் பிரதிட்டைசெய்து திருப்பாலீஸ்வரன் என்று பெயரிட்டுக் கருவறை முன்மண்டபம் முதலானவைகளும் கட்டுவித்தான் என்று கைபீது கூறுகின்றது", .
என்று தெரிவிக்கிறார் தமிழி, எழுத்தாளர்.

"எவ்வெவர் தன்மையும், தன் வயிற்படுத்து தானேயாகிய
தயாபரன், எம்மிறை சந்திரதீபத்து
திழிந்து வந்து, அழகமர் பாலையுள், சுந்தரத் தன்மையோடு
துதைந்திருந் தருளியும்"

என்பது மாணிக்கவாசகர் பாடல். இப்பாடல் கோயில் கட்டுவதற்கு முன்னர் பாலைமரத்தடியில் இருந்த லிங்கத்தின்மீது பாடப்பட்டது என்பது சிலர் கருதுகிறார்கள்.

2023021718160048.jpg
கோயில் கட்டியது முதல் குலோத்துங்கசோழனே டாக்டர் இராசமாணிக்கனார் திருப்பாலைவனம் கல்வெட்டுகள் என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டு அக்கோயிலைப் பற்றிய தம் கருத்தை அதில் எடுத்துரைத்துள்ளார். டாக்டர் இராசமாணிக்கனார் இக்கோயிலை வீரராசேந்திரன் காலம் என்று குறிப்பிட்டுள்ளார். "ஆனால் அவர் கருத்து தவறானதாகத் தென்படுகிறது. காரணம் இக்கோயிலில் முதலாம் குலோத்துங்கன் காலத்திலிருந்ததுதான், கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவனுக்கு முன்னர் உள்ள மன்னர்கள் காலக் கல்வெட்டுகள் ஒன்று கூட இங்கு இல்லை. ஆனால் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்து அவனுக்குப் பின்னர் வந்த சோழ மன்னர்கள் எல்லாருடைய கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. மூன்றாம் இராசேந்திரன் கல்வெட்டுகள் மட்டும் இல்லை. ஆனால் பிறமன்னர்கள் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வீரராசேந்திரன் கல்வெட்டு ஒன்றுகூட இல்லாத காரணத்தால் வீரராசேந்திரன் காலத்ததாக இக்கோயிலைக் கருதுதல் தவறாகும்," என்கிறார் எழுத்தாளர் தமிழி.

"திரிபுவனச் சக்கரவர்த்திகள் வீரராசேந்திர சோழ தேவர்க்குயாண்டு என்று இண்டு கல்வெட்டுகள் தொடங்குகின்றன. இவை முறையே இம்மன்னனின் 5ஆம் 6ஆம் ஆட்சி ஆண்டுகளைச் சார்ந்தவை. கல்வெட்டில் குலோத்துங்க சோழன் பையூர் என்று ஓர் ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீரராசேந்திரன் காலத்திற்குப் பின்னர்தான் குலோத்துங்கன் என்ற பெயருள்ள மன்னனே சோழர் அரசியலில் இடம் பெறுகிறான். எனவே வீரராசேந்திரன் காலத்தில் குலோத்துங்கனின் பெயரில் ஊர் அமைவது என்பது சாத்தியமற்றது. குலோத்துங்கன் என்ற மன்னனின் ஆட்சியின்போதோ அல்லது அதற்குப் பின்னரோதான் அப்பெயருள்ள ஊர் அமைந்திருக்க வேண்டும். எனவே இக்கல்வெட்டு வீரராசேந்திரன் காலத்தைச் சார்ந்தது அல்ல. மூன்றாம் குலோத்துங்கனுக்கு வீரராசேந்திர சோழன் என்ற பெயரும் உள்ளதால் இக்கல்வெட்டில் திரிபுவனச் சக்கரவரத்திகள் வீரராசெந்திர சோழதேவன் என்று குறிப்பிடிருப்பது மூன்றாம் குலோத்துங்கனையே. எனவே இக்கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்தவை என்று அறுதியிட்டுக் கூறலாம். எனவே இக்கல்வெட்டுகள் வீரராசேந்திரன் காலத்தியது அல்ல. . இக்கோயிலை எடுப்பித்தது முதற்குலோத்துங்கன் காலமே என்று உறுதியாகக் கூறலாம்.

முதற் குலோத்துங்கன் காலத்தில் எடுப்பிக்கப்பெற்ற இக்கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தின் மீண்டும் கட்டப்பட்டது. இதற்குக் கல்வெட்டுச் சான்று உள்ளது.

20230217181627834.jpg

மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் திருப்பாலீஸ்வரருக்குக் கற்றளி எடுக்கப்பட்டது

"மூன்றாம் குலோத்துங்கனின் 15 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் கோயில் கட்டப்பட்ட செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. சோவடுகன் என்பவனது மேற்பார்வையில் லம் திருப்பாலைவனம் உடையாருக்குக் கற்றளி எடுக்கப்பட்டபோது வடுகன் தேவன் என்பவனுக்குக் கொடுக்கப்பட்ட நிலததில் மூன்றில் இரண்டு பங்கு உரிமையை அவன் தன் இரு மருமகன்களுக்கும் சீதனமாகக் கொடுத்தான் என்ற செய்தியை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. எனவே மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் திருப்பாலீஸ்வரருக்குக் கற்றளி எடுக்கப்பட்டது என்ற உண்மை வெளிப்படையானது," என்று தெரிவிக்கிறார் தமிழி.

(தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)